Thursday 5 July 2018

பிறப்பொக்கும்.

வள்ளுவர் "உயிர்" என்று இருபத்தியிரண்டு இடங்களிலும், "உயிர்க்கு" என்று எட்டு இடங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். இவ்விடங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை மக்களையே குறிக்கின்றன. ஆனால், அவர் மூன்று இடங்களில் மட்டுமே பயன்படுத்தியிருக்கும் "எல்லா உயிர்க்கும்" என்ற சொல்லாடல் முதன்மையாகக் கவனிக்கத் தக்கது. பயன்படுத்தப் பட்டிருக்கும் அந்த மூன்று இடங்களிலும் அந்தச் சொல்லாடல் அஃறிணை உயிர்களையும் சேர்த்தே குறிப்பிடுவதாய் எண்ணுகிறேன். அவாவறுத்தல், இகல் என்னும்
இரண்டு அதிகாரங்களிலும்  உயர்திணை, அஃறிணை என எல்லா உயிர்களையும் சேர்த்தே சொல்லிப்போந்த ஐயன் இந்தக் குறளிலும் அப்படியே எடுத்தாள்கிறார் என்று கொண்டால், சிறு ஐயப்பாட்டோடு தான் பெருமை எனும் அதிகாரத்தின்  இந்தக் குறளை அணுகவேண்டியுள்ளது."பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"

மிக அதிகமாக பேசப்பட்டக் குறள்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். எல்லா மனிதர்களும் பிறப்பினால் ஒரே மாதிரியானவர்களே. செய்யும் தொழில் வேறுவேறாய் இருப்பதனால் பெருமை ஒன்றாக இருப்பதில்லை என்பதே பொருள்.

இனி குறளுக்குள் போவோம்.

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்"  என்று எடுத்துக்கொண்டால் நான் முன்பு கூறிய ஐயப்பாடு வந்துவிடுகிறது. இங்கே உயிர் மரபியல் பற்றிய தொல்காப்பிய நூற்பாவை எடுத்து ஐயம் தீர்க்கவேண்டியிருக்கிறது. 

"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு  மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"

என்ற தொல்காப்பியரோ தனக்கு முன்பே மரபியற்கூறு தமிழ்நிலத்தில் வகுக்கப் பட்டிருந்தமை அறிவிக்க  "நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"  என்றே முடிக்கின்றார். மெய், வாய், மூக்கு,கண், செவி என்ற ஐம்புலன்களோடும், நினைவு மற்றும் பகுத்துணர்ந்து ஒப்புநோக்கும் ஆற்றலும் கொண்ட மனத்தையும் சேர்த்து இந்த உயிர்ப்பகுப்பு வகைப்படுத்தப் பட்டிருக்கிறது.  வள்ளுவர் சொல்லும் "எல்லா வுயிர்க்கும்" என்ற சொல்லாட்சி இந்த அறுவகை உயிரினங்களைப் பற்றியதே என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழரின் மரபியல் அறிவு மிக மிக  ஆழமானது. ஒரறிவு உயிரை எடுத்துக் கொண்டால் அவற்றைப் பகுக்கும் நூற்பாவை பார்ப்போம்.

"புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே."

அடுத்து புல், மரம்  என இரண்டு மரபுக்கூறுகளையும் பகுக்கும் நூற்பாக்களை   பார்ப்போம்.

"புறக்கா ழனவே புல்லென மொழிப."
"அகக்கா ழனவே மரமென மொழிப." 

உயிரி உடற்கூறியல் பற்றிய தொன்ம அறிவின் திண்மை இது.  ஒப்புநோக்கின் புறத்தே தடித்து இருப்பன புற்கள். உள்ளே வைரம் பாய்ந்து இருப்பன மரங்கள்.

அடுத்துப் புல்லின் உறுப்புகளாக வரும் நூற்பா,

"தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்."

என்றுரைக்கிறது. மேலும் மரத்தின் உறுப்புகளாக


"இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
மரனொடு வரூஉங் கிளவி என்ப."

என மற்றொரு நூற்பாவும் தொல்காப்பியத்தில்  காணக்கிடைக்கின்றன. இதிலிருந்து தென்னை, பனை, வாழை, மூங்கில், அருகம் புல், கோரைப்புல் இவையெல்லாமே புல் என அறிகிறோம். ஆல்,அரசு, மா, பலா போல்வை மரங்களெனவும் அறிகிறோம்.இப்படியே அனைத்து உயிர்களுக்குமான மரபுப் பகுப்புகள் தொல்காப்பியத்தில் இருக்கின்றன. இதில் தாவரங்கள், ஊர்வன, பூச்சிகள், நில, நீர்வாழ் விலங்குகள், மாந்தர் என அத்தனை உயிர்களும் அடக்கம். "கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே" என்றொரு நூற்பா கூட இருக்கிறது.  இத்தனைத் தெளிவான, நுண்ணிய மரபியல் அறிவு செழித்தோங்கிய நிலத்தில் தான் வள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்" என்று கூறுகிறார்.

அது எப்படி விதையிலிருந்து வரும் மரத்திற்கும், முட்டையிலிருந்து வரும் பறவைக்கும், தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் மற்றைய விலங்குகளுக்கும் "பிறப்பொக்கும்"?  அது மட்டுமல்ல இயல்பிலேயே சிறப்பும் வேறுவேறாகத்தானே இருக்கும்.

அப்படியென்றால் "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா" என்று எடுத்துக்கொள்வோம். இப்பொழுது பொருள்கொள்வது எளிதாகிறது. "ஒன்று போல் பிறக்கிற எல்லா உயிர்களுக்கும் சிறப்பு ஒன்றுபோல் இருக்காது".  விலங்குகளுக்கும்,  பறவைகளுக்கும்  பிறப்பு ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆனால் தனித்தனியே நோக்கின் முட்டையிலிருந்து ஒரு மரபுக் கூட்டமும், வயிற்றில் கருவாகி பிறக்கும் ஒரு மரபுக்கூட்டமும் என இருவேறு பெருங்கூறுகள் இருக்கின்றன. இதுபோன்றே புல், மரம், பூச்சிகள் தொட்ட மற்றைய உயிர்த் தொகுப்புகளும் உள்ளன. இந்தத் தெளிவில் தான்  இந்தக் குறளை அணுகுகிறேன். ஒத்த பிறப்பையுடைய, ஒரே மரபுக்கூறில் அடைகிற உயிரென்றாலும் அவற்றின் சிறப்புகள் ஒத்திருப்பதில்லை.

இதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு புல்லையும், மரத்தையும், தும்பியையும், காக்கையையும் உற்றுநோக்கி ஆய்ந்து கொண்டிருப்பதா? எல்லா உயிர்களையும்  அறிந்து தெளிவது எக்காலம்?  இங்கேதான் வள்ளுவர் சொல்லாடல் நம்மை வழிநடத்துகிறது. "செய்தொழில் " என்பதுதான் அது. இதை வள்ளுவர் இந்தக் குறளில் மட்டுமே எடுத்தாண்டிருக்கிறார். ஏழு குறள்களில் "தொழில்" என்று குறிப்பிடுகிறார். அங்கெல்லாம் "தொழில்" என்பது புலவர் தொழிலையோ, வேந்தன் தொழிலையோ, அறிவார் தொழிலையோ பேசுகிறது. அவை யாவுமே குலம் பற்றியதல்ல என்பதும் ஈண்டு கவனிக்கத் தக்கது.

எல்லாவுயிர்க்கும் பொதுவாகச்  "செய்தொழில்" என்றுசொல்லப்படும்போது, அது செய்கை அல்லது செயல்படுந்திறன், அல்லது செயலின் தரம் பற்றியதாகவே இருக்க வேண்டும். ஒரு யானைக்கும், ஒரு புலிக்கும், ஒரு மனிதனுக்குமான தொழில் ஒன்றாய் இருப்பதற்கான வாய்ப்புகளில்லை. "எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா" என்றதன் மூலம் "செய்தொழில்" என்ற சொல்லையும் வள்ளுவர் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவே எடுத்தாள்கிறார். எனில் அது செய்கை என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். செய்தொழில் என்பதை செய்கை என்றே செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியும், சென்னைப் பல்கலைக் கழக தமிழ் அகர முதலியும் குறிக்கின்றன.


செய்கை அல்லது செயலின் தரம், ஒத்த பிறப்புடைய உயிர்களுக்கிடையே கூட நிகராய் இருப்பதில்லை. இதை நாம் விலங்குகளிடமும் காணலாம். இணை தேடலில், தலைமையேற்பதில் விலங்குகளின் செயல்திறனே பெரும் பங்காற்றுகிறது. செய்கையில் சிறந்த செந்நாய் ஒரு பெருங்கூட்டத்தை வழி நடத்துகிறது. பறவைகளில் கூட இதைப் பார்க்க முடியும். இதன் காரணம் செய்கையின் தரம் வேறுபடுவதே. இன்னும் கூர்ந்து நோக்கினால் ஒத்த உயிர்மரபில், பிறப்பிலும் ஏற்றத் தாழ்வு இல்லை, தொழிலிலும் ஏற்றதாழ்வு இல்லை. செய்கையே பெருமையை அல்லது  சிறப்பைத் தீர்மானிக்கிறது. அடுத்த குறள் இக்கருத்துக்கு வலு சேர்க்கும்.


பேரறிவு வாழ்க்கை வாழ்ந்திருந்த ஒரு இனத்தின் குரல், அதன் பண்பாடு இதுதான்,

"ஒரே உயிர் மரபில் பிறக்கிற எல்லா உயிர்களின் பிறப்பும் ஒன்றே. அவற்றின் செய்கைத் திறனின் வேறுபாடே அதனதன் பெருமை வேறுபாட்டுக்குக் காரணம். அதுவன்றி பெருமைக்கு பிறப்பு காரணமாகாது."


மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களின் வரிகளோடு நிறைவு செய்கிறேன்,


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்