Saturday 14 July 2018

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தண்டிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை.  இற்றைக்கு மூவாயிரம் நான்காயிரமாண்டுகளுக்கு முன் இந்தத் தமிழ்க்குடி எப்படி வாழ்ந்திருக்கும் என்பதை அறிவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்குமா? அன்றி, வெறும் தொல்பொருள் மற்றும் வரலாற்றுத் தேடலாய், அல்லது காட்டுமிராண்டித்தனமான ஒரு முரட்டு மாந்தக்கூட்டம் கரடுமுரடாய் வரம்பற்று உண்டு, புணர்ந்து, வாழ்ந்து,  மடிந்த வெறும் உயிரியல் கதையாய் இருக்குமா?

இல்லையென்கின்றன சங்க இலக்கியங்கள். இன்னும் சரியான கால வரயறைக்குள் கொண்டுவரப்படாத அல்லது கொண்டுவர விரும்பப்படாத அந்தத்  தமிழ் சொற்பேழைகள், உலக மாந்தனுக்கெல்லாம் வழிகாட்டியாய் தமிழ்நிலம் இருந்தச் செய்திகளைச் சுமந்து நிற்கின்றன.

ஊரும் நிகழ்வும் 

கள்ளூர் என்ற ஊரொன்று அன்றைய தமிழ்நிலத்தின் கண் இருந்திருக்கிறது. அந்த ஊரைச் சுற்றி பண்பட்ட, நல்ல விளைச்சல் தரவல்ல நீண்டகாலம் பயன்பாட்டிலிருக்கிற, பலவகையான சிறுபூக்கள் நிறைந்த வயல்களும், பெருங் கரும்புத் தோட்டங்களும் இருந்திருக்கின்றன. எனில் வாழ்வும் சிறப்புறவே இருந்திருக்கக் கூடும். அழகிய நெற்றியை உடைய இளம்பெண்ணொருத்தி கள்ளூரிலே இருக்கிறாள். ஒரு நாள் அவளை அறனில்லாத ஆடவனொருவன் வலுக்கட்டாயமாகப் பாலியல் கொடுமை செய்துவிடுகிறான். அவள் ஊர் மன்றத்தில் முறையிடுகிறாள்.


வழக்கும் தெளிவும்

கள்ளூர் மன்றத்தினர், குற்றஞ்சாட்டப்பட்டவனை உசாவுகிறபோது  "இந்தப் பெண்ணை எனக்குத் தெரியவே தெரியாது" என்றுகூறுகிறான். அறனில்லாத அவன் கூற்றில் திறனும் இல்லையென்பதை மன்றத்தார் அறிந்து கொள்கிறார்கள். அந்தக் கொடியவனது உறவினர்களை முன்னிறுத்தி நிகழ்வின் சான்றாவாரை வினவுகிறார்கள். சான்றாவார் வினவப்படுவதிலிருந்தே அந்தப் பெண் ஊர் மன்றத்தில் முறையிட்டமை அறிய முடிகிறது. முடிவில் அவனே அந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியவன் என்பது தெளிகிறார்கள்.

தண்டமும் நிறைவேற்றுதலும்

அவனுக்கானத் தண்டனை தீர்மானிக்கப் பட்டுவிட்டது. எளிதில் முறித்துவிட முடியாத, வலிய தளிர்கள் நிறைந்த மரமொன்று அங்கே இருந்தது. அதன் கவராகிய கிளையொன்றில் அவனைக் கட்டிவைக்கிறார்கள்.  கவர்விட்டக் கிளையெனில் இரு கைகளையும் இருபுறமும் இழுத்துக் கட்ட ஏதுவாக இருக்கும். இது அந்நாளைய தண்ட முறையாம். இப்பொழுது அவன் தலையிலே "நீறு" பெய்யப்படுகிறது. நன்றாக வெண்மையாகச் சுடப்பட்டக்  கடற்சிப்பிகளை மண்தொட்டிகளிலிட்டு அதில் உப்பில்லாத ஆற்றுநீரோ அல்லது ஊற்று நீரோ பெய்யப்படும் போது, அது மிகுந்த வெப்பத்துடன் கொதித்து வெண்ணை போன்றப் பதத்திற்கு மாறும். அந்த வெப்பம் நிறைந்த, உடலை வெந்துபோகச் செய்கிற நீறு, இளம்பெண்ணைப்  பாலியல் வன்கொடுமை செய்த அந்தக் கொடியவன் தலையில் ஊற்றப்படுகிறது. அந்த நேரத்தில் அந்தச் சிறப்புமிக்க மன்றத்தில் இருந்தோர் அனைவரும் ஆரவாரம் செய்கிறார்கள் என்கிறது அகநானூற்றில் மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடலொன்று. இதோ அந்தப் பாடல்.


"பிணங்கரில் வள்ளை நீடிலைப் பொதும்பின்
மடிதுயின் முனைஇய வள்ளுகிர் யாமை
நொடிவிடு கல்லிற் போகி அகன்றுறைப்
பகுவாய் நிறைய நுங்கிற் கள்ளிரின்
உகுவா ரருந்து மகிழ்பியங்கு நடையொடு
தீம்பெரும் பழன முழக்கி அயலது
ஆம்பன் மெல்லடை யொடுங்கும் ஊர

பொய்யால் அறிவெனின் மாய மதுவே
கையகப் பட்டமை யறியாய் நெருநை
மையெழில் உண்கண் மடந்தையொடு வையை
ஏர்தரு புதுப்புனல் உரிதினி னுகர்ந்து
பரத்தை யாயங் கரப்பவும் ஒல்லாது
கவ்வையா கின்றாற் பெரிதே காண்டகத்

தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதற் குறுமக ளணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியே னென்ற
திறனில் வெஞ்சூ ளறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசா லவையத்து ஆர்ப்பினும்
பெரிதே
."    :- (அகம் 256)


-மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்


 

ஒரு பாடலுக்குள்தான் எத்தனைச் செய்திகள். 

ஊரின் நிலை. ஆமையின் இயல்பு. கொடியொன்றைப் பற்றிய குறிப்பு, சிறார்கள் நீரில் கல்வீசும் விளையாட்டு. வையையின் புதுப்புனல். அதில் பரத்தையரொடு ஆடும் ஆட்டம். ஊரறியாது அவர்கள் மறைத்தல். ஆனால் ஊர் அதைச் சொல்லித்திரிந்தமை. இளம்பெண்மீதான வன்கொடுமை. ஊர்மன்றம். சான்றாவாரை உசாவுதல். தண்டம் கொடுத்தல். தண்டம் நிறைவேற்றும் முறைமை. ஊரறிய தண்டம் நிறைவேற்றுதல். அறம்தவறி வன்கொடுமை செய்தவன் தண்டிக்கப் பெற்றால் ஊர் ஆரவாரம் செய்வது என ஏராளமான செய்திகளைச் சுமந்து நிற்கிறது இந்தப் பாடல்.

எம் செவ்விலக்கியங்களில் எத்தனை ஆயிரம் வரிகள். எவ்வளவு செய்திகள். வரலாறு என்பது வெறும் போர்களும், கோயில்களும், நினைவுத்தூண்களும் மட்டுமல்ல. ஆயிரமாயிரம் வாழ்வியல் செய்திகள் அதனுள்ளே பொதிந்து கிடக்கின்றன.

காதலில் திளைத்து, களவும் கற்பும் நுகர்ந்து,  பரத்தைகூடி, பரிசில் வழங்கி மட்டும் வாழவில்லை எம் இன மாந்தர். இளம்பெண்ணுக்கு இழைக்கப் பட்ட வன்கொடுமையை சான்றாவரை உசாவி தண்டமளிக்கும் அறனோடும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்படியொரு உசாவலில் பிழைத்ததால் தான்

"யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென"  வீழ்ந்து பட்டானோ பாண்டியனும் .

கோப்பெருந்தேவியிடம் இல்லாத மாணிக்கப் பரல்களோடு சிலம்புகொண்ட,  பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகளுக்குக் கிடைக்காத வழக்கு நயன்மை கள்ளூரின் இளம்பெண்ணொருத்திக்குக் கிடைத்திருக்கிறது. அந்தச் சிற்றூரும், மன்றமும்  புலவர்களாலும் பெருமைப் படுத்தப்பட்டிருக்கிறது.
 
தமிழ்க்குடி இப்படித்தான் வாழ்ந்திருக்கிறது. காட்டுமிராண்டித்தனமான ஒரு முரட்டு மாந்தக்கூட்டம் கரடுமுரடாய் வரம்பற்று உண்டு, புணர்ந்து, வாழ்ந்து,  மடிந்த வெறும் உயிரியல் கதையல்ல தமிழ்நிலத்தின் நெடிய வரலாறு என்ற பெருமிதத்தோடு,

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
சென்னை.
14/07/2018


5 comments:

 1. Replies
  1. மகிழ்ச்சியும், நன்றியும்

   Delete
 2. இப்படி ஒரு பாடலும் இருப்பது தங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். தமிழர்களின் இலக்கியங்களை தமிழர்களே முழுதும் படிக்க முடியாத படி நிறைந்துள்ளது.
  அனைத்து ஊடக கணக்குகளையும் நிறுத்தினால் தான் சிறு பகுதிகளையாவது படிக்க முடியும்.

  ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்