Friday 17 August 2018

பாதை மாறும் பேரியாறு

அது கி.பி. 1300  வாக்கில் ஒருநாள். முசிறித் துறைமுகம் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதே முசிறியின் இயல்பு. சிறப்பாகக் கட்டப்பட்ட உரோம நாட்டு கலங்கள் பேரியாற்றின் வெண்நுரை கலங்க பொன் சுமந்து வந்து இறங்கிய பெருமை கொண்டது அது என்கின்றன சங்க இலக்கியங்கள்.

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளம்கெழு முசிறி   (அகம் - 149) 

முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, (புறம் 343)


இரண்டாம் நூற்றாண்டு "தாலமி" யும் இதைக் குறிப்பிடுகிறார். ரோமர்களின் தபுலா பேன்டிங்ஜெரியான (The Tabula Peutingeriana) வில் முசிறியின் புவியியல் வரைபடம் கூட இருக்கிறது.

முசிறியின் பண்டைய ரோம வரைபடம்
இப்படி நாலாயிரம் ஆண்டுகளாய் பெருந்துறைமுகமாய் விளங்கிய முசிறி அன்றுதான் தன் கடைசி நாள் என்பதறியாது சீன வணிகர்கள் அங்குமிங்கும் நடமாட,  தன் வணிகத்தைத் தொடங்கியிருக்கக் கூடும். காலையிலேயே பெருமழைக்கான அறிகுறிகளை "வேணாடு மூப்பில்"  கண்டிருந்தாரோ அல்லது அந்தப் பேரறிவைத் தொலைத்திருந்தனரோ தெரியவில்லை. வானமலையைப் பெரு மேகங்கள் சூழ்கின்றன. கொடுங்கோளூரிலிருந்து வானமலையைப் பார்க்க முடியவில்லை. "இராக்கிளி தன் வழி மறையும்" பெருமழை பெய்துகொண்டிருக்கிறது. சுள்ளியம் பேரியாறு செந்நுரை எழுப்பி பேரிரைச்சலுடன் பாய்ந்து கொண்டிருக்கிறது.முறிந்து வீழ்ந்த பெருமரங்கள் ஆற்றின் கரையை உரசி  ஆற்றை மேலும் அகலமானதாக மாற்றுகின்றன. எங்கு காணினும் பெருவெள்ளம். மீன் நிரப்பிக்கொண்டு ஆற்றுக்குள் சென்ற அம்பிகள் மீண்டு வர முடியவில்லை. பொன் ஏற்றிக்கொண்டு வந்த கழித்தோணிகள் பேரியாறு ஒழுகும் கழிகளில் இழுத்துக் கொண்டு செல்லப்படுகின்றன. 

முசிறி நகரமெங்கும் வெள்ளம் சூழ்கிறது.  பெருவழிகளில் நீர் நிறைகிறது. நடந்து சென்ற மக்கள் "வஞ்சி" வலித்து மேடான இடங்களை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள். பேரியாற்றில் வெள்ளம் வந்துகொண்டேயிருக்கிறது. இத்தனைக்கும் முல்லைபெரியாறு அணை இல்லை, மலம்புழா அணை இல்லை. எந்த அணையுமே இல்லை.  வீடுகள் மூழ்குகின்றன. நான்கு நாட்களாயிற்று. குடகடலை முழுவதுமாய் உறிஞ்சியெடுத்து உமிழ்வது போல் வானமலையில் மழை பெய்து கொண்டிருந்தது. 

ஏறத்தாழ, பொலந்தார் குட்டுவனின் வழிவந்த எல்லா மக்களும் முசிறியை விட்டு வெளியேறி இருக்கக் கூடும். கீழடுக்குக் குறும் பாறையும், மேலடுக்கு மண்ணும் கொண்ட அந்த நிலம், பேரியாற்றின் இழுவைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தன்னை இழந்தது. நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் வணிகத்தில் சிறந்து, மக்கள் வாழ்ந்த முசிறி நகரம் பேரியாறு அள்ளி இறைத்த மண்ணில் சிக்குண்டது. தொடர் மழையால், மண் நிறைந்து வரலாற்றின் அடியாழத்தில் சென்று மூழ்கியது உலகெங்கும் அறியப்பட்டிருந்த  முசிறி மாநகரம். 

பட்டணம் அகழ்வாய்வு
பேரியாறு  தன் பாதையை மாற்றிக்கொண்டு ஓடத் தொடங்கியது. முசிறி மூழ்கினாலும் வேறு சில புதிய நிலப்பரப்புகளை உண்டாக்கியது ஆற்றின் வழி மாற்றம்.  அப்படி உண்டான ஒரு துறைமுகம் கொச்சி. 1341 ல் துறைமுகம் அங்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து வணிகம் நடைபெற்றது.

போர்ட் கொச்சியில் உள்ள ஒரு செய்தி

1924 ல் மறுபடியும் மழை. பேரியாறு மீண்டும் புவியியல் அமைப்பை மாற்றியது. முல்லைப்பெரியாறு அணை இருந்தது. ஆனால், பெருவெள்ளத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. பெரியாறு என்று அதன் தன்மை தெரியாது அழைக்கப்பட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 


2018 மறுபடியும் "சுள்ளம் பேரியாறு" தன் போக்கில் நீரொழுக்குகிறது. சுள்ளம் என்றால் சினம் என்று பொருள் தருகின்றன பேரகராதிகள்.  அதன் கிளை ஆறுகளே நிறைய இடங்களில் பாதையை மாற்றிக்கொண்டு ஒழுகுவதாய் செய்திகள் கிடைக்கின்றன. பரவூர், சேந்தமங்கலம் பகுதிகளில் இதுவரை வராத பாதைகளில் "பொழை" கள் ஒழுகுவதாய் செய்திகள் வருகின்றன.  "பெரிங்கல் குன்னு" முதல் "சாலக்குடி" வரை நில எல்லைகள் அறிவதில் பெரும் இடர்பாடுகள் வெள்ளம் வடிந்த பின் இருக்கக் கூடும்.


 எந்தச் சிக்கலும் இல்லாத போதே வானமைலையின் தன்மை ஒரு தன்மைத்தாய் இருந்ததில்லை. வேறுபட்ட நில அமைப்புகளையும், அதற்கேற்ற ஆறுகளையும் கொண்டது அம்மலை.  தேயிலைத் தோட்டங்கள் முதலில் மலையைக் கெடுத்தன. அதை 1924 ல் உணர்ந்தோம். பின்னீடு ரப்பர் மரங்கள் இதோ சான்று பகர்கின்றன. வருத்தம் தான். தேயிலை நிறைந்த மூணாறு நகரம்  இன்று வெள்ளத்தின் பிடியில். மண்சரிவுகளும் அங்கே அதிகமாக இருகின்றன. மாநிலமெங்கும் ரப்பர் தோட்டங்களுக்கு இடையே வீழ்ந்து கிடக்கிற வீடுகளே அதிகம் காண முடிகிறது.  பொதுவாகவே நிலம் குறைந்த மாநிலம் கேரளா. தேயிலை, ரப்பர், அதிகப்படியான கட்டிடங்கள் எல்லாம் சேர்ந்து பெருமழையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்து கிடக்கின்றன.  முல்லைப் பெரியாறு அணை அல்ல இதன் காரணம். "இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைக்க"ப் பார்க்காதீர்கள்.

 
வானமலையோடும், பேரியாற்றோடும் நம் புள்ளிவிபரங்களும், சிற்றறிவும் மோதி மோதித் தோற்றுப் போகும். ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதை அறிந்து நடப்பதே அறிவுடைமை. அன்றி, எல்லா ஆறுகளுக்கும் ஒரே அளவுகோல் என்பது சிறப்பானதல்ல. 

வானமலையும், பாய்ந்து வரும் பேரியாறும்.

எப்படி இருந்தாலும் "பேரியாறு" வரும் காலங்களிலும் தன் பாதையை மாற்றி மாற்றி ஓழுகும். அது இயற்கையின் விதிகளுக்குள் ஒழுகும் ஆறு. அந்த விதிகளைப் பட்டியலிட நாம் இன்னும் அறிந்திருக்கவில்லை. 

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
சென்னை.    17/08/2018







No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்