Monday 4 February 2019

பேரன்பு


படம் தொடங்கும் இருளுக்குள், வானமலைத் தொடரின் கொடைமலைக் குறிஞ்சிக் காடு ஒன்றின்  மஞ்சு கவிந்திருக்கும் ஏரி நீர்ப்பரப்பின் மேலே தொடங்கி நம் உள்ளத்தின் அடியாழம் நோக்கிப் பாய்கிறது ஒரு குரல். "ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள்".

உண்மையிலேயே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தானா?

இயற்கையை எந்த மறுதலிப்புமின்றி ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டால் அது உண்மைதான் என்பது படம் முடியும் போது புரிகிறது. ஆனால், நம்மை நோக்கிய கேள்விகள் ஏதுமின்றியே படம் தன்போக்கில் நகர்கிறது. பேரன்பின் முழுமைத்தன்மை அளவுகோலற்றது. "வீட்டுக்கு வந்துட்டியா" என கைப்பேசியில் ஒலிக்கும் அமுதவனின் மனைவியின் குரல், பதின்மூன்று ஆண்டுகாலம் பாதுகாத்து; கற்றுக்கொடுத்த ஒரு உள்ளத்தின் கடைசி உறுதிக் குரல், ஒப்படைத்துவிட்ட கடமை முடிந்த நிலையில் துண்டிக்கப்படுகிறது.

அமுதவனோடும், மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது குழந்தையோடும் நாமும் பயணிக்கத் தொடங்குகிறோம். பதின்ம வயதுடைய இது போன்றதொரு மகளுடன் ஒரு அப்பாவின் வாழ்க்கையே காட்சிகளாய் விரிகிறது.

இயக்குநர் ராமின் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும். 1977 ல் பாரதிராஜா "பதினாறு வயதினிலே" மூலம் துணிச்சலுடன் அன்றைய திரைப்பட மரபுகள் சிலவற்றை உடைத்தெறிந்து ஒரு புதுவெள்ளம் பாய்ச்சினார். கடந்த ஆண்டு "மனுசங்கடா" வணிக சினிமாத்தனம் எதுவுமின்றி வெளிவந்தது.

இப்பொழுது ராமின் "பேரன்பு". மிகச் சிக்கலான; ஆனால், சமூகத்திற்குக் காட்டப்பட்டே ஆகவேண்டிய ஒரு கதைக்களம். பெரும்பாலான நிமிடங்களில் அரங்கத்திற்குள் பேரமைதியைக் கண்டேன் (பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." என்ற ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரலைத் தவிர). வியப்பு என்னவென்றால் எந்தக் காட்சியிலும் நமக்கு கதை மாந்தர்கள் மீது பரிதாபம் வரவில்லை. அயற்சியும் இல்லை. மாறாக காட்சிகளைக் கடந்து கொண்டே வருகிறோம். நிறைய இடங்களில் முப்பது முப்பைத்தைந்தாண்டு திரைக் கற்பனைகளைப் புறந்தள்ளி நகர்கின்றன காட்சிகள். கூரான உரையாடல்களும், உடல்மொழிகளும் வழமையை உடைத்தெறிகின்றன.

இயல்பின் உரையாடல்கள் சிலநேரம் உள்ளத்தில் அறைகின்றன. காட்டாக,  "இங்க அவன ரோட்ல போட்டு எல்லோரும் அடிக்கிறதுக்கு, அங்கே ரூமுக்குள்ள தானே அடிக்கிறாங்க. பரவால்ல";  "நீங்க பேசாம காருக்குள்ள உக்காருங்க. வண்டிய நிறுத்துனமா தூங்குனமா ன்னு போயிட்டே இருக்கணும்.  அதுக அப்படித்தான். அதுல தலயிடாதீங்க."  போன்ற இடங்கள். சமூகத்தின் காது மடல்களை விரிக்க இயக்குநர் முனையும் ஏராளமான இடங்களில் அரங்கம் அமைதி கொள்கிறது (பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." அதே மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரலைத் தவிர).

நடிகர் மம்மூட்டிக்கு இந்தப் படம் பெரும்பேறு. படத்திற்கு மம்மூட்டி பெரும் பொருத்தம். ராமின் இயல்பின் கடத்தலை தன் உடலெங்கும் பூசிக்கொண்டு நடக்கிறார்.  சாதனாவுக்கு, ஒரு துணிச்சலான இயக்குநரின் கதையைத் தாங்கி காட்சியமைப்பில் அழுத்தம் கொடுக்கவேண்டிய பொறுப்பு. பரிதாபம் தவிர்த்து பேரன்பைப் பெற்றுவிடுகிற நேர்த்தி அருமை. அழகாய் செல்பி எடுத்துக் கொண்டு நடக்கிற வயதில் உடலைக் கோணிக்கொண்டு நடித்த துணிச்சலும் முதிர்ச்சியும் பாராட்டுக்குரியது.
 
படமெங்கும் இழைந்தோடும் யுவனின் இசை, சில இடங்களில் வேகமெடுக்கிறது. சில இடங்களில் நம் அருகில் காதுகளில் ஒலிக்கிறது. நிறைய இடங்களில் மௌனம் பழகுகிறது. அரங்கம் பேரமைதி கொள்கிறது  (பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." என்ற அந்த மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரலைத் தவிர).

இயற்கையின் விதிவழியில் எல்லா உயிர்களுக்கும் இனப்பெருக்கத்திற்கென உடலில்"காமம்" இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விலங்குகளாய் இருந்தபோது "உணர்வு' நிலையிலிருந்த காமம், உருவகப்படுத்தும் திறனும் நினைவு வலைப்பின்னலும் பொருந்திய ஆறாம் அறிவால் "உணர்ச்சி" நிலைக்கு மாற்றப்பட்டது. இப்படியொரு நிலையில்... வண்ணத்துப்பூச்சி, மயில் போன்ற உயிர்கள், வண்ணம் வடிவம் போன்ற அழகுணர்வில் இணைதேடுவதைக் கண்ட மாந்தனின் ஆறாம் அறிவு அதைப்பற்றி எண்ணத் தலைப்பட்டிருக்கக் கூடும். காலங்கள் ஓடிவிட்டன.  ஒரு நிலையில் இன்பம் துய்ப்பதற்கான நுழைவாயில் "பொருள்" என்று ஆனது. அதனால் அடுத்தவரின் காமமும் அதற்கான தேவையும் புரியாமல் போன சமூகமாய் மாறிப்போனோம். மூளைமுடக்கு வாத தாக்கத்தினால் காமம் செத்துப்போவதில்லை. அது இயற்கை விதி. இந்த இடம் வரை பயணம் செய்கிற ராமின்  காட்சியமைப்புகள் தமிழ்சினிமா நீண்ட காலத்துக்குப் பிறகு தொட்டிருக்கிற கொடுமுடி.

கடற்கரையின் அமைதி, அலைகளின் இரைச்சல். எங்கோ தூரத்தில் புரிந்துகொள்ளத் திணறும் சமூகம். அறிந்து கொண்ட அப்பா. படம் முடியும் நேரம். அரங்கத்தில் எல்லோரும் கனத்த அமைதியோடு அமர்ந்திருக்கிறார்கள். இப்பொழுது மறுபடியும் பின்னிருக்கையிலிருந்து "பாப்பா... பாப்பா..." என்ற அதே மூன்று வயதுப் பெண் குழந்தையின் குரல். "இல்லடா செல்லம் அது அக்கா டா.. எத்தன தடவ சொல்லிட்டேன்.." கிசு கிசு குரலில் அம்மா. 

"இல்ல பாப்பா.... பாப்பா.. பாப்பா.."  கொஞ்சம் பேரொலியாய்க் குழந்தையின் குரல்.

ராம். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். பேரன்பை விதைத்து விட்டீர்கள். இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன, உயரங்களும்.

வாழ்த்துகள் ராம்.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்.
03-02-2019

 


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்