Friday 13 December 2019

விழுப்புரம் துயரம் - திசம்பர் 2019

அந்த வீடியோவைப் பார்த்ததிலிருந்து பகலில் தொடங்கிய வேதனையின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

சிலர் வேதனையில் பின்னூட்டங்களில் திட்டுகிறார்கள். உண்மைதான் எவர் உயிரையும் எடுக்க எவருக்கும் உரிமை இல்லைதான். நடந்த நிகழ்வு பெரும் சோகம் தான். பதிவிட்டுத் திட்டியவர்கள், பின்னூட்டங்களில் திட்டியவர்கள் என பெரும்பாலோர் வேதனையில் தான் திட்டியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும் அவையும் வேதனையளித்தன என்பதை மறுக்க முடியவில்லை. “கேட்டால் உதவியிருப்பார்கள்’, “லாட்டரி வாங்கியவனுக்கு உழைக்கத் தெரியாதா?” “நீ மட்டும் செத்து தொலையலாம்ல” , என்பது போன்ற பதிவுகளும்; அதைவிடக் கடுமையான பின்னூட்டங்களும் முகநூலில் வெளிப்பட்டன. ஏராளமான பெண்களும் கண்ணீரோடும் கோபத்தோடும் கவலையோடும் பதிவிட்டிருந்தார்கள்.

நாம் யாரிடம் சொல்கிறோம்??

பிணங்களிடம் போய் நின்றுகொண்டு தற்கொலை தீர்வல்ல என்று பேசுபவது வெறும் புலம்பல் தானே.

என் குழந்தைக்கு நஞ்சைத் தரவேண்டும் என்று நான் கற்பனையில் கூட எண்ணியதில்லை. கண்டிப்பாக நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள். இயல்பு இப்படியிருக்க; அந்த மூன்று பிஞ்சுகளின் தந்தையும், நஞ்சுண்ட குழந்தையைத் தோளில் சாய்த்து வைத்திருக்கும் தாயும் மட்டும் இதற்காகவே பிறந்தவர்கள் போன்று நாம் எப்படி நினைத்துக் கொண்டு திட்டுகிறோம். புரியவில்லை. லாட்டரியினால் கடனானார். கடனைத் தீர்க்க வேலை செய்ய வேண்டும். ஆனால் ஒரு “பத்தர்” ஆக ஒன்றும் செய்ய இயலவில்லை என விரக்தியின் எல்லைக்குப் போய்விட்டார். முடிந்து போனது ஒரு குடும்பத்தின் வாழ்வு.

திருச்சியில்; லாட்டரி. சூது, மது என எந்தப் பழக்கமும் இல்லாமல் பிழைப்புக்குத் திண்டாடும் பத்தர்களை, ஆசாரிகளை நான் நேரடியாக அறிவேன்.

நம் உளச்சான்றுக்கு ( மனசாட்சிக்கு ) சில கேள்விகள்.

அண்மையில், துபாயில் வேலை செய்தவர் லாட்டரியில் 27 கோடிகள் பெற்றார் என்ற செய்தி இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியான போது “அட…நமக்கு ஒரு வாய்ப்பு…கிடைக்காதா” என்று யார் மனதிலும் தோன்றவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?

இன்னும் கூட அண்டை மாநிலங்களில் அரசு நடத்தும் லாட்டரி இருக்கிறதே. அது பற்றிய நம் கருத்து என்ன?.

அதையெல்லாம் விட பதிவுகளில், பின்னூட்டங்களில் பொங்கிய ஆண்களில் பெண்களில் எத்தனை பேர் பெரிய நகைக் கடைகளை விடுத்து ஆசாரிகளிடம் நகை செய்து வாங்குகிறீர்கள். உங்களுக்கு ஆசாரிகளை விட அட்சயத் திரிதியை முக்கியமாகப் போய்விட்டது தானே?

பெருங்கடை விற்பனையாளரை முதலாளியை வெளிச்சத்தில் பார்த்து புன்னகைக்கும் நாம் உமி நிறைத்த குமுட்டிக்கு நடுவே ஊதிக் கொண்டிருந்த பொற்கொல்லர்களை மறந்து போனோம். உண்மைதானே?

வாழ்வின் கடைசி நிமிடங்களில் தன்னைச் சுற்றியிருந்த சமூகத்தின் மீது அவருக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது என்று எவரேனும் உறுதி தர முடியுமா?

அந்தப் பிஞ்சுகளின் வாயில் விழுந்த நஞ்சின் துளியில் ஒரு நுணுக்காவது நம்முடைய பங்கு என்று எண்ணாதவரை இந்த மண்ணைக் காப்பாற்ற முடியாது. மரணங்களைத் தடுக்க முடியாது.

எவனோ ஒருவன் நேரம் போகாமல் எழுதிக் கொண்டிருக்கிறான் என்று திட்டிவிட்டோ, நகைத்துவிட்டோ நீங்கள் கடந்து போகலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அருள் கூர்ந்து இனியாகிலும் “இறந்து போனவருக்கு அறிவுரை சொல்லாதீர்கள்.”

வேறு வேலை செய்து பிழைத்திருக்கலாமே. மற்றவர்களெல்லாம் இல்லையா என்று கேட்டுக்கொண்டும் உங்களில் சிலர் வரலாம்.
காத்திருங்கள். இப்படியே போனால் நம் பிள்ளைகளை நோக்கியும் இந்தக் கேள்வி வரும்.

என்ன செய்வது; மார்பிள் போட்ட வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு மலைகளை உடைப்பதைக் கண்டு, கோபம் கொண்டு; “இயற்கையை காப்பாற்றுவோம்” என்ற பதிவை முகநூலிலும் வாட்சப்பிலும் “SHARE” பண்ணுகிறவர்கள் தானே நாம்.

கனத்த நெஞ்சுடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்
13-12-2019

1 comment:

  1. ஆமாம்.. இனியும் நிகழும் முன் சிந்திப்போம்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்