Monday 23 December 2019

நாடுகாண் காதை - A Time Machine Journey 
"ப்ரோ... கடைசி டெஸ்ட் ஓகே...டா...."

"அப்படியா மச்சி.. தோ வந்துகிட்டே இருக்கேன். அவங்க மூணுபேரும் இருக்காங்களா"

"ஆமாடா. எல்லோரும் இங்கதான் இருக்கோம்.  சீக்கிரம் வாடா.."

'ஓகே... டா..." என்றவன் காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து காஞ்சீவரம் செல்லும் சாலையில் வேகமாகச் செலுத்தினான்.

மூன்றாண்டுகளாக மூளையைக் கசக்கி, இரவும் பகலும் உழன்று ஐந்து நண்பர்கள் இணைந்து "கால இயந்திரம்" ஒன்றை வடிவமைத்து விட்டார்கள். அதனுடைய இறுதிச் சோதனை முடிந்த செய்தியைத் தான், இவனுக்கு நண்பன் ஒருவன் தொலைபேசியில் சொன்னான். கடும் உழைப்பு. திரைப்படங்கள், புத்தகங்கள் என பல்வேறு தூண்டுதல்களால் ஆசை எழுந்து இன்று அது அவர்களுக்குக் கைகூடிவிட்டது. அந்த இயந்திரத்தை முடுக்கி கடந்த காலங்களுக்குள் பயணம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை உலகெங்கும் இருக்கிறது. ஆனால், அதற்கான மாதிரிகளோ விளக்கங்களோ இன்றி இவர்கள் அதை வடிவமைத்து விட்டார்கள். அதன் முழுத்திறனும் எப்படியிருக்குமென்று அவர்களுக்குத் தெரியாது.

சிந்தித்துக் கொண்டே வந்தவன் சாலையின் இடதுபுறம் இருந்த ஒரு பண்ணைவீட்டுக்குள் வண்டியைச் செலுத்தினான். சேகரின் வீடு அது. சிங்கப்பூரிலிருக்கும் அவனது அப்பா எப்பொழுதாவது வந்தால் தங்குவதற்காக வாங்கியிருந்தார். அதைத் தான் இந்த ஆய்வுக்கான இடமாக மாற்றிக் கொண்டார்கள். பிரியா தான் அந்த மாற்றத்திற்கான முக்கிய காரணி. நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கழகத்தில் படிக்கத்தொடங்கிய நாளிலிருந்தே கண்டுபிடிப்புகளின் மீது பேரார்வம் கொண்டிருந்த நான்கு நண்பர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டாள். எல்லோரும் வேறு வேறு வேலைகளில் சேர்ந்த பின்னும் இன்னும் ஆய்வு தொடர்கிறது. ஐந்து பேரில் முருகன் அமைதியானவனாகத் தெரிந்தாலும் எதையேனும் சாதித்துவிட வேண்டுமென்ற வெறியை மனதில் சுமப்பவன். அந்தக் கூட்டத்தின் முக்கியமானவன் ஆனந்தன். திட்டமிடுவதும், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி திட்டத்தின்படி செயல்படுவதும், நண்பர்களைத் திட்டத்தில் வழிநடத்துவதும் அவனே. இவர்கள் நான்குபேரும் வரவேற்பறையில் அசோக்கின் வருகைக்காய்க் காத்திருக்கிறார்கள். வெளியே கார் நுழையும் ஓசை. தொடர்ந்து கதவு திறக்கும் ஓசை.

ஐந்துபேரும் ஒற்றைக் கூச்சலில் "ஓவென" மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள். இயந்திரம் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். சிறிய, ஏறத்தாழ  கார் போன்ற வடிவத்தில் இருந்தது இயந்திரம். ஆனந்த் அதை ஒரு குழந்தையைப் போல தடவிக் கொண்டே

"என்னங்கடா பயணத்தைத் தொடங்கலாமா?" என்றான்.

"ம். முதல் டிரையல் போகலாம்" பிரியா

"எங்க போறது"

"ஏறுங்க எல்லோரும். ஒரு டேட்ட பிக்ஸ் பண்ணி என்ன நடக்குதுன்னு பாப்போம்."

ஒரே குரலில் சரியென்று சொல்லிவிட்டு அனைவரும் ஏறிக்கொண்டார்கள். எல்லோருக்குமே உள்ளுக்குள் அறிவியலையும் தாண்டி கொஞ்சம் அச்சமிருந்தது. 

"எதுக்கும் நேத்து டேட்ட போடு மச்சி. பிரச்சனை வந்தாலும் பெரிசா இருக்காது சமாளிச்சிரலாம்" என்றான் அசோக். அதுவே சரியென்று அனைவருக்கும் தோன்றியது. பிரியா, 22-12-2019 என்று மெல்லிய நடுக்கத்துடன் தட்டச்சு செய்து கட்டளை பிறப்பித்தாள்

 மறு நொடி....

ஒரு அழகான மலையில் சிறிய குளம் போன்ற பகுதி. பச்சை போர்த்திக் கிடந்தது அந்த மலை. சுற்றிலும் வளர்ந்து ஓங்கிய மரங்கள், குறுஞ்செடிகள். கதிரவன் உச்சியில் இருந்தான். இவர்களின் இயந்திரம் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்று தொலைவில் கீழ்நோக்கி ஒரு பாதை சென்றது. பார்த்தால் அடிக்கடி மனிதர்கள் பயன்படுத்தும் பாதை என்பது தெரிந்தது. கீழே ஏதேனும் ஊர் இருக்கலாம். எந்த ஊர் எந்த இடமென்று தெரியவில்லை. யாரேனும் வந்தால் கேட்கலாம். அல்லது கீழே இறங்கிச் சென்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டார்கள்.

கீழே இறங்கத் தொடங்கினார்கள். ஆனந்த் சுற்றுமுற்றும் பார்த்தான். ஏதோ தவறு என்று தோன்றியது. கீழே தரைப் பகுதியிலும் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. அது சுற்றுலாத் தலமாக இருப்பதற்கான அறிகுறிகளும் இல்லை. சிறு குழப்பத்தோடு எல்லோருக்கும் பின்னால் அவன் நடந்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் கீழிருந்து குரல்கள் மெலிதாகக் கேட்க ஆரம்பித்தன. மனிதர்கள் வரும் ஓசை அது என்பது அவர்களுக்குப் புரிந்தது. முருகனின் மனதுக்குள் பேராவல். நேற்றுக்குள் மீண்டும் வந்திருப்பது எல்லையில்லா வியப்பைத் தந்தது. எதிரே வருபவருக்கு அது நிகழ்காலம். இவர்களுக்கு இது இறந்த காலம். விந்தைதானே. வருபவர்களிடம் அவர்களின் அடுத்த நாள் குறித்த நிகழ்வொன்றைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தலாம் என்று நண்பர்கள் அனைவரும் ஆவலோடு தயாரானார்கள். ஆனால், எதிரே..

வடபழனி முருகன் கோயில் பல்லக்கு போன்ற ஒன்றைச் சுமந்துகொண்டு நான்குபேர் ஏறிக்கொண்டிருந்தார்கள். கூடவே ஏழெட்டு பேர் முன்னும் பின்னுமாக, வரிசையாக வந்து கொண்டிருந்தார்கள். சிலர் கைகளில் வாள் வைத்திருந்தார்கள். இன்னும் கொளுத்தாத துணிப்பந்தம் ஏந்தியபடி இருவர். ஓரிரு பானைகளைச் சுமந்தபடி இருவர். பல்லக்கில் நடுவயது கடந்த ஒருவர் இருந்தார். அவர்களது ஆடையும் ஏதோ ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தில் வருவது போல தோன்றியது நண்பர்கள் ஐவருக்கும்.

காலப் பிழை ஒன்று இயந்திரத்தில் நடந்திருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்தனர். எந்த ஆண்டில் இருக்கிறோம் என்பது கூட விளங்கவில்லை. அதற்குள் அந்த பல்லக்குக் கூட்டம் இவர்களை நெருங்கிவிட்டிருந்தது. முன்னால் வந்த இருவர் எச்சரிக்கையாக வாளை உருவிக் கொண்டார்கள். சேகருக்கு உள்ளூர பகீரென்றது. பல்லக்கிலிருந்தவர் இவர்களின் உடைகளைக் கூர்ந்து பார்த்தார். ஆனால் அறிந்துகொள்ள இயலவில்லை என்பதை அவர் நெற்றிச் சுருக்கம் காட்டிக் கொடுத்தது. பிரியா முன்னால் வந்தாள். 

"ஐயா.. இது எந்த ஊரு?. இது எந்த வருடம்?" என்று கேட்டாள்.

"இது குறத்திப் பாறை. ஊரு கீழே இருக்கு" -பானை சுமந்தவர் பதில் சொன்னார். வாளேந்தியவர்கள் எச்சரிக்கையாக நின்று கொண்டிருந்தார்கள்.

"நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்" மேலேயிருந்து கேள்வி வந்தது.

'நாங்கள். அந்த ஊருக்குத்தான் போக வேண்டும்"

"ம்"

இவர்கள் பிரச்சனை இல்லாதவர்கள் என்று அறிந்துகொண்ட கூட்டம் நடக்கத் தொடங்கியது .வரிசையின் கடைசியாக நடந்து வந்தவனிடம் நெருங்கினான் முருகன்.

"ஏன் அவரைத் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர் யார்?" என்று கேட்டான்.

"ஐயா அது தலையெழுத்து. புண்ணியம் பண்ணினவன் பல்லக்குல இருக்கான். இவனுக விதிப்பொறப்பு அவர தூக்கிச் சுமக்கிறாங்க" என்றபடி அவனும் நடக்கத் தொடங்கினான்.

"என்னடா இது அடிமையா இருக்கிறத விதின்னு சொல்றான்.  ம்... எந்த காலண்டா இது." புலம்பியவாறே முருகன் நடந்தான். பாதை வளைந்து நெளிந்து சென்றது.  இன்னும் கொஞ்ச தொலைவு இறங்கினால் ஊர் வந்துவிடக்கூடும். அடுத்த சிறு வளைவில் ஒரு தேக்குமரத்தின் கீழே இருந்த பாறையில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை நெருங்கினார்கள்.

"ஐயா. தரையிலிருக்கும் ஊருக்குச் செல்வதற்கு இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்"

"அண்மையில் தான் இருக்கிறது. ஊர்."

"ஐயா இது என்ன காலம்"

"ம்... மண்பிறந்து பத்தடுத்த கோடி நாள் இருக்கலாம். உயிர் பிறந்து வளர்ந்து பேசி பத்துநூறாயிரம் நாள் இருக்கலாம்".

நண்பர்கள் அனைவரும் தலையைச் சொறிந்து கொண்டார்கள்.ஆனால் அவரைப் பார்த்தால் பேச வேண்டும்போல் தோன்றியது. அதற்குள் அவரே தொடர்ந்தார். "சரி நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?"

முருகன் முந்திக்கொண்டான். "ஐயா நாங்கள் உங்கள் எதிர் காலத்திலிருந்து வந்திருக்கிறோம்."

அவர் கண்களைச் சுருக்கினார். உதட்டோரம் மெல்லிய புன்னகைக் கீற்று.

"ஐயா.. புரிந்து கொண்டீர்களா?" மறுபடியும் கேட்டான் முருகன்.

"புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் அருள் கூர்ந்து நீங்கள் கடவுளிடம் இருந்து வருகிறீர்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். பொல்லாத மக்கள் சிலர் உங்களைத் தொழச் சொல்லி மற்றவரிடம் சொல்வார்கள்" "அதைப் அறப் பயன் என்று வேறு சொல்லத் தொடங்கிவிடுவார்கள்" என்றவர் வெடிச்சிரிப்பு சிரித்தார்.

"ஆமாம் ஐயா நாங்க கீழே வரும்போது பல்லக்கில் ஒருவரை வைத்து நான்கு பேர் தூக்கிட்டுப் போறாங்க. கேட்டா புண்ணியம்னு வேற சொல்றாங்க"

"அப்படித்தன் அவர்கள் சொல்லுவார்கள். நம்மிடையே வலு, திறமை அல்லது பொருள் பற்றி இருந்த வேறுபாடுகளை வேறுபாடுகளாகவே நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம். அப்படி ஏற்றுக்கொள்வதுதான் இயல்பும் அறிவும் கூட. ஆனால் வளர்ந்த ஒரு சமூகத்தின் ஊடே வளர்ச்சியடையாத ஒரு சமூகம் நுழையும் போது இத்தகைய அறிவைப் புரிந்து கொள்ள இயலாத போது; அது எங்கிருந்தோ வந்ததாகக் கற்பனை செய்து கொள்ளும். நான் ஏற்கனவே அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் பலர் இன்னும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்"

"என்ன சொன்னீர்கள் ஐயா?"

"அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
 
 என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறேன்."

 "ஐயா... இது உங்க பாட்டா. அப்ப நீங்க திருவள்ளுவரா?" என்ற முருகன் வியப்பின் எல்லைக்குப் போனான். எல்லோருக்கும் பெருவியப்பு வந்தது.

"திருவள்ளுவரா? ... யார் அது. நான் அவரில்லை. ஆனால் இந்த பாடல் என்னுடைதுதான். இதுபோல் குறள் வெண்பாக்கள் ஏராளம் எழுதியிருக்கிறேன்"

"நீங்களே அந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்லிருங்களேன்"

"அப்படியா. சரி. கேளுங்கள். உங்களுக்கு முன்னானலே பல்லக்கைச் சுமந்து சென்றவருக்கும் அதில் அமர்ந்திருப்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இருக்கிறதே அது அவர்கள் செய்த அறத்தினால் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டாம். நான் 'வேண்டா' என்ற சொல்லை எழுதியிருக்கிறேன். ஆனால் பலரும் அதை எடுத்துக்கொள்ளாமல் விடுகிறார்கள். ஆனால், மழித்தலும் நீட்டலும் வேண்டா எனும்போது எடுத்துக் கொள்கிறார்கள். இந்த வேறுபாடு அறப்பயனாலோ ஊழ்வினையாலோ ஏற்பட்டதல்ல. மேலே இருப்பவன் அறம் மட்டுமே செய்திருக்கிறான் என்பதற்கான உறுதி ஏதும் இல்லை. அதுபோல சுமப்பவர்களும் அறமே செய்யவில்லை என்றும் கூறிவிட முடியாது."

"பிறகு சிலர் ஏன் அப்படிச் சொல்லுகிறார்கள்?"

"தன் வலுவும் திறமையும் இன்றி, அரசின் துணைகொண்டோ பிற வழியிலோ பிறரை ஏமாற்றி ஒரு நிலையை அடைபவர்கள் இதுபோன்ற கதைகளை உருவாக்குகிறார்கள். நான் வேறொரு குறளில்....

'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.' என்று கூடச் சொல்லியிருக்கிறேன்.  நேர்மையானவனது வறுமை ஆராயப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். ஆமாம் அது விதிப்பயனல்ல."

"ஐயா சுமப்பவர்கள் அடிமையாக இருந்துதானே அந்த வேலையைச் செய்கிறார்கள்."

"இருக்கலாம். நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள். "

"நாங்கள் வேறுவேறு நிறுவனகளில் வேலை செய்கிறோம்"

"நிறுவனம் என்றால்?"

"ம்... ஒரு இடத்தில் வேலை செய்கிறோம் ஐயா."

"ஓ.. என்ன வேலை?. வேலை உங்களுடையதா? விளைபடு பொருள் யாது"

"இல்லை ஐயா. வேலை வேறு ஒருவருடையது. விளைபடு பொருளும் அவருடையதே. எங்களுக்கு ஊதியம் மட்டும்"

"ஓ..  தொழுது உண்ணும் வழியோ. ஒரு வழியில் நீங்களும் அடிமைகள் தானோ? விளங்கவில்லை."

"ஐயா... "

"பற்றம் வேண்டாம். இயல்பைச் சொன்னேன். நீங்களும் வேலைக்காரனாய் இருப்பதை நல்வினை தீவினைகளோடு பொருத்தாதீர்கள். இறந்த காலங்களில் மட்டுமே அடிமைகள் இருந்தார்கள் என்று எண்னாதீர்கள். ஏனென்றால் 'தலைமை' என்பது விலங்குப் பண்பு. இயல்பு. உலகம் இருக்கும் வரை அது மறையாது. ஆனால், தகுதியும் திறமையும் இன்றி, வஞ்சித்தோ, ஏய்த்தோ ஒருவன் ஒரு நிலையை அடைந்தானாகில், அவன்மீது ஐயப்படுங்கள். மனித குலத்துக்கு எதிரான எதுவுமே விலக்க வேண்டியதே. நல்வினை தீவினை குறித்த  இது போன்ற அரைகுறைச் சிந்தனைகளும் அதற்கு விதிவிலக்கல்ல."

"புரிந்தது ஐயா. இன்று எங்கள் பயணத்தின் காலம் முடிந்துவிட்டது. மீண்டும் வருவோம். மிக்க நன்றி ஐயா"

"நன்றி வேண்டாம் மக்காள். குறளை மறந்துவிடாமல் இருங்கள்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை".... என்றவாறு அவர் நடக்க ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்