Sunday 5 April 2020

முற்றாக் காதல் - நல்லந்துவனார்



உலகின் பெருநகரமொன்று சுறுசுறுப்படைந்தது. கதிரவன் மேலேறிவிட்டான். வணிகர்கள் கடைதிறந்து, கொள்வோர் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அங்கிருந்து சில கல் தொலைவில் பரங்குன்றில் முருகனுக்கு ஏதோ விழாவெடுக்க மக்கள் குழுமத் தொடங்கினார்கள். கூடல் நகருக்கும் பரங்குன்றிற்கும் நடுவே இருந்தச் சிற்றூர் ஒன்றிலிருந்து குயிலி தன் தோழிகளுடன் திருப்பரங்குன்று நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

செல்லும் வழியெல்லாம் பூஞ்சோலைகளாக இருந்தன. தேனூறும் பூக்களைத் தேடி வண்டுகள் அங்குமிங்கும் பறந்தவண்ணம் இருந்தன. இடையிடையே தேனீக்களும் பறந்தன. அவை எழுப்பும் ஒலிகள் ஏழு துளைகள் கொண்ட குழலும், ஐந்து துளைகள் கொண்ட குழலும் இயைந்து ஊதுவதுபோல் இருந்தன. இடையிடையே வீசிய மெல்லிய காற்றில் காந்தளின் மணம் நிறைந்திருந்தது. பலவிதமான மலர்கள் பூத்துக் குலுங்க நடையின் சலிப்பு அறியாது பரங்குன்று வந்து சேர்ந்தார்கள் மகளிர். நேரம் உச்சியைத் தாண்டியிருந்தது.


"என்ன குயிலி அவன் வந்துவிடுவான் என்று சொன்னாய். இன்னும் காணவில்லை?" - தோழி ஒருத்தி வினவினாள்.

"ம்... கண்டிப்பாக வருவேன் என்றுதான் சொன்னான். என்னவென்று தெரியவில்லை. காத்திருப்போம்"

அந்த நேரம்..  மேலிருந்து "குயிலி" என்று அவன் அழைக்கும் குரல் கேட்டது. மலையைப் பார்த்தாள். ஒரு சந்தன மரத்தடியில் அவன் நின்று கொண்டிருந்தான். வாவென கையசைத்தான். குயிலி விறுவிறுவென மலையில் ஏறத் தொடங்கினாள். தங்களுக்குள் பேசியவாறே தோழியரும் பின் தொடர்ந்தனர்.

"பாருடீ.. சொன்ன நேரத்திற்கு முன்பே வந்துவிட்டான். என்ன ஆசையோ?"

"அது அவனது ஆசை மட்டும் இல்லையடி. பரங்குன்றின் இயல்பே அதுதான்."

'அப்படியா?"

"ஆமாம். நீ வேண்டுமானால் உன் காதலனை அழைத்து வரச்சொல்லி இந்த வண்டுகளைத் தூதாக அனுப்பிப் பாரேன். அவை மூதூர் கூடலின் கோட்டை மதில்களில் எதிரொலிக்கும் அளவுக்கு நகரில் இருப்பவர் அனைவரும் அறிய உங்கள் களவைச் சொல்லி அலர் பரப்பும் என்றால் பார்த்துக் கொள், இந்த குன்றம் எப்படிப் பட்டது என்று"

"வியப்பாக இருக்கிறது"

"மாவடுவை நேராகக் கீறி வைத்தது போன்ற அழகிய கண்களை உடைய பளபளக்கும் கறுப்பழகியே, இன்னும் கேள். மென்மையான நீண்ட மூங்கிலைப் போன்ற உன் கைகளும், அளவில் சிறிய மேல்கை "தொடி" வளையும் உன் இளவயதைக் காட்டுகின்றன. இவற்றைப் பார்க்கும் இந்தக் குன்று உன் உள்ளத்தில் அள்ளக் குறையாத இன்பத்தை உருவாக்கும். இந்த நேரம் உன் தலைவன் இருந்தால் இந்த அழகிய மலைச் சோலையில் விழுந்து கிடக்கும் மலர்கள் உங்களுக்குப் பாயாக மாறும்"

"இப்படிச் செய்யுமா ஒரு மலை?"

"இது மட்டுமா? இந்த மலையில் இருந்தால், நீ வேண்டாம் என நினைத்தாலும் தலைவனுக்கு இயைந்து விடுவாய். அளவற்ற இன்பம் பெறத் துணிந்து விடுவாய். அது உங்கள் காதலை என்றும் இளமையாய், முற்றாக் காதலாக வைத்திருக்கும். "

"அப்படியெல்லாம் சட்டென்று உடன் பட மாட்டேனடி.. என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?"

"இப்படி நிறைய பேர் சொல்லி நானும் கேட்டுவிட்டேன். பிறகு நடந்ததை நான் அறிவேன். நல்ல ஆண்மகனின் உள்ளத்தைக் கவர்ந்து அவனைத் தலைவனாகக் கொண்ட உன்னைப் போன்ற இளம் பெண்கள், இங்கு வந்தால் நாள் முழுதும் அவன் மார்பிலிருந்து அகலாமல் இருப்பார்கள். காற்றடிக்கும் போது, மெல்லிய மலர் காய்ந்து இன்னும் மெலிந்த சருகு பறந்து இருவருக்கும் இடையே விழுந்தால் தாங்க மாட்டார்கள். அந்த இடைவெளியே அதிகம் என்று எண்ணுவார்கள். அதைப் பார்ப்பதற்கு மகன்றில் பறவைகள் இணைந்திருப்பது போல இருக்கும்."

"ம்..."

"என்ன தலைவன் நினைப்பு வந்துவிட்டதா?.. ஒருநாள் அவனோடு பரங்குன்றுக்கு வந்து பார். என்றுமே வாடாத, மறக்கவே முடியாத மகிழ்ச்சியை வழங்கும் இந்த மலை. .. நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீ என்ன தேடுகிறாய்?"

"ம்.. தூது சொல்லியனுப்ப வண்டுகளைத் தேடுகிறேன். "

இருவரும் மெல்லச் சிரித்தார்கள்.

==============================

ஒரு மலையின் இயற்கை வளம் மக்களின் உள்ளத்தளவில் தாக்கம் செலுத்துவதை, முற்றாக் காதல், புலரா மகிழ்ச்சி என அழைத்து மகிழ்கிறது நல்லந்துவனாரின் இந்த வரிகள் . வரிகள் கீழே.

பரிபாடல் - 8 - செவ்வேள்
வரிகள்:-  36 முதல் 46 வரை
இயற்றியவர் - நல்லந்துவனார்
இசையமைத்தவர் - மருத்துவன் நல்லச்சுதனார்.
===============================

'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்/
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;/
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,/
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்/
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,/
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;/
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,/
அடியோர் மைந்தர் அகலத்து அகலா/
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,/
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்/
சிறப்பிற்றே தண் பரங்குன்று./

===============================

அருஞ்சொற்பொருள்

ஏய - அனுப்பப்பட்ட
தொழுதி - கூட்டம்
முரல்வு - ரீங்காரம்
கம்பலை - அலர், ஊரறியச் சொல்லுதல்
வடுவகிர் - மாவடு கீறிய
பணை - மூங்கில்
குறுந்தொடி - குறுகிய மேல் கையணி
ஆராக் - தெவிட்டாத 
ஆர் பொழில் - அடர்ந்த சோலை
வரை - மலை
இயைக்கும் - இணங்கிப் பொருந்தும்
வரையா - அளவற்ற
அடியோர் - மனதைக் கவர்ந்தவர்
அகலம் - மார்பு
அலர் ஞெமல் - மலர்ச் சருகு
மகன்றில் - மகன்றில் பறவை, ஒரு நீர்ப்பறவை



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்