Friday 3 April 2020

சண்டையிடக்கூட அன்பு வேண்டும் - அள்ளூர் நன்முல்லையார்



சேந்தன் மனதில் பெரும் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். பளிங்கு போல் நீர் மெல்ல ஓடிக்கொண்டிருக்கும் பழையாற்றில் கால்கள் இரண்டும் இளைப்பாறிக் கொண்டிருந்தன. தங்கத்துகள்கள் போல் மின்னும் மணல், நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியது. வண்ணங்களின்றிக் கண்ணாடியில் செய்ததுபோல் இருந்த அவை மெல்ல அவனது கால்களில் இருந்த அழுக்கையும், ஊறிக்கிடந்த இறந்த தோல் செதில்களையும் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அவன் அதையெல்லாம் உணர்ந்தானில்லை. எப்படியேனும் கொமரி,  கடநங்கையிடம் ஏதாவது எடுத்துச் சொல்லி அவளை அமைதிப் படுத்தியிருப்பாள். ஒருவேளை கடநங்கை உடன்படவில்லை எனில் என்ன செய்வது? செய்த தவற்றின் பொருண்மை இப்பொழுதான் அவனுக்கு உறைக்கத் தொடங்கியது.


நல்லூரிலிருந்து கிழக்கே, கடுக்காய்க்கரைப் பொற்றைக்கு இடையே வளமையான வயலொன்றைப் பெரும்பாடுபட்டுத் திருத்தி வைத்துக் கொண்டான். நாஞ்சில் பொருனின் நாடு அது. நெல் குதிர்ந்து விளையும் மண். ஆண்டு முழுவதும் வற்றாதப் பழையாற்றின் வண்டல் கொடை. நல்ல விளைச்சல் எடுக்கும் ஆவலில் அடிக்கடி சில நாட்கள் அங்கேயே தங்க வேண்டி வந்தது. வயலோரம் சிறு குடில் ஒன்றைக் கட்டிக்கொண்டு சமைத்து உண்டு வேளாண்மையைச் செய்து வந்தான். ஓரிரு மாதங்கள் கழிந்த பின்பு  அந்தச் சிற்றூரில் இருந்த பெண்ணோடு காதல் பிறந்தது. அடிக்கடி இங்கே வரலானான். அவனுடைய தோழி முத்துச்செல்லி எத்தனையோ முறை சொல்லிப்பார்த்தாள் இவன் கேட்பதாயில்லை. ஒருநாள் யாரோ பார்த்து அவன் துணைவி கடநங்கையிடம் சொல்லிவிட்டார்கள். அவள் கடுஞ்சினம் கொண்டாள்.

இது தெரிந்து ஊடல் கொள்ளுவாள், பின்பு அமைதியடைவாள் என்று சேந்தன் எண்ணியிருந்தான். ஆனால் அப்படி நடக்கவில்லை. இருவருக்கும் சண்டை வந்தது. அவனோடு பேசுவதையே நிறுத்திவிட்டாள். சேந்தனும் நல்லூரிலிருந்து கிளம்பி வயலுக்குப் போகாமல் இங்கே ஆற்றின் கரையில் குழப்பத்துடன் கொமரியின் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறான்.

கொமரி சேந்தனின் தோழி. அவன் மனைவிக்கும் நெருக்கமானவள். இவன் இனி தவறிழைக்க மாட்டேன் என்று கூறியதை கடநங்கையிடம் எடுத்துச் சொல்லி அமைதிப் படுத்த கேட்டுக் கொண்டான். அவளும் போயிருக்கிறாள்.

பெரிய வீடாக இல்லையென்றாலும் செம்பருத்திச் செடிகள் நிறைந்த சிறு முற்றம் செந்தனின் வீட்டில் இருந்தது. மூலையில் முல்லைக் கொடி ஒன்று படர்ந்திருந்தது. அதையொட்டிய படிப்புரையின் கீழே சிறு பலகையிட்ட கோழிக்கூட்டை சாத்திக் கொண்டிருந்தாள் கடநங்கை. அவளருகே வந்து நின்ற கொமரி...

"சேந்தன் செய்த தவறுக்கு வருந்துகிறான் தெரியுமா?"

"ம்"

"ஏனோ நிறைய பேர் செய்வது போல இவனும் செய்துவிட்டான், நீ அவனிடம் சண்டையிட்டது சரிதான் நங்கை"

"ம்"

'ஆனால் அதை உணர்ந்து மாறிவிட்டான் போல. ஆற்றங் கரையில் தலை குனிந்து அமர்ந்திருக்கிறான். வா என்றேன். அவள் சினம் தணியட்டும் என்றான். அதற்காக நீ அவன் வந்தவுடன் அமைதியாக இருந்து விடாதே. அவனிடம் ஊடல் கொள். குழம்பி நிற்கட்டும் அவன்"

இதைக் கேட்டதும் கடநங்கைக்குச் சினம் உச்சிக்கு ஏறியது. 

"இங்கே பார் கொமரி. துணையின் பெறவேண்டிய நலங்கள் தொலைந்து போனாலும், அதனால் என் உடல் நலிவுற்றுச் சாய்ந்தாலும், என் உயிரே போய் விடுவதாக இருந்தாலும் பரவாயில்லை இப்படி மட்டும் என்னிடம் பேசாதே தோழி. யார் அவன் எனக்கு அன்னையா? அப்பனா? அவர்களென்றால் காக்க வேண்டியது கடமை. இவன் யார்? அவனிடம் ஊடல் கொள்ள கடுகளவேனும் அவன் மீது எனக்கு அன்பு இருக்க வேண்டுமல்லவா?  என் உள்ளம் அன்புகொள்ளாத ஒருவனிடம் நான் எப்படி ஊடல் கொள்வது?"

"இல்லை... நங்கை"

"கொமரி.. அவனுக்காகப் பரிந்து பேசாதே. இல்லை போய் விடு." என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள் நங்கை. 

சேந்தனிடம் என்ன சொவது என்று தெரியாமல் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருக்கிறாள் கொமரி. அவள் வருகைக்காகக் காத்திருக்கிறான் சேந்தன். பழையாறு அதன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அள்ளூர் நன்முல்லை என்ற பெண் எழுதிய இந்தப் பாடல் குறுந்தொகையில் இருக்கிறது. 

பாடல் கீழே

குறுந்தொகை - 93 - மருதம் - அள்ளூர் நன்முல்லையார்
==================================================

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவிய தெவனோ அன்பிலங் கடையே.

அருஞ்சொற்பொருள்
=====================
உரையல் - சொல்லுதல்
அத்தன் - தந்தை
புலவி - ஊடல்



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்