Tuesday 5 April 2022

நினைவுகளில் மிதந்தேன்இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பி Jaya Prasad ன் பதிவொன்றைப் படிக்க நேர்ந்தது. அதன் பின்னூட்டமாக "வியர்வையோடு நீர்/மோர் அருந்தினால் சளி பிடிப்பதன் சூட்சுமம் அறிய, எனக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது. இன்று தான் அறிந்துகொண்டேன்." என்று எழுதியிருந்தேன்.

அதைப் படித்துவிட்டு ஊரிலிருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் "நீ ராசாண்ணனுக்குக் கூட  பழகியிருந்தும் இது தெரியாதாடே. அவன் சொல்லித்தரலியா?" என்று கேட்டார். 

அவரது நினைப்பு சரிதான். வர்ம ஆசான் இராசா அண்ணனோடு பெரிய பழக்கம் இல்லை என்றாலும், சில முக்கியமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட நெருக்கம் இருந்தது. அது ஒருவேளை என் தந்தைக்கும் அவருக்குமான பழக்கத்தின் விளைவாகக் கூட இருக்கலாம். 

உடலியக்கத்தின் முகாமையான சில நுணுக்கங்களை எளிமையாகப் புரிய வைத்தது மட்டும் இல்லாமல் அதைச் செய்து காட்டிக் கற்றுக் கொடுக்கவும் செய்தார். எடுத்துக் காட்டாகச் சொல்வதானால் நீரில் மிதப்பது.

தாழக்குடிக் குளத்தில் ஆளூர் பாட்டா அசைவின்றி மிதப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கும் மிதக்கவேன்டும் என்ற ஆசை வந்தது. பதினாறு வயதிற்கே உரிய சிறு கூச்சம். (கற்றுக் கொள்வதை யாரும் பார்க்கக் கூடாது என்பது.) அதப் பெரிய குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று மிதக்க முயற்சித்தேன். ஒன்று இரண்டல்ல, பல நாட்கள்.

ஒருநாள் உச்சி வேளை... உருண்டு புரண்டு மிதக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். 

"ஏலேய்..." யாரோ அழைக்கும் குரல். திரும்பி கரையைப் பார்த்தேன். பெரிய படித்துறையில் இராசா அண்ணன் கோவணத்தோடு நின்று கொண்டு கையசைத்து என்னை அழைத்தார்.

"என்ன செய்துகிட்டு இருக்கே?"

"ஆளூர் பாட்டா மாதிரி தண்ணில மொதக்கலாம்னு.. "

"நடுத் தண்ணியிலயா... அதுவும் கால் மடக்கி.. ம்.. உள்ள இழுத்துற்றா போய்ச் சேந்துருவ "

நான் எதுவும் பேசவில்லை. 1980 களில் அப்பாவின் வயதொத்த, அவரோடு பழக்கம் உடைய பெரியவர்களிடம் பேசுவதென்பது  சிற்றூர்களில் குறைவுதான்.

"ஏன் நடுத்தண்ணிக்கு போன? இங்கன படிக்கதுக்கு கொறச்சலா இருக்கா? எவன பத்தியும் கவலப் படக்கூடாது. நமக்கு வேணும்னா நாமளே செஞ்சுக்கிட்டாதான் உண்டு. (அவரது அடிப்படைக் குணமே அதுதான்). "ஒனக்கு தண்ணில மொதக்கணுமா?... வா. மல்லாக்கப் படு. இந்த நீளப் படியில கால வை. கைய தலைக்கு மேல நீட்டு... மூச்ச புடிச்சே வச்சிருக்கணும்னு கட்டாயம் இல்ல.... கால விட்டுரப் போறேன்."

மெல்ல கால்கள் மூழ்க, தண்ணீரில் மூழ்கினேன். மீண்டும் ஒருமுறை.  இன்னொருமுறை.

"இங்க பாரு. மூச்சடக்கி தலவாணி மாதிரி கிடப்பான்னு நெனச்சியா? இல்ல. மூச்சுக்கும் இதுக்கும் தொடர்பு உண்டும்னும் சொல்ல முடியாது, இல்லைன்னும் சொல்ல முடியாது. மனசுக்குள்ள மொதக்கணுங்கிற நெனப்பு மாறவே கூடாது. சரியா. இப்ப நீ மொதக்கப் போற"

சட்டென்று சில விநாடிகள் மிதக்கிறேன். உடலில் எந்த அசைவும் இல்லை. உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம் ஒரு மரத்துண்டு போல நான் நீரில் மிதந்து கொண்டிருக்கிறேன்.

"இங்க பாரு. படித்துறைக்குப் பக்கத்துல கொஞ்ச நாள் செஞ்சு பழகிட்டு பொறவு நடுக் கொளத்துக்கு போ என்னா?"

"சரிண்ணே"

"இத வச்சு ஒடம்ப குளிர வைக்கலாம், வெசர்க்க வைக்கலாம், பசியெடுக்கச் செய்யலாம், எவ்வளவு சாப்டாலும் செமிக்க வைக்கலாம்"

"சரிண்ணே"

பிற்பாடு நாள்தோறும் மிதக்கத் தொடங்கினேன். ஆசானின் காலமும் முடிந்துபோனது. நானும் சொந்த மண்னை விட்டு (குளங்களை விட்டு) நகரங்களில் வாழத் தொடங்கினேன்.

எப்பொழுதாவது ஊருக்குச் செல்கையில் குளத்தில் மிதப்பதுண்டு. மாலை வானத்தைப் பார்த்துக் கொண்டே உடல் அசைவற்று வாயில் நீரேந்தி வானம் பார்த்துக் கொப்பளிக்கையில் ஆசானின் நினைவு வரும். "ஒரே செய்கையில் உடம்பை எப்படி குளிர்விக்கவும், சூடாக்கவும் முடியும்?" என்று ஆசானிடம் கேட்காமல் விட்டுவிட்டேனே என்று தோன்றும்.  இனி வாய்ப்புமில்லை.

ஆனால், வெப்பமான பேருந்துகளில் பயணம் செய்யும் போதும், சாலைகளில் நடக்க நேர்கையிலும் சட்டென வெப்பத்தின் கடுமையிலிருந்து உள்ளத்தை மாற்றிவிட இந்தப் பயிற்சி உதவியிருக்கிறது. உள்ளம் குளிரும் போது உடலும் மெல்லக் குளிரும்.

நம் தொண்டைக் குழிக்கும் நெஞ்சுக் குழிக்கும் இடையேதான் எத்தனை எத்தனை விந்தைகள்.

ஒரு பின்னூட்டம் நாற்பதாண்டுகளைத் தாண்டி என் நினைவைக் கிளறிவிட்டுவிட்டது. தம்பிக்கும், நண்பருக்கும் நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்