Sunday 25 September 2022

நெடும்பயணம்


பதினோராம் வகுப்பில் படிக்கும் போது தமிழாசிரியர் திரு அழகப்பபிள்ளை அவர்கள் "நீ தமிழ் படி. கரந்தையில் போய் படி. ஆசிரியராக, விரிவுரையாளராகப் போ. அது உனக்கு சிறந்த பணியாக இருக்கும். அப்பாவிடம் சொல்கிறேன்" என்று சொன்னதோடு மட்டுமின்றி அன்று மாலையே  தந்தையாரிடமும் சொல்லியிருக்கிறார். நாங்கள் இருவரும் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. 

நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தது 1983ல். காலை 9:40 வரை மாவட்ட மைய நூலகம். அங்கிருந்து நடந்து கல்லூரி. கல்லூரியில் பிடித்த இடங்கள் வடக்கு வாயிலில் தொடங்கும் மரங்களடர்ந்த நடை பாதை. நூலகம், சிற்றுண்டிச் சாலை. சில நேரங்களில் வகுப்பறை. 

ஏறத்தாழ நாநூறு பக்கங்களுக்குக் கவிதைகள். எழுபது பக்கங்களில் சிறுகதைகள். அவற்றையெல்லாம் 

நூலாக்கி விட வேண்டும் என்ற கனவுகளோடு, கல்லூரியின் திடலில் நின்று கொண்டிருந்த மரங்களோடு உரையாடிக் கொண்டிருந்தவன் தான் நான். அதுவும் நீடிக்கவில்லை. (என் கவிதைப் பதிவேடுகள் மூன்றையும் வாங்கிக் கொண்டுபோன ஸ்காட் கிருத்தவக் கல்லூரி நண்பன் சத்திய பிரசாத்தை அதன்பிறகு நான் சந்திக்கவேயில்லை).

கணிதத்தை விடுத்து, ஓருவழியாகப் பொறியியலில் பட்டயம் பெற்று, இயந்திரங்களோடு வாழ்க்கை நகரத் தொடங்கியது .

சட்டென்று ஒருநாள் எல்லாம் மாறியது. பின்னர் ஒரு வினாடியில் எடுத்த முடிவு "இனி எழுதப்போவதில்லை" என்பது. பெங்களூரு, நாகர்கோவில், திருச்சிராப்பள்ளி என புலம்பெயர்தல் வேறு. ஏறத்தாழ பதினெட்டாண்டுகள் எழுதவே இல்லை. கிழக்கு நோக்கி பயணப்பட்டவன் மேற்கில் நிறுகொண்டிருந்தேன்.

ஒரு நாள் வெண்பாவின் மீது காதல் பிறந்தது. தாழக்குடி நூலகத்தில்  பாவப்பட்ட நாற்று, திருச்சிராப்பள்ளி நூலகத்தின் புத்தக அடுக்குகளுக்கிடையே பயிராகத் தலைப்பட்டது. நண்பர்கள் தூண்டுதலால் மீண்டும் பேனாவைத் தொட்டேன்.

எழுத்தும் பேச்சும் தமிழானது. கவிதைகள், கட்டுரைகள், மெல்ல மெல்ல விளக்கவுரைகள், கதையுரைகள் என சிறகுகள் விரிந்தன. எழுவானும் தொழுவானும் தமிழ்வானாயிற்று. வீசும் காற்றில் ஔவையும், கபிலரும், தாமக்கண்ணியும் மணம் சேர்த்தார்கள். குளியலறைக்குள் குறுந்தொகையருவி. 

  ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. தலைகீழாக மாற்றிவிட்டது காலம். முக்கால் மணிநேரத்தில் ஒரு மாணவனை முழுமையாக அறிந்துவிட முடிந்த ஆசிரியர் அழகப்பபிள்ளையை எண்ணி வியக்காத நாளில்லை.

முகநூலில் எழுதத் தொடங்கினேன். நவம்பர் 2018 ல், ஒரு பதிவில் பின்னூட்டம் "உங்கள் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை. உதவி செய்யத் தயார். தொடர்பு கொள்ளுங்கள்" என்ற செய்தி ஒளிர்ந்தது. நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியின் தலைவர் உயர்திரு பெ.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் தான் அதைப் பதிவிட்டிருந்தார். மகிழ்ச்சியோடும், நன்றியுணர்வோடும் தொடர்பு கொண்டேன். நூல் தொடர்பான அனைத்தையும் கொடுத்தேன். ஒரு வார காலத்திற்குள் 1000 படிகளை, அச்சகத்தில் சொல்லி அச்சிட்டுக் கொடுத்துவிட்டார். நான் மறந்துபோயிருந்த தெ.தி.இந்துக்கல்லூரி மறுபடியும் என் வாழ்வின் மறக்கவியலாத பகுதியாய் ஒட்டிக்கொண்டது.

எழுத்தின் மீதான தீராக் காதல், கல்லூரிக் காலத்தில் தொடங்கி பொங்கி வழிந்துகொண்டேதான் இருக்கிறது, வானமலைத் தொடரின் ஈரக் கசிவைப் போல.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்