Tuesday 4 October 2022

 .


ஆ → ஆய் → ஆய்தம்

ஆய்தல் = நுனுகுதல், சிறுத்தல், கூர்மையாதல் ஆய்தம் = நுணுகக் கூராக்கப்பட்ட கத்தி அல்லது படைக்கலம். (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி)

“மாணார்ச் சுட்டிய வாள் மங்கலமும்” (தொல்காப்பியம்)

பகைவரை அழித்த வாளின் வெற்றியைக் கொண்டாடுதல் அல்லது போற்றுதல்.

"மங்கல மொழியும்" (தொல்.பொருள்.244)
"மங்கலமென்ப மனைமாட்சி" (குறள், 60)

"மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த/
கொற்றவை நிலையும் அத்திணை புறனே"
என்றதால். தாய்வழிக் குடி கொற்றவைக்குக் கூறப்பட்டுள்ளது. மேலும் மறம் என்பது ஆகுபெயர் மறம்பொருந்திய மறவரை மூதில் முன்றிலில் கூட்டுதல் குலம் அல்லது இனக்குழுத் தலைவியின் வேலை. அதைச் செய்பவள் கொற்றவை! கொற்றவை என்பதும் ஆகு பெயரே! கொற்றம்+அவை=கொற்றவை.கொற்றம்(வீறு) பொருந்திய அவையின் தலைவி கொற்றவை. ஆணாதிக்கச் சமூகம் தோன்றியபின் கொற்றவை தெய்வமாக்கப்பட்டுவிட்டாள். இவளது வடிவத்திற்கு ஈடாகப் பெண்ணைச் சுவடித்துக் காட்டுவதே சிலப்பதிகாரம் காட்டும் கொற்றவை. சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்தில் கொற்றவை தெய்வமாக்கப்பட்டுவிட்டாள். கொற்றவை வழிபாடு சிலப்பதிகாரத்தில் உண்டு. :- சி. அறிவுறுவோன்

நீண்ட நிறைந்த மயிரை உடைய தொல்குடிப் பெண்ணொருத்தியின் கூந்தலைச் சடைமுடியாகப் பின்னி, பொன்னால் செய்த பாம்புக் கயிற்றால் தலைமயிரைக் கட்டி, காட்டுப் பன்றியின் வளைந்த பற்களைப் பிறைநிலவு போல் சூட்டி, வலிமை பொருந்திய கொடிய வரிப்புலியின் பற்களைக் கோத்து மாலையாக அணிவித்து, வரிகளும், புள்ளிகளும் பொருந்திய புலித்தோலை ஆடையாக உடுத்தி, வடிநவில் அம்பு சேர்ந்த வில் ஒன்றினை கையிலே கொடுத்து, முருக்கிய கொம்பினை உடைய கலைமானின் மேல் அமரச் செய்து கிளி, மயில், காட்டுக்கோழி, கழங்குக்காய் முதலான காணிக்கைகளை கொடுத்து உலாவரச் செய்தனர் என கொற்றவையின் கோலம் பற்றி இளங்கோவடிகள் எடுத்தியம்புகிறார்.

"சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை/
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி/
குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,/
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து/
வளை வெண் கோடு பறித்து, மற்று அது/
முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;/
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற/
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;/
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து/
உரிவை மேகலை உடீஇ; பரிவொடு/
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்/
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி/;
பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்/
கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,/
பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;" (சிலப்பதிகாரம்)

அந்தக் கொற்றவை தெய்வம் முன்னே நடவாது வெற்றியில்லை என்கிறது சிலப்பதிகாரம்.
கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் (வேட்டுவ வரி )

மறவர் நடந்து செல்கையில் கொற்றவை முன்னே செல்வாளாம்.
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை
கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும்
கொடுமரமுன் செல்லும் போலும் (வேட்டுவ வரி )

வாள் மங்கலமும் ஔவையின் பாடலும்.

"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்/
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,/
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,/
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,/
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்/
உண் டாயின் பதம் கொடுத்து,/
இல் லாயின் உடன் உண்ணும்,/
இல்லோர் ஒக்கல் தலைவன்,/
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே."

வாள் மங்கலம் செய்யலாம் என்று நினைத்தால் கூட; போர் முடிந்தபாடில்லை போலிருக்கிறது அதியனுக்கு, என்று வஞ்சப் புகழ்ச்சியும், உயர்வு நவிற்சியும் இணைய இசைக்கிறாளோ ஔவை.

காலத்தாற் மரபுகளின் மீது படிந்த குறைகளைக் களையலாமே அன்றி மரபுகளைக் களைவதற்கில்லை. மாந்தவியல், மரபுகளின் மீதான மாறுதல்களை மறுதலிக்காது. பிற பண்பாட்டுக்கூறுகள் கலந்திருந்தால் களையலாம். மரபைத் தொடரலாம்.

தாயின் ஆடைகள் அழுக்கேறி இருந்தால் ஆடையைக் களைந்து வேறு ஆடை உடுத்தலாம். தாயைக் களைந்துவிட இயலாது.

அழுக்கைக் களைந்து அம்மையைத் தொழுவோம். ஆய்தம் பழகுவோம்.

கொற்றவை முன்செல்ல;
நாடாளும்
கோனுக்கு வில்லும் வாளும்,
கோன் புகழும்
பாணர்க்குப் பறையும் யாழும்,
களமாடுங்
கூத்தர்க்கு மெய்ப்பாடு எட்டும்,
எமக்கோ
கோலும் எழுத்துமே
ஆய்தம்.

============================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
04-10-2022
============================

1 comment:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்