Friday 25 August 2023

தோட்டியின் மகன் ஒரு பார்வை

 


இந்த முறை ஊருக்குச் செல்கையில் ஏதேனும் கதை படிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, தகழியின் 'தோட்டியின் மகன்' முத்துநாகுவின் 'சுழுந்தீ' இரண்டில் எதை எடுத்துச் செல்வது என்ற சிந்தனை வந்தது. கதை படிப்பது குறைந்து வெகு நாள்களாயிற்று. அதன் பொருட்டு நூலின் அளவு முகாமையானது. இருக்கும் குறைந்த நேரத்தில் தகழியே வசப்படுவார் என்பதால் அவர் தேர்வானார். நூலின் அளவும் பயணக் காலமும் சுழுந்தீயை அடுத்த பயணத்திற்காகத் தள்ளிவைத்தன. மட்டுமின்றி சுழுந்தீயின் சொல்லாடல்கள், களம், மாந்தர்கள் குறித்தான எனது தேடல்கள் முடிந்தபாடில்லை. 'நாஞ்சிநாட்டுக்காரனுக்கு'க் கதை படிப்பதில் உள்ள சிக்கல் இது.

சென்னைப் புத்தகக் காட்சியில் 2018 ல் வாங்கிய 'தோட்டியின் மகனை' ஐந்து வருடங்களுக்குப் பின் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் வாசிக்கிறேன். மலையாளத்தில் எழுதப்பெற்ற இந்தப் புதினம் சுந்தரராமசாமியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

முதல் பக்கத்தின் முதல் பத்து வரிகளுக்குள்ளாகவே நீங்கள் வாசிக்கப் போகின்ற பேரவலமொன்றை, இலக்கற்று வாழவேண்டிய சூழலில் தள்ளப்பட்ட பலரின் வாழ்க்கையை(?) கேரள மாநிலம் ஆலப்புழை நகரின் பின்னணியில் படமாய்ச் சிதறும் இந்தப் புதினம் 1946ல் எழுதப்பட்டிருக்கிறது.

சிற்றூர் ஒன்றில் கழிப்பறை இருந்த வீட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் தோட்டி என்றச் சொல்லைக் கூட முழுதாக அறிந்திராத எனக்கு பதின்மூன்று வயதில் செங்கோட்டை எனும் சிறிய நகரம் தான் தோட்டிகளை அறிமுகப்படுத்தியது. பட்டென்று முதுகுக்குப் பின்னே திறக்கும் தொங்கும் கதவின் ஓசை, எழுந்து ஓடவைத்த; சுருங்கிப்போன மனதின் நினைவுகளோடு வாழும் இந்தச் சிறுவனின் மனதில் கூச்சமற்று அமர்ந்திருந்த பெரியவிட்டுப் பெண்களை, மூக்குத்துளைகள் அடைபட்டுப்போன தோட்டிகளை படமாய் வரைவது தகழிக்கு அத்தனைக் கடினமாய் இருக்கவில்லை.

இன்றைக்கு எப்படியாவது சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே உறக்கம் கலைந்து எழுந்து வருகிற தோட்டிக்கு வயிற்றைத் தவிர வேறு என்ன சிந்தனை வரும். இல்லை அவனது சிந்தனையைத் தான் அந்தச் சமூகம் அங்கீகரித்துவிடுமா? தோட்டியின் குழந்தைக்கு மோகன் என்ற பெயர் எப்படிப் பொருந்தும் என்று சிரித்துக் கொண்டே கேட்கும் சமூகத்திடம் அதை எதிர்பார்க்க முடியுமா?

தன் மகன் எப்படியேனும் ஒரு நல்ல தோட்டியாகிவிட வேண்டும் என்ற ஒரு தந்தையின் ஆசையில் தொடங்கும் கதை, மகன் தோட்டி ஆகவே கூடாது என்ற ஒரு தந்தையின் மனப் போராட்டங்களோடு பயணம் செய்கிறது. இரண்டையுமே இந்தச் சமூகம் படுத்தும் பாடு, படிப்பவரைக் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிவிடுகிறது. அத்தனை எளிதாய் அதிலிருந்து விடுபடமுடியவில்லை. வருணனைகளும் பெரும் கற்பனைகளும் தூவப்படாத ஒரு கதையை இத்தனைக் கனமாய் எழுதமுடியுமா? பெருவியப்பு.

ஒவ்வொரு பக்கத்தையும் கடக்கும் போது இயலாமையில் கழிந்த இறந்தகாலமொன்றை மெல்ல மெல்லப் பதிவுசெய்கிறது புத்தகம். ஆதிக்க வர்க்கம் படிப்பறிவில்லா மாந்தர்களின் குரல்வளையை அதிகார வர்க்கத்தின் துணையோடு நெரித்த ஓசை. எழ நினைத்தவனையும் உளவியல் தாக்குதல்களால் வீழ்த்திய ஒலிகள். மலம் நாறும் கைகளால் உண்ணும் முன்னே, இரந்து பெற்ற எச்சில் சோற்றையும் இழந்த கேவல். உழைப்பைச் சுரண்டி கொழுத்த முழக்கம். கஞ்சியின்றிச் செத்தவனின் கடைசி ஓலம் என புதினமெங்கும் கடந்து போன காலத்தின் குரல்.

வைக்கம் முகம்மது பசீரின் இரண்டு படைப்புக்களை மலையாளத்திலேயே வாசித்திருக்கிறேன். அந்த மண்ணின் இழிவுகளை, சிக்கல்களை பகுதிகளின் வழக்கில் எழுதிச் செல்வார். நிகழ்வுகளின் தாக்கம் நம்மைப் பாடாய்ப்படுத்தும். தகழியின் இந்த நூலையும் அப்படிப் படித்திருக்கலாமோ? என்று தோன்றுகிறது. சுந்தரராமசாமியின் பல சொற்கட்டுகள் (வழக்குகள்) கொஞ்சம் விலகி நிற்பதுபோல் ஒரு தோற்றம் தருகின்றன. தகழியும் அப்படியே எழுதியிருந்தாரா தெரியவில்லை. அன்றைய ஆலப்புழை நகரத் தோட்டிகளும் பல வழக்கு மொழிகளைக் கொண்டிந்தவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகளும் கதையில் காணக்கிடைக்கிறது. ஆம், தகழியின் சொற்களில் சொல்வதானால் தோட்டிகள் உருவாக்கப் படுகிறார்கள். வளர்த்தெடுக்கப் படுகிறார்கள். அப்படியே இருந்துவிட அவர்களை அறியாமலேயே கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

எண்ணிப் பார்க்கையில் இன்னும் இறந்து போகாத, வேறு வடிவம் கொண்ட ஓசைகளும் இருக்கவே செய்கின்றன. அண்மைக்கால நிகழ்வுகள் தகழியின் காலத்தைய மெட்டுக்களை வேறு வேறு பின்னணி இசைகளோடு இசைப்பதாகவே தோன்றுகிறது. தகழியின் காலத்தைய ஆலப்புழை நகரில் இசக்கிமுத்து மலப் பீப்பாயின் அருகே செருகி வைத்திருந்தச் சோத்துச் சட்டிக்கும், இன்று சென்னையின் தெருக்களில் "மக்கும் குப்பை, மக்காக் குப்பை" என்ற பாடலோடு நகரும் குப்பை வண்டியின் குப்பைக் கூடையின் அருகே செருகி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்க் குப்பிக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. அது மண் சட்டி இது நெகிழிக் குப்பி. அவ்வளவே.

மலக்குழிகளின் அருகே  சந்திரயான்கள் இறங்குவதில்லை என்பதே இன்றும் எதார்த்தம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்