முனைவர் துளசி. இராமசாமி எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1987ல் வெளியிட்ட மங்கல தேவி கண்ணகி கோட்டம் (நாட்டுப்புறவியலார் அணுகுமுறை) எனும் நூலில்,
கூடலூர் மக்களுக்குப் பாத்தியப்பட்ட கோவில் போன்று இருப்பது தான் மங்கலதேவி கோட்டம். இம்மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம் என்று முதன்முதலில் உலகுக்குச் சொல்லி வந்தவர்கள் கூடலூர் மக்களாவார்கள்; ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்று இருந்தது; தமிழகத்திலுள்ளவர்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய சங்க மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார்தான் முதன் முதலில் மங்கலதேவி கோட்டம் கண்ணகி கோட்டமாகும் என்று முறையாக அறிக்கைவிட்டு, அதை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கு.காமராசு அவர்களிடம் 1957-இல் முறையிட்டு இக்கண்ணகி கோட்டத்தைச் சீர்படுத்த வேண்டும்; சுற்றுலா மையமாக்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். ஆனால் ஏனோ அவரின் முறையீட்டை யாரும் கண்டு கொள்ள வில்லை.
அதன்பின் அவருடைய மாணாக்கர்கள் இரா.கணபதிராசன், கூடல், தா. இராமசாமி ஆகிய இருவரும் இதே சிந்தனையாகச் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்: குறிப்பாக, புலவர் இரா.கணபதிராசன் அவ்வப்போது தன் நாட்குறிப் பேட்டில் கண்ணகி, மங்கலதேவி மலையில் தெய்வமானதைக் குறிப்பிட்டு, இக்கோட்டம் பற்றி உலகுக்குச் சொல்ல வேண்டு மென்ற அவாவையும் குறிப்பிட்டிருக்கிறார். 1959-இல் கூடலூர் வந்த பேராசிரியர் மறை.திருநாவுக்கரசிடம் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். அதன்பின் கூடலூர் தமிழ் இலக்கியக் கழகம் தொடங்கப்படுகிறது. அதன் வாயிலாக கூடல் தா.இராமசாமியும் புலவர் இரா.கணபதிராசனும், சீரமைப்புக் குழுவின் புரவலர் மறைந்த வள்ளல் கே.பி.காமராசும் இச்செய்தியை “மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம்” என்று முறையாக ஆய்வு செய்து சொல்ல வேண்டு மென்ற நோக்கில் தஞ்சையில் அப்போது இருந்த நண்பர் கி.இராசன் மூலமாகக் கரந்தைக் கல்லூரிப் பேராசிரியர் சி. கோவிந்தராசனை அழைத்து வந்தனர். 1963-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் நாள் அவரை அழைத்துக்கொண்டு மங்கலதேவி மலைக்குச் சென்றார்கள். அவரும் பார்த்துவிட்டு உடைந்து கிடந்த கண்ணகி சிலையைக் கோணிப் பையில் கட்டிக்கொண்டு ஆய்வு நடத்தவேண்டுமென்று சென்றுவிடுகிறார்.
அவர் தன்னுடைய ஆய்வை முறையாக வெளியிட வேண்டும்; தமிழக மக்களுக்குப் பத்திரிக்கை வாயிலாக வெளியிடவேண்டும். அரசுக்குச் சொல்ல வேண்டுமென்று கூடலூர் தமிழ் இலக்கியக் கழகம் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டிருந்தது. ஆனால் பேராசிரியர் அதற்குப் போதிய அவகாசம் வேண்டும்; மீண்டும் வந்து ஆய்வு செய்ய வேண்டும்; அதற்குக் கூடலூர் மக்கள் துணையாக நிற்கவேண்டும்; இது தொடர்பான செய்திகளைத் திரட்டித் தரவேண்டும்; புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று வேண்டிக் கடிதம் எழுதியிருக்கிறார்.
1965-இல் அவசரம்கருதி வெளியிடுவதாகக் கூடலூர் அன்பர்களுக்குக் கடிதம் எழுதிவிட்டு தமிழ்ப்பொழிலில் மங்கலதேவி கோட்டம் கண்ணகி கோட்டமே ஆகும்; இதுதான் சேரன் செங்குட்டுவன் கட்டிய கோயிலாகும்; சிலையும் இமயத்திலிருந்து கொண்டு வந்த கல்லில் அமைக்கப்பட்டதுதான் என்று சொல்லிக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது; முதன்முதலில் சுருளி மலைத் தொடரிலுள்ள மங்கலதேவி கோட்டத்தைக் கண்ணகி கோட்டம் என்று ஆய்வு செய்து சொல்லுகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் தமிழக மக்களுக்கு முதன்முதலில் மங்கலதேவி கோட்டத்தைக் கண்டுபிடித்து அதுதான் கண்ணகி கோட்டம் என்று ஆய்வு செய்து சொன்னவர் பேராசிரியர் சி. கோவிந்தராசன் என்று நம்பும்படியாக விளம்பரப்படுத்தப்பட்டது.
மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1965-இல் மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கல்வெட்டுக்களைப் படி யெடுத்துச் சென்று 1965-66 ஆண்டு அறிக்கையில் மங்கலதேலி கண்ணகியே என்று நிறுவினர்; இராசராச சோழன், கோயிலைப் புதுப்பித்த செய்தியையும் அதன்பின் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் புதுப்பித்த செய்தியையும் சொல்லியிருந்தார்கள். முறையாகத் தொல்பொருள் துறையின் ஆய்வுக் கண்ணோட்டத் துடன்-கல்வெட்டுக்களை ஆய்ந்து கண்ணகி கோட்டம் பற்றிச் சொன்னவர்கள் கே. ஜி. கிருஷ்ணன் தலைமையில் இயங்கிய மத்திய தொல்பொருள் துறையினரே ஆவர்.
அதன்பின் பேராசிரியர் சி. கோவிந்தராசன் கலைஞர். மு. கருணாநிதியிடம் செய்தி சொல்லியிருக்கிறார். அவர் 1971-இல் சென்னையில் நடந்த இளங்கோ அடிகள் சிலை திறப்பு விழாவில் சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி கோட்டத்தை, முதன் முதலில் கண்டுபிடித்தவர் கோவிந்தராசன் என்று சொன்னார். அதன்பின் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் வந்து பார்த்தனர்; தங்கள் துறை 1965-இல் வந்து பார்த்தது என்று சொன்னார்கள்; 1906-அளவிலேயே இக் கோயில் இருப்பது தங்கள் துறைக்குத் தெரியும் என்றும் அறிக்கை வெளியிட்டனர்.
=======================
இதுவரை கேட்ட கதை?
கடற்கரையும் கணையாழியும் நினைவுக்கு வந்து போகின்றன. கூடவே கண்ணதாசனும்.

===========================
சிராப்பள்ளி ப.மாதேவன்
20-11-2024
==========================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்