Monday, 14 July 2025

நானே... பெய்தேன்





மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் புதுச் சிந்தனைகளைத் தந்தும் இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கின்ற  திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம். பலவாறான கருத்துகளைத் தாங்கிய உரைகள் ஏராளம் கண்டது திருக்குறளே. அண்மையில் வள்ளுவத்துக்கு உரையெழுதி வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிறப்புதான். அவரது கருத்துகளும் வளம் சேர்க்கலாம். உருவகங்கள் ஒருவேளை இளையோரைச் சென்றடையலாம். நல்லதுதான். 

ஆனால், தன் உரை குறித்து விளம்பரப்படுத்தும் முகமாக,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் - 55) எனும் குறளுக்கு;

"கடவுளைத் தொழாது கணவனையே தொழுது எழும் இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று காலங்கலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத்தான் ஆளாகும். அந்த சர்ச்சையை என் உரையில் நான் சரி செய்திருக்கிறேன். எழுதியிருக்கிறேன் 'கட்டமைக்கப்பட்டத் தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவனையே தொழுது எழுகின்ற ஒரு பெண், பெய் என்று சொன்னவுடன் பெய்கின்ற மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என்று எழுதியிருக்கிறேன். சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழையில்லை." என ஒழு விழியத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். 

தன் நேர்மையின்றி, தமிழரை அயலவர் ஏமாற்றிய / மறைத்த காலம் போய் தமிழரே ஏமாற்றும் / மறைக்கும் காலம் போலும். ஒருவேளை, நாம் பரவலாகப் பேசும் அளவுக்குப் படிப்பதில்லை என்பதை இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றே கருதவேண்டி இருக்கின்றது. அவர் சார்ந்திருப்பவர்களும் கூட எதையும் படிக்கவில்லை என்பதும் கண்கூடு. இல்லையென்றால் பொதுவில் இப்படியொரு விழியத்தை வெளியிட முடியாது. 

இந்தக் குறளுக்குப் பலரும் உரை எழுதியிருக்கிறார்கள்.

1. இ-ள்:- தெய்வம் தொழாள் - தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், கொழுநன் தொழுது எழுவாள்- தெய்வமும் தன் கணவனென்றே கருதி அவனை நாள்தோறும் தொழுது எழும்வள், பெய் என மழை பெய்யும் -பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

எழுதல்- உறங்கி யெழுதல். (தொழுது எழுவாள் - தொ ழுதுகொண்டே எழுகின்றவள்.) இது,கணவனைக் கனவினும் நனவினும் தெய்வமெனத் தொழு வாள் ஆணைக்குப் பூதங்களும் கீழ்ப்படியு மென்றது.   - மணக்குடவர்

2. பொருள் : தெய்வம் தொழாஅள்- தெய்வங்களைத் தொழமாட்டாள், கொழுநன் தொழுது எழுவாள் - கணவனைத் தொழுதபடியே, துயில் விட்டெழுவாள், (அவள் அக் கொழுநனுக்கு) பெய் என பெய்யும் மழை -பெய் என்று எண்ணிய அளவில் பெய்தால் ஒத்த பயன் மழை. 

கருத்து : கண்ணையும் மனத்தையும் கவர்வனவும், மிக்க பயன் விளைப்பனவும் ஆகிய தெய்வம்,தன் கணவனைவிட வேறு இல்லை என்று எண்ணும் மனைவி, அக் கணவனுக் குப் பயன் மழை. 

பெய்யெனப் பெய்யும் மழை என்றது, அளவறிந்து பெய்வதோர் பயன் மழையை. பெய்யும் மழை போல் ஞாலம் விரும்பிய வண்ணம் காதலன் விரும்பிய போது, அவன் பெறுமளவு இன்பம் அளிப்பவள் என்று காதல் இன்பத்தை விளக்கினார். இவ்வாறு காதலின்பத்துக்கு மழையை ஆசிரியர், மற்றோரிடத்தும். அது வருமாறு: உவமித்தார் 

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 

வீழ்வார் அளிக்கும் அளி. (குறள் 1112) என்றது காண்க.

இப்பாட்டிற்கு வேறு வகையாற் பொருள் கொண்டார் பிறரெல்லாம். பிறதெய்வங்களைத் தொழாது கணவனையே தொழுவாள்,மழையை நோக்கிப் "பெய்" எனில் அம்மழை பெய்துவிடும் என்றன்றோ பொருள் கொண்டார்? அது பொருந்தாது. என்னை? மழையை நோக்கிப் 'பெய்' என வேண்டுவாள் எனில்,எத்தெய் வத்தையும் வணங்காதவள் எனப்பட்டவள் மழைத் தெய்வத்தை வணங்கியவளாவாளன்றோ! இது கிடக்க, பன்னாட்கள் விண்ணின்று பொய்ப்பதும் உண்டு. அந் நாட்களிலெல்லாம் கற்புடைப் பெண்டிர் இல்லாதொழிந் தார் என்பதா?

உலகப் பெண்கள் அனைவரும் கற்பில்லாதவர் எனக் கொள்ளும் மனுவின் கொள்கையுடையார் அவ்வாறு கருது வது பொருத்தமேயாகும். கற்புடை மகளிராலேயே இவ் வுலகு நிலைபெறுகிறது எனக் காணும் தமிழர் அவ்வாறு கருதார். ஆதலால், வள்ளுவர் உள்ளம் அதுவன்று. மழை இயற்கையின் கொடை, அது மக்கட்குக் கட்டுப்பட்டதன்று. 

உறற் பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா 

பெறற் பாலனையவும் அன்னவாம் மாரி 

வறப்பின் தருவாரும் இல்லை அதனைச் 

சிறப்பின் தணிப்பாரும் இல். (. 104)

என்றதால், வாரா மழையை வருவிப்பார் என்றும்,எங்கும் இல்லை யென்பதையும் உணர்க. அஃதேயும் அன்றி, வந்து அளவின் மிக்குப் பொழிந்து கெடுக்கும் மழையைத் தடுப் பாரும் இல்லை என்பதை அறிந்து வைக்க.

தொழாஅள் - உயிரளபெடை , கற்புடைய பெண் அமிர்து. (சிறுபஞ்ச மூலம்)

என்ற அடியோடு இச்செய்யுள் ஒப்பு நோக்கத் தக்கது கற்புடைய பெண்ணானவள் தன் கணவனுக்கு அமிழ்து என்பது அவ்வடியின் பொருள். ( பாவேந்தர் பாரதி தாசன்,  குயில் 27-12-1960)

3. பொ-ரை: சமுதாயத் தெய்வங்களை அவ்வழியில் தான் வணங்காதவளாகி, தன் கணவனையே அத் தெய்வங்களின் திரண்ட ஒருமை வடிவாக மனத்துள் உருவகித்து வணங்கி அவனை அத்தகைய தெய்வமாக் கும் முயற்சியில் முனைபவளாகிய கற்புடைய வாழ்க் கைத் துணைவியானவள், பெய்தால் நல்லது என்று மக்கள் விரும்பும் குறிப்புணர்ந்து காலமும் இடமும் அளவும் அறிந்து பெய்யும் மழை என்று கூறத்தக்க வள் ஆவாள்.

க-ரை: பெண் இனம் தெய்வ இனம். கற்புடைய பெண் இனத் தெய்வம். ஆனால் அற வாழ்வில், அவளது சமுதாயத் தெய்வமாக விளங்குபவன் அவளால் தெய்வமாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவளது கணவன். அவளுக்கு அவளது வருங்கால இன வாழ்வின் ஆட்பெயர், கடவுளின் ஆட்பெயராகிய மையத் தெய்வப் பண்பு அவனே.அவனைக் குடும்பத் தெய்வமாக வணங்கி, சமுதாயத் தெய்வாக வழிபட்டு, அவ் வழிபாட்டின் மூலமாகவே அவனை இனத் தெய்வ மாக்குவது அவள் கற்பின் பொறுப்பு, அதன் பெருமையும் அதுவே.

இலக். கு: இக்குறட்பாவின் வாசகம் ஒன்று. இதன் சொற் கள் இரண்டே.

அவை யாவன :

1. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் (இது எழுவாய்).

2. பெய் எனப் பெய்யும் மழை (இது பெயர்ப் பயனிலை.

இக்குறட்பாவில் தொழுது எழுவாள் என்பது ஒன்றே காய்ச் சீர், அதுவும் கருவிளங்காய் ஆகிய உறு நெடுஞ் சீர். கடைச் சீராகிய மழை ஓரசைச் சீர், மலர் வாய்பாட்டு நிரையசைச் சீர். "பெய் என' என்னும் இரண்டாம் அடி முதற் சீர் கூவிளம். மற்றவை யாவுமே தேமா புளிமாச் சீர்கள். அத்துடன் எல்லாச் சீர்களுமே இறுதி அசை இறுதி எழுத்து வரை ஏற்றிசைப்பாய் அமைந்து இக் குறட்பாவுக்கு வெண்பாவுக்கு எளிதில் அமையாத ஓர் இசைப் பண்பு தந்துள்ளது என்பதை வாசித்தே காண்டல் வேண்டும்.

இக் குறட்பாவின் இசையில் பல தமிழர், தமிழ்க் கவிஞர்கள் வழி வழி மரபாக மயங்கி இருக்க வேண்டும். முத்தொள்ளாயிரத்திலும் நள வெண்பாவிலும் இக் குறட்பாவின் எதிரிசைகளை நாம் பல பாடல் களில் காணலாம்.

தெய்வம் தொழாஅள் கொருநன் தொழுது எழுவாள் என்ற தொகைநிலை பெயர்ச் சொல். இது எழுவாய், பெய்யெனப் பெய்யும் மழை என்ற தொகை நிலையைப் பெயர்ப் பயனிலையாகக் கொண்டது.

இதில் 'தெய்வம் தொழாஅள்' என்பதும், 'கொழுநன் தொழுது எழுவாள்' என்பதும் தனித் தனித் தொகை நிலைகளாய், ஒரு பொருள் சுட்டிய இரு பெயர்த் தொகையாய் நின்றது. தெய்வம் தொழாஅளும் கொழுநன் தொழுது எழுவாளுமான கற்புடை வாழ்க்கைத் துணைவி என்பது பொருள் ஆகும்.

தெய்வம் தொழாஅள் என்பது தெய்வத்தைத் தொழாஅள் எனப் பொருள்படும் இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆகும். தொழாஅள் என்பது தொழாள் என்பதன் உயிரளபெடுத்த வடிவம். இவ் வள பெடை மூலம் தொழாள் என்ற நிரையசை தொழா அள் என நிரை நேர் அல்லது புளிமாச் சீர் ஆகியதனால், இது செய்யுளிசை அளபெடை ஆகும். தொழாள் என்பது பெண்பால் எதிர்மறை வினையாலணையும் பெயர். தொழு. பகுதி. ஆ, எதிர்மறை இடைநிலை. அள் பெண்பால் விகுதி. விகுதியின் அகரம் எதிர்மறை ஆகாரத்தின் பின் கெட்டது. பகுதி உகரம் எதிர்மறை ஆகாரத்தின் முன் கெட்டது.

கொழுநன் தொழுது எழுவாள் என்பதில் எழுவாள் என்பது பெண்பால் வினையாலணையும் பெயர். எழு, பகுதி. வகரம்,காலப் பொதுமை சுட்டிய எதிர்கால இடைநிலை. ஆள் பெண்பால் விகுதி. தொழுது வினையெச்சமாய். எழுவாள் என்பதன் வினைப் பகுதி தழுவித் தொகைப்பட்டது. இதில் தொழு,பகுதி. தகரம் இறந்த கால இடைநிலை. உ, வினையெச்ச விகுதி. கொழுநன் தொழுது எழுவாள் என்பது கொழுநனைத் தொழுது எழுவாள் எனப் பொருள்படும் இரண்டாம் வேற்றுமைத் தொகை. கொழுநன் பெயர்ச்சொல், இது கொழு என்ற பகுதியின் ஆண்பால் விகுதி அன் சேர்ந்து உருவா னது. இடையே நகரம் பெயர் இடைநிலை. கொழுநன் என்பதன் ஈற்று னகரமும் வேற்றுமைத் தொகையில் தொழுது என்பதன் முதல் தகரமும் இரண்டும் செய்யுளில் றகரமாயின.

பெய்யெனப் பெய்யும் மழை என்பது அத்தகைய மழை என்று கூறப்படத் தக்கவள் அல்லது அத்தகைய மழையைப் போல்பவள் என்ற பொருளில் பெய்யெனப் பெய்யும் மழை என்ற தொகைப் புறத்தப் பிறந்த அன்மொழித் தொகை. இது குறட்பாவில் பெயர்ப் பயனிலையாய் முதல் பெருந் தொகையை எழுவாயாகக் கொண்டது. 

பெய்யெனப் பெய்யும் மழை என்ற தொகை மூலத் தொகை, அதன் இறுதிச் சொல்லை ஒப்பப் பெயர்ச் சொல். பெய்யும் என்பது பெய் என்ற வினைப் பகுதியடியான பெயரெச்சம். உம் இடைநிலை பெறாத எதிர்காலப் பெயரெச்ச விகுதி. இது தொகைப் பகுதியான மழை தழுவித் தொகைப்பட்டது. என என்ற வினையெச்சம் பெய்யும் என்ற பெயரெச்சத்தின் பகுதி தழுவிற்று. இதில் என், பகுதி. அ என்பது இடைநிலை பெறா நிகழ்கால வினையெச்ச விகுதி. இது 'என்று கூற' அல்லது ' என்று விருப்பம் கொள்ள' என்ற பொருளுடையது. பெய், வினைப் பகுதி, இங்கே ஏவல் ஒருமையாய், மக்கள் மழையை நோக்கிப் பெய்வாயாக என்ற விருப்பம் குறிப்பதைத் தெரி விக்கிறது. ஏவலாகிய பெய் இங்கே அக் கூற்றுக் குறித்துப் பெயர் போல நின்று என் என்பதன் செயப்படு பொருளாய் நின்றது. (பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார் - 1968) [இன்னும் விரிகிறது ஐயாவின் உரை.]

4. பாவேந்தரின் கருத்தை மறுதலித்து பாவலரேறு ஐயாவின் விளக்கமும் வந்திருக்கின்றது. 

பெய்யெனப் பெய்யும் மழை : பெய் என்று சொன்னவுடனேயே பெய்யும் மழை.

இத்தொடருக்குப் 'பெய்யென்று சொன்னவுடனேயே பெய்யும் மழையைப் போன்றவள்' என்று புரட்சிப் பாவேந்தர் பொருள் கூறுவார். அது திருவள்ளுவர் கருத்தாகாது. வீசென வீசும் காற்று', 'தோன்றெனத் தோன்றும் கதிர்' - என்பன போன்றது 'பெய்யெனப் பெய்யும் மழை - என்பதும். (பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1976 -94)

5. தெய்வத்தைத் தொழாது கணவனைத் தொழுது எழுபவள் பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள். தேவையின் போது பெய்யும் மழை தப்பாது பயன் தருதல் போல் கணவனையே தொழுது வாழ்பவள் பயன்தரத்தக்கவளாக இருப்பாள். 55. (குன்றக்குடி அடிகளார் 2005)

இப்படி அறிஞர் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருக்கின்ற விளக்கத்தை / கருத்தை, தானே கண்டுபிடித்துத் தமிழைக் காப்பாற்றியது போல் சொல்கிறார் வைரமுத்து. தன் நேர்மையுள்ளவர் இதற்கு முந்தைய அறிஞரது கருத்துக்களை அவர்களது பெயரோடு குறிப்பிட்டிருக்க வேண்டும். 

பாவேந்தர் கருத்துக்கு, அவரால் சொல்லப்படாமல் விடப்பட்ட பெரு விளக்கமாக ஐயா பன்மொழிப்புலவர் க.அப்பாத்துரையார் மணிவிளக்க உரையில் இலக்கணக் கூறுகளோடு தெளிவு படுத்தியிருப்பார். அந்தப் பேரறிஞர் கூட தமக்கு முன்னே பாவேந்தர் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார் எனக் கூறுகிறார். இதுதான் எழுத்து / கருத்து நேர்மை.

வாடகைக்கு யானை பிடித்துத் தன் நூல்களை ஏற்றி தனக்குத் தானே.... அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 

ஒருவேளை வைரமுத்து அவர்கள் மேற்கண்ட நூற்களைப் படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அவரது முதல் தமிழாசானின் நூலையுமா படிக்காமல் விட்டிருப்பார்? இல்லை படித்து உணர்ந்ததால் அவரது உரையையும் தவறென்றே உரைக்கிறாரோ? (அவரே விளக்கினால் சிறப்பு.)

6. "கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்." (கலைஞர் மு. கருணாநிதி 1996)

தேவைப்படும் இடத்து, திருக்குறளை பெண்ணடிமை செய்யும் நூலாகக் குறிக்க வேண்டி இப்படி எழுதப்பட்ட உரையும் தவறு என மாற்றி எழுதி, பெண்ணுக்கும் குறளுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் வைரமுத்து என்பதால் எல்லோரும் வாழ்த்துவோமா?

அவரது முகநூல் இடுகையில் பலரும் வியப்பில் ஆழ்ந்து வாழ்த்தியிருந்தார்கள். பலர் சினம் கொண்டு, வள்ளுவத்தையே திருத்த நீயார் எனக் கேட்டிருந்தார்கள். (அது படிக்காமல் போனதால் ஏற்பட்ட அறியாமை.) ஓரிருவர் மட்டுமே இது ஏற்கனவே உள்ள கருத்துதான் எனக் கூறியிருந்தார்கள். 

இப்படிப் பல கருத்துகளை இங்கே எடுத்துக் காட்டலாம். சிக்கல் அதுவல்ல. அவர்களுமல்ல. 

வைரமுத்துவின் நேர்மை குறித்து வருந்துவதை / சினம் கொள்வதை விடுத்து படிப்போமா? இன்னும் ஒருவரிடம் ஏமாறாமல் இருப்போமா? 

இந்தக் குறளுக்கு விளக்கம் எழுத முனைபவர்கள் 'தெய்வம்' என்ற சொல்லின் மீது கவனம் கொள்வீராக. அது இன்னும் செழுமையாக்குவதற்கு வழி செய்யும்.

நன்றி!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்