Sunday, 19 October 2025

அடுநறாக் காமம்



பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என் மகனோடு காமத்துப் பால் குறித்து விளக்கமாகப் பேசும் அளவுக்கு என்னைத் தூண்டிய நாமக்கல்லாரின் திருக்குறள் உரை மிகச்சிறப்பானது. அறிஞர் பலர் தொட்டும் தொடாமலும் பொருளுரைத்தக் காமத்துப் பாலுக்கும் சேர்த்து விளக்கம் சொன்ன சீருரை அது.

“மக்கள்‌ சமுதாயம்‌ வாழையடி வாழையாக மகிழ்ச்சியுள்ளதாக நடந்துவர இல்லறத்தை எண்ணியே எழுதப்பட்ட திருக்குறளில்‌ காமத்துப்பால்‌ இல்லாதிருக்க இயலாது. திருவள்ளுவர்‌ சொல்லியிருக்கிற காம இன்பம்‌, விபசாரக்‌ குற்றங்களோடு சேர்த்துப்‌ பேசப்படுகிற காமத்‌ தீமையல்ல. தூயதான காம உணர்ச்சியையும்‌ துப்புரவான காதல்‌ உறவையும்‌ மிக நல்ல கற்பனைக் காட்சிகள்‌ அடங்கிய: நாடகமாக நடத்திக்‌ காட்டப்பட்டிருக்கிற திருக்குறளிலுள்ள காமத்துப்பால்‌ அவமதிப்பான எண்ணத்தினால்‌ அலட்சியம்‌ செய்யப்‌ பட்டிருக்கிறது.

துறவிகள்‌ காமத்தை விலக்க வேண்டுமென்பதற்காக அவர்கள்‌ காமத்தைக்‌ குறைத்துப்‌ பேசுகிறார்கள்‌ என்பதைப்‌ பொறுத்துக்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌ அவர்களுங்கூடப்‌ பெண்பாலை இகழ்த்து பேசுவது குற்றமாகும்‌. காமத்துக்குக்‌ காரணமும்‌ பொறுப்பாளிகளும்‌ பெண்கள்‌ மட்டுந்தானா?

முற்றுந்துறந்த முனிவர்கள்‌ கூட அடக்க முடியாமல்‌ அவதிப்படுகின்ற காமத்தை துறவிகள்‌ அல்லாதவர்கள்‌ மிக சுலபமாக, அலட்சியமாகத்‌ திருக்குறளில்‌ காமத்துப்பால்‌ இல்லாமல்‌ இருப்பது சிறந்தது என்று சொல்லத்‌ துணிகின்றார்கள்‌. திருக்குறளில்‌ துறவறம்‌ கூறப்பட்டிருக்கின்றது. அதே சமயம்‌ இல்லறத்தைக்‌ கருதித்தான்‌ வள்ளுவர்‌ திருக்குறளை எழுதியிருக்கிறார்‌ என்பதில்‌ அணுவளவும்‌ ஐயமில்லை.

இவ்வகையான இல்லநலத்திற்குக்‌ காமம்‌ அடிப்படையான ஓன்று. அறம்‌, பொருள்‌, இன்பம்‌ மூன்றும்‌ சேர்ந்ததுதான்‌ வாழ்க்கை. மூன்றில்‌ ஒன்றை விலக்கினாலும்‌ வாழ்க்கை செம்மையாக இராது. காமத்தை. விட்டொழித்த துறவிக்கு அறம்‌ ஒன்றைத்தவிர மற்ற இன்பம்‌, பொருள்‌ என்ற இரண்டும்‌ இல்லை. அந்த அறமும்கூடத்‌ தன்‌ உடலையும்‌, மனத்தையும்‌ பற்றிய துறவு ஓழுக்கமேயன்றிப்‌ பிறருக்குச்‌ செய்ய வேண்டிய அறம்‌ ஒன்றும்‌ துறவிக்கு இல்லை. இப்படியான நாமக்கல்லார் தரும் ‌ காமம்‌ பற்றிய விளக்கமே, பண்பாடு மாறினாலும்‌ அடிப்படை உணர்வுகள்‌ என்றும்‌ மாறா என்பதை உணர்த்துவதாக என் உள்ளத்தில் நிலைபெற்று; அவரை எண்ணும்போது அவரது அறிவுத்திறத்தை போற்றிச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. அதன் விளைவே,

அடுநறாக் காமம் அசைத்தெனக்கு
படுகிழவன் குறட் பொருளின்
கடுமை வழி சீர்செய்தாய் இல்லையெனில்,
வாலெயிறு ஊறியநீர் வீணே
வடியக் கண்டிருப்பேன் அன்றி
உமை
வாழி என்பேனோ! " என்ற நேற்றைய வரிகள்.

(சொற்பொருள்
அடுநறா - காய்ச்சிவடித்த சாராயம்
படுகிழவன் - வள்ளுவர்
கடுமை - கடினமான
வாலெயிறு - வெண்மையான பற்கள்)

அறிஞர் பலரால் அடுநறா போன்று காமத்துப் பால் சொல்லப்பட்டிருந்தது. அதாவது, தேவை கருதி, வலிந்து எடுத்துக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதான பொருளில் கூறப்பட்டிருந்த்தது. அவர்தம் பார்வையில் காமத்துப்பால் இன்றி வள்ளுவம் இருந்தால் சிறப்பு. வள்ளுவரை துறவியாக, வெறும் அறிவுரை சொல்லும் ஆசிரியனாகக் காட்டப்பட்டத் தலைமுறையில் பிறந்தோரில் நானும் ஒருவன். நாமக்கல்லாரின் குறளுரை (எளியவுரை அல்ல) படித்த பின்பு, இசைபட வாழ்ந்த வள்ளுவரை, பொருட்செறிவு மிக்க அவரது குறளை அறியத் தடையாய் இருந்த வழி சீரானது.

இல்லையென்றால் வாலெயிறு ஊறிய நீர் எனும் சொற்றொடரை பொருளற்றுக் கடந்திருப்பேன். அல்லது அட்ட சுவை நுகர்ந்து வாயில் ஊறும் நீர் போல என்று கடந்திருப்பேன். நாமக்கல்லார் கொடுத்த தெளிவு மாந்தவியல் நோக்கி நகரும் சிந்தனையை விதைத்து, குறளின் ஆழம் நோக்கி பயணிக்கத் தூண்டியது. அந்த பயணத்தில் நான் எதிர்கொண்ட, என் வாழ்வில் தவிர்க்கவியலாத குறட்பேராளுமைகள் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம், ஐயா திரு.வி.க, ஐயா வ.சுப.மாணிக்கம் பெரியவர் வ.உ.சி, பேரறிஞர் தேவனேயப் பாவாணர், தமிழறிஞர் க.ப.அறவாணன் போன்றோர்.

இத்தனை அள்ளிக்கொடுத்த நாமக்கல்லாரை வாழி! வாழி! என வாழ்த்தாமல் போனால் நானறிந்த தமிழ் நகுமே.

இன்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
19-10-2023
===========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்