Saturday, 1 November 2025

உன்னை நினைக்கையில்...

 




எனது முதல் நூல் அச்சாகி வீட்டின் அரங்கிற்குள் வைத்தபோது, நீ படமாகிப்போய் ஐம்பது நாட்கள் ஆகியிருந்தது. என் நூல் வெளியாகும் என்ற எந்த அறிகுறியும் நீ அறிந்திருக்கவில்லை, வெளிப்படுத்தாமல் போன பிழை என்னுடையதுதான். அதனால் அதில் உனக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது. ஆனால், எனக்கு...

எனது ஆறாவது நூலும் வெளிவரப்போகின்றது. ஆகச் சிறந்த ஒரு நேர்மையாளரின் நூலுக்கு உரை எழுதியிருக்கிறேன். நீ இருக்கும் போதே இவையெல்லாம் நடந்திருந்தால் மகிழ்ந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உன் மனப்பாங்கை அப்படித்தான் நான் உணர்ந்திருக்கிறேன். உன் நண்பர்களும், சுற்றமும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னிடமிருந்து வெளிப்படும் கேள்விகள் அத்தனைக் கூர்மையானவை. எடுத்த சில முடிவுகள் கடினமானவை.

கல்லூரியிலும், விடுதியிலும்; நீ அறியாது உன் பெயரெழுதி உன் கையெழுத்தை இட்டபோதெல்லாம் உள்ளத்தின் ஓரத்தில் அச்சமும், மெல்லிய பதற்றத்தையும் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதோ நூலட்டையில் தந்தை என உனது பெயரைப் பார்க்கையில் பெருமிதம் கொள்கிறேன், உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிற மெல்லிய வருத்தத்தோடு...

01-11-2025


Wednesday, 29 October 2025

மெய்யற விளக்கவுரை

 


இன்று மனநிறைவான நாள். இந்த நிறைவை அளித்த பெரியவர் வ.உ.சிதம்பரனாருக்குத் தலை தாழ்ந்த வணக்கம். 

பெரியவர் வ.உ.சிதம்பரனார் இயற்றிய மெய்யறம் எனும் நூலின், மாணவரியல் முழுமைக்கும் விளக்கவுரையை எழுதி முடித்து,  உரியவர்களிடம் சேர்த்துவிட்டேன். அச்சேறி நூலாக வரும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறேன்.

வாழ்க்கைப் பேராறு தன் போக்கிலேயே ஓடிக்கொண்டிருந்தாலும், பல துடுப்புகளின் உதவியோடு என் படகிலேயே பயணம் செய்கிறேன் என்பது பெரும் பேறுதான். இந்தப் பேற்றை எனக்களித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

முகன்மையாக,

எனது எழுத்துகளை முதன்முதலில் நூலாகத் தவழச் செய்த நாகர்கோவில், தெ.தி.இந்துக்கல்லூரியின் மேனாள் தலைவர், அமரர் பெ.ஆறுமுகம்பிள்ளை,

உரையாசிரியனாய் என்னை மாற்றி, நூற்களை வெளியிட்ட நண்பர், திருவானைக்கா திரு ச.முத்துக்குமாரசாமி,

தன்னலம் கருதாத இவ்விருவரின் செயலே இன்று பெரியவரின் 'மெய்யறம்' நூலுக்கு விளக்கவுரை எழுதி முடிக்க முழுமுதற் காரணம்.

இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

தளிகையாக, ஒரே வெண்பா இருவருக்குமாகின்றது.

நான்தேடா நல்லமுது நல்லோர் மகிழ்ந்திருக்க/
வான்வாடா வண்ணமழை வண்டமிழ்க் காதலால்/
தாமாக என்னெழுத்தை நூலாய்ப் பதிப்பித்தக்/
கானுலாப் பாதைக் கதிர்/

என் வலைப்பக்கத்திலும், முகநூல் பக்கத்திலும் எழுதியதியதைப் படித்துக் கருத்திட்ட, அழைத்துப் பேசிய அனைவருக்கும் நன்றி. உங்களது கருத்துகள் என்னைச் செம்மைப் படுத்தியதாலும், மேலும் படிக்கத் தூண்டியதாலும் நிலை உயர்ந்திருக்கிறேன் என்பதில் ஐயமில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெரியவரின் 'பாடல்திரட்டு' நூலின் சில பாடல்களுக்கு உரை எழுதத் தொடங்கியபோது திரு ரெங்கையா முருகன் முகநூலில் அறிமுகமானார். நேரில் சந்திப்பு. உரையாடல்கள்.

ஒருநாள், "பெரியவரின் மெய்யற ஆண்டு இது. மெய்யறம் குறித்து இணையவழியில் பேச இயலுமா?" என்றார். "பேசுவதற்குச் சூழலும், காலமும் இடந்தருமா எனத் தெரியவில்லை ஐயா. உரையாக எழுத முயல்கிறேன்" என்றேன்.

சனவரி மாதம் ஏழாம் தேதி 2025ல் முதல் அதிகாரத்தின் விளக்கத்தை எழுதி அனுப்பினேன். முப்பது அதிகாரங்களுக்கும் விளக்கமெழுதி முடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், நூலளவை விட நெடுங்காலம் எடுத்துவிட்டதுபோல் தோன்றுகின்றது. ஆனாலும் முடித்துவிட்டேன் என்ற மகிழ்வில் குறைவில்லை. தமிழில் துறைபோகிய பெரியவர் வ.உ.சிதம்பரனாரின் மனதோடு மிக நெருக்கமாக இருந்த இந்த நாட்களுக்காக அவருக்கு உளமார்ந்த நன்றி.

பெரியவரால் 1914ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மெய்யறத்திற்கு, நூறு ஆண்டுகள் தாண்டிய பின், முதன்முதலில் விளக்க உரையெழுதும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு திரு ரெங்கையா முருகனுக்கு மனமார்ந்த நன்றி. அவரின் தூண்டுதல் இல்லை என்றால் இது நிறைவுற்றிருக்குமா? என்று தெரியவில்லை. இந்த வேலையின் பின்புலத்தில் இருக்கும் வ.உ.சி ஆய்வுவட்டத்திற்கும், திரு குருசாமி மயில்வாகனன், திரு அறிவழகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

எந்தச் சூழலிலும் என்னோடு உறுதுணையாய் நிற்கும் என் துணைக்கும், அன்பு மகனுக்கும், மருமகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. அவனது திருமணம் நடந்தேறியதும் இவ்வாண்டின் மகிழ்ச்சிகளில் ஒன்று.

எனைப் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் தலைதாழ்ந்த வணக்கம்.

ஐந்து வியாழவட்டம் நிறைவுற்றிருக்கிறது.

"முதலிரண்டு படிப்பில் போக,
மூன்றும் நான்கும் பொருளில் கரைய
ஐந்தில் பிறந்தேன் எழுத்தாய்
அழகிய தமிழ்த்தாய் வளர்த்தனை.

அறிந்தேன் பலவும்
அறிந்தேன் பலரை
அருள் பல பெற்றேன்.

கற்றவை எடுத்து விளம்பிட
உற்றவர் போல் உதவுவோர்
நற்றமிழ் போல் நலமுறுவாரே"


என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்.
29-10-2025

Sunday, 19 October 2025

அடுநறாக் காமம்



பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என் மகனோடு காமத்துப் பால் குறித்து விளக்கமாகப் பேசும் அளவுக்கு என்னைத் தூண்டிய நாமக்கல்லாரின் திருக்குறள் உரை மிகச்சிறப்பானது. அறிஞர் பலர் தொட்டும் தொடாமலும் பொருளுரைத்தக் காமத்துப் பாலுக்கும் சேர்த்து விளக்கம் சொன்ன சீருரை அது.

“மக்கள்‌ சமுதாயம்‌ வாழையடி வாழையாக மகிழ்ச்சியுள்ளதாக நடந்துவர இல்லறத்தை எண்ணியே எழுதப்பட்ட திருக்குறளில்‌ காமத்துப்பால்‌ இல்லாதிருக்க இயலாது. திருவள்ளுவர்‌ சொல்லியிருக்கிற காம இன்பம்‌, விபசாரக்‌ குற்றங்களோடு சேர்த்துப்‌ பேசப்படுகிற காமத்‌ தீமையல்ல. தூயதான காம உணர்ச்சியையும்‌ துப்புரவான காதல்‌ உறவையும்‌ மிக நல்ல கற்பனைக் காட்சிகள்‌ அடங்கிய: நாடகமாக நடத்திக்‌ காட்டப்பட்டிருக்கிற திருக்குறளிலுள்ள காமத்துப்பால்‌ அவமதிப்பான எண்ணத்தினால்‌ அலட்சியம்‌ செய்யப்‌ பட்டிருக்கிறது.

துறவிகள்‌ காமத்தை விலக்க வேண்டுமென்பதற்காக அவர்கள்‌ காமத்தைக்‌ குறைத்துப்‌ பேசுகிறார்கள்‌ என்பதைப்‌ பொறுத்துக்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌ அவர்களுங்கூடப்‌ பெண்பாலை இகழ்த்து பேசுவது குற்றமாகும்‌. காமத்துக்குக்‌ காரணமும்‌ பொறுப்பாளிகளும்‌ பெண்கள்‌ மட்டுந்தானா?

முற்றுந்துறந்த முனிவர்கள்‌ கூட அடக்க முடியாமல்‌ அவதிப்படுகின்ற காமத்தை துறவிகள்‌ அல்லாதவர்கள்‌ மிக சுலபமாக, அலட்சியமாகத்‌ திருக்குறளில்‌ காமத்துப்பால்‌ இல்லாமல்‌ இருப்பது சிறந்தது என்று சொல்லத்‌ துணிகின்றார்கள்‌. திருக்குறளில்‌ துறவறம்‌ கூறப்பட்டிருக்கின்றது. அதே சமயம்‌ இல்லறத்தைக்‌ கருதித்தான்‌ வள்ளுவர்‌ திருக்குறளை எழுதியிருக்கிறார்‌ என்பதில்‌ அணுவளவும்‌ ஐயமில்லை.

இவ்வகையான இல்லநலத்திற்குக்‌ காமம்‌ அடிப்படையான ஓன்று. அறம்‌, பொருள்‌, இன்பம்‌ மூன்றும்‌ சேர்ந்ததுதான்‌ வாழ்க்கை. மூன்றில்‌ ஒன்றை விலக்கினாலும்‌ வாழ்க்கை செம்மையாக இராது. காமத்தை. விட்டொழித்த துறவிக்கு அறம்‌ ஒன்றைத்தவிர மற்ற இன்பம்‌, பொருள்‌ என்ற இரண்டும்‌ இல்லை. அந்த அறமும்கூடத்‌ தன்‌ உடலையும்‌, மனத்தையும்‌ பற்றிய துறவு ஓழுக்கமேயன்றிப்‌ பிறருக்குச்‌ செய்ய வேண்டிய அறம்‌ ஒன்றும்‌ துறவிக்கு இல்லை. இப்படியான நாமக்கல்லார் தரும் ‌ காமம்‌ பற்றிய விளக்கமே, பண்பாடு மாறினாலும்‌ அடிப்படை உணர்வுகள்‌ என்றும்‌ மாறா என்பதை உணர்த்துவதாக என் உள்ளத்தில் நிலைபெற்று; அவரை எண்ணும்போது அவரது அறிவுத்திறத்தை போற்றிச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. அதன் விளைவே,

அடுநறாக் காமம் அசைத்தெனக்கு
படுகிழவன் குறட் பொருளின்
கடுமை வழி சீர்செய்தாய் இல்லையெனில்,
வாலெயிறு ஊறியநீர் வீணே
வடியக் கண்டிருப்பேன் அன்றி
உமை
வாழி என்பேனோ! " என்ற நேற்றைய வரிகள்.

(சொற்பொருள்
அடுநறா - காய்ச்சிவடித்த சாராயம்
படுகிழவன் - வள்ளுவர்
கடுமை - கடினமான
வாலெயிறு - வெண்மையான பற்கள்)

அறிஞர் பலரால் அடுநறா போன்று காமத்துப் பால் சொல்லப்பட்டிருந்தது. அதாவது, தேவை கருதி, வலிந்து எடுத்துக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதான பொருளில் கூறப்பட்டிருந்த்தது. அவர்தம் பார்வையில் காமத்துப்பால் இன்றி வள்ளுவம் இருந்தால் சிறப்பு. வள்ளுவரை துறவியாக, வெறும் அறிவுரை சொல்லும் ஆசிரியனாகக் காட்டப்பட்டத் தலைமுறையில் பிறந்தோரில் நானும் ஒருவன். நாமக்கல்லாரின் குறளுரை (எளியவுரை அல்ல) படித்த பின்பு, இசைபட வாழ்ந்த வள்ளுவரை, பொருட்செறிவு மிக்க அவரது குறளை அறியத் தடையாய் இருந்த வழி சீரானது.

இல்லையென்றால் வாலெயிறு ஊறிய நீர் எனும் சொற்றொடரை பொருளற்றுக் கடந்திருப்பேன். அல்லது அட்ட சுவை நுகர்ந்து வாயில் ஊறும் நீர் போல என்று கடந்திருப்பேன். நாமக்கல்லார் கொடுத்த தெளிவு மாந்தவியல் நோக்கி நகரும் சிந்தனையை விதைத்து, குறளின் ஆழம் நோக்கி பயணிக்கத் தூண்டியது. அந்த பயணத்தில் நான் எதிர்கொண்ட, என் வாழ்வில் தவிர்க்கவியலாத குறட்பேராளுமைகள் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம், ஐயா திரு.வி.க, ஐயா வ.சுப.மாணிக்கம் பெரியவர் வ.உ.சி, பேரறிஞர் தேவனேயப் பாவாணர், தமிழறிஞர் க.ப.அறவாணன் போன்றோர்.

இத்தனை அள்ளிக்கொடுத்த நாமக்கல்லாரை வாழி! வாழி! என வாழ்த்தாமல் போனால் நானறிந்த தமிழ் நகுமே.

இன்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
19-10-2023
===========================

Wednesday, 1 October 2025

இனியவை 25 - சிறுகதை தொகுப்பு



கொற்றவை முன்செல்ல;

நாடாளும்
கோனுக்கு வில்லும் வாளும்,
கோன் புகழும்
பாணர்க்குப் பறையும் யாழும்,
களமாடுங்
கூத்தர்க்கு மெய்ப்பாடு எட்டும்,
காக்கும்
மருத்துவர்க்கு இலையும் வேரும்,
எமக்கோ,
கோலும் எழுத்துமே
ஆய்தம்.
===============================
இனியவை 25.
இனிய இருபத்தைந்து கதைகளின் தொகுப்பு, புத்தகமாக...
இரண்டாம் பரிசு பெற்ற எனது கதையும் இடம்பெற்றிருக்கிறது.

நேற்று கையில் கிடைத்தது.
நன்றி - Kyn Hood Productions.
01 - 10 - 2025 - ஆய்த பூசை.

தோழர் தி.மா.ச. நினைவேந்தல்


காலை நேர மேற்குவானில் வெள்ளை யானை ஒன்று தும்பிக்கையைத் தூக்கி நீர் பீய்ச்சுவது போன்ற மிகச் சரியான தோற்றம் கண்டு, குழந்தைக்குக் காட்டிவிடவேண்டுமென்று வீட்டுக்குள் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கி வந்து காட்ட முனைகையில் காற்றில் கலைந்து போன மேகத்தைப்போல காற்றோடு போய்விட்டது தி.மா.சரவணன் அவர்களின் பெருவாழ்வு. எதற்கு என்னைத் தூக்கிக்கொண்டு இவ்வளவு வேகமாக ஓடிவந்தாய் என்ற கேள்வி நிறைந்த குழந்தையின் பார்வைக்கு விடைசொல்லத் தெரியாமல் விழிபிதுங்கும் தந்தையின் நிலையில் என் போன்றோர் உள்ளம்.

சிற்றிதழ் சேகரிப்பு. பரவலாக அறியப்பட்ட செயலா என்றால்; சிலர் ஆம் என்று சொல்லலாம். பலர் இல்லையென்றும் சொல்லலாம். எதற்காக இந்த சேகரிப்பு அல்லது இந்த சேகரிப்பால் சமூகத்திற்கு என்ன நன்மை விளையும் என்று கேட்டால் பெரும் பான்மையோர் உதட்டைப் பிதுக்குகிறார்கள். அல்லது “யோசிக்க வேண்டும்’” என்று விடையிறுக்கிறார்கள். அவரோ இருபைத்தைந்து ஆண்டு காலம் இதழ் சேகரிப்பையே தன் வாழ்நாளின் முகாமையான பணியாகக் கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறாயிரம் இதழ்கள், சில அரிய நூல்கள், நாளேடுகள் என அவரது “கலைநிலா நூலகம்” இதழ்களால் நிறைந்து கிடக்கிறது. என்னதான் செய்து கொண்டிருந்தார் அவர்.