Tuesday, 18 November 2025

பெரியவர் வ.உ.சி. நினைவேந்தல் 2025

 


மண்ணின் விடுதலையைக்

கண்ணில் காணாது

இன்னுயிர் நீங்கும்

இறுதி நாள்!


கண்பட வெளியே

கனன்றெரியும் விறகு,

புண்பட்டு உள்ளே

நொந்தெரியும் உள்ளம்.


இன்னும்,

எத்தனைக் காலம்

அடுப்படிச் சிறையில்

உழலும் வாழ்க்கை?


அன்றைய நாட்களின்

பெண்களின் நிலைமையை

எண்ணியபடியே

கண்ணீர் உகுத்தது

பெரியவர் உள்ளம்.


குறள் உரைக்க இயலாத 

தன்

குரல்வளையின் மீதும்,

ஆற்றாமை குழைந்த ஏக்கம்.


கூற்றுவன் வாயிலில்

நின்றிருக்கும் போதும்,

நாடும் மக்களும்

நற்றமிழ்க் குறளும்

நெஞ்சில் சுமந்தே

விடுதலை பெற்றது

பெரியவர் ஆவி.


வாழ்க நீ எம்மான்!

வையத்து நாட்டிலெல்லாம்.

வாழி! வாழி!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்