Friday 8 March 2019

மகளிர் நாள் 2019

மகளிர் நாள் சிறப்புறட்டும். “காதல் கண்ணி” யில், ஊரம்மன் கோயிலில் வைத்து நடைபெறும் தோழி ஒருத்தியின் உரையாடல்; கதை மாந்தர்களுடன்.
===============================================

பெண்ணென்றால் தரையதிர
பேய்போல நடப்பாளோ?  எனும்
குரல்கேட்டுத் திரும்பியவள்
செருமிப் பின் பேசலுற்றாள்

முறத்தால் புலிதுரத்தும்
முதுமையை வீரமென்றீர்,
அதியனின் அவைநிறைத்த
ஔவையை அம்மையென்றீர்,
காய்வுற்று நகர்எரித்த
கண்ணகி தெய்வமென்றீர்,
கொற்றம் கூடிக்கண்ட
குந்தவை நாச்சியென்றீர்,
எம்மண்ணில் நடக்கும்
என்னையேன் பேயென்றுரைத்தீர்?
கண்கள் சிவப்பேறக்
கத்தி நின்றாள்.

மெல்லடி வைத்து நடந்தால்
சொல்லடி வாராதன்றோ
புட்டமுது நிறைந்த வாயால்
பொக்கையன் நகைத்துரைத்தான்.

முற்றாப் பிறப்பே
மூத்தோரே கேள்மின், நீவிர்
களிறு எறிந்திடல்
காளையின் கடனென
பாடிய பொன்முடியார்
பாட்டெடுத்துக் கல்வியில்
சேர்த்து வைத்திருந்தால்,
செருமுகம் நோக்கிச்
செல்கவென்று உரைத்த
மாசாத்தியார் மனத்துணிவு
வாத்தியார் சொல்லித்தர
வகைசெய்து வைத்திருந்தால்,
தன்னைத் தழலாக்கி
தாய்மண் மீட்டெடுத்த
குயிலியின் வீரமதைக்
குழந்தைகட்குச் சொல்லிநின்றால்,
அயலார் கைக்கிடந்த
அருமை நாடதனை
முன்னின்று போர்நடத்தி
முற்றாக வென்றெடுத்த
வேலுநாச்சி வீரவாளை
விளையாடக் கொடுத்திருந்தால்,

அட ஒரு நிமிடம் நில்லம்மா;
என்னம்மா அடுக்குகிறாய்
எதிர்க்கேள்வி கேட்கின்றாய்
சொல்லம்மா
கொடுத்திருந்தால் என்ன செவ்வீர்?

கேடுசூழ் நாடிதனை
ஊடாடி சீர்செய்வோம்.
கேளாச்செவி அனைத்தும்
கேட்கும்வரை குரல்கொடுப்போம்.
பாழாகும் சமுதாயம்
பார்த்து விழிமூடோம்.

பொறு தாயே சிறுபெண்ணே
திருத்த முடியாது.
ஐந்தில் வளையாததை
ஐம்பதில் வளைப்பாயோ?

விதைபிளந்து எழுந்துவர
விதியற்றுப் போனாலும்
கொம்பொடித்து நட்டுவைத்தால்
குருத்துவிடும் முருங்கை போல
வேண்டியதைச் செய்துநின்றால்
மீண்டெழுமே எம்மினந்தான்.
பூங்கதலிப் பழம்போட்டு
புட்டமுது பிசைந்துண்பீர்
வெம்போக்குப் பாட்டாவே
வெறும்வாயில் மெல்லாதீர்
விக்கிச் சோராதீர்.
என்றவளோ நடைகடந்தாள்.

"காதல் கண்ணி" யிலிருந்து.....
சிராப்பள்ளி ப.மாதேவன்,
08/03/2019

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்