Monday 14 February 2022

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாடகக் காதல்?!

படம்: மறைமலை வேலனார்
 

தொலைவில் சீராய்ப் பாயும் அருவியின் நீரொழுக்கு தட்டைப் பாறைகளில் தாளமிடும் ஓசைக்கு இசைய தலையசைத்துக் கொண்டே எயினி நடக்கிறாள். இரண்டு நாட்களாக அங்கவையின் முகம் பார்க்காததே மனதுக்குள் மெல்லிய வருத்தத்தைக் கொடுத்தது. அவள் ஏதோ ஒன்றை மனதுக்குள் சுமக்கிறாள் போலும். முகம் அத்தனை மலர்ச்சியாக இல்லை. இன்று கேட்டுவிடவேண்டும்.

புதுப் புற்களால் வேயப்படிருந்த கூரைக்குக் கீழே வேங்கை மரத்தின் பருத்த வேர் மீது அமர்ந்திருக்கும் அங்கவையை இங்கிருந்தே பார்த்துவிட்டாள் எயினி. தன்னைக் கண்டதும் அவள் முகம் துடைப்பதையும் கவனித்துவிட்டாள். நடை சற்றே விரைவானது. அருவியின் தாளம் மறந்துபோயிற்று. எட்டி நடந்து அங்கவையின் அருகில் வந்தாள். 


 "என்னடீ.. ரெண்டு நாளா ஆளையே காணோம். தனியே உக்கார்ந்து சிறுபறை அடித்து குருவி ஓட்டுவது சலிப்பாக இருந்தது. நேற்றே வந்திருப்பேன். ஆனால் அப்பனும் இங்கில்லை. அதனால் வர முடியவில்லை."

அங்கவை ஏதும் விடையிறுக்கவில்லை. கீழே அருவி நீர் ஓடையாகப் பாயும் பள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ ஒண்ணுமே சொல்லாமல் இருக்கிறாய்?"

"ம்... "

"என்ன ம்..."

"ஒன்றுமில்லையடி..."

"சரி அப்ப நான் கிளம்பவா?" என்றபடி எழுந்தாள். இப்படி எழுந்தால் அங்கவை பேசத் தொடங்குவாள் என்பது அவளுக்குத் தெரியும்.

"ஏய்.. கொஞ்சம் இரு டீ. வந்த உடனே கிளம்பத் தேவை என்ன?"

"எனக்கு ஒரு தேவையும் இல்ல. நீதான் ரெண்டு நாளா ஒரு மாதிரியா இருக்கிற. கேட்டா சொல்லவும் மாட்டேங்கிற. அவனோடு ஏதும் சண்டையா?"

"ம்..."

"என்ன இன்னிக்கு நேத்தா சண்டை போடுறீங்க. மூணாம் பிறைக்கும் முழுநிலவுக்கும் இடையே முப்பது நாள் சண்டை போடுறவங்க தானே!" என்றாள் சிரித்தபடி.

"போடீ.. இது வேற "

"அப்படி என்ன நடந்தது"

"இளவேனில் தொடங்கும்போது வருவேன் என்று சொல்லிப்போனவன் இன்னும் வரவில்லை. கூதிர்காலமே முடிந்துவிடும் போலிருக்கிறது"

 "வருந்தாதே பெண்ணே அவன் வருவான்"

"எனக்கென்னவோ ஐயம் எழுகிறது. என்ன செய்வதென்று புரியவில்லை."

"தாயிடம் சொல்லி மூப்பன் காதுகளுக்குக் கொண்டு சேர்ப்போமா. அலருக்கு அஞ்சியேனும் வருவானடி"

"அம்மாவிடமா?!"

"ஏனடி.. வேண்டாமா?"

"அன்று என்னை மணப்பதாய்ச் சூளுரைத்தான். நானும் மகிழ்ந்தேன். கூடினோம். பிரிந்தோம். மறுமுறை பார்க்கையில் சூளுரை நினைவு படுத்தினேன்." 

"அப்புறம்.."

"எல்லா சந்திப்புகளிலும் இப்படியே நடந்தது.. பொருளோடு வருவேன் எனச் சொல்லிப் பிரிந்தான்.."

"ம்.." 

"என்னடி ம்.. என்கிறாய். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறதே."

"மணப்பேன் என்று சூளுரைத்ததைச் சொல்வோமடி அன்னையிடம்" 

"சொல்லலாம் தான். ஆனால் அன்று அங்கே எம்மைப் பார்த்தவர் யாருமில்லை. அந்தக் கள்வனும் நானும் மட்டுமே இருந்தோம். கூடவே மலையும் மரங்களும்"

"சரி..."

"அவளை மணப்பதாய்ச் சொல்லவே இல்லை என்று அவன் மறுத்துவிட்டால், நான் என்ன செய்வேனடி. ஒன்றுமே செய்ய இயலாதே."

"ஒருவர் கூடவா உங்களைப் பார்க்கவில்லை?"

"அருவியருகே, தினையின் மேற் தாள்களைப் போல மெல்லிய சிறிய கால்களை உடைய நாரை ஒன்று ஆரல் மீன்களுக்காக ஒழுகும் நீரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. அது கூட எங்களைப் பார்க்கவில்லை."

"சான்று பகர்வார் யாருமில்லையா?"

"அதுதானடி சிக்கல். என்ன செய்வதென்றே தெரியவில்லை"

"எனக்கும் குழப்பமாக இருக்கிறது அங்கவை.. என்ன செய்யலாம்?"

மலையை மெல்ல இருள் சூழத் தொடங்கியது. 

================== 

குறுந்தொகை - 25 - கபிலர் 

================== 

 யாரும் இல்லை; தானே கள்வன்;/ 

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?/ 

தினை தாள் அன்ன சிறு பசுங் கால / 

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் / 

குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே./

 

                                                =====

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்