Saturday 12 February 2022

எனது கணித ஆசிரியரின் மறைவு

 


பொதுவாக நமக்குக் கல்வியளித்த ஆசிரியர்களை மறக்கவியலாது. குறிப்பாகச் சிலரை வாழ்வின் இறுதித் துளி வரை மறத்தல் இயலாது. அப்படியான ஒரு ஆசிரியர் திரு சங்கரநாராயணபிள்ளை என்ற பழனி சார், நேற்று காலமானார் என்ற செய்தி கவலையில் ஆழ்த்திவிட்டது.

தாழக்குடி அரசுப்பள்ளியில் படித்தக் காலம் இன்னும் பசுமை மாறாமல் அப்படியே நெஞ்சில் இருக்கிறது. எத்தனையோ ஆசிரியர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான குணம். பழனிசார் மிகவும் கண்டிப்பானவர். கணித ஆசிரியர். கணித சூத்திரங்களைப் போன்று தீர்க்கமானவர். சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றுவிடாது மனதில் இருத்திக் கொள்ளும் வல்லமை கொண்டவர்.

நான் அவரிடம் கணிதம் பயின்றது 1977 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில். எமது பள்ளியின் நூற்றாண்டுவிழா 2017 ல் நடந்தது. அப்போது வெளியிடப்பட்ட சிறப்புமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் அவரைக் குறித்து இப்படி எழுதியிருந்தேன்.

"என் வாழ்க்கையில், ஏன் என்னோடு தொடர்புடைய ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையிலும் என்றும் கூடச் சொல்லலாம், முகாமையான இடத்தைப் பிடித்துக்கொண்ட ஆசிரியர் ஒருவரை ஏழாம் வகுப்பில்தான் சந்தித்தேன். திரு சங்கரநாராயணபிள்ளை தான் அவர். கணிதம் கற்பித்தார். மிகக் கண்டிப்பானவர். வடிவியல் (Geometry) அவருடைய சிறப்பான கவனம் பெறும் பாடம். மரத்தால் செய்யப்பட்ட பெரிய காம்பஸ், கோணமானி போன்றவற்றைக் கொண்டு கரும்பலகையில் அவர் வரைகிற திருத்தமான வடிவகணிதப் படங்கள் என்னுள் பேரார்வத்தை உண்டாக்கின. உருவகப் படுத்துதல் உந்தித் தள்ள அது ஒரு கலையாகவே என்னுள் மாறிப்போனது. பிற்காலத்தில் என்னிடம் பொறியியல் வடிவமைப்புக் கற்றுக்கொண்ட மாணவர்களில் இரண்டாயிரம் பேருக்கு மேல் இவரையும், இவர் எனக்குக் கற்றுக்கொடுத்த அடிப்படை வடிவகணிதத்தையும் எடுத்துப் போயிருக்கிறார்கள்."

இவ்வளவு சின்ன வரிகளைப் படித்துவிட்டு மகிழ்ந்திருக்கிறார். படிக்கிற காலத்தில் அரிமாவாக எங்களுக்குத் தோன்றிய ஐயா, தமது 88ஆம் வயதில், அந்த மலரை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம்,

"மாதேவன் எப்ப ஊருக்கு வருவான்? நான் அவனைப் பார்க்கணும்" என்று கேட்டிருக்கிறார்.

"அதுக்கு எதுக்கு நீங்க வந்தீங்க? அவன் வந்தா உங்களை வந்து பாக்கச் சொல்றேன்"

"இல்லை இல்ல நான் தான் அவன வந்து பாக்கணும்" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

அடுத்த முறை ஊருக்குப் போன போது அம்மா கண்ணில் ஈரம் படர இதை என்னிடம் சொன்னார்கள். உடனே அவரது வீட்டிற்குச் சென்றேன். என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சிங்கத்தைக் குகையிலேயே சந்தித்தேன்.

"வா... உள்ள வா" என்றவர் இரு கைகளையும் குவித்து "ரெம்ப சந்தோசம். இவ்வளவு காலத்துக்கு அப்புறமும் என்னை, என் குணத்தை நினைவு வைத்திருந்து எழுதியதற்கு மிக்க நன்றி உனக்கு" என்றார். படிக்கும் போது தொடவே அச்சப்பட்ட அந்தக் கைகளை பட்டென்று பிடித்து "இல்லை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் " என்றேன்.

காலம்தான் எவ்வளவு மாற்றங்களைச் செய்துவிடுகிறது. செவிப்புலன் கொஞ்சம் குறைந்திருந்த போதும் உற்சாகமாகப் பேசினார். தான் நடைப் பயிற்சி செய்வதை, கடைத்தெருவுக்குப் போவதை சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அந்தப் பழனிசாரா இவர்?

"அந்த மேசையில புத்தகம் இருக்கு அத எடு" என்றார். பக்க எண் சொன்னார். படி என்றார். படித்தேன். முகம் மலர கேட்டுக் கொண்டிருந்தார். தன் நலம் நோக்காது பணி செய்த ஒரு ஆசிரியருக்கு என்னால் இயன்ற வகையில் நன்றியுரைத்த நிறவோடு விடை பெற்றேன்.

இன்று அவர் இல்லை. என் மாணவர்கள் அவர் பெயரை ஒருவேளை மறந்து போகலாம். ஆனால், பழனிசாரிடம் பெற்று நான் அவர்களுக்குக் கடத்திய எளிமையான வடிவியல் உத்திகளை அவர்கள் பயன் படுத்திக் கொண்டும் தன்னிலும் இளையவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள்.

ஏதோ ஒரு கணிணியின் முன்னால் யாரோ ஒருவர் உங்களுடைய எளிமையான வடிவியல் உத்திகளைப் பயன் படுத்திக்கொண்டே இருப்பார்கள் ஐயா. இயற்கையில் அமைதியாக ஓய்வுறுங்கள்.

வணக்கத்துடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
12-02-2022

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்