Sunday 9 October 2022

இல்லாதது எது?

 


இந்த முறை ஊரிலிருந்து திரும்புகையில்போச்சுல இதயெல்லாம் கொண்டுபோஎன்று சில பொம்மைகளைத் தந்தார் அம்மா.

நாஞ்சிநாட்டிலிருந்து வணிகத்திற்காக திருவனந்தபுரத்திற்குப் பண்டு நகர்ந்த கூட்டத்தின் கிளையில் பூத்த மலர் அவர். அங்கு குடியேறிய பலர் புரட்டாசியில் கொலு வைப்பதைப் பழக்கமாக்கி விட்டிருந்தார்கள். நான் சொல்வது இருநூறு ஆண்டு கதை. அப்படிப் பழக்கமான அம்மாவின் வருகைக்குப் பின் தான் எங்கள் தாழக்குடி வீட்டிலும் பொம்மைகள் கொலுவேறியிருக்கின்றன. அதற்கு முன் அந்தப் பழக்கம் எங்கள் பாட்டி குடும்பத்தில் இல்லை.

கொலு வைப்பதோடு சேர்ந்த ஒரு கொசுறான பழக்கம், தங்கள் குழந்தைகளுக்கு வழிவழியாகப் பயன்படுத்தும் பொம்மைகளில் சிலவற்றைத் தருவது. அப்படித்தான் சில பொம்மைகள் என் கைக்கு வந்து சேர்ந்தன.

பாத்து வச்சுக்கோ எல்லாத்தையும். எல்லாம் ரெம்ப பழைய பொம்ம

சரிம்மா..”

இந்த பிள்ளையாரு இருக்கு பாரு, எங்க அம்ம மொத மொதல்ல வாங்குனதுன்னு சொல்லுவா

அப்படியா!”

ஆமா மக்கா. கிட்டத்தட்ட எழுவது எழுவத்திரெண்டு வயசு அதுக்கு

எழுபது வருச பொம்மையா. நான் பத்திரமா பாத்துக்கிறேம்மாஎன்று சொல்லியபடியே அந்த பிள்ளையார் பொம்மையைப் பார்த்தேன். (படத்தில் நீங்களும் பாருங்கள்).

வெகுமக்களிடம் சேராத, அவர்களது பொதுச் சிந்தனைக்குள் திணிக்கப்படாத செய்திகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அல்லது அந்தச் செய்தியோ அல்லது பழக்கமோ நீடித்திருக்காது. அல்லது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாது என்பதை அந்த பிள்ளையார் பொம்மை எனக்குக் கற்றுக்கொடுத்தது.

குறிப்பாக ஒரு செய்தியை  கண்ணுக்குப் புலனாகும் கலைகளின் வழியாக; ஆதரிப்பதன் மூலமாகவோ அல்லது எதிர்ப்பதன் மூலமாகவோ பரவலாகக் கொண்டு சேர்த்துவிட இயலும். அப்படிப் பரவலாக நாடகங்கள்,  திரைப்படங்கள், போன்ற கலைகளின் வழியாகக் கடத்தப்படும் செய்திகள், அறிவுசார் மக்களால் (சரி/தவறு என்பதை விடுத்து) திட்டமிட்டு செய்யப்படுவன. அவற்றின் தாக்கம் வெகுமக்களின் தொழிற்சார் கலை வடிவங்களில் வெளிப்படும். எடு: பண்டைய கோவில் சிலைகள் மற்றும் இதுபோன்ற பொம்மைகள்.

பெரும்பாலும் அந்த பொம்மை செய்யப்பட்டது பாலராமபுரத்திலாகலாம் அல்லது தமிழ்நாட்டில் எங்கேனுமாகலாம். ஐம்பதுகளில் செய்யப்பட்ட இந்த பொம்மையில் புரிநூல் இடப்படவில்லை என்பது கண்கூடு. மற்ற பொம்மைகளும் இப்படியே. பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த இனக்குழுக்கள் புரிநூல் அணியும் வழக்கம் உடையவர்கள். கோவில் சிற்பங்களில் புரிநூல் ஏராளமுண்டு. அப்படியிருந்தும் அவர்களின் கைவினைக் கலைகளில் அது இடம்பெறவில்லை என்பது எனக்கு வியப்பாயில்லை. அவர்கள் வழக்கமாகக் காணும் ஆற்றங்கரைப் பிள்ளையாருக்கும், அரச மரத்தடிப் பிள்ளையாருக்கும் நூல் இல்லையென்பதே அவர்கள் கண்டு உள்ளத்தில் ஊறிப்போயிருந்த யதார்த்தம். அதுவே அவர்களது கலையிலும் வெளிப்பட்டிருக்கிறது.

காலவோட்டத்தில் ஆதரிப்பவர் எதிர்ப்பவர் என இருவரும் சேர்ந்து அந்தக் கலைஞர்களை யதார்த்தத்தின் கரைகளிலிருந்து குளத்துக்குள் தள்ளிவிட்டுவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்று காணும் பொம்மைகளிலெல்லாம் ….

 

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான்,போவான்,ஐயோவென்று போவான்  புதிய கோணங்கி.

 

போவானா என்னருமை பாரதியே?


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்