எனது முதல் நூல் அச்சாகி வீட்டின் அரங்கிற்குள் வைத்தபோது, நீ படமாகிப்போய் ஐம்பது நாட்கள் ஆகியிருந்தது. என் நூல் வெளியாகும் என்ற எந்த அறிகுறியும் நீ அறிந்திருக்கவில்லை, வெளிப்படுத்தாமல் போன பிழை என்னுடையதுதான். அதனால் அதில் உனக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது. ஆனால், எனக்கு...
எனது ஆறாவது நூலும் வெளிவரப்போகின்றது. ஆகச் சிறந்த ஒரு நேர்மையாளரின் நூலுக்கு உரை எழுதியிருக்கிறேன். நீ இருக்கும் போதே இவையெல்லாம் நடந்திருந்தால் மகிழ்ந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உன் மனப்பாங்கை அப்படித்தான் நான் உணர்ந்திருக்கிறேன். உன் நண்பர்களும், சுற்றமும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னிடமிருந்து வெளிப்படும் கேள்விகள் அத்தனைக் கூர்மையானவை. எடுத்த சில முடிவுகள் கடினமானவை.
கல்லூரியிலும், விடுதியிலும்; நீ அறியாது உன் பெயரெழுதி உன் கையெழுத்தை இட்டபோதெல்லாம் உள்ளத்தின் ஓரத்தில் அச்சமும், மெல்லிய பதற்றத்தையும் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதோ நூலட்டையில் தந்தை என உனது பெயரைப் பார்க்கையில் பெருமிதம் கொள்கிறேன், உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிற மெல்லிய வருத்தத்தோடு...
01-11-2025
