Friday 19 October 2018

சில கேள்விகள்...

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று ஒரு தரப்பும், கூடாது என்று ஒரு தரப்பும் ( இதிலும் பெண்கள் இருக்கிறார்கள்) பேச ஆரம்பித்து அந்த அமைதியான மலை கலவர மலையாக மாறி இருக்கிறது.


இரு தரப்பிற்கும் சில கேள்விகள் இருக்கின்றன. ஒருவேளை இருவருக்கும் பொதுவானவையாகக் கூட இருக்கலாம்.அவற்றிலிருந்து கிளைக்கேள்விகள் பிறக்கும். எல்லாவற்றையும் பொறுமையாகப் படியுங்கள்.

1.எதனால் சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது? (பொதுக் கேள்வி)

விடை மாதவிடாய் எனச் சொல்வீர்களானால்,

இரு தரப்புக்கும் -- ஆயிரமாயிரம் கோயில்களில் ( மலைகளின் மேல் இருக்கும் கோயில்கள் உட்பட ) பெண்கள் நுழைய அனுமதி இருக்கும் போது இங்கு ஏன் மாதவிடாய் காரணமானது என சிந்தித்தீர்களா?

விடை பிரம்மச்சாரியம் என்று சொல்வீர்களானால்,

கூடாது என்போருக்கு - அனுமன் கோயில்களில் நுழைய எப்படி அனுமதி இருக்கிறது. அவரும் நித்திய பிரம்மச்சாரி தானே? பழனியில் ஆண்டியாக, பழமுதிர்சோலையில் சிறுவனாக, திருப்பரங்குன்றில் மணக்கோலத்தில் என காட்சிதரும் முருகனை பிரம்மச்சாரி என்று சொல்வதில்லை. குருவாயூரில் குழந்தையாக இருக்கும் கண்ணன் இன்னொரு இடத்தில் ருக்குமணியை மணம் செய்த கோலத்தில் இருக்கிறார். ஆதலால் கண்ணனை பிரம்மச்சாரி என்று சொல்வதில்லை ஆனால், ஆரியங்காவில் மணக்கோலத்தில் இருகிறார் ஐயப்பன். அவரை மட்டும் எப்படி பிரம்மச்சாரி என்கிறோம் என சிந்தித்தீர்களா? முருகன், கண்ணன் அல்லது ஐயப்பன் இதில் ஒன்று தானே தருக்க ரீதியாக சரியாக இருக்க முடியும்.

வேண்டும் என்போருக்கு - மேற்கண்ட கூற்றின் படி சபரிமலைக் கோயில் தனியானது என்பதற்கான தரவுகள் ஏதேனும் இருக்கக் கூடும் என்ற நோக்கில் சிந்தித்தீர்களா? பழங்குடிப் பண்பாட்டுக் கூறுகள், தொல்லியல் சான்றுகள் ஏதேனும் இருக்க வாய்ப்புண்டா?

பிரம்மச்சாரியத்தையும், மாதவிடாயையும் ஓரங்கட்டிவிட்டு அடுத்த காரணத்தை நோக்கி நகர்வோம். அனுமதி வேண்டும் என்போர் சொல்லும் பாதுகாப்பு பற்றிய காரணம்.

காடுகளுக்குள் அன்றைய கால கட்டத்தில் போக்குவரத்து வசதி குறைவும், பாது காப்புக் குறைவுமே பெண்களை அனுமதிக்காததற்குக் காரணம். இப்பொழுதுதான் வளர்ச்சியடைந்து விட்டோமே, போகுவரத்து எளிதாகிவிட்டதே அதனால் பெண்களை அனுமதிக்கலாம் என்கிறார்கள் முதல் தரப்பினர்.

பல்லாயிரம் ஆண்டுகளாகக் காடுகளிலும் மலைகளிலும் தான் விலங்குகளோடு மனிதனும் பிறந்து வாழ்ந்து மடிந்திருக்கின்றான். இன்றும் கூட ஊருக்குள் யானை, சிறுத்தை போன்றவை எளிதில் நுழைந்து விடக்கூடிய இடத்தில் மக்கள் வாழ்கிறார்கள். மலைவாழ் பழங்குடிகள் இன்னும் அதுபோன்ற ஏராளமான ஊர்களில் வாழ்கிறார்கள். இடுக்கி, பத்தனம் திட்டா மாவட்டங்களில் ஏராளமான குடியிருப்புகள் காடுகளில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் பாதுகாப்பு, போக்குவரத்து போன்றவை ஆயிரம் ஆன்டுகளுக்கு முன்பாக தடைக்கான பெரிய காரணமாக இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

கூடாது என்போருக்கு - 41 நாள் பிரம்மச்சாரிய விரதம் என்று எடுத்துக் கொண்டால், கோயில் எல்லா மாதங்களிலும் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும். 41 நாட்கள் விரதம் இருப்பவர் மட்டுமே பூசை செய்ய முடியும் என்பது விதி என்றால், வைகாசி முதல் நாள் பூசை செய்பவர் பங்குனி 18 அல்லது 19 ம் தேதி முதல் விரதம் தொடங்கியிருப்பார் தானே?  இடையே வரும் சித்திரை முதல் நாள் பூசை யார் செய்வார்கள். சபரிமலை விதிப்படி ஒரு தலைமை பூசாரியே ஆண்டுமுழுவதும் பூசை செய்யவேண்டும். அப்படிப் பார்த்தால் அந்த தலைமை பூசாரி ஆண்டு முழுவதும் ஒரு நாள் கூட விட்டுவிடாமல் பிரம்மச்சாரிய விரதம் இருக்க வேண்டும். கோயிலின் மற்ற பணியாளர்களுக்கும் இதுவே நிலைமை. இவையெல்லாம் நடக்கிறதா? இயலுமா என சிந்தனை செய்தோமா?

அனுமதி வேண்டும் என்போருக்கு - உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமல் படுத்துவதே சரி என்றால் முல்லைப் பெரியாறு, காவிரி தீர்ப்புகளில் உங்கள் நிலைப்பாடென்ன?

????
என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
19/10/2018

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்