Thursday 20 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 6

 

வீரகேரளப்பனேரி


பாடல் 6: வீரகேரளன் குளம் அமைத்தது

சிறிய கோயிலை விரிவுபடுத்தி பெரிய கோயிலாக சிறப்பான வடிவமைப்புடன் மற்றியமைத்த மன்னன் வீர கேரளன், நீரின்றி அமையாது உலகு என்ற குறளின் அறமொழிக்கேற்ப கோயிலின் அருகே பெரிய ஏரி ஒன்றையும் வெட்டினான். தாடகை மலையிலிருந்து விழும் நீரைத் தேக்கும் விதமாக ஒருபுறம் கரையுயர்த்தி அமைக்கப்பட்டது அது.

இந்த ஏரிதான் மேற்கே பழையாறு வரை பரந்து கிடக்கும் வயல்வெளிகளின் முகாமையான நீராதாரம். கோடையிலும் வற்றாத குளம் இது. இதனால் தாழக்குடி மேலும் வளமும் சிறப்பும் கொண்டது. இரண்டு “பூ” வேளாண்மை செழிக்க குளம் வகை செய்தது. அந்த நன்றிப் பெருக்கால் இந்த ஏரி “வீரகேரளப்பனேரி” என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

 பொருள் விளக்கம்:

அறுவாள் - அறுக்கும் வாள். (வழமையாக நெல் அறுக்க “அரிவாள்” பயன்படுத்துவதுண்டு. பயிரின் திண்மையையும், செழுமையையும் காட்ட “அறுவாள்” என்று எடுத்தாளப்பட்டிருக்கிறது.)

உறுவழி - சிறந்த வழி

 பாடல் 6: வீரகேரளன் குளம் அமைத்தது

அறநூல் குறளும் சிறப்பு டனோதும்

நறுநீர்க் குளமும் புறத்திற் பெருக்கி

அறுவாள் வளையும் நறுநெல் செழிக்க

உறுவழி கண்டுயர்ந் தான்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்