Sunday 23 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 9

 

திருக்கல்யாணம் : 22-01-2022 சனிக்கிழமை

பாடல் 9 : திருக்கல்யாணம் விளக்கம்

ஏராளமான சிவன்கோயில்களில் திருக்கல்யாண விழா நடைபெறுவதைப் போலவே இங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், மிகச் சிறிய அளவிலேயே நடைபெற்றிருக்கிறது.

சேந்தநாதன் கோயிலில் தேவரடியாராக இருந்த காளியம்மை என்பார் கி.பி. 1756ல் திருவாங்கூர் மன்னரிடம் தன்னுடைய சொத்துகளிலிருந்து 13 ஏக்கர் நன்செய் நிலத்தை தாழக்குடி சேந்தநாதன் அழகம்மை திருக்கல்யாணத்திற்காக எழுதிக் கொடுத்தார். (காவிரிக்கரை போல் அல்ல, நாஞ்சிநாட்டில் 13 ஏக்கர் என்பது அன்றைய காலகட்டத்தில் பெருஞ்சொத்து.)

அதைத் தொடர்ந்து திருப்பதிசாரம் போற்றிமார் மடப்பாட்டுக் கச்சேரி யிலிருந்து ஆண்டுதோறும் தை மாதத்தில் திருக்கல்யாணம் நடத்தும் ஏற்பாட்டை மன்னர் செய்தார். அதன்படி ஐந்து நாட்கள் திருமண விழா வெகு விமரிசையாக நடந்துவருகிறது. ஊர் முழுக்க வடை பாயாசங்களுடன் சோறிட்டு, அந்தப் பகுதியிலேயே சிறப்பானதொரு திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் திருக்கல்யாணம் நேற்று 22-01-2022 சனிக்கிழமை, சிறப்பாக நடைபெற்றது.

ஆடலிலும் பாடலிலும் சிறந்த “ராயர்பட்டம் பெற்ற காளியம்மை விட்டுக் கொடுத்த சொத்தின் வருமானத்திலிருந்து அழகம்மை, சேந்தநாதன் திருமணத் திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேவரடியார்கள் கோயில்களுக்கு நிவந்தம் கொடுத்த நிகழ்வுகள் பலவுண்டு. தாழக்குடியிலும் அதற்கொரு பெருஞ்சான்று தைமாதம் நடைபெறும் திருக்கல்யாணமும் ஐந்து நாட்கள் பெருவிருந்தும். இதற்கான ஆவணங்கள் உள்ளன.

தாழக்குடி ஊர் உள்ளவரை காளியம்மை பெயர் சிறப்புற விளங்கட்டும்.

 

சொற்பொருள்:

மாதேவன்  - சிவன்

மன்றல்      - திருமணம்

விழவு        - விழா

தன்வழி     - தானே விரும்பி

கொள் புகழ் - கொண்ட புகழ்

 

பாடல் 9 திருக்கல்யாணம்


மன்னும் அழகம்மை மாதேவன் சேந்தநாதன்

மன்றல் விழவிற்கு மாதரசி காளியம்மை

தன்வழி யீந்தநிலம் தாழைநக ருள்ளவரை

பெண்ணவர் கொள்புக ழாம்.

 



அழகம்மைக் கோவில் முன்மண்டபம்

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்