Monday 17 January 2022

நானும் கேக்குறேன்


 

இரவு மணி ஒன்பது.

அம்மாவிடம் தொலைபேசியில் பேசிமுடித்தவுடன் இதை எழுதத் தொடங்குகிறேன்.

அம்மா திருமணமாகி வந்து அறுபதாண்டுகள் ஆகிறது. அப்பா 2018 ல் மறைந்த பின் மெல்ல மெல்ல நினைவுகளுக்குள் வாழத் தொடங்கினார் அம்மா. தன் தாய்வழி தந்தைவழி சொந்தங்கள் பலரது வாழ்வோடு மிகுதியாகக் கலந்துறாவாட இயலாத வாழ்க்கை முறையிலிருந்து வெளிவந்த போது, அவர்களில் பெரும்பாலானோர் மறைந்துவிட்டிருந்தார்கள். இது அம்மாவின் வயதொத்த பெண்களில் பெரும்பாலானோருக்கு நிகழ்ந்த துயரம் தான்.

நேற்று அம்மாவின் உறவில் ஒரு இணையர் மரணம். ஊரில் ஒரு பெண்மணி மரணம். இரண்டுமே அம்மாவை நிறைய பாதித்திருப்பதாக உணர்கிறேன். 

முதலாவது மிகுதியாகக் கலந்துறவாடியிராத உறவு. இயலாமையில் எழுந்த துக்கம்.

இரண்டாவது... அப்பாவின் நண்பரின் துணைவியார். 

அப்பா ஏற்பாடு செய்து நின்று நடத்திய திருமணங்களில் முகாமையானவை அவரது நண்பர்களுக்குச் செய்துவைத்த திருமணங்கள். வேட்டி சேலை வாங்குவது தொடங்கி அவர்கள் மணம் முடித்து வாழ்வதற்குத் துணைசெய்யும் மாடு கன்று வரை ஏற்பாடு செய்து, பாட்டத்திற்கு வயல்களையும் ஏற்பாடு செய்து, அப்பா வாழ்ந்த வாழ்க்கையின் தடங்களாய் அம்மா பார்த்துக் கொண்டிருந்த, அம்மாவிலும் இளையவர்கள்  ஒவ்வொருவராய் மறைந்து கொண்டிருக்கிறார்கள். 

"அம்மா.. நாந்தான் பேசுறேன்... படுத்திட்டியா?"

"இல்ல மக்கா.. சாப்பிட்டுட்டு ஒம்போது மணி வரைக்கும் இங்ஙன இருப்பேன். அப்புறம் போயி படுப்பேன். ஆனாலும் உடனே உறக்கம் வராது. ஒவ்வொண்ணையா நெனச்சுகிட்டு கெடப்பேன்..." 

அம்மா மெல்ல நினைவுகளுக்குள் நடக்கிறாள். கொஞ்சம் திருப்புவோம் என்ற எண்ணத்தில்... "வேற என்ன விசேசம்மா"

"ம்.. என்ன விசேசம். கோசண்னனுக்கு பொண்டாட்டி செத்துபோனா. ஒனக்குத் தெரியுமா?"

"ஆமா நேத்தே கோசுபாட்டாக்கு மூத்த மகன் போட்டிருந்தான்"

"போன்ல போட்டிருந்தானா?"

"ஆமாம்மா. நல்லாதான் இருந்தா அந்த ஆச்சி.. என்ன திடீர்னு?"

"சாய்ங்காலம் ஆத்துல போயி குளிச்சிட்டு வீட்டுக்கு வந்து துணி மாத்திருக்கா. என்னவோ செய்யுதுன்னு சொல்லிட்டு கட்டில்ல படுத்திருக்கா. ஒடனே ஆசுத்திரிக்கு கொண்டுபோயிருக்காங்க. போற வழிலேயே முடிஞ்சிருச்சு."

"ம்.."

"நான் கல்யாணம் கழிஞ்சு வந்த பொறவுதான், கோசண்ணன் கல்யாணம். அப்பாதான் கூடமாட எல்லாம் செய்தா. நல்ல உழைப்பாளி அவ. மாட்டையெல்லாம் அப்படி பாத்துக்குவா."

"அப்படியா?"

"ஆமா. அவ்வொளுக்கும் பால் மாடெல்லாம் உண்டு. பால் யாவாரமும் உண்டு. நம்ம நடய கடந்து போற சமயத்துல எல்லாம் நின்னு பாடு பேசிக்கிட்டுதான் போவா "

மேலே கண்ட உரையாடல்களில் பெரும் பகுதி ஏற்கனவே பலமுறை நிகழ்ந்ததுதான். ஆனாலும் முதன்முறை போலக் கேட்டுக்கொண்டும் வினாவெழுப்பிக்கொண்டும் இருக்கிறேன். 

 "ம்.. நல்ல சாக்காலம் அந்த ஆச்சிக்கு"

"நானும் கேக்குறேன் எனக்கு வரமாட்டேங்குதே" என்றார் அம்மா பட்டென்று. 

பொட்டில் அறைந்தது போல் இருந்தது எனக்கு. நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதோ?  நகைச்சுவையும் மனவுறுதியும் மிகுந்தவள் அம்மா. பேச்சில் முக்கால் பகுதி சிரிப்புகளாகவே கடக்கும். அத்தனை எளிதாகக் கலங்கிவிடுபவள் இல்லை. அந்த நினைப்பிலேயே நான் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். முதுமையும், நட்புகள், உறவுகள்  மறைவும் உறங்காத இரவுகளில் அவளோடு பேசுவதை அவள் மட்டுமே அறிந்திருப்பாள். அதன் தாக்கம் இப்படியாக அவளை மாற்றியிருக்கிறது.

"கேட்ட உடன கிடைக்கிறதுக்கு அது என்ன கடைல விக்கிற சாமானமா, அதுவா தானம்மா வரணும்..."

"ம்.. அதான் பலவாக்குல யோசிச்சிட்டே படுத்து கெடப்பேன். எப்ப உறக்கம் வரும்னு தெரியாது. சரி நீயும் போய் சாப்பிடு. நான் படுக்கிறேன்."

"சரிம்மா... அப்ப வச்சிரட்டா?"

"சரி. கூப்பிடு என்னா?"

"சரிம்மா..."

இன்றிரவு நிம்மதியாக உறங்கியிருப்பாளா? இல்லை சிந்தனை வலுத்திருக்குமா?

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்