Tuesday 15 November 2022

நூல் மதிப்புரை - புலவர் ச.ந.இளங்குமரன்மதிப்புரை வழங்கியவர் அன்புக்கினிய புலவர்  ச.ந.இளங்குமரன், தேனி.


நூல் : பல்லாயிரங் காலத்துப் பயிர்.

நூலாசிரியர் : சிராப்பள்ளி மாதேவன்

வெளியீடு : பாவாணந்தம் வெளியீட்டகம், திருச்சி.

தொடர்பு எண்: 94428 01889

விலை : 40 உரூ

திருச்சி மதிப்புமிகு ஐயா ச.முத்துக்குமாரசாமி - கவிதா இணையரின் மகள் மு.ஜானகி அவர்களுக்கும், புதுச்சேரி மதிப்புமிகு ஐயா க.இராமலிங்கம் - தேமொழி இணையரின் மகன் இரா.தமிழமுதன் அவர்களுக்கும் நடந்த திருமண விழா தொடர்பாக அச்சிடப்பட்ட நூல் "பல்லாயிரம் காலத்துப்பயிர்" என்னும் நூல். இந்நூல்  32 பக்கங்களைக் கொண்டது.

காலத்தின் எல்லைக்கல், மாற்றம், வேட்டை, குறிஞ்சிக் காதல், பொய்யும் வழுவும், முல்லையில் நாள்செய்தல், மருத மணம், இழையணிந்த மருதம், வெளியே வாருங்கள் உள்ளிட்ட பத்துத் தலைப்புகளை உள்ளடக்கியது.

நூல் முழுமைக்கும் பிற சொல் கலவாத அழகுத்தமிழில் நெய்யப்பட்டிருக்கிறது. மனிதன் தோன்றி

வாழத்தொடங்கி தன்னுடைய வாழ்க்கையை காட்டு விலங்காண்டித் தனமான வாழ்க்கையில் இருந்து மாற்றி நாகரீக வாழ்க்கையை முறைப் படுத்திக் கொள்வதற்கு அவன் கடந்து வந்த பாதைகளில் இன்றும் காரணங்களாக இருந்து வருகின்ற நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களில்  வாழ்ந்த மக்களின் வாழ்வியல்  கூறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தொடக்க நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் உணர்வு, காமத்தைப் பெருக்கி இயல்பாக கணவன்-மனைவியாக வாழ்ந்திருக்கின்றனர். இப்படியான வாழ்விற்கு அக்காலத்தில் எந்தத் தடையும் இல்லை. தொடர்ச்சியான வாழ்வியல் மாற்றத்தில் பெண் வஞ்சிக்கப்பட்டு இருக்க வேண்டும்.  அதாவது பெற்றோருக்கோ, மற்றவருக்கோ தெரியாமல் காதல் செய்து, பாலியல்  உணர்வுகளால் தூண்டப்பட்டு,  அதனால் பெண்ணின் உடலில் உண்டான மாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆண் காரணம் இல்லை எனச் சொல்லியிருக்க வேண்டும். அப்படியான சூழலிலேயே ஊர் மக்கள் எல்லாம் கூடி ஆண் பெண் இருவருக்குமான வாழ்வியல் தொடர்பான நாள் குறித்து மணம் செய்கின்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை முல்லை நிலத்துச் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். 

இயல்பான காதலுக்கு 

"யாயும் ஞாயும் யாராகியரோ" என்ற குறுந்தொகைப் பாடலும், திருமண நாள் குறித்தல் தொடர்பாக "பெருமலைச் சிலம்பின் வேட்டன் போகிய" என்று அகநானூற்றில் 282 வது பாடலும் சான்றாகக் காட்டப் பட்டிருக்கிறது. 

முல்லை நிலத்தில் முறைப்படுத்தப்பட்ட தமிழர் திருமணம் மருதத்தில் செழித்தது. முழுநிலா நாளில், மணல்வெளியில் வேயப்பட்டிருந்த பந்தலின் கீழ் நன்மக்களைப் பெற்ற தாய்மார்கள் முன்நின்று திருமனத்தை நடத்தியிருக்கின்றர். திருமணத்திற்கு வந்தவர்களுக்குப் பொங்கலும், ஊன்சோறும் பரிமாறப்பட்ட செய்திகளையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அருமையாக விளக்கியுள்ளார்.

இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம் தமிழர்களின் திருமண முறையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதாகும். மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்று நமக்கு கேள்வி எழலாம். அந்த கேள்விக்கான பதிலாக நாம் கண்முன் நிகழ்கின்ற பல்வேறு நிகழ்வுகள் இருக்கின்றன. அதாவது தற்பொழுது நடைபெற்று வரும் பெரும்பாலான திருமணங்கள் பழந்தமிழர் முறையை பின்பற்றி நடக்க வில்லை. மாறாக வேதமந்திரங்கள் என்ற பெயரில் புரியாத மொழியில் இந்த திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும் பழந்தமிழரின் திருமண முறை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற நிலையில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார், மயிலை சீனி வேங்கடசாமி, அப்பாத்துரையார் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களின் துணையோடு, மூத்த அறிஞர்களின் வழியில் பல்லாயிரம் காலத்துப் பயிர் என்னும் இந்நூலைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார் கவிஞர் சிராப்பள்ளி மாதேவன். 

குறிப்பாக இந்த நூல் ஒவ்வொரு நிலத்திலும் நடந்து வந்த களவியல், கற்பியல் தொடர்பான தமிழரின் வாழ்வியல் முறைகளை சுருக்கமாக நமக்கு விளக்கிச் செல்கிறது.


இனிய அன்புடன்,

புலவர் ச.ந.இளங்குமரன்,

நிறுவனர், 

வையைத் தமிழ்ச்சங்கம்,

தேனி.

& ஒருங்கிணைப்பாளர், வாசிக்கலாம் வாங்க, தேனி.
மதிப்புரை செய்து வாட்சப் புலனத்தில் அனுப்பிவைத்த வையைத் தமிழ் சங்கம்  புலவர் ச.ந.இளங்குமரன் அவர்களுக்கு நன்றி.

பாவாணந்தம் வெளியீட்டகம்

04-01-2021

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்