Wednesday 16 November 2022

அமைதி

 


மாலையில் இரத்த அழுத்தம் 162/101 இருந்தது. மனம்தான் காரணம் என்பது வெள்ளிடைமலை. நாளை பொழுது விடிவதற்குள், உறக்கம் உடலில் செயலாற்றி காலையில் விழிக்கும்போது இயல்பாகவே அழுத்தம் குறைந்துவிடும். அதற்குள் இப்படிச் செய்துபார்க்கலாமே என்று தோன்றியது.


என் வானிலே ஒரே வெண்ணிலா, பூங்காற்று புதிரானது, பொத்திவச்ச மல்லிக மொட்டு, ஆனந்தராகம் கேட்கும் காலம், கண்ணே கலைமானே, ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே, ஆலப்போல் வேலப்போல், ஆகாய வெண்ணிலாவே, சின்னச்சின்ன வண்ணக்குயில், எந்தன் நெஞ்சில் நீங்காத, என்ன சத்தம் இந்த நேரம்....

ஏறத்தாழ பத்துப் பாடல்கள் (நாற்பது நிமிடங்கள்) கடந்தபோது 148/91 ஆக மாறியிருந்தது அழுத்தம். இப்பொழுது அது இயல்புக்கு வந்திருக்கும்.

இது உங்களுக்கு :
உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேளுங்கள். பாடலைக் கேட்கும்போது உள்ளத்தால் அல்லது உடன் பாடுவது மூலமாக அதன் ஒவ்வொரு நொடியையும் தொடருங்கள். இசை நுணுக்கம் பற்றி அறியாவிட்டாலும் கூட பாடலின் இசைக் கூறுகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். (எனக்கு சுரங்கள் ஏழு உண்டு என்பதைத் தாண்டி இசையில் வேறெதுவும் தெரியாது). பாடலின் இடையே உள்ள இசைத் துணுக்குகளின் ஏற்ற இறக்கங்களை பரவி அனுபவியுங்கள். பாடல்களில் உள்ள சொற்களை ஆழ உணருங்கள். உள்ளுக்குள் பாடகர்களின் குரல் வித்தையைக் கொண்டாடுங்கள். கண்டிப்பாக அமைதி கிடைக்கும்.

இது இளையராசாவுக்கு :
என்னதான் உங்களோடு கருத்துகளில் ஒப்ப முடியவில்லை என்றாலும், சுண்டியிழுக்கிற, கட்டிப்போடுகிற, சிறகு விரித்துப் பறக்கச் செய்கிற, உள்ளத்தை ஆற்றுகிற உயர்ந்த இசைக்குச் சொந்தக்காரன் நீர் என்பதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும், இசைக்கு மொழி உண்டு. மொழி உண்டு. மொழி உண்டு என உரக்கச் சொல்லிக்கொள்கிறேன் ஐயா, எங்கள் ராசையா.

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
16-11-2022
===========================

2 comments:

  1. பல கட்டங்களில் தாங்கள் கூறியதை நானும் அனுபவித்தது உண்டு. மனதிற்கு பிடித்த பாடல்கள் மற்றும் சிறந்த நகைச்சுவைகள் அழுத்தங்களை குறைத்தது உண்டு

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்