Tuesday 15 November 2022

முனைவர் கா.ஆபத்துக் காத்த பிள்ளை - கடிதம்


செவ்விலக்கியங்களின் மீதான தீராத காதல் என் கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தாக்கத்தோடு எழுதப்பெற்ற எனது கவிதைத் தொகுப்பொன்றை, நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியின் மேனாள் தலைவர், மறைந்த திரு பெ.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் அச்சிட்டு வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில், ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியின் மேனாள் தமிழ்த் துறைத் தலைவரும், கல்லூரி முதல்வருமான முனைவர் திரு கா.ஆபத்துக் காத்தபிள்ளை அவர்கள் சிறப்புரையாற்றினார். பேச்சின் நடுவே கவிதை நாடகங்களை இயற்றுங்கள் என்று அறிவுறுத்தினார். அந்த எண்ணம் மனதில் பதிந்துவிட்டது.

செவ்விலக்கியங்களில் தோய்ந்து பின் நாடகம் எழுதலாம் என்ற திட்டம், கொரோனா வீட்டக்கிய காலத்தில் நண்பர்களோடு இணையவழியில் செவ்விலக்கியம் பேசுவதாகத் தொடங்கியது. மெல்ல மெல்ல நண்பர் திரு ச. முத்துக்குமாரசாமியின் தூண்டுதலால் பத்துப்பாட்டின் கதையுரைகளை உருவாக்கும் திட்டமாக விரிவடைந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பொருநராற்றுப்படை கதையுரை, முற்றாக் காதல், மணற்கேணி- வள்ளுவர் சொல்லாடல், பல்லாயிரங்காலத்துப் பயிர் என்ற நூற்கள் வெளியானது.

கடந்த மே மாதம் முனைவர் கா.ஆபத்துக் காத்த பிள்ளை அவர்களுக்கு நான்கு நூல்களையும் பாவாணந்தம் வெளியீட்டக உரிமையாளர் திரு ச.முத்துக்குமாரசாமி அனுப்பியிருந்தார்.



தமது நூல் வெளிட்டுப் பணிகள் நிறைவடைந்த பின் நூற்களைப் படித்துவிட்டு ஐயா எழுதிய கடிதம் வந்துசேர்ந்தது.

எமது நோக்கத்தை சரியாக அணுகுகிறோம் என்பது ஐயாவின் கடிதத்திலிருந்து புரிந்தது.

ஐயாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஊக்கமளித்தார். சிறந்த பேச்சாளரும், நூற்களைப் படைத்த, தமிழில் துறைபோகிய, தமிழ்த்துறைத் தலைவரிடம் இருந்து வாழ்த்தும் பாராட்டும் பெற்றது பெரும் பேறு.

குறள் விரிவுரையை இன்னும் ஆழப்படுத்துங்கள் என்றார்.
"தொட்டனைத்தூறும் - என்ற குறள் விரிவுரையில் 'கொஞ்சமேனும் தண்ணீர் உள்ள கேணியைத் தோண்டினால்தான் நீர் பெருகும். நீரற்றக் கேணியைத் தோண்டுவது பயனற்றது" என்றும் சேர்த்திருக்கலாம் என்றார். அவரது பார்வை வியப்பளித்தது. இன்னும் நுணுகிப் பார்க்க வேண்டிய ஆவலைத் தூண்டியது.

தங்களைப்போன்ற அறிஞர்களின் அறிவுறுத்தல்களும், பாராட்டும், வாழ்த்தும் எமக்கு மிக்க ஊக்கமளிப்பவை. தொடர்ந்து வேலை செய்ய உயிராற்றல் தருபவை.

மிக்க நன்றி ஐயா.
==========================
என்றென்றும் அன்புடன்
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
02-08-2022
===========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்