Wednesday 30 November 2022

அனல் மேலே...



அண்மையில் இணையத் திரைத் தளம் (OTT) ஒன்றில் "அனல் மேலே பனித்துளி" திரைப்படம் பார்த்தேன். சிறப்பான படம்தான். துளியும் ஐயமில்லை. பெரும்பாலும் திரையில் பேசப்படாத செய்தியொன்றை, பெண்களின் மீது இயல்பாக நடத்தப்பெறும் பேரவலமொன்றைக் களமாகக் கொண்டு, இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக பெருமுனைப்புடன் எடுக்கப்பட்டப் படம் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது. இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.

படம் பார்ப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன், இயக்குநர் கெய்சர் ஆனந்து, நடிகை ஆண்டிரியா போன்றோர் கலந்துகொண்ட இந்தத் திரைப்படம் குறித்தான ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு கலந்துரையாடலாக இருந்தது அது. படம் குறித்த, காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், படப்பிடிப்பின் போது நடிகர்களின் மனநிலை, ஆண்டிரியாவுக்கு வந்த மன உளைச்சல் என ஏராளமான செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதுதான் பிரச்சனையே.

அன்புக்குரிய திரைப் படைப்பாளிகளே, 

திரைப்படம் இன்றைய காலத்தின் இன்னொரு இலக்கிய வடிவம் என்று பலமுறை பேசவும் எழுதவும் செய்தவன் / செய்கிறவன் என்ற முறையில் எனது வேண்டுகோள் இது.

அருள் கூர்ந்து உங்கள் ஆக்கங்கள் குறித்தான அத்தனைச் செய்திகளையும் படம் வெளிவரும் முன்போ அல்லது வெளிவந்த ஓரிரு நாட்களிலேயோ பொதுவில் பகிராதீர்கள். உங்கள் சிந்தனைக்கு, உழைப்பிற்கு வலு சேர்க்கும் என்ற எண்ணத்தில்தான் அப்படிச் செய்கிறீர்கள் என்பதும், பெரு வணிகமாகிவிட்ட திரைத்துறையில் அது தேவையாகிறது என்பதும் புரிகிறது. ஆனால், பல வேளைகளில் அப்படி நிகழவில்லை என்பதே எதார்த்தம். 

"அனல் மேலே பனித்துளி"க்கும் அப்படி நடந்திருக்கிறது என நினைக்கிறேன். படம் குறித்த அந்த உரையாடலில் உணர்வுகளை விரிவாகப் பேசிவிட்டதன் விளைவு திரையில் அந்தக் காட்சிகள் கொடுத்த உணர்வுகள் குறைந்துவிட்டது என்பது எதார்த்தம். மிக்க அழுத்தம் தரும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்த சில முகாமையான காட்சிகள், பார்வையாளர்களிடையே அத்தனை அடர்த்தியான உணர்வலைகளை எழுப்பவில்லை என்பது வெளிப்படை.

படத்தில் ஆகச் சிறந்த காட்சியென இயக்குநர் கெய்சர் ஆனந்தும், தயாரிப்பாளர் வெற்றிமாறனும் எண்ணிச் சொன்ன காட்சி; பெண்ணின் மீப்பெரு அவல ஓலத்தை வெளிப்படுத்திய ஆண்டிரியாவின் சிறப்பான நடிப்பையும் காட்சியமைப்பையும் சேர்த்தும் கூட, நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கான ஒரு நொடி மனவழுத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்தாமல் பல படங்களில் இடம் பெறும் ஒரு அவலக் காட்சி போலவே கடந்துசென்றது என்பதைத் (எனக்கு மட்டுமல்ல, பலரிடம் கேட்டதில் அவர்களுக்கும் நிகழ்ந்தது என்பதையும் சேர்த்துக் கொண்டு) திரைப்படத்தை விரும்பும் ஒரு பார்வையாளனாக பதிவு செய்கிறேன். 

இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். இருள் நிறைந்த, பெருந்திரை அரங்குகள் இயல்பாகவே பார்வையாளரது கண்களை படத்தின் மீது கவனப்படுத்தும். ஆனால், வீடுகளில், வெளிச்சத்தில், பொதுத்தன்மையற்றச் சூழலில் பார்க்கப்படும் இணையத் திரைத்தளங்கள் அப்படிச் செய்ய இயலாது என்பதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். அதன் மீது இன்னும் பெருங்கவனம் கொள்ளுங்கள். புறச்சூழல்களின் நடுவே பார்க்கப்படும் காட்சிகள், அரங்குகளில் பார்க்கப்படும் காட்சிகள் இரண்டும் பார்வையாளரது உள்ளத்தில் ஏற்படுத்தும் உணர்வுகளில் பெரும் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக BEAST திரைப்படம் பெருந்திரையை விட இணையத் திரைத் தளத்தில் பார்க்கும்படியாக இருந்தது என்பது பலரது நிலைப்பாடு.

அடுத்து காட்சிகளின் உணர்வுகளோடு பின்னிக்கிடக்கும் இசை. உணர்வுகளை வெளிப்படுத்த இசையமைப்பாளர்கள் உழைத்து உருவாக்கும் சிறந்த இசைக்கோர்வைகள் வீடுகளில் பலவிதமாக செவிக்கொள்ளப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஒலியமைப்பே இதற்குக் காரணம். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

அடுத்து எழுத்துக்கள். படத்தின் தலைப்பு மற்றும் கலைஞர்களின் பெயர்கள். கீழே காணப்பெறும் மொழிமாற்றம் செய்யப்பட்ட உரையாடல் படிவங்கள். இவை பெரும் பிரச்சனை இல்லையென்றாலும் கூட சில நேரங்களில் உணர்வுகளில் ஒன்றாமல் போய்விடக்கூடும்.

இணையத் திரைத் தளம் (OTT) தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்ட நிலையில், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையரங்குகளை விட இவற்றில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் சிறந்த படைப்புக்களை வெளியிடும் முன் அவற்றிற்கான மிகச் சரியான ஊடகம் எதுவென்பதைத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கூடிப்பேசி முடிவு செய்யுங்கள். பெருந்திரைக்கென்று உருவாக்கப்பட்டு பல காரணங்களால் இணையத் திரைக்கு வரும் உங்கள் படைப்புகளில் தேவையான மாற்றங்களைச் (இயலுமெனில்) செய்துவிடுங்கள்.

பெருந்திரைகளை விட இந்தத் தளங்கள் படைப்பாளிகளுக்குச் சவாலானதாக இருக்கும் என்றே கருதுகிறேன். முதலிலேயே தொகை பெறப்பட்டு விடப்பட்டதால் வணிகத்தில் தொல்லைகள் குறைவாக இருக்கலாம். ஆனால், ஒரு படைப்பாளியாக மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டுமென்றால், உங்கள் ஆக்கத் திறனை பார்வையாளர்கள் உணர வேண்டுமென்றால் மிக்க கவனம் கொள்ளுங்கள். இது காலத்தின் / தொழில் நுட்பத்தின் கட்டாயம்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்