Thursday 17 November 2022

கப்பலோட்டிய கதை - மறைந்து கிடந்த வரலாறு


பேருந்தின் குலுக்கலில் மெல்லக் கண் விழிக்கிறேன். மங்கலான ஒளியில் வீரநாராயணமங்கலத்துக் கல்பாலம் கடந்து போவதைக் கண்டேன். இன்னும் ஐந்து நிமிடங்கள்தான். பிறந்து, வளர்ந்து, பேசிச் சிரித்து, அழுது புரண்டு, ஆளாகி எழுந்த தாழாக்குடி வரப்போகிறது.

ஊருக்கு வந்து பல வருடங்கள் ஆயிற்று. நரை விழுந்து, பின் மண்டையில் மயிரெல்லாம் உதிர்ந்து, மீசையை மழித்துக்கொண்டு, மூக்கு நுனியில் தொங்கும் கண்ணாடியின் இடுக்குகளில் தெரியும் கண்களால் உருட்டி விழித்துக்கொண்டு இறங்கும் என்னை யாராவது அடையாளம் கண்டுகொள்வார்களா?

யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியவில்லை. பேருந்து பொதுக்குளத்தைத் தாண்டிச் செல்கிறது. எழுந்து பையைத் தோளில் மாட்டிக்கொண்டு  முன் வாயில் நோக்கி நடக்க எத்தனிக்கையில்,

"பாட்டோவ்... எங்க போறீரு. அடுத்த ஸ்டாப்புக்கு இன்னும் ரெம்பதூரம் கெடக்கு. அங்ஙன இரியும்" என்றார் நடத்துனர்.

"இது பொதுக்கொளத்தாங் கரை தானே?" பேசிப் பல வருடங்களாகிவிட்ட ஊர் வழக்கில் பேச முற்படுகிறது உள்ளம்.

"ஆமா. புதுக்கொளத்தாங்கர தான். ஒமக்கு எங்க எறங்கணும்?"

"பள்ளிக் கூடத்துக்கு அடுத்தது எறங்கணும்"

"பள்ளிக்குடமா?" அவர் குழப்பமடைவது தெரிந்தது. "இங்க பள்ளிக்குடமெல்லாம்  இல்லியே."

"உண்டுப்போ. அரசுப்பள்ளி. நான் இங்கதான் பனிரெண்டு வரைக்கும் படிச்சேன். கூட எவ்ளோ பேரு படிச்சாங்க தெரியுமா? ஆயிரம் பேரு படிச்ச எடம்பா. டக்குன்னு இல்லன்னு சொல்லிட்ட"

"பாட்டா இங்க வந்து ரெம்ப நாளாயிற்றோ? லேகை ஓர்ம இல்லியோ?"

"ஏம்போ.. வெளாடுக. பொறந்து வளந்த ஊருப்போ..." சொல்லும் போதே இன்னும் பள்ளிக்கூடம் வரவில்லை என்பதையும் அவதானிக்கிறேன். இதற்குள் வந்திருக்க வேண்டுமே. அடுத்தது கடைத்தெரு...  ஆனால் அரவமற்ற ஒரு சாலையில் பேருந்து சீராகச் சென்றுகொண்டிருக்கிறது. மெல்ல மனக்கலக்கம் வந்தது.

"பாட்டா விழுந்திராதீயும். சீட்ல இரியும்." இப்பொழுது அவரது பார்வை கொஞ்சம் மாறியிருந்தது. அதில் எச்சரிக்கை உணர்வும் தெரிந்தது. 

"அவ்வ்ளோ பெரீஇய ஊரு இங்க இருந்ததுப்போ. ஆயிரம் வீடுகளுக்கும் மேல உண்டு. எவ்வ்ளோ ஆளுக. ஊரம்மன் கோயிலு,  பால்பண்ண, பஞ்சாயத்து  ஆப்பீசு, எத்தன பலசரக்குக் கட, தேருமூடு, சந்தி...." சொல்லிக் கொண்டிருக்கும் போதே கழுத்து சூடாகித் தொண்டையை அடைக்கிறது. தண்ணீர்க் குப்பியை எடுக்க தோளில் தொங்கும் பைக்குள் கையை விடுகிறேன். தொடையின் பச்சைத் தசை கையில் உரசுவது உணர்ந்து கீழே பார்க்கிறேன். "ஐயோ... நான் அம்மணமாய் நிற்கிறேன்". 

"ஒண்ணுமே காணவில்லை" என்று உரக்கக் கத்துகிறேன்.

பட்பட்டென்று தோளில் யாரோ அடிக்கிறார்கள். 

"என்ன மக்கா ஒறக்கத்துல சத்தம் போடுக. கனவு கண்டியா?" 

கண்ணைக் கசக்கிவிட்டு எழுந்து சுற்று முற்றும் பார்க்கிறேன். அம்மா அருகில் நிற்கிறாள். தொலைவில் பள்ளத்தெரு அம்மன் கோவிலிலிருந்து 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்'களோடு இசைத்துக் கொண்டிருக்கிறார் டி.எம்.எசு. கோழிகள் வீடடைகின்றன. பக்கத்து வீட்டுக் காளைகளின் மணிச் சத்தம். அப்படா.. எல்லாம் இருக்கிறது என்ற மன அமைதி வந்தது.

கனவில் தொலைந்து போனதற்கே இத்தனைக் கலக்கம் என்றால், வரலாற்றில் யாராவது தொலைந்து போனால்? பெரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பிற்காலத் தலைமுறைக்குத் தெரியாமல் காணாது போனால்? அடிமை செய்து வைத்திருந்த அரசின் ஆணிவேரான வணிகத்தை அசைத்துக் காட்டி பொருளாதாரப் போர் நிகழ்த்திய முதல் களப்போராளியை, செத்துப் போவதற்குக் கூட வரிகட்டுகிற ஒரு தலைமுறை அறியாது போனால்  எத்தனை அவலம் அது?.

அந்த அவலத்தைக் கூட அறியாதும், அறிந்தும் அறியாதது போலவும் கடந்து போனவர் ஆயிரமாயிரம். வெகு சிலரே கனவிலிருந்து தட்டியெழுப்பும் கைகளாய் இந்தச் சமூகத்திற்கு உண்மையின் இருப்பைக் காட்ட முனைந்தார்கள். ஆனால், அது அத்தனை எளிதல்ல. முதன்முறை, பெருங்கடலின் நடுவே வழியறியாது, நீச்சலும் அறியாது தோணியில் செல்லும் ஒருவனுக்கு அடையாளம் சொல்லிக் கரை சேர்ப்பது போன்றது அந்தப் பணி.

ஆம். பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை எனும் மாமனிதரை வரலாற்றின் பூஞ்சை படிந்த பக்கங்களிலிருந்து வெளிக்கொணர்வது அத்தனை எளிதாய் இருக்கவில்லை. ம.பொ.சிவஞானம்,  இராமையாப்பிள்ளை, எசு.வேதமூர்த்தி முதலியார், எம்.கிருட்டினசாமி ஐயர், நா,இராசேந்திரன், என்.சம்பத், பெ.சு.மணி, ஆ.இரா.வேங்கடாசலபதி, மா.ரா.அரசு, வீ.அரசு, செ.திவான், நா.வானமாமலை, ஆ.சிவசுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், அ.சங்கர வள்ளிநாயகம், தி.லீலாவதி, வை.ஞானசேகரன் போன்றோர் பலவாறும் தேடியலைந்து பல தொகுப்புக்களை எழுதியிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் உள்வாங்கி அடிமனக் கலக்கமுற்று, அவற்றிலிருந்தே ஆற்றல் பெற்று, பேரவலம் ஒன்றைத் துடைத்தெறியக் கிளம்பியோர் இருவர். ஒருவர் நடமாடும் வ.உ.சி. நூலகம் என அழைக்கத் தகுந்த ஆய்வாளர் அரங்கையா முருகன். மற்றொருவர் "கப்பலோட்டிய கதை" எனும் சிறப்பு மிகுந்த இந்த நூலை ஆக்கிய ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்.

ஒரு தேர்ந்த திரைக்கதையாசிரியரின் ஆகச் சிறந்த திரைக்கதை போல நகர்கிறது நூல். சரியான இடத்தில் தொடங்குவதுதான் இதுபோன்ற நூற்களில் எழுத்தாளர் சந்திக்கும் சவால். அதை மிகச் சிறப்பாகக் கடந்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு பகுதியை முடிக்கும் போதும் அடுத்த பகுதிக்கான உந்துதல் நம்மை அறியாமலேயே நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அது தான் குருசாமி மயில்வாகனன் அவர்களின் எழுத்தோட்டச் சிறப்பு.

"தங்களை அடக்கி ஆள நினைக்கின்ற ஆட்சியாளர்களின் ஆதரவிலுள்ள முதலாளிகளை எதிர்த்து ஒரு கப்பல் கம்பெனியைத் தொடங்க எண்ணியதும்; அவ்வெண்ணத்திற்கு ஆதரவான மனநிலைக்கு சொந்த நாட்டு வணிகர்களை மாற்றியதும்; நாடு முழுவதும் பிரயாணம் செய்து மூலதனத்தைச் சேர்த்ததும்; மக்களின் ஆதரவில்லாமல் ஒரு சுதேசியக் கம்பெனி நடைபெற முடியாது எனக் கருதியதும்; அதனால், 'ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையுள்ள சகல சுதேச சகோதரர்களையும் பங்காளி'களையும் பங்குதாரர்களாகச் சேர்க்கும் வகையில் அக்கம்பெனியை உருவாக்கியதும்; 'கப்பல் வாங்க முடியவில்லையென்றால் கடலில் விழுந்து சாவேன்’ எனச் சூளுரைத்துப் புறப்பட்டதும்; ஐந்து மாதங்கள் பம்பாயில் தங்கிருந்து கப்பலை வாங்கி வந்ததும்; 34 வயதே நிரம்பிய ஒரு இளைஞனின் சாதனையென்பதை உங்களில் யாரேனும் ஒருவரால் மறுக்க முடியுமா?"

இந்த வரிகளைப் படித்தால் கண்டிப்பாக அந்த 34 வயது இளைஞரை மனம் தேட ஆரம்பிக்கும். தொடர்ந்து படிக்க, சிறு கல் புரண்டு ஒழுகத்தொடங்கி பெருங்கரை உடைக்கும் கண்மாய் நீர்போல ஆற்றொழுக்காய்ப் பெருகி, பெரியவரை மறைத்து நின்ற வரலாற்றின் நெடுஞ்சுவர்களைச் சாய்க்கும் ஆசிரியரது பேருழைப்பின் வெளிப்பாடாக ஊற்றெடுக்கும் எழுத்து நடை.

அழகான இந்த எழுத்துக்களினூடே நமக்குச் சில அதிர்ச்சிகளும் காத்திருக்கின்றன. வாக்கரசியல் பெருங்காற்றில் அடித்துச் செல்லப்பட்ட வரலாற்றின் சில பக்கங்களை, பள்ளத்தாக்குகளின் புதர் மறைவுகளில் கண்டெடுத்து புழுதி போக உதறுகிறபோது நம் முகத்தின் மீதும் தூசி படிகிறது. 

"1907 அக்டோபரில் தொடங்கிய 'கப்பலோட்டிய 'கதை' யானது, ஒருவேளை, 1908 மார்ச் மாதம் சிதம்பரம் கைது செய்யப்பட்டதுடன் தான் முடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு சிறை செல்வதற்கு முன்பாகவே அக்கதையானது முடிவை நோக்கி நகர ஆரம்பித்துவிடுகிறது. அதன்பிறகு அது ஒரு சுதேசியக் கப்பல் கம்பெனியாக அது நடக்கவில்லை. வெறும் கப்பல் கம்பனியாகவே நடந்தது. இந்த மாற்றங்களுக்கு வ.உ.சிதம்பரம் இல்லாததும் சுதேசியக் கம்பெனியில் இருந்த சில பங்காளிகளது விளையாடல்களும்தான் காரணம். கம்பெனியின் வீழ்ச்சியானது வ.உ.சிதம்பரம் விலகி ஒதுங்கிய 1907ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே தொடங்கிவிட்டது." என்ற வரிகள் கப்பல் கம்பெனியிலிருந்து வ.உ.சி.விலகிவிட்டார் என்ற அதிர்ச்சியை நமக்கு ஏற்படுத்துகிறது. ஆம். வ.உ.சி கப்பல் கம்பெனியில் இருந்து விலகுவதாகப் பதவி விலகல் கடிதம் கொடுத்தார்.

ஏன் அப்படிச் செய்தார்? அதன் பிறகு நடந்தது என்ன? என்ற கேள்விகளோடு விறு விறுவென வரலாற்றின் புதிர்களைச் சரியான சான்றுகளோடு விடுவிக்கிறார் ஆசிரியர்.

மறைக்கப்பட்ட வரலாற்றைப் பின் தொடர்ந்து கண்டறிவது மிகக் கடினமான ஒன்று. "நெருப்புக் கடலைக் கடந்துகொண்டே எழுதத் துடிக்கும் நாங்கள் படும்பாடு எங்களுக்குத்தான் தெரியுமய்யா. ஆனாலும் எழுதியே தீருவோம்." என்று வேறொரு பதிவில் தங்கள்  நிலைமை குறித்துக் கருத்திடுகிறார் ஆசிரியர். அதன் உண்மைத் தன்மை "கப்பலோட்டிய கதை" நெடுகிலும் காணக் கிடைக்கிறது. மகிழ்ச்சி, ஆழ்ந்த கவலை, சினம், கழிவிரக்கம், கையறுநிலை என நடுநிலை கொண்ட அவரது எழுத்து பீடு நடை போடுகிறது பாருங்கள்.

"பலபேர் பணம் போட்டார்கள். அதைக் கொண்டு போய்க் கப்பல் வாங்கி வந்தார் வ.உசி. ஆனால் 'கப்பலோட்டிய தமிழன்' என்று பெயரை அவருக்குக் கொடுத்துவிட்டனர். இது அடுத்தவன் காசில் கிடைத்த ஓசிப் புகழ் என இன்றும் (2020)கூட பழைய பங்காளிகளின் வாரிசுகளான பல அடி முட்டாள்கள் கூறி வருகின்றனர். சில கூமுட்டைகள் அதை உண்மை என நம்பவும் செய்கின்றனர்."

பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை இந்தத் தலைமுறையில் எல்லோரும் அறிந்த மனிதர், பெரும்பாலும் யாருமே அறிந்திராத தலைவர் என்பதை நூலின் ஒவ்வொரு பகுதியும் விளக்கிச் செல்கிறது. பல இடங்களில் படிப்பவர் உள்ளம் பெருவியப்பைச் சந்திக்கும். புதினம் போன்ற உணர்வைத் தருகின்ற போதும் இது சிறந்த ஒரு ஆய்வு நூல். இதற்குச் சமகால ஆய்வாளரும் படைப்பளியுமான முத்துநாகு அவர்களின் "நூலினை படித்த போது இவருக்கு ''ஆய்வு முன்னவர் (Doctor of letters)'' பட்டம் கொடுக்கலாம் எனத் தோன்றியது. இதை நான் சொல்லுவது மிகையானதல்ல." என்ற கூற்றே சான்று.

ஆம். ஆய்வு நோக்கிலான பெருந்தேடலும், கிடைத்தவற்றைச் சரியான படி அணுகி அதிலிருந்து அறியாத வரலாற்றின் தெளிவுகளைப் பெறுவதிலும், நடந்து முடிந்த உண்மைகளை அப்படியே எற்றுக்கொள்வதிலும், தரவுகளின் குறைபாட்டால் சில இடங்களை சரியானபடி தெளிவுபடுத்த இயலாததை ஒத்துக்கொள்வதிலும் தேர்ந்த ஆய்வாளராக தன்னை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். அதுமட்டுமின்றி இந்த நூலில் எழுத இயலாது என்று கூறி  அவர் விட்டுச் செல்கிற செய்திகளும் ஏராளம் உண்டு. தான் தேடிச் சேர்த்தத் தரவுகளின் நகல்களைப் பிற்சேர்கையாகக் கொடுத்திருப்பது ஆய்வின் சீரிய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

அது, பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை கப்பல் ஓட்டியதன் காரணமும், நடந்த நிகழ்வுகளும், அதற்கு அவர் கொடுத்த பேருழைப்பும், உடனிருந்தவர்களாலேயே பெருமளவு தொல்லைகளைச் சந்தித்ததும், அவரது போராடும் ஆற்றலும், திறனும், யாருக்கும் அஞ்சாத தன்மையும்... இப்படி எல்லாமும் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டுமென்பதே. 

வ.உ.சி குறித்துப் பேசுவதையும், அவரது வரலாற்றைப் பிழையின்றிப் பரப்புவதையும் வாழ்நாள் பணியாகக் கொண்டு அயராது செயலாற்றும் ஆய்வாளர் ரெங்கையா முருகன் அவர்களது வாய்மொழி இந்த நூலாசிரியரின் சீரிய நோக்கத்தை தமிழுலகுக்கு இப்படித்தான் அறிமுகம் செய்கிறது.

"கடந்த ஆண்டு ஓசூரில் என் அன்பு சகோதரர் திரு.குருசாமி மயில் வாகனன் அவர்களுக்கு "கப்பலோட்டிய கதை" நூலிற்காக ஓசூர் நகரில் நடந்த பெரியவர் வ.உ.சி.விழாவில் வ.உ.சி.அறச் சான்றோர் விருது வழங்கப்பட்டு விருதுக்கான பரிசுத் தொகை ரூ.15000/- அன்பளிப்பாக வழங்கி கவுரவித்தனர்.

சகோதரர் குருசாமி மயில் வாகனன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தீராத தலைவலி பிரச்னையால் அவதியுற்று அதற்காக மருத்துவ சிகிச்சையும் எடுத்து வருகிறார் என்பதை நான் அறிவேன். ஆகையால் இந்த பரிசு தொகையில் கிடைத்த பணம் ஓரளவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவும் என்று தற்செயலாக நான் அவரிடம் கூறியபோது சார் இந்த பணத்தை கொண்டு அப்படியே "கப்பலோட்டிய கதை" இரண்டாம் பதிப்புக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறேன். நமக்கு வேறு பணம் கிடையாது. இதனைக் கொண்டு புத்தகத்தை கொண்டு வருவதன் மூலம் இன்னும் பலருக்கு போய்ச் சேரும் என்ற நம்பிக்கையை தெரிவித்து அதன்படி புத்தகத்தை கொண்டு வந்தவர்."

பொருளாதார அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு தற்சார்புக்குள் நாடு வந்துவிடும் என்ற வ.உ.சிதம்பரம்பிள்ளையின் நம்பிக்கையை, வ.உசி. கப்பலோட்டிய கதையை அனைவருக்கும் கொண்டு சேர்த்துவிடுவோம் என்கிற நூலாசிரியரின் நம்பிக்கையை நெஞ்சில் ஏந்திக்கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

இந்தியநாடு கண்ட மாபெரும் தலைவர்களுள் ஒருவர் வ.உ.சி. என்கிற வரலாற்று உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், ஆங்கிலேய அரசின் வணிகத்தை, நேருக்கு நேர் நின்று திறம்பட எதிர்த்துச் சாய்த்த தமிழனின் திறனும் ஆற்றலும் உங்கள் குழந்தைகள் அறியவேண்டுமென நீங்கள் விரும்பினால், ஒற்றை மனிதனாய் ஒரு பெருவணிகத்தையும் அதைக் கட்டிக்காத்த அரசையும் அசைத்துக்காட்டி அதனால் அவர்கள் அச்சமுற்று நாட்டிலேயே மிக அதிக ஆண்டுகளுக்கான தண்டனை விதிக்கப்பட்ட மனிதரின்; அறிவும் நேர்மையும் ஆயுளின் கடைசி மணித்துளி வரை தவறாது வாழ்ந்த ஒரு செம்மலின் வாழ்க்கையில் முகாமையான ஒரு பகுதியை அறிந்துகொள்ள வேண்டுமானால் "கப்பலோட்டிய கதை" எனும் இந்த நூலைப் படித்துவிடுங்கள்.=================================

நூல் : கப்பலோட்டிய கதை
ஆசிரியர் : குருசாமி மயில்வாகனன்
வெளியீடு : நீந்தும் மீன்கள்
விலை : 250 உரு
நூல் வாங்க: 9488525882, 735118832

=================================

என்றென்றும் அன்புடன்

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

18-11-2022

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்