Thursday 21 November 2019

உறையூரின் கார் திகைந்த விளக்கீடு

        ஐயை,  மேல்மாடத்தின் பலகணி வழியாக கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாள். கீழே நெடிதுயர்ந்த மாளிகைகளின் சுவர்களால் தெள்ளிய நேர்கோடாய் நீண்டு கிடக்கிறது உறையூரின் நெடுந்தெரு. மேற்கே வானமலையின் தாழ்வாரத்தில் கதிரவன் இறங்கியிருக்க வேண்டும். மெல்லிய மஞ்சள் ஒளியில் சிக்கிக் கிடந்தது உறையூர். இன்னும் நான்கு நாட்களில் முழுநிலவு வருமென தக்கார் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவளும் "செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி" அதை உறுதி செய்தே வைத்திருக்கிறாள். தொலைவில் கிழக்கே கல்லணை இருக்குமிடம் நோக்கி பார்வையும் எண்ணமும் திரும்புகின்றன.

   ஐப்பசி மழையில் பொன்னியில் வந்த பெருவெள்ளம் கல்லணையை நிரப்பியிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து வேறு. பெரும் பொருள்செலவில் பாட்டன்கள் சீர் செய்த பொன்னியின் நீள்கரையும், இன்னொரு பாட்டன் எடுப்பித்த கல்லணையும் மக்கள் பயன் பாட்டில் தொடர்ந்து இருக்கவேண்டும். அது மன்னர் யாவருக்கும் பெரும் பணியாகக் கொள்ளப்பட்டிருந்தது. இந்தக் கார்காலம் கட்டுமானங்களில் ஏதாவது சேதம் ஏற்படுத்தியிருக்கிறதா என்று பார்க்கச் சென்றிருக்கும் தந்தை இந்நேரம் திரும்பிக்கொண்டிருப்பார். உடன்பிறந்தான் போர்வைக்கோ பெருநற்கிள்ளி உடனிருந்தால் தந்தைக்கு இத்தனை சிரமம் இல்லை என அவள் மனதுக்குள் தோன்றிற்று.
 
   பெருநற்கிள்ளியோ, பெருங்கொடையாளனான தந்தை தித்தனோடு வேறுபட்டு தனியாகப் போய்விட்டான். அவன் சில வேளைகளில் புல்லரிசிக் கூழ் மட்டுமே அருந்துகிறான் என்று தோழியர் கூறக் கேட்கையில் எல்லாம் ஐயையின் உள்ளம் வாடத்தான் செய்கிறது. ஆனால் அண்ணன் பெருவீரன் என்பதில் அவளுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. அவன் ஆமூர் மல்லனைப் பொருது வீழ்த்தினான் என்ற செய்தியறிந்து மகிழ்ச்சி அடைந்தாள். அதைவிட அதை அருகிருந்து கண்டு, காதல் கொண்டு பல்லாயிரமாண்டு நிற்கப்போகும் பாடல் இயற்றிய நக்கண்ணை குறித்து பெருமகிழ்ச்சியுற்றாள். தந்தையையும் தன்னையும் பிரிந்து நிற்கும் அண்ணனுக்கு நக்கண்ணையின் காதலும், அணுக்கமும் மிக்கத் தேவையான ஒன்றென அவள் நினைத்தாள். அவளைக் காண ஆசை கொண்டாள். மன்னர் வழி இல்லையென்றாலும் காதல் கொண்ட நக்கண்ணையே அண்ணனுக்கு ஏற்ற பெண்ணென நினைத்தாள். டக்.. டக் என  குதிரைக் குளம்பொலி எழும்பி எண்ணத்தைக் கலைத்தது. தந்தை வந்துவிட்டார் போலும். படியிறங்கினாள். முற்றத்துக்குள் வந்து கொண்டிருந்த தந்தையைப் பார்த்தாள். முகத்தின் வாட்டமறிந்தாள். 

"என்ன ஆயிற்று. கல்லணையில் ஏதும் பிரச்சனையோ" என்று வினவினாள்.

 "அங்கே ஒன்றும் குழப்பமில்லை. உறையூருக்குத்தான் தொல்லை வரப்போவதாய்ச் செய்தி கிடைத்ததம்மா." 

"எளிதில் நுழைய முடியா காட்டரணும், ஏற முடியா மதிலரணும் இருக்கும் உறையூருக்கு யாரால் தொல்லையப்பா"

"வடுக மன்னன் கட்டியும் அவனுக்குத் துணையாய் வாண அரசனொருவனும் உறையூரை முற்றுகையிடப்போவதாய்ச் செய்தியம்மா"

   ஐயை சிரித்தாள். "இதற்காகவா வாட்டமாக இருக்கிறீர்கள். பெரும் படையணி கொண்டது தானே உறையூர். ஐப்பசி முடிந்து கார் திகைந்து இன்றோடு எட்டு நாட்கள் ஆகிவிட்டன. மழைக்காலத்தில் போர் செய்வதில்லை என்ற மரபு கொண்டதால் வீரர்கள் எல்லோரும் உறையூரில் தான் இருக்கிறார்கள். சில பணித் தலைவர்கள், களத் தலைவர்கள் மட்டும் வெளியே ஆங்காங்கே இருக்கிறார்கள். அவர்களும் கூட நான்கு நாட்களில் முழுநிலவன்று வந்து விடுவார்கள்.

   அவர் வரவு நோக்கிக் காத்திருக்கும் பெண்டிரெல்லாம் குடமூக்கின் விளக்குகளை புளியிட்டு விளக்கி வைத்திருக்கிறார்கள். காவிரியின் வடகரைக் களிமண்ணில் செய்த புது விளக்குகள் தெருக்களில் விற்பனைக்காகக் குவித்து வைக்கப் பட்டிருக்கின்றன. முது பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் செவ்வரிப் பறையை இன்றே அடித்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள். கோல்கொண்டு பறையடிக்கும் போது கைகளில் சிக்கும் பொன்னணிகளைத் தள்ளிவிட்டுவிட்டு ஓங்கி ஒங்கி பறையைக் கோலால் அறைகிறார்கள்.
  
     இன்னும் நான்கு நாட்களில் பெண்டிரும் பிள்ளைகளும் கொளுத்திவைக்கும் விளக்குகள், வரிசையாக உறையூரின் தெருவெங்கும் ஒளிவிடும். சிலர் புகார்த்துறையின் வெண்சங்கெடுத்து உறையூரின் நெடுந்தெருக்களில் ஊதுவார்கள். ஊரெங்கும் நுண்ணியதாய் பனி அரும்பும். காவிரியின் கரையில் நாணலின் வெண்பூக்கள் சிரிக்கத் தொடங்கும். முழுநிலவின் மாலையில் சருக்கரையும் வெண்ணரிசி மாவும் கலந்த இனிப்பொடு உள்ளமும் களி கொள்ள சிறுவர் எழுப்பும் பறையிசையும், ஆட்டை முரசின் அதிர்வொலியும், ஓங்கி இயம்பும் புகாரின் வெண்சங்கொலியும் மதிலரண் தாண்டி காட்டரண் நுழைந்து வெளியே நிற்கும் வடுகரின் காதறையும். இன்னும் உமது அரசவையின் கிளை ஒலியும் அவர் செவிப்பறை கிழிக்கும். அந்தப் பெருவோசை தாங்காது வந்த திசையில் அவர்களெல்லாம் அச்சமுற்று ஓடிவிடுவார்கள். அதனால் அந்தக் கவலை விடுத்து, உள்ளம் உவப்ப ஐப்பசி நீங்கி  கார் திகையும் நாள் நோக்கி நிற்கும் ஊருக்கு வாழ்த்துரைப்பீர்." என்று தந்தை தித்தனை நோக்கி விடையிறுத்தாள்.

  "ஒரு வேளை அதன் பின்னரும் அவர் நகராதிருந்தால் என்ன செய்வது"

   "முழு நிலவின் மறுநாள் வீரர்களை அனுப்புங்கள் தந்தையே. வடுக நாட்டின் எல்லை வரை அவர்களைத் துரத்தி விட்டுத் திரும்பட்டும்"

   "சரி மகளே. மண்ணின் கல்வியை பால்கோடாது ஆண் பெண் இருவருக்கும் கொடுத்ததால், உன் அண்னனின் இடத்தை நீ நிரப்புகிறாய். என் குழப்பம் நீங்கிற்று. விளக்கீடுக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யப் போகிறேன். நன்று" எனக் கூறி தித்தன் அவ்விடம் விட்டு அகன்றான்.

   ஐயையின் உள்ளத்துக்குள் பல்வேறு எண்னங்கள் வந்தன. போர் வந்து விட்டால் படை வீரர்கள் ஊர்விட்டுச் செல்வார்கள். அவரோடு களவில் இருக்கும் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்குவார்கள். மணமுடித்தவரோ ஊரறியப் புழுங்குவார்கள், நக்கண்னையின் அழியாத பாடல் போல. என்ன செய்வது. மறுபடியும் ஒரு கார்காலம் வரும் வரை தோழிகளோடு தான் பொழுது செல்லும். கண்டிப்பாக முழுநிலவு வரை யாருக்கும் பிரிவில்லை. இன்னும் நான்கு நாள்களுக்குப் பின் வெண்கோடுகளாய், மாலையில் விளக்கெரியும் உறையூர் எப்படி இருக்கும் என்று எண்ணிய படியே மேல்மாடத்தை நோக்கி நடக்கலானாள் ஐயை.
-----------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்புகள் 
1. கார்த்திகை தமிழ்ச் சொல்லாக இருக்கக் கூடும். அதன் பொருள், கார்காலம் திகைந்து  கூதிர்காலம் தொடங்கும் திங்கள்.

    திகை digaidal, செ.குவி (v.i.)

    1. முடிவுறுதல்; to complete, to come to an end.
      "மாதந் திகைந்த சூலி" (நெல்லை);
    2. தீர்மானமாதல்; to be settled.
    அதன் விலை இன்னும் திகையவில்லை (உ.வ.);
      [திசை→ திகை]
      (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி)

2. நற்றிணை 58
3. புறநானூறு 83, 84, 85
4. அகநானூறு 226


நூல்கள் தரவுகள்
 1. தென்னாட்டுப் போர்களங்கள் - க.அப்பாத்துரையார்.
2. சோழர் வரலாறு - மா.இராசமாணிக்கனார்.
3.உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி 
4. எட்டுத்தொகை உரை - ஔவை துரைசாமி
5. செந்தமிழ்ச் சொர்பிறப்பியல் அகர முதலி
6. தமிழ் இணையக் கல்விக் கழகம் 
7. மரபு வழித் தமிழ்த்தேசிய தக்கார் அவையம் 



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்