Friday 4 December 2020

திருமுருகாற்றுப்படை - குறிப்புரை


  
 

தமிழர் தம் சொத்துப்பாட்டு எனப்படும் பத்துப்பாட்டில் முதலாவது பாட்டு திருமுருகாற்றுப்படை. இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும்.  வழிபட விரும்புவோரை முருகனிடம் ஆற்றுப்படுத்துவது இந்நூல். இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார்.

  இது 317 அடிகளைக் கொண்ட நீண்ட அகவற்பாவாகும். குறிஞ்சியின் சிறப்புக் கடவுளை மலை ஒன்றைச் சிறப்பித்துக்கூறி. அம்மலைக்கு உரிமை பூண்ட முருகன் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திரு ஆவினன்குடி, திரு ஏரகம் என்னும் நான்கு சிறப்புடைத் தலங்களில் எழுந்தருளியுள்ளான் என்று உரைக்கிறது. (அறுபடைவீடு என்று சொல்லப்படவில்லை)

  முருகன் உறையும் இடங்கள், அவன் பழந்தமிழ் மண்ணில் வழிபடப்பட்ட முறைகள், வெறியாட்டு, முருகன் அருள்புரியும் திறம் இவற்றைக் கூறுகிறது. அவன் குன்றுதோறாடல் கொண்டவன் என்றும் குறமகள் ஒருத்தி செய்யும் முருக வழிபாடும் கூறி, புதிதாக வழிபடுவோர் எப்படி வழிபடவேண்டுமென்றும் உரைக்கிறது.

  வைப்பு முறையால் மற்ற ஆற்றுப்படை நூல்களிலிருந்து வேறுபடுகிறது.

      ===================================

 

 திருமுருகு ஆற்றுப்படை

(மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்)


உரைப்பாயிரம்
மாதிசைமீ தெங்கு முயர்மா மொழியான/
மேதினிவாழ் மாந்தர் பகரு மொழிகள்தன்/
ஞாதிருவாம் தாய்த்தமிழின் தண்ணடி தானேத்தி/
தீதறுதேன் கூர்திருமு காற்றுப் படைகண்டு/
ஐதமர்சீர் மாப்பொருளை ஓதிடவே தந்தேனே/
மாதேவன் பத்மநாபன் தாழக் குடிநின்றே/
ஞாதிநக்கீ ரன்தாள் பணிந்து./

நான்கு திசைகளிலும் உயர்ந்து சிறக்கும் மொழியாம், உலகெங்கும் வாழும் மாந்தர் ஒருவரோடு ஒருவர் உணர்வைப் பகரும் மொழிகளின் ஆன்மாவாகிய தாய்த்தமிழின் அடியைப் போற்றி வணங்கி, மிக நுட்பமாக ஆக்கப்பட்டத் தீதில்லாத தேனாம் திருமுருகாற்றுப் படையைப் படித்து, நுணுகிச் சிறந்த அதன் பெரும் பொருளைப் படிக்கும் வண்ணம், முன்னோன் நக்கீரன் அடிதொழுது தாழக்குடி பத்மநாபன் மகனாகிய மாதேவன் நான், எழுதிய உரை இது.

 முருகன்

  உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக,  பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, ஒழிவு இல்லாமல் மின்னும் இமையாது ஒளிரும் ஒளியையுடைய,  தன்னைச் சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்,  கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,  குற்றமற்ற கற்பினையும்,  ஒளியுடைய நெற்றியினையும்,  உடையவளின் கொழுநன் ஆவான் முருகன்.


  சூலுற்ற மழைமேகங்கள் வானத்தில் வாள்போல் மின்னி வளம்தரும் மழைத் துளிகளைப் பொழியும். கோடைக்குப் பிறகு பெய்யும் அந்த முதன் மழையால் கானம் இருண்டு பசுமையாகும் .வெண்கடம்பு மரங்கள் தழைத்துப் பூத்துக் குலுங்கும். அப்பூக்களால் கட்டப்பட்ட தார்மாலைகள் புரளும் மார்புக்குச்

சொந்தக்காரன் முருகன்.  

 

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,

செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, 

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்

கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,

தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து,

இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து

உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்

 

சூரரமகளிரின் இயல்பு

 பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள ஓங்கிய கருமையான உச்சியைக் கொண்ட மலை. அங்கே; சலங்கை சூழ்ந்த ஒளிரும் சிவந்த சிறிய அடியினையும், திரட்சியையுடைய காலினையும், வளைந்து நுடங்கிய இடையினையும், அழகுடைய தோளினையும், தம்பலப்பூச்சியின் செந்நிறத்தை ஒத்த, சாயம் தோய்க்கப்படாத பூவேலைப்பாடமைந்த ஆடையும், அதன்மேல் காசுவரிசை தொங்கும் சில்காழ் என்னும் சிறிய நடன  இடுப்பணி இருக்கும் இடையும், கையால் ஒப்பனை செய்யாது இயல்பான மேனியழகுடன் இருந்தனர். நாவல்பழ நிறத்தில் மணிக்கற்கள் பொன்னில் பதிக்கப்பட்ட மணிநாவல் எனும் கழுத்தணியையும் அணிந்திருந்தனர்.  அதன் ஒளி தொலைதூரத்திலும் மின்னியது.


 அவர்களின்  தோழியர் ஆய்ந்து நெய் பூசி ஈரமான மயிரில், சிவந்த காலையுடைய வெட்சியின் சிறிய பூக்களை நடுவே விடுபூவாக இட்டு, பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு, தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து, திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில் சுறாவின் அங்காந்த வாயாகச் செய்யப்பட்ட தலைக்கோலம் அணிந்து, முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி, கரிய புறவிதழினையும் உள்ளே துய்யினையும் உடைய பூக்களையுடைய மருதின் ஒளிரும் பூங்கொத்துக்களை அதன் மேல் இட்டு, கிளையில் அழகுற்று வளரும் நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுற்ற மாலையை வளைய வைத்து தலைமயிரை அழகு செய்திருந்தனர்..

  தம்மில் ஒத்தற்குப் பொருந்த, வளவிய காதில் இட்டு நிறைந்த பிண்டியின் ஒளிரும் தளிர்  நுண்ணிய பூணையுடைய ஆணிகள் மார்பில் அசைய, நெஞ்சில் சந்தனம் பூசியிருந்தனர். அது வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையைப் பூப்போல் தேய்த்து உருவாக்கப்பட்டது. அங்கே கோங்கம்பூப் போன்ற இளமுலை. அதில் மருதம்பூவின் நுண்தாது கொட்டிக்கிடப்பது போல் சந்தனம் அப்பிக் கிடந்தது. அதன் மேல் வேங்கைப் பூவின் நுண்ணிய தாதுகளும் அப்பப்பட்டிருந்தன.

 விளாமரத் தளிர்களை (அல்லது வில்வத் தளிர்களை)ப் பறித்துப் போட்டுப் பூசை செய்துகொண்டு அவர்கள் ஆடினர். கோழியின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்த வென்று ஆடுகின்ற வெற்றியையுடைய கொடி, நெடுங்காலம் வாழ்வதாக, என்று பலவாறாகப் பலரும் கூடிப் புகழ்ந்து பாடிக்கொண்டே ஆடினர். சூரர மகளிரின் இந்த ஆட்டமும் பாட்டும் மலையெல்லாம் எதிரொலித்தது. அப்படி பல சோலைகளைக் கொண்டது முருகின் உறைவிடம்.

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்

கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி,

கணைக் கால், வாங்கிய நுசுப்பின், பணைத் தோள்,

கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்,      15

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்,

கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்,

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை,

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச்    0

செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு,

பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி,

தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து,

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்

மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து,            25

துவர முடித்த துகள் அறும் முச்சிப்

பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு

உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி,

கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு

இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக       30

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்

நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ்

நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை,

தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின்

குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர்       35

வேங்கை நுண் தாது அப்பி, காண்வர,

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா,

'கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி

வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்

சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி          40

சூரரமகளிர் ஆடும் சோலை,


      அந்தச் சோலைகளை ஒட்டிய மலையின் மேலே செங்காந்தள் பூத்துக் கிடக்கிறது. அந்த மலையுச்சி குரங்குகள் கூட அறியாத இடம். அந்த மலர்களோ, வண்டுகள் முழுவதும் மொய்த்துவிட முடியாத அளவுக்கு ஏராளமாகப் பூத்துக் குலுங்குகின்றன. அப்படியான செங்காந்தள் மலர்களைக் கண்ணியாகக் கட்டி தலையிலே சூடிக் கொண்டிருக்கிறான் முருகன்பண்டே இருக்கின்ற முதிர்ந்தக் கடலுள் புகுந்து, அந்த ஆழ்கடலும் கலங்கும் விதமாக, நீர்ச்சுழியைவிடச் சுழலும் தன்மையுடைய சூரனை, சுழல் குறைத்து அழித்த சுடர் போன்ற கூரிய ஓரிலை வேலைக் கையிலே தாங்கியவன்.


  அந்தப் போர்க்களத்திலே பேய்கள் கூத்தாடியதாம். பரட்டையாய்க் கிடக்கும் தலைமயிர். வரிசை மாறிப் பிறழ்ந்திருக்கும் பல். பிளந்த வாய். சுழலும் விழிகள். பசுமை நிறக் கண்ணில் சுட்டெரிக்கும் பார்வை. கோட்டானும் பாம்பும் தொங்கும் முலை முகடுகளில் உரசும் நீண்ட காதுகளும், பெரிய வயிறும், அச்சம் தரும் நடையும் தோற்றமும் கொண்ட பேய்மகள்,

  போரில் வீழ்ந்தவர்களின் கணகளைத் தோண்டி உண்டதால் குருதி படிந்திருக்கும்  விரல் நகங்களைக் கொண்டவள். கண்ணைத் தோண்டிய பின்னர் முடை நாற்றமடிக்கும் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு ஆடுகிறாள். அவளது கை நிறைய வளையல்கள்.  அந்தக் கைகள் தலையை ஏந்திக் கொண்டிருப்பதால் தோளைப் புடைத்துக் கொண்டு அவர்கள் ஆடுகின்றனர். குருதி மணக்கும் வாயால் சூரனை வென்றழித்த போர்க்களத்தைச்  சிறப்பித்துப் பாடிக்கொண்டே பேய்மகளிர் துணங்கைக் கூத்து ஆடுகின்றனர்.

  அவுணர்களது கடிமரமான மாமரம், பூத்துக் குலுங்குகிறது. பூக்கல் தரையை நோக்கிக் கிடக்கின்றன. அவர்களின் சிறப்பை, செருக்கைக் ஏன்ந்தி நிற்கும் அந்த மாமரத்தை வேரோடு வெட்டிச் சாய்த்தான் முருகன். கடிமரம் இழந்த அவுணர் செருக்கழிந்து நின்றனர். இப்படி, செவ்வேலை வீசிப் பெற்ற சேயோனது இக்கொற்றம்  குறையாத புகழைக் கொண்டது.

 அந்தக் கொற்றவன் முருகனை வழிபட செல்ல வேண்டுமென்ற எண்ணம் உள்ளத்தில் உதித்து, ஊர்விட்டு ஊர் புலம்பெயரும் பயணத்தை நீ விரும்புபவனாக இருந்தால் உடனே அந்தப் பயணத்தை முன்னெடுப்பாயாக.

 செல்லவேண்டிய இடங்கள் குறித்து நான் கூறுகிறேன்.

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்       

பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு           45

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு  50

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா    55

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்

மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து           60

எய்யா நல் இசை செ வேல் சேஎய்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு  

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப            65

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே

 

திருப்பரங்குன்றம்

  முதலில் அருகிலிருக்கும் திருப்பரங்குன்றைப் பார்ப்போமா?

 போர் புரிவதற்கென்றே விரும்பி உயர்த்திய நெடுங்கொடி எப்பொழுதும் அசைந்தாடிக்கொண்டிருக்கும். அதனருகிலே நெருப்பெரியச் செய்து பந்தெறியும் பாவைப் பொறிகள், இயக்குவாரின்றித் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆமாம், போர் இங்கே அரிதாகிவிட்டது. எதிர்த்தவர்கள் அனைவரும் தோற்றோடிப்போக; போரிட யாரும் இல்லை என்றால் எப்படிப் போர் நிகழும். அப்படி போர் அரிதாகிப்பொன அந்தப் பெருவாயிலில் திருமகள் நுழைந்தாள். ஊரெங்கும் பெரிய மாடங்களும் மாளிகைகளும் மலிந்தன. கடைத்தெருக்களும்  அங்காடிகளும் பெருகின. உலகெங்கும் கூடல் எனும் அந் நகரின் பெயர் ஒலிப்பதாயிற்று.

 அந்தக் கூடல் மாநரின் மேற்கே கருஞ்சேறு நிறைந்த வயல்கள். அந்த அகன்ற வயலின் சேற்றில் அவிழ்ந்து கிடப்பவை தாமரை மலர்கள். ஆங்காங்கே சுனைகள். சுனைகளில் நெய்தல் பூக்கள். வண்டுகள் தாமரைப் பூவிலும் நெய்தல் பூவிலும் மாறி மாறி அமர்ந்து  காமம் மருவிக் கனத்துக் கிடக்கும். வைகறை விடியலில் தாமரையிலும், பொழுது போன மாலை வேளையில் நெய்தலிலும் கள் அருந்தும்.  அத்தனைச் செழிப்பான வயல்வெளிகளுக்கு அடுத்த குன்றில் இந்த வண்டுகளின் ஓசை எதிரொலிக்கும். அந்தக் குன்றில் குடியிருக்கிறான் முருகன். ஆம் அந்தக் குன்று அவனுக்கு உரியது.

 அது மட்டுமா?

செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி

வரிப் புனை பந்தொடு பாவை தூங்க,

பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்,

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து,                  70

மாட மலி மறுகின் கூடல் குடவயின்

இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த

முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர்,       75

அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று

 

திருச்சீரலைவாய்

 முருகனது உறைவிடங்களில் சிறப்புடைய ஒன்று திருச்சீரலைவாய்.

 அங்கே நீங்கள் நடந்து போகும்போது எதிரே, பெரிய மலையொன்று அசைந்து வரும். அதன் நெற்றியெங்கும் கூரிய நுனியால் போரில் ஏற்பட்ட காயங்கள் வடுக்களாகி அணி செய்யும். கழுத்தில் வாடாத மாலையும் (பொன்னரி மாலை), சிறப்பான நெற்றிப்பட்டமும் அணிந்திருக்கும். வேகமாக நடந்து வருகையில் உடலின் இருபுறமும் தொங்கும் மணிகள் ஓசையெழுப்பும். வலிமையான கரிய யானைதான் அது. அதன் மேலே முருகன் அமர்ந்து வந்துகொண்டிருப்பான்.

 

 கொற்றம் சிறக்க, ஐவகையான செய்வினைகளை செம்மையுற முடித்து, பார் போற்றச் சிறக்கும் மணிமுடியை அணிந்திருப்பான் அவன். அதிலே வேறுபட்ட மணிகள் இழைக்கப்பட்டிருக்கும். அவை மின்னல் தானோ என்று எண்ணுகிற அளவிற்குப் பொலிவோடு அவன் தலையை அழகுசெய்யும்.

 காதிலே கனங்குழை அணிந்திருப்பான். வானிலே தொலைவிற்கும் ஒளிவீசும் திங்களைச் சுற்றி விண்மீன்கள் மிளிர்வதைப்போல, அவனது முகத்தைச் சுற்றி அவை  ஆடிக்கொண்டிருக்கும்.

 தனக்கென எதுவும் எண்ணாத தொழிலையுடையோர், அரசுக்காக அத்தொழிலை செம்மையாக முடிக்கும் போது பெரும் மன்னவெழுச்சி கொள்வர். அந்த மனவெழுச்சியின் ஊடே தோன்றும் ஒளி பொருந்திய மன்னனது முகம் போன்றது முருகனின் திருமுகம்.

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வரப்

படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்.     80

கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்

கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு              

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி

மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப

நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை

சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ

அகலா மீனின் அவிர்வன இமைப்பத்

தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்

மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே.    90

 பெரும் இருளால் சூழப்பட்ட இவ்வுலகம் தடையின்றி இயங்க பல கதிர் பரப்பி ஒளியேற்றுகிறது ஒரு முகம். தன்னை விரும்புபவர்கள் கூறும் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, கொற்றத்தில் அமர்ந்து இனிமையாகப் பணிசெய்து, மக்கள் மேல் கொண்ட அன்பால் அவர்கள் விரும்புவதை நடத்தித்தரும் ஒரு முகம். மரபிலிருந்து மாறாத மந்திர விதிகளின் படி அந்தணர் நடத்திய வேள்விகளை எண்ணியபடி ஒரு முகம். கூறப்பட்டது அல்லாத பொருள்களையெல்லாம், காவல் செய்யும் விருப்புகொண்டு திசைகளத்தனையும் தெளிவுற விளங்கும்படி ஆட்சி செய்யும் ஒரு முகம். தன்னோடு போர் செய்வோரை அழித்து, விருப்புடன் போர்க்களம் புகுந்து, மன உறுதியோடு போர்க்களத்தில் ஆற்றவேண்டியவற்றைச் செய்து முடிக்கும் ஒரு முகம். இத்தனையும் செய்துவிட்டு; குறவர்குலத்தில் பிறந்த, உள்ளம் சிறந்த, கொடியிடை கொண்ட வள்ளியோடு புன்னகை பூத்து நிற்கும் ஒருமுகம்.

 

 இப்படி, முருகன் தன் எல்லைக்குட்பட்ட இடங்களில், நாட்டில், என்ன என்ன செயல்களை எப்படிச் செய்யவேண்டுமோ அந்த முறைமையில் வழுவாது சிறப்பாக, மக்கள் விரும்பும் விதமாக திருச்சீரலைவாயிலில் ஆண்டுகொண்டிருக்கிறான்.    

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,

ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்

காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,

மந்திர விதியின் மரபுளி வழாஅ   95

அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்

திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்

கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம். 100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.

ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்

(சிறப்புச் செய்தி:- முருகனின் துணை வள்ளி என்று குறிக்கப்பட்டிருக்கிறது.)

 போர்களில் பெற்ற தழும்புகள் மார்பெங்கும் நிறைந்திருக்கின்றன. அப்படியான மார்பில் ஆரங்கள் அழகு செய்கின்றன. வேலை எறிந்து, பகைவரை வீழ்த்திய வலிமை மிக்க தோள்கள் அவனுடையவை. வளவிய புகழ் நிறையப்பெற்று, உருண்டு திரண்ட, நிமிர்ந்த தோள்கள். அவற்றிலே இருக்கும் கைகள் பன்னிரு வினைகளைச் செய்பவை.

 விண்ணிலேறி வினை நிகழ்த்தும் அறிவுடையோருக்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒரு கை; இடுப்பில் வைக்கப்பட்டது மற்றொரு கை.

  செந்நிற ஆடையை உடுத்தியிருக்கிறான் முருகன். அமரும் போது ஒரு கையைத் தொடையின் மீது வைத்துக்கொள்கிறான். யானையைச் செலுத்த ஒரு கையால் தோட்டியை வலித்துக் கொண்டிருக்கிறான்.

  போர்களின் போது ஒரு கையில் அழகிய பெரிய கேடகத்தோடும், மறு கையில் வேலும் ஏந்தி வலமாகச் சுழற்றுகிறான். சில வேளைகளில், ஒரு கையை மார்போடு வைத்துக் கொண்டு, மறு கையால் அழகான மாலையைத் தடவுகிறான். மாலையோடு சேர்ந்து அவன் கையும் பொலிவுறுகிறது.

 மேலெழுந்து சென்று கீழே வருகின்ற வளைந்த கருவியொன்றை ஒருகையால் மேலே சுழற்றி எறிகிறான் முருகன்.  மறுகையால் ஓசை வெளியே கேட்காத மணியில் இசையை மாற்றி ஒலிக்கச் செய்கிறான்கரிய மேகங்களிலிருந்து மழையைப் பெய்விக்கச் செய்கிறான் முருகன். மறுகையால் வானரவோடு ஒன்று கலக்கும் வினை நிகழ்த்துகிறான்.

 இப்படி எல்லாவிடத்தும் தேவையான வினைகளை நிகழ்த்துகிறது முருகன் கொற்றம். அனைத்திலும் அவனது செயற்பாடு இருக்கிறது.

  விசும்பின் பல இசைக்கருவிகள் முழங்கவும், திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு ஒலிக்க, வெள்ளிய சங்கு முழங்க, வலிமையான இடிபோன்று ஒலிக்கும் முரசங்கள் அதிர, பல பொறிகளால் இணைக்கப்பெற்ற மயிற்பொறி புறப்படும் முகமாக ஒலியெழுப்ப,  ஒரு வான் பயணத்தைத் தொடங்குகிறான் முருகன்.  

 முதலில் கூறப்பட்டக் கடற்போருக்காகவோ, அல்லது மழை பொழிய வேண்டியோ ஏதோ ஒரு வினை நிகழ்த்த; உலகம் புகழும்  திருச்சீரலைவாய் நகர் சேர்ந்து வான்பயணத்தை முன்னின்று நடத்துகிறான் முருகன்.

அது மட்டுமா?

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

செம் பொறி வாங்கிய, மொய்ம்பின், சுடர் விடுபு,   105

வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்:

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒரு கை, உக்கம் சேர்த்தியது ஒரு கை;

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை,

அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை                 110

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை

மார்பொடு விளங்க, ஒரு கை

தாரொடு பொலிய; ஒரு கை

கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை

பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை            115

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை

வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;

ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி

அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ்

வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல,  120

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,

விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி,

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்று,   125

 

திருவாவினன்குடி

  ஆவினன்குடியில் முருகன் உலா வருகின்றான். அவனுக்கு முன்பாக சிலர் நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தைத்த தழையாடையை உடுத்தியிருந்தார்கள். தலைமுடி சங்கின் வண்ணம்போல சீராக வெளுத்திருந்தது. யாரையும் குற்றம் காணாத பார்வையும் யாரும் குற்றம் காண முடியாத உருவமும் கொண்டிருந்தனர். ஊன் வற்றி எலும்பு தெரியும் மார்பில், தைத்த மான் தோலை அணிந்திருந்தனர். நண்பகல் உணவும் பலநாள் இல்லாமல் சிலநாட்களில் மட்டுமே உண்டனர். அவர்கள் பிறரோடு மாறுபாடு இல்லாத பிறர்மீது சினம் கொள்ளாத மனத்தினர். கற்றோரும் இவர்களைப்பற்றி எதனையும் எளிதில் அறிய முடியாத பேரறிவினர். கற்றவர்களுக்கு எல்லை கட்டிய தலைவர்கள். காமத்தையும் கடுஞ்சினத்தையும் விலக்கிக் கட்டிவைத்த பண்புடன் காட்சி தருபவர். துன்பம் எதையுமே அறியாது இன்பமாகக் காணும் இயல்புடையவர். இவர்கள் எல்லாரையும் விரும்புவதால் பிணக்கின்றிக் காட்சி தருபவர். இவர்களை முன்னே நடக்கச் செய்து பின்னாலே நடந்து வருகிறான் முருகன்.



 அவனுக்குப் பின்னாலே பெண்கள் வருகிறார்கள். வெண்புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும், மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் கொண்டு அவர்கள் வருகிறார்கள்.

  கையிலே யாழ் இருக்கிறது. இசையை அளந்து நரம்பைக் கட்டின குற்றமற்ற யாழ் அது.  அதை இசைத்துக் கொண்டு நல்ல சொற்களால் பாடல் இசைத்துக்கொண்டு வருகிறார்கள்.  மாவின் நிறமொத்த நோய் நொடியற்ற உடல் கொண்டவராக இருந்தாலும் இசை நயந்து ஒலிக்கிறது. பேரோசையாயில்லை. மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும் கொண்ட மகளிரோடு முனிவர்கள் சூழ முருகன் ஆவிநன்குடியை வலம் வருகிறான்.


சீரை தைஇய உடுக்கையர் சீரொடு

வலம்புரி புரையும் வால்நரை முடியினர்

மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்

உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்

என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். 130

பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்

தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு

கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135

யாவதும் அறியா இயல்பினர் மேவரத்

துனியில் காட்சி முனிவர் முற்புக  

புகைமுகந் தன்ன மாசில் தூவுடை

முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்

செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்.   140

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர

நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்

அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் 145

பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்

மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க

  பாம்பின் கடைவாய்ப் பல் துளையுடையதாய் இருக்கும். துளையில் நஞ்சு ஒடுங்கியிருக்கும். அது தீயைப் போல் பெருமூச்சு விடும். கண்டவுடன் மக்கள் அஞ்சி ஒதுங்கும் திறம் கொண்டது பாம்பு. இப்படியான பாம்பைக்கூடக் கொல்லும் தன்மையுடையது,  பல அடுக்குகளைக் கொண்ட சிறகுடைய பருந்து. அந்தப் பருந்தைத் தன்னுடைய கொடியாகக் கொண்டவன் திருமால்.

  வெண்காளைக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான் இமையாத் மூன்றாவது கண் கொண்ட சிவன். மூன்று பெருங்கோட்டைகளை அழித்த பெரும் போர்க்குணம் படைத்த அவனது பெருந்தோள் ஒன்றில் உமை சாய்ந்து கொண்டிருக்கிறாள்.

  கொற்றம் காக்க எல்லாப் பக்கங்களிலும் எப்போதும் கவனமுடன் பார்த்துக்கொள்பவனும், நூற்றுக்கும் மேற்பட்ட களவேட்டங்களில் பகைவரை வென்று வாகை சூடியவனுமான இந்திரன் பெரிய யானையின் மேலே அமர்ந்திருக்கிறான். அந்த யானை முதிர்ந்த நீண்ட தும்பிக்கை கொண்டது. முதிர்ந்த இரண்டு தந்தங்களும், முற்றிப் பெருத்த இரு கடைவாய்ப்பற்களும் கொண்டது.

 

  நான்கு திணை நிலத் தலைவர்களும் சிறப்புடைய நகரங்களை அமைத்து நாடு காக்கும் வேலையை விரும்பிச் செய்கின்றனர். அவர்களில் மேற்சொன்ன மூவரும் ஒன்றிணைந்து முருகனை நானிலத்துக்கும் தலைவராக வேண்டி; முந்தைய நானிலத் தலைவரை சுட்டிக்காட்டி… (இவ்விடத்தில், சொற்களோ வரிகளோ விட்டுப்போனதாக ஐயா தென்னன் மெய்ம்மன் கருதுகிறார். தொடர்ந்து பொருளுரைக்கும் போது அவர் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. தொடர்பற்றுப் போவது புரிகிறது)

 அந்தக் காட்சி பகலில் தோன்றுகிற தெளிவான காட்சியாக இருந்தது.

 நான்கு நிலப்பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, வேறுவேறு நிலைப்பாடுகள், குணங்களுடைய  முப்பத்து மூன்று பேரும்; பதினெண்வகையாகிய மெய்யியல் உயர்நிலைப் பெற்றவரும் விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், முருகனோடு இருந்தார்கள். அவர்கள் வினையாற்றுவதில் காற்று எழுந்ததைப் போன்ற வேகமுடையவர். நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையுடையவர். இடி இடித்ததைப் போன்ற குரலினை உடையவர்,  இடும்பை தரும் குறைகள் காணும் இடத்தே தமது தேவையை அறிந்து, தாமே முடிவெடுத்து  வினை நிகழ்த்தும் நுட்ப மறிந்தவர்கள். வானில் செலவு நிகழ்த்தும் வன்மையாளர்கள்.

 இவர்களெல்லாம் புடைசூழ ஆவினன்குடியிலே; நானிலத் தலைவனாக அரசு நடத்துகிறான் முருகன்.  இங்கே சில நாள் அரசுச் செலவாகத் தங்குதல் அவனது இயல்பு. அப்பொழுது துணை வள்ளியும் அவனோடு வந்து தங்கியிருப்பாள்.

 அதுமட்டுமா?

கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று

அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்

பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்   150

புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு

வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்

மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்

நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல் 155

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து

ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்

தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை

எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,  

நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய .   160

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்

பலர்புகழ் மூவரும் தலைவ ராக

ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்

தாமரை பயந்த தாவில் ஊழி

நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர           165

பகலிற் றோன்றும் இகலில் காட்சி

நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்    

மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு

வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்     170

தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட

உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய

உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்

அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்

தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்       175

ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று,

 

                         திரு ஏரகம்

  குடிவாழ்க்கை நிலைபெற்ற காலத்தில் தாய் தந்தை என இரு வேறு அல்லது ஒத்த குடிகளின் நீட்சியாகப் பிறந்த தலைமுறையில் பல்வேறு தொல் குடிகளின் மக்களும் இருப்பார்கள். நாநிலத்தலைவன் முருகனை அனைவரும் வழிபடுவார்கள். அது இடத்துக்கு இடம் சற்றே மாறுபடும்

  பல்வேறு குடிகளில் பிறந்தவரில் சிலர் வாழ்வில் நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து நல்லறத்திலொழுகியதால் கோள்பாடுகள் அறிந்து ஒழுகும் தன்மையைப் பெற்றிருப்பார்கள். மூன்று வகையான முந்தைய, நெடுங்காலச் செல்வத்தை வேண்டுமளவு பெற்றிருப்பார்கள். மலைநாட்டின் ஏரகத்திலே முருக வழிபாடு நிகழ்த்த, நோன்பேற்று குடும்பம் விடுத்து அங்கேயே தங்கியிருப்பார்கள்

 

  அவர்களில் ஒரு பகுதியினர் வழிபாடு நிகழ்த்தப்பட வேண்டிய வேளைகளை அறிந்து சொல்வார்கள். மற்றவர் ஈர ஆடையோடு தலைக்குமேல் கையை உயர்த்தி நமக்குமாராய எனும் ஆறெழுத்து மந்திரத்தைப் பலுக்கி, முருகின் வன்மையை, பண்டுதொட்டு அவர்கள் கேட்டவண்ணம் பாடி, நறுமணம் கமழும் பூக்களைக் கையில் ஏந்தி நிற்க, அதைக்கண்டு பெரிதும் உவக்கிறான் முருகன். அதனால், அரசு வினைகளுக்காக மலைநாட்டின் ஏரகத்துக்கு வரும் முருகன் சில நாள்கள் அங்கேயே உறைதலும் உண்டு.

 அதுமட்டுமா?

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு

ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை .    180

மூன்றுவகைக் குறித்த முத்தீச் முத்தைச் செல்வத்து

இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

புலராக் காழகம் புலர உடீஇ,

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து    185

ஆறெழுத்து அடக்கிய ஏற்றிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

விரையுறு நறுமலர் ஏந்திப் ஏந்தப் பெரிந்துஉவந்து

ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,


குன்றுதொறு ஆடல்

  ஆடலும் இசையும் மலை பிறந்த தமிழர் தம் உடன் பிறந்தவை. மலையின் தலைவனுக்கு அது இல்லாமல் இருக்குமா?

 வேலன் வருகிறான். அவன் பூக்கண்ணியைத் தலையில் அணிந்திருந்தான். மல்லிகை, நறுமணம் கொண்ட வெண் கூதாளம் ஆகிய பூக்களுக்கிடையே நறைக்காயை (சாதிக்காய்) வைத்துத் தொடுத்த கண்ணி அது. மார்பில் சந்தனம் அணிந்திருந்தான்.

  இனிப்புக் கள்ளாகிய தேறலைத் தன் குன்றகச் சிறுகுடியிலுள்ள சுற்றத்தாருடன் சேர்ந்து உண்ட களிப்போடு, தொண்டகச் சிறுபறை முழக்கத்துடன் குரவைக் கூத்தைத் தொடங்கினான்.. கானவர் மூங்கில் குழாயில் தேனை விளைவித்துத் தேறல் என்னும் கள்ளை எடுப்பர். வில்லை வளைத்து விலங்குகளை வேட்டையாடி முடித்து ஓய்வில் குடிக்கப் பயன்படுத்தும் தேறல் அது.

  குரவை கூத்தில் பெண்கள் கைகோர்த்து ஆடுவார்கள். அவர்கள் தம் கூந்தலை விரல்களால் கோதி உலர்த்திக் கொண்டனர். காட்டிலும் கருமையான ஆழச் சுனையிலும் பூத்த பூக்களால் கட்டிய கண்ணியைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். கஞ்சக்குல்லை இலைகளையும் தலையில் சூடியிருந்தனர். பூக்களின் இதழ் பிரித்துக் கட்டிய பூங்கோதையைச் சூடியிருந்தார்கள். வெண்கடம்பு, மரத்தளிர், மாந்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிய தழையாடையை அவர்கள் தம் அல்குல் மறைய உடுத்தியிருந்தனர். வண்டு மொய்க்கும் நிலையில் அந்தத் தழையாடை புத்தம் புதிதாக இருந்தது. மயில் போன்ற அவர்களின் மடநடையோடு சேர்ந்து வேலனும் குரவை ஆடினான். மலையெங்கும் இசையால் நிறைந்தது.

  அது யாருடைய மலை தெரியுமா?

 

  செய்யன் எனும் முருகனுடையது. சிவந்த நிறமுள்ள ஆடையை அணிந்தவன் முருகன்.  சிவந்த அடிப்பகுதியுடைய அசோக மரத்தின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன், இடுப்பில் கச்சை கட்டியவன், கால்களில் வீரக்கழல் அணிந்தவன், வெட்சி மாலை சூடியவன்,  குழலை ஊதுபவன், கொம்பை ஊதி பேரோசை எழுப்புபவன், சிறிய பல இசைக்கருவிகளை இசைப்பவன், கிடாயையும், மயிலையும் உடையவன், குற்றமில்லாத கோழிக் கொடியை உடையவன், நெடுநெடுவென வளர்ந்தவன், தொடியை அணிந்த தோளையுடையவன், நெடுவேள் முருகன்.

  நரம்பிசைக் கருவிகள் ஆரவாரம் செய்வது போன்ற இனிய குரலை உடைய மகளிர் கூட்டமாகப் பாடிக்கொண்டிருக்க; வருகிறான் முருகன். இடையில் மெல்லிய துகிலை அணிந்திருக்கிறான். நழுவாமலிருக்க ஒட்டியாணமும் அணிந்திருக்கிறான். நறிய, குளிர்ந்த, மென்மையுடைய ஆடை நிலத்தை உரசிய வண்ணம் தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்க்கும் படி வருகிறான்.

  மெல்லிய தோளையுடைய பல பெண்கள் ஒருவரோடு ஒருவர் கைகோத்து குரவைக்கூத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருகிலே சென்ற முருகன் தன்னுடைய வலிமையான முழவைப் போன்ற கைகளினால் அவர்களது கைகளைப் பற்றி தானும் அந்த மகிழ்ச்சியிலே கலக்கிறான். இப்படி மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் அவனது நிலைநின்ற பண்பாம்.

  அது மட்டுமா?

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் .     190

அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்

கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்

நீடமை விளைந்த தேக்கள் தேறல்                       195

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர  

விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்

குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி

இணைத்த கோதை அணைத்த கூந்தல்.              200

முடித்த குல்லை இலையுடை நறும்பூச்

செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு

சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை

திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ

மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு     205

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்

செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்

கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்

குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்

தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் .   210

கொடியன் நெடியன் தொடியணி தோளன்

நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு

குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்

மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்

முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி          215

மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து

குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,

 

 முருகன் உறையும் இடங்கள்

  கோழிக் கொடியை நாட்டி, மலர்களோடு தினை அரிசியையும் விரவி பிரப்பரிசியாக வைத்து, நல்ல ஆட்டுகிடாவை அறுத்துப் பலியிட்டு, ஊர்தோறும் நடத்தப் பெறும் சீர்மிகு விழாக்களில் முருகன் வந்து தங்குவான்.

 தன்னை விரும்புபவர் மனதால் ஏற்றிப்பாடும் நிலைகளிலும், வேலன் வெறியாட்டு நிகழ்த்தும் களத்திலும், காடுகளிலும், காக்கப் படும் பூஞ்சோலைகளிலும், ஆற்றிடைப்பட்ட நிலங்களிலும் (திருவானைக்கா, திருவரங்கம் போன்ற), ஆறுகளிலும், குளங்களிலும், வேறுபல் பண்படுத்தப்பட்ட நிலங்களிலும் விரும்பி உறைவான்.

 ஊர்களின் அம்பல மேடைகளிலும், தெருக்களின் சந்தி முனைகளிலும், பூத்துக்குலுங்கும் கடம்ப மரத்தினடியிலும், ஊர் அவையத்திலும், ஊர் பொதுக் கட்டிடத்திலும், முருகனுக்காகவே நடப்பட்ட திருத்தறியிலும் அவன் விரும்பி வந்து உறைகிறான்.



 குறமகள் வழிபாடு செய்யும் முறை

 மாட்சிமை மிக்க முருகனுடைய கோழிக்கொடியை நட்டு அவனை எண்ணி, நெய்யில் வெண் சிறுகடுகைப் பிசைந்து அப்பி, அவனுக்கான நுட்பமான மந்திரத்தை உரைத்து, கையின் நான்கு விரல்களை மடக்கி பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைத்து, பின் புத்தம் புது மலர்களைத் தூவி, மேலாடை, அரையாடை என்று இரு வேறுபட்ட (நீள அகல வேறுபாடு) ஆடைகளை உடுத்திக் கொண்டு குறமகள் முருகனை வழிபடத் தொடங்குகிறாள்.

 கொடியின் முன்னே சிவந்த நூலால் எல்லைகட்டி களம் உண்டாக்கி அதிலே வெண் பொரியைத் தூவுகிறாள். நன்கு வளர்ந்து கொழுத்த வலிமையான ஆட்டின் இரத்தத்தை ஒரு பாத்திரத்திலே எடுத்து அதனுடன் தூய வெள்ளை அரிசியைக் கலந்து பிசைந்து அதை முருகனுக்கு படையலாக வைக்கிறாள்.

 அரைத்த பசுமஞ்சளையும் சந்தனத்தையும் களத்தில் தெளிக்கிறாள். நல்ல குளிர்ச்சியான செவ்வலரி (செவ்வரளி) மாலையை கோடியின் மேல் தொங்க விடுகிறாள். அகில் போன்ற நறும் புகை இடுகிறாள்.

 சூழலெங்கும் நறுமணம் கிளம்ப, செறிந்த இந்த மலைச் ச்ர்ரலில் இருக்கும் நகரை குறிஞ்சிப்பண்ணிலே வாழ்த்திப் பாடுகிறாள். சுற்றி இருப்போர் இன்னிசைக் கருவிகளை இசைக்கிறார்கள். அருவியும் தன் பங்குக்கு ஆரவார இசை சேர்க்கிறது.

 ஒரு நிலையில், குறமகள் பலவிதமான பூக்களை களமெங்கும் தூவுகிறாள். பெருங்குரலில் முருகனைப் பாடிக்கொண்டே, ஆட்டு இரத்தத்தில் பிசைந்த தினையை ஆரவாரத்துடன் பரப்புகிறாள். இசையினூடே முருகனைப்பற்றிய செய்திகளைச் சொல்லி இசையை சிலவிடங்களில் நிறுத்துகிறாள். அந்த அமைதியும் தொடரும் அவளது ஆரவாரமும் முருகனோடு முரண்படுபவர்களை அச்சம் கொள்ளச் செய்கிறது.

 அப்படி முருகனை வரச் செய்கிற அந்த சிறப்பான நகரிலே

 அடுத்து….

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து

வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,   220

ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,

வேலன் தைஇய வெறியயர் களனும்,

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,

யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், 225

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்       

மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர

நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்

குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி

முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்.   230

செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி

மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்

குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி

சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்

சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்     235

பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை

துணையற அறுத்துத் தூங்க நாற்றி

நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி

நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி

இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க.    240

உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்

குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்

முருகியம் நிறுத்து முரணினர் உட்க

முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்     


முருகனை போற்றுதல்


  
அப்படியான நகரில் வெறியாட்டுக் களங்களில் ஆரவாரத்துடன் பாடி, பலவிதமான கொம்புகளை ஊதி, கணீரென்ற மணிகளை ஒலித்து, தன்னுடைய வினை முடிக்கும் உறுதியிலிருந்து விலகாத அவனுடைய யானையை வாழ்த்தி, அவனிடம் வேண்டுமென்று கேட்பவர், வேண்டியதைப் பெற்றவர்கள் வாழ்த்தி வழிபடும் இடங்களில் எல்லாம் முருகன் உறைகிறான். நான் அறிந்து கூறிய வேறு பல இடங்களிலும் அவன் விரும்பி உறைகிறான், இது பலரும் அறிந்ததே. 

 எப்போதேனும் நீ அவனைக் காணும்போது, கால்கள் ஒட்டிக்கொள்ள நின்று தலைக்கு மேல் கைகளைத் தூக்கித் தொழ வேண்டும். அப்பொழுது அவனைப் போற்றிச் சொல்ல, நான் அறிந்தவற்றைச் சொல்கிறேன் கேள்.

  

  நெடிது உயர்ந்த மலை உச்சியிலே கரிய வண்ணத்தில் செடிகள் நிறைந்த சுனையின் அருகில், ஐவரில் ஒருவர் எல்லோருக்கும் பொதுவாகக் கையுயர்த்த, அறுவரால் எடுத்தோதப்பெற்ற அறுவகை அரச வினைகளை வழி ஆட்சி செய்பவனே (ஆரல், ஆறு என்பன சிந்துவெளி தொடங்கித் தமிழில் இடம்பெறும் சொற்கள். அதற்கான முத்திரைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.)

  ஆ
லமரத்தில் உறையும் கடவுளின் புதல்வனே. கரிய உச்சியைக் கொண்ட மலையின் மகளின் மகனே. தன்னோடு முரண்படுபவர்களுக்குக் கூற்றாக விளங்குபவனே. வெற்றியை மட்டுமே கொண்ட போர்த்திறத்தில் சிறந்த கொற்றவையின் வழித்தோன்றலே. அணிகள் இழைத்து அழகொளிரும் பழையோள், மூதேவி, மூத்த தாயின் மகனே. வானோர் வணங்கும் பெரிய வில் படை கொண்ட தலைவனே.
  
எப்பொழுதும் மாலை அணிந்துகொண்டிருப்பவனே. பல நூல்களையும் கற்றுத் தேர்ந்த புலவனே. போர்க்களத்தில் வீரர்களோடு ஒருவனாக நேரில் நிற்பவனே. போரிடுவதில் ஆகச் சிறந்த திண்மையுடையவனே, அறிவுடையோரின் அடிப்படை ஊக்கமானவனே.   அவுணர் வெறுக்கை என்று வந்திருக்க வேண்டும் என்கிறார் ஐயா தென்னன் மெய்ம்மன். அது குறித்து அறிஞர்கள் அவரோடு பேசலாம். அறிந்தவர்களுக்கு, பெரு வெளிச்சம் தரும் மலையானவனே .சொலிமலை என்று வந்திருக்க வேண்டும் என்கிறார் ஐயா தென்னன் மெய்ம்மன்.

 
மங்கையர்க்குக் கணவனைப் போன்று, மைந்தர்களில் சிறந்த ஏறு போன்று காவல் அளிப்பவனே. வேல் தாங்கி பிடித்திருக்கும் வலிமையான திரண்ட கைகளைக் கொண்ட இளைஞனே. எல்லா மலைகளையும் வென்று சிறந்த ஆட்சியமைப்பில் வழுவாத கொற்றத்தின் உயர்ந்த குறிஞ்சி செழித்த வானமலைக்கு உரிமைப்பட்டவனே. பலரும் புகழ்ந்து ஏத்தும் நன்மொழி தமிழில் புலமை பெற்றவருள் ஏறுபோல் சிறந்த புலவனே. பன்னெடுங்காலமாக, தோன்றி வளர்ந்து நிற்கும் பெரும் தமிழ் மரபின் பெயர் பெற்ற முருகனே. தன்னை விரும்பித் தேடி வருபவர்க்குப் பெருங் கொடை நல்கும் ஊரறிந்த புகழ் விளங்கும் மன்னனே.

 
உன்னிடம் வாரது இருந்தாலும் துன்பப்படுவோரை அறிந்து அவருக்கு வேண்டியதை அளிக்கும் பொன்மாலை பூண்டவனே. உன்னிடம் எதிர்ப்படும் எதிரிகளைப் போரில் வென்று வீரம் செறிந்த மார்பை உடையவன் நீ. அப்படி அகன்ற மார்பில் கூட; பாடிப் பரிசில் பெற வந்தவரைச் சாய்த்துக்கொண்டு அவர் தம் துன்பம் களையும் ஈகையின் ஈரமும் கொண்ட நெடிது வளர்ந்த வேள் மன்னனே.

 
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பெரியோர் வாழ்த்தும் பெரும் புகழ்கொண்ட தலைவனே. சூழ்ந்து நிற்கும் பெருஞ்சுழலால் தடைப்பட்டதை அந்த இடத்திலேயே அறுத்துச் சீர்செய்த பெருந்திறங் கொண்ட வலியோனே. ஏராளமான போர்களைக் கண்ட பெரும் வீரனே. எமக்கெல்லாம் பெரும் தலைவனே. என்று பலவாறாக நான் அறிந்த வரை சொன்னால் கூடத் தீராத பெருமையுடைய..

 
அவனை அணுகி

ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட

ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே

ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக . . . .250

முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்

கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,

நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

அறுவர் பயந்த ஆறமர் செல்வ!

ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை

மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!

இழையணி சிறப்பின் பழையோள் குழவி!

வானோர் வணங்குவில் தானைத் தலைவ! . . .260

மாலை மார்ப! நூலறி புலவ!

செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!

அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!

மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!

வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து

விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!

பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!

அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!

நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! . . . .270

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!

மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!

பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!

சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!

போர்மிகு பொருந! குரிசில்!எனப்பல

யானறி அளவையின் ஏத்தி ஆனாது,


நினைப்பதைச் சொல்லுதல்

  உன்னை அறிதல், உன்னுடைய அருமை பெருமை எல்லாம் அறிதல் யாருக்கும் அத்தனை எளிதல்ல. அதனால் உன்னை மட்டுமே மனதில் கருதிக்கொண்டு உன்னருகே வந்து சேர்ந்துவிட்டேன். ஒப்பிட்டுச் சொல்ல யாருமில்லாத திறனும் புலமையும் உடையவனே .. உன்னிடம்என்று நான் சொல்ல நினைத்ததைச் சொல்லத் தொடங்கும் முன்னமே, வெறியாட்டு விழா நடந்து சிறந்திருந்த களத்தில் பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்த, பல்வேறு இடங்களிலிருந்து வந்த வேறுவேறு உருவ அமைப்பை உடைய வேட்டுவர்கள் எனக்காகப் பேசத்தொடங்கினார்கள்.  

  முருகப் பெருமானே, பொருளின்றி வந்திருக்கும் இந்தப் பேரறிஞன் நம் உறவுமுறையானவனே. வரும் வழியெங்கும் உன்னுடைய செறிந்த புகழை எல்லோருக்கும் எடுத்தியம்பிக்கொண்டே வந்தான். வண்மையால் தெய்வத்தன்மை பொருந்திய, திறன் நிறைந்த, வானளாவிய புகழை உடைய உன் முன்னே வந்து நிற்கிறான் .


  அவனை உன் மார்பில் ஆரத்தழுவிக்கொண்டு நம்முடைய பண்டை தெய்வங்கள் அருளும் வண்ணம் நீயும் அவனுக்கு இரங்கி, சான்றோனாகிய உங்கள் வரவை அறிவேன் அதனால் இந்த வெறியாட்டுக் கூட்டம் கண்டு அஞ்சற்க என்று அன்புடன் அவருக்குச் சொல்வீராக என்றனர். அது மட்டுமல்ல முருகா, இருள் வண்ண நீர் சூழ்ந்த இந்த உலகத்தே மிகச்சிறந்தவனான நீ, இவருக்கு வேறு எங்கும் கிடைக்காத, பண்டையச் சிறப்புடைய பெறுவதற்கு அரிய பரிசில்களை அளிக்கவேண்டும்.

 
இந்தக் காட்டின் செல்வம் எப்படியானது….


பல்வேறு துகில்கள் இணைந்த கொடி அசைவது போன்று அருவி பரந்து ஒழுகுகிறது. சந்தன மரத்தை வேரோடு உருட்டிக் கொண்டு வருகிறது. சிறுமூங்கிலைப் பூவோடும் புதரோடும் சாய்த்துக்கொண்டு வருகிறது. விண்ணைத் தொடும் உயர்ந்த மலை முகடுகளில் பாறைப் பொந்துகளில் கதிரவனின் செந்நிறத்தை ஒத்த தேன் கூடுகள் இருக்கும். அந்த அலரித்தேன் சிதையப் பாய்ந்து வருகிறது. ஆசினிப் பலாவின் பழுத்த பழங்கள் அருவியின் வேகத்தில் உடைந்து அதன் சுளைகள் கலந்து பாய்ந்து வருகிறது.

 
மணம் மிக்கச் சுரபுன்னையின் பூக்கள் உதிரும்படி மோதித் தாக்கிக் கொண்டு அருவி நடக்கிறது. அதன் வேகத்தையும் வென இரையும் அதன் ஓசையையும் கண்டு பருத்த முகமுடைய முசுக் குரங்குகள் நடுங்குகின்றன. முகமெங்கும் புள்ளிகளை உடைய பெண்யானைகளுக்கும் குளிரெடுக்கும் படி அருவியிலிருந்து திவலைகள் வீசுகின்றன. அருவியை நெருங்கி நிற்கின்ற ஆண் யானைகளின் தந்தங்களின் மீது நீர் மெல்லிய அலையாகத் தத்துகிறது. மழைவெள்ளம் பொன்னிறத்திலும், ஊற்றுநீர் மணிநிறத்திலும் அமைந்து பொன்போன்ற விலைமதிப்புள்ள பொருள்களை ஈர்த்துக்கொண்டு பாய்கிறது.

 
வாழைமரத்தை அடியோடு சாய்த்து உருட்டிக் கொண்டு வருகிறது. தென்னை மரத்தைத் தாக்கும்போது உதிர்ந்த இளநீர்க்குலைகளைப் புரட்டிக்கொண்டு வருகிறது. மிளகுக்கொடி மிளகுக் குலையோடு சாய மோதுகிறது. புள்ளி மயில் மருண்டு தன் கூட்டத்தோடு ஓடப் பாய்கிறது. காட்டுக்கோழிகளும் அவ்வாறே ஓடும்படி பாய்ந்து வருகிறது.

 
காட்டுப்பன்றியும் அதனை அடித்துத் தின்னும் புலியும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி ஒரே குகையில் அடைந்து கொள்ளும்படி அச்சமூட்டுகிறது அருவி. ஆமா என்னும் காட்டாட்டுக் கடாக்கள் வெள்ளத்தைக் கண்டு அஞ்சித்தம் பெண் ஆமாக்களை அழைக்கும் வகையில் அழைப்பொலியை எழுப்பும்படி வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

 
இழும் என்னும் ஓசையுடன் இறங்கிப் பாயும் இத்தகைய அருவிகளைக் கொண்டதுதான் பழமுதிர் சோலைமலை. அந்தச் சோலைமலைக்கு உரிமை பூண்ட பெரு மன்னன் எங்கள் முருகன்
என்று எல்லோரும் குறிஞ்சி முதல்வன், கொற்றவை சிறுவன் மூத்தோள் குழவி முருகனை வாழ்த்திப் பாட வெறியாட்டு இனிதே நிறைவடைந்தது.

'நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்

நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு

புரையுநர் இல்லாப் புலமை யோய்!'எனக்.     280

குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்

வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்

சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,

'அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்

பெரும!நின் வண்புகழ் நயந்'தென 285

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்      

தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்

வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி

அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்

மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி,     290

'அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர'வென

அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று

இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து

ஒருநீ யாகித் தோன்ற விழுமிய

பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன்     295

வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து

ஆர முழுமுதல் உருட்டி வேரற்

பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு

விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த

தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல.    300

ஆசினி முதுசுளை கலாவ மீமிசை

நாக நறுமலர் உதிர ஊகமொடு

மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்

இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று

முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று 305

நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா

வாழை முழுமுதல் துமியத் தாழை

இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்

கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற

மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக். 310

கோழி வயப்பெடை இரியக் கேழலொடு

இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன

குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்

பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு

ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று    315

இழுமென இழிதரும் அருவிப்

பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

=================================

**திருமுருகாற்றுப்படை முற்றிற்று**

=================================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்