Friday 11 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 4 . பறை

 No photo description available.

தமிழர் வாழ்வில் அறிந்துகொள்ள இயலாத காலந்தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிற தோல்கருவிகளில் முகாமையானது “பறை”. மிக எளிமையான, சிக்கலற்ற, இசைக்கருவி இது. வேட்டைச் குமுகமாக மாந்தன் வாழத்தொடங்கிய காலத்தில் இது தோன்றியிருக்கலாம்.
“பறை” என்ற சொல்லுக்கு வட்டம், சொல்லுதல், அறிவித்தல் போன்ற பழம் பொருள்களும் உண்டு. அதுவல்லாது எல்லா தாளக்கருவிகளுக்குமான பொதுப்பெயராகவும் "பறை" எனும் சொல் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
தொகாப்பியம் காட்டும் கருப்பொருள்களில் 
 
முல்லை - ஏறுகோட்பறையும்
குறிஞ்சி - தொண்டகப் பறையும் வெறியாட்டுப் பறையும்
பாலை - ஆறலைப் பறையும் சூறைகொண்ட பறையும்
மருதம் - நெல்லரிப் பறை
நெய்தல் - நாவாய்ப் பறை (தொல்.பொருள். இளம்.2005: 17-18)
ஆகியவை ஐந்து நில குமுக மாந்தர்களின் பறைகளாகச் சொல்லப்படுகிறது. 
 
வேட்டைக் குமுகத்தில் உருவாகி, வேளாண் குமுகத்தில் பலவித மாற்றங்களையும் பெற்று உயர்ந்த பறை, இன்று வணிக உலகத்தில் தடுமாறும் நிலையை எய்தியிருப்பது கவலைக்குரிய ஒன்றே. 
 
==============================
 
“... ... ... ... ... மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்” (அகநா. 211: 2-3)
"சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும் ... ... ... ... ... ” (மலைபடு. 343 -344)
“குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும்” (நற். 4-6)
கறங்கபறைச் சீரின் இறங்க வாங்கிக்
களைகால் கழீஇய பெரும்புன வரகின்’(அகநா. 194: 7-9)
"ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிப்பறை” (மது. 261-262)
"கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப் புந்து” (புறநா. 396 : 3-4)
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. ( திருமுறை 1.45.6 )
கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. ( திருமுறை 1.86.1 )
==================================
 
இப்படி தமிழர் வாழ்வில் எல்லா இடங்களிலும் “பறை”யின் ஓசை இழைந்ததை, ஒலித்துக் கலித்ததைச் சுமந்து கொண்டு நிற்கின்றன நம் செவ்விலக்கியங்கள். குறிஞ்சியின் வெறியாட்டுக் களங்களில் முழங்கிய பல்லாயிரமாண்டு “பறை”யை அடுத்த தலைமுறைக்கு கடத்தாது போனால் நம் வாழ்வு வீணே.
===================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்