Friday 11 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 6 . யாழ்

 Image may contain: text that says 'II. வில் யாழ் III. ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் னி ருந்த யாழ்க் கருவி m ரு2 படங்கள் ஐயா விபுலானந்த அடிகளின் "யாழ்நூல்" தமிழாடும் முன்றில் யாழ் IV. சீறி யாழ் A. சகோட யாழ்'

செவ்விலக்கிய மலைச் சாரலில் ஓயாது பொழிந்துகொண்டே இருக்கிறது யாழ் எனும் பெருங்கருவியின் இசை மழை. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் வரிகளுக்கும் மேலாக ஊடாடி காதலையும், ஊடலையும், பசியையும், பெருமையையும், இறுமாப்பையும், கொடை மடத்தையும் பல்லாயிரமாண்டுகளாய்த் தமிழரிடையே இசைத்துக் கொண்டே இருக்கின்றன அவற்றின் நரம்புகள். கால மாற்றத்தில் உருவம் காணாது போய்விட்டாலும் முடத்தாமக்கண்ணியின் சீரிய விரல்கள் சுண்டியிசைக்க, மாமன்னன் கரிகாலன் வாள் மறந்து மயங்கி நிற்க, பேரியாழொன்றின் நரம்பிலிருந்து எழுந்த மெல்லிசை இன்னும் அடங்கவில்லை.
 
தமிழரின் அறிவில் கிளைத்த இசைக்கருவிகளில் தலையாயது யாழாக இருத்தல் வேண்டும். இசையின் நுண்ணறிவை பெருங்கருவியாக்கி, பல்வேறு பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர் தமிழர். இசைவாணர் இன்னும் வியக்கும் அதன் பண்ணமைதி மிகச்சிறப்பானது.
 
செவ்விலக்கியப் பாடல்கள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ள, மூவகை யாழ் பற்றிய குறிப்புகள் வருமாறு :- 1. வில்யாழ், 2. சீறியாழ், 3. பேரியாழ்.
வரலாற்றிற்கு எட்டாத தொன்முது காலத்தே அமைக்கப்பெற்ற நரம்புக்கருவியே வில்யாழாகும். வில்லின் நரம்பினை (நாணினை); நெருடுங்கால் விளைந்த இன்னிசையொலியே பல்வகை யாழ்க்கருவிகளின் வளர்ச்சிக்கு அடிகோலின என்று இசை வல்லுநர் இயம்புவர். 
 
இது பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மொழிவது :-
"நரப்புக்கருவி வில்நாண் ஒலியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிதலால், வில்யாழே முதன்முதல் தோன்றிய யாழ்வகையாக இருத்தல் வேண்டும்" (மறுப்புரை மாண்பு.பக்.121);. 
 
முற்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்கள், துறைக்கருவியாகிய வேய்ங்குழலையும், நரம்புக்கருவியாகிய யாழையும் துணைக்கொண்டே குரல் முதலிய ஏழிசைகளையும், குற்றமற ஆராய்ந்து, பெரும்பண்களை அமைத்துள்ளனர். இப்பண்களின் வழிப்பிறக்கும் திறங்களை ஒர்ந்துணர்ந்து இசை நுணுக்கங்களை இனிமை பொருந்துமாறு இசைத்து வகைப்படுத்தியுள்ளனர். 
 
மிகச்சிறந்த இனிமையை வகைப்படுத்த பேராசான் வள்ளுவரும்
"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
என்று யாழையும் குழலையும் இணைத்துக் கொள்கிறார்.
 
முற்காலத்தில், யாழ்க் கருவியை நிலைக்களனாகக் கொண்டே பெரும்பண்களும், அவற்றின் திறங்களும் தெளிவாகத் தெரிந்து வகைப்படுத்தப்பட்டன. யாழ் நரம்பின் துணைகொண்டு, நுணுகி ஆராய்ந்து கண்ட பண் வகைகளைத் தொல்காப்பியர், "யாழின் பகுதி" (தொல்.அகம்.15); என்றும், அப் பண்களின் பாங்கினையும், இயல்புகளையும் திறம்படத் தெரிவிக்கும் இசை நூலை, "நரம்பின் மறை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“மாந்தரிடையே இன்று பயன்பாட்டிலுள்ள அனைத்து நரம்புக் கருவிகளுக்கும் பிறப்பிடம், யாழே யாகும். முதல் மூலநரப்புக் கருவியாகிய யாழனின்றே, நரம்பிசைக் கருவிகள் அனைத்தும் தோன்றின” என்பது பாவாணர்தம் கருத்தாகும்.
 
அதனால்தான் மொழிஞாயிறு "யாழ் என்னும் தமிழ்ப்பெயர், பண்டைக்காலந் தொட்டு, தமிழ் நாட்டில் மட்டுமின்றி, ஞாலமெங்கனும், முக்காலும் வழங்கும், நரப்புக் கருவி கட்கெல்லாம் பொதுப்பெயர்" என்று குறித்துள்ளார். மேலும் அவர் கூறுங்கால், "ஒரு நரம்புள்ள சுரையாழ் முதல் ஆயிரம் நரம்புள்ள, ஆதியாழ் வரை எல்லா நரப்புக் கருவிகளும், கழக இலக்கியப் பனுவல்களிலும், அதற்கு முன்னர் இயற்றப்பட்ட பாடல்கள் பலவற்றிலும் யாழ் என்றே குறிக்கப்பட்டுள்ளன. யாழ் என்னுஞ் சொல்லைச் சிறப்புப் பெயராகக் கொண்ட எந்தவொரு தனிக்கருவியும் கடைச் சங்க காலத்திருந்ததில்லை. அன்றிருந்த பல்வகை யாழிற் தலைசிறந்தது, செங்கோட்டு யாழேயாகும். வீணை என்பது, செங்கோட்டியாழையே குறித்து வழங்கிற்று. 
 
யாழைக் குறித்து வழங்கிய பல்வகைப் பெயர்களுள், வீணையும் ஒன்று. யாழ் வேறு, வீணை வேறு என்பது, இருவகையில் தவறான திரிபுக் கொள்கை என்றும் அறிந்து கொள்க". யாழ் என்னும் தென்சொல், பிற்காலத்து வழக்கற்றதினாலேயே, முற்காலத்தில் சுரையாழ் என வழங்கியது.
யாழ், வீணை என்னும் இரு சொற்களும் ஒருபொருட் கிளவியாய், ஒரே கருவியையே குறிக்கும். இசை நுணுக்கமறியாதோரே யாழ்வேறு, வீணை வேறு என்பர். 
 
பண்ணிசைத்தற்குரிய பண்டை யாழ் வகைகளுள், செங்கோட்டியாழ் ஒன்றே, இன்று சிறிது, உருக்கரந்தும், பெயர் மாறியும் வழங்கி வருகின்றது. நரம்பு அல்லது கம்பி கொண்ட இசைக் கருவிகளெல்லாம், தமிழில் யாழ் என்றே பெயர் பெறுதற்குரியன (மறுப்புரை, மாண்பு. பக்.122);. 
 
யாழ் என்பது, ஒரு தனிப்பட்ட கருவியின் சிறப்புப் பெயராகாது. அது தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக் கருவி, கஞ்சக் கருவி என்னும், நால்வகைக் கருவியுள், நரப்புக் கருவியையெல்லாம், பொதுப்படக் குறிக்கும் பொதுப் பெயராகும். இப்பாகுபாட்டின்படி இற்றை வீணையும் ஒருவகை யாழாயிருக்க அதை மட்டும், எங்ஙனம் வேறு பிரித்துக் கூற முடியும்.
பண்ணைக் குறித்த யாழ் என்னும் சொல் 'ஏழ்' என்பதின் திரிபு. யாழ் என்னும் நரம்புக் கருவி. தோன்று முன்னமே குறிஞ்சியாழ், பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ் என்னும் சொல் வழங்கியது. 
 
கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை எழுப்புதல், எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ். ஏழ் = இசை. இசைச் சுரங்கள் ஏழு. 'ஏழிசைச் சூழல்', 'ஏழிசை வல்லபி என்னும் வழக்குகளை நோக்குக. 'ஏழ்' என்னும் இசையின் பெயர் அதன் கரத்தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது. நரம்புகளாற் கட்டப்பெற்றதும், மரம் (தந்தம்); மருப்பு, தோல் போன்றவற்றால் நன்கு பொருத்தப் பெற்றதுமான இசைக்கருவி. 
 
அடியார்க்கு நல்லார் யாழ்பற்றிக் கூறுவது :- யாழ் நால்வகைப்படும்; அவை பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பன. இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழிற்கு இருபத்தொன்றும், மகாயாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினாறும், செங்கோட்டி யாழிற்கு ஏழும் கொள்ளப்படும் (அடியார்க்கு நல்லார். சிலம்பு.3:26);.
யாழுருவங்கள் அனைத்திற்கும் வில்யாழே மூலமாகும். தேவநேயர்தம் கருத்தும் இஃதேயாகும்.
 
இதனையடியொற்றியே சீறியாழ், பேரியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் முதலாக ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் யாழ் ஈறாக, எத்தனையோ யாழமைப்புகள் நரம்பிசை வல்லுநர்களால் நன்கு இசையறிவிற் தேர்ந்து தெளிந்துணர்ந்து வடிவமைக்கப்பட்டன. 
 
இடையனொருவன், உள்ளே துளையுடைய குமிழ மரக்கொம்புகளை வில்லாக வளைத்து, மரல்நார்க் கயிற்றினை நரம்பாகக் கட்டித் தானே செய்து கொண்ட வில்யாழில், குறிஞ்சிப்பண்ணை இசைத்து இன்புற்ற நிகழ்வினைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார், தாம் பாடிய பெரும்பாணாற்றுப் படையில் பேசுவது வருமாறு :- 
 
"ஞெலிகோற் கொண்ட பெருவிரல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கிருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையிற் குமிழின்
புழற் கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பு
வில்யா ழிசைக்கும் விரலொறி குறிஞ்சி"
 
வில்யாழின் இசையானது, வண்டுகளின் இன்னொலியை ஒத்தது. அண்மையிலுள்ளோர் செவிக்கே புலப்படும் தன்மைத்து. வில்லாக வளைக்கப் பெற்ற குமிழங் கொம்பும், அக்கொம்பினுள்ளே அமைக்கப்பட்ட சிறுதுளையும், நரம்பின் ஒலியை, ஒரு குறிப்பிட்ட அளவே பெருகச் செய்தன. 
 
யாழ் அமைப்பு :- வில்யாழின் இன்னிசைப் பெருக்கினை இனிதுணர்ந்த இசைவல்லுநரும், இசைக் கருவியாளரும், பின்வருமாறு வில்யாழினை வடிவமைத்தனர். முதற்கண் நல்ல விளை நிலத்தில் விளைந்து நன்கு பருத்து முற்றியதும், மாசுமருவற்றதும், வண்டுகள் துளைக்காத தன்மையுள்ளதுமான குமிழ மரத்தைத் தெரிவுசெய்தனர். பின்னர் அம்மரத்தினை வேண்டிய அளவுக்குத் துண்டாக அறுத்தனர். அதன்பின் அறுத்த மாத்தினொரு பகுதியை, உள்ளே குடைந்து வெற்றிடமாக்கினர். மரத்துண்டின் மேற்பரப்பினைத் தோலினால் மூடினர். குமிழ மரத்தில் தோல் நன்கு இறுகிப் பொருந்தும்படி ஓரங்களில் சிறிய அணிகளை முடுக்கிப் பத்தர் என்னும் யாழுறுப்பினை அமைத்தனர். பின்பு, பத்தரிலும் கோட்டிலும் நன்கு பொருந்தும்படி, நீளத்தாற் சிறியனவும், பெரியனவும் அகிய நரம்புகளை அளவறிந்து இணைத்துக் கட்டி, யாழினை வடிவமைத்தனர். இவ்வாறு வடிவமைத்த யாழில், முதற்ண் பண்டைக்காலத்தே. மாட்டின் நரம்புகளைத் தெரிவு செய்து, இசை நரம்புகளாக அமைத்தனர். 
 
காலப்போக்கில் மாட்டின் நரம்புகள் மழையாலும், வெயிலாலும், நெகிழ்ந்தும். இறுகியும், அடிக்கடி குரலோசையை (சுருதியை); வேறுபடுத்திக் காட்டியதால், குழலோசையின் துணையுடன், யாழ் நரம்பிற்கு இசைகூட்டி, மகிழ்ந்தனர்.
( குமிழமரம் - தேக்கின் ஒரு வகை )
 
==============================
 
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திலேயே யாழின் இசைக்கூறுகள் குறித்த நூல்களும், தமிழிசை நாடக நூல்கள் வழக்கொழிந்திருக்கலாம். அதனால் சிலம்பு அச்சுப்பதிப்பாக வந்தபோது அதிலிருந்த இசை நுணுக்கங்களை உணர்ந்து துய்க்க இயலாது தமிழறிஞர் திகைத்தனர். ஆனால், “நரம்பின் மறை” என தொல்காப்பியரால் சொல்லப்பட்ட யாழ் குறித்தான “யாழ்நூல்” எனும் பெரும் ஆய்வுநூலைப் படைத்து அன்னைக்குச் சூட்டினார் ஈழத்தில் பிறந்த விபுலானந்த அடிகள்.
 
தமிழர்தம் உள்ளத்தின் அடியாழத்தில், யாரோ விரல்தொட்டு இசையெழுப்பக் காத்துக்கிடக்கிறது…
“எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல” … நரம்புகளைக்கொண்ட, அதன் இசைச் செறிவால் ஈர்க்கப்பட்டு, பொருநனுக்கு பொற்றாமரையைப் பரிசளித்து அவன் பின்னே ஏழடி நடந்து சென்று மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்த கரிகால்சோழனின் உள்ளங் கவர்ந்த பேரியாழ்.
===================

 

 

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்