Friday 11 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 7 . எக்காளம் / நமரி

 

 Image may contain: one or more people, text that says 'எக்காளம் / நமரி தமிழ்நாடு தமிழாடும் தமிழாடும்முன்றில் மன்றில் இமாச்சலம் நேபாளம்'

விலங்குக் கொம்புகளின் ஓசை பிடித்துப்போக, மாழைகள் / உலோகங்கள் குறித்த அறிவு வர வர கொம்புகளை ஒத்த ஒலிதரும் குழல் கருவிகளைச் செய்தனராகலாம். அவற்றைக் “காளம்” என்று அழைத்தனர்.
ஒலி குறித்தான நுண்ணறிவும், உலோகங்களின் கலவைகள் செய்வதில் பெற்ற பேரறிவும் “எக்காளம்” பிறக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஏ + காளம் - எக்காளம் → எக்காளம். ஏ = உயர்வு, நீட்சி. எக்காளம் = நீண்டகாளம் என்னும் இசைக்குழல் : என்று சொல்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
 
எக்காளம் நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி. நாதசுரத்தை போல நான்கு மடங்கு நீளம். அடிப்பகுதி யானையின் கால்கள் அளவுக்கு விரிந்து இருக்கிறது. நடுவே உள்ள இணைப்பு மோதிரம் என்று அழைக்கப்படுகிறது. ஊதலில் தான் வேறுபாடு காட்டலாமே அன்றி கட்டுப்படுத்தும் துளைகள் இல்லை. 
 
எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. சங்கும் கொம்பும் இணைந்து இறுமாப்பைத் தரும் பேரொலி இதிலிருந்து கிளம்பும். போரில், எதிரியின் இருப்பிடம் அறிவித்தலும், வெற்றியின் பின்னே கூத்தாடுதலிலும் “எக்காளம்“ பங்கு வகித்தது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னர் குரவைக்கூத்து ஆடுவர். தொல்காப்பியம் குரவைக் கூத்தினை முன்தேர்க்குரவை பின்தேர்க்குரவை என்ற அடிப்படையில் போர்க்கள ஆடலாக கூறுகின்றது.
 
“குரவை ஆடிய வலம்படு கோமான்
முன் தேர்க் குரவையும்
ஒன்றிய முரவில் பின் தேர்க் குரவையும்”
( தொல் : புறம் - 2ம் சூத்திரம் )
என்ற தொல்காப்பியம் புறத்திணையியலின் இருபத்தியோராம் சூத்திரம் தேரின் கண் வந்த அரசர்கள் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பிலே தேரின் முன்னே நின்று ஆடியது முன்தேர்க்குரவை என்றும் தேரின் பின்னே நின்று ஆடியது பின்தேர்க்குரவை என்றும் பொருள் தருகிறது.
 
வெற்றிக்களிப்பில் வேந்தன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தேர்த்தட்டில் நின்று வீரர்களோடு கையிணைந்து குரவை ஆடுகிறான் என பதிற்றுப்பத்து ஐம்பத்தாறாம் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
 
“ வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
திலங்கும் பூணன் பொலாங்கொடி யுழிஞையன்
மடம் பெரு மையி னுடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே........” (பதிற்றுப்பத்து)
 
மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லிமலை நாட்டை வென்ற பின்னர் போரில்லாது போனதால் அவனது மக்கள் வருந்தினராம். வருத்தம் சினமாக மாற குரவை ஆடினார்கள் என்கிறது புறநானூற்றின் 22வது பாடல்.
 
“குற்று ஆனா உலக்கையான்
கலிச் சும்மை வியல் ஆங்கண்,
பொலந் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க;” (புறநானூறு)
 
இக் குரவைக் கூத்தானது போர்க்கள ஆடலாக ஆடப்பட்ட போது சூழலைப் பொறுத்து மிகவும் கடுமையாவும், வேகம் நிறைந்ததாகவும் ஆடப்பட்டிருப்பதையும் ஆடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை மற்றும் இசை வாத்திய கருவிகள் அனைத்தும் போரினைப் பின்னணியாகக் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது. 
 
“மாற்றான் ஒடுக்கமும் மன்னர் உயர்ச்சியும்
மேற்பகக் கூறும் வென்றிக் கூத்தே” என்று சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையும் குரவைக்கூத்துக்கு போர்க்களப் பெயரும் பகர்கிறது.
 
வெற்றியின் ஒலியாக இருந்த “எக்காளமே” பின்னாளில் ‘எக்காளமிடுகிறான்” என்ற சொல்லாடலையும் தோற்றுவித்திருக்கும்.
 
இப்படி வீர மரபில், போர் நுணுக்கங்களில் பயன்பாட்டிலிருந்த எக்காளம் கால மாற்றத்தில் கோயில் வழிபாட்டு ஊர்வலங்களில் இசைக்கப்படும் கருவியாக மாறிப்போனது. இன்றும் பல இடங்களில் ஊர்க் கோயில் தெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் அல்லது மருளாடுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும் எக்காள இசையின் பங்கு முகாமையாகவே இருக்கிறது.
 
எக்காளம் வேறு பெயர்களில் சில உருவ வேறுபாடுகளுடன் இந்தியா முழுவதிலும் மற்றும் நேபாளத்திலும் பரவலாக புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் தான் அழிவின் விளிம்பில் உள்ளது. 
 
நேபாளத்தில் “பஞ்ச் பாசே” என்ற அவர்களின் பாரம்பரிய ஐந்து இசைக்கருவிகளில் ஒன்றாக ”கர்னால்” என்ற பெயரில் எக்காளம் திகழ்கிறது. இமாச்சலத்தில் இக்கருவி ”தொங்கரு” என்று அழைக்கப்படுகிறது.
 
பண்பாட்டுக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள், குலதெய்வ வழிபாடுகள் மறக்கப்படுதல், நமது அறியாமையால் ஊர்க்கோயில்களில் நிகழும் சமற்கிருத நுழைவு, அயல் பண்பாட்டுக் கூறுகள், படையலிடுவதை மறத்தல் போன்ற இன்னபிற காரணக்களால் ஆங்காங்கே ஒலிக்கும் “எக்காளமும்” காணாது போய்விடலாம். காப்பது நம் கடமை.
==============================
 
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம்
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518
சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181
(திருமுறை)
======================

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்