Monday 14 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 9 . குடமுழா / குளிர்



மாந்த இனத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் நிகழ்வுகளில் ஒன்று மண்ணால் பாண்டங்கள் செய்தல். அதனுடைய வளர்ச்சி இசையிலும், இசைக்கருவிகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. உடல் பெரியதாகவும் வாய் குறுகியும் உள்ள மண்குடங்களின் வாய்ப்புறத்தில் வெறுங்கையால் தட்டினால் ஓசை எழும். அதன் நீட்சி ஆதிக் குழு இசைகளில் காணக்கிடைக்கிறது.
 
வாய்ப்பகுதில் தோல் கட்டுதல், கட்டாதிருத்தல் என இரண்டு வகையாக இவை இருந்திருக்கின்றன. தோல் கட்டாமல் இசைக்கப் படுபவை முதல் வகையாக இருத்தல் கூடும்.
 
நெல்லை, குமரிப் பகுதிகளில் பரவலாக இருந்த வில்லுப்பாட்டில் வில்லோடு இணைத்துக் கட்டப்பெறும் “குடம்” பாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது. வெறுங்கையால் இல்லாமல் கமுகம் பட்டையால் செய்யப்பட்ட விசிறி போன்ற “பத்தி”யைக் கொண்டு குடத்தின் வாய்ப்பகுதியில் அடித்தும், மற்றொரு கையால் “சொட்டிக்கட்டை” கொண்டு தட்டியும் தாளம் இசைக்கப்படும்.
இந்தக் குடம்; சிறந்த பானை செய்யும் களிமண் கலவையுடன் ( குமரி மாவட்டம் தாழக்குடி, திருநயினார் குறிச்சி, பெருஞ்சவிளை, நெல்லை மாவட்டம் ஏரல் ) முட்டை, பதநீர், கருப்புக்கட்டி ஆகியன சேர்த்து செய்யப்படும். ஒரு குடம் செய்ய 10 முட்டைகள், 2 கிலோ கருப்புக்கட்டி, 1 பக்கா பதநீர் தேவைப்படும். அப்படி செய்யப்பட்ட குடங்களின் மீது சாயம் ஏற்றப்படாத துணியை வேப்பம் பசையைத் தடவி ஒட்டி விடுவார்கள். “பத்தி”யால் அடி வாங்கும் கழுத்துப் பகுதியில் பழைய உடுக்கின் தோல் பகுதியாலோ புதிய தோல் பகுதியாலோ ஒட்டி வைக்கின்றனர். வாய்ப்பகுதி திறந்தே இருக்கும். வாய்ப்பாட்டோடு சேர்த்து இதை அடித்து ஒலிக்கும்போது பேரோசை எழும். 
 
இந்தக் குடத்தின் வாய்ப்பகுதியில் தோலால் மூடி அதைக் கையால் அடித்து இசைக்கும் வழக்கம் தெற்குக் கேரளப் பகுதிகளில் காணப்படுகிறது. பண்டைய சேர நாட்டின் இசை மரபில் இந்தக் “குடமுழவு” தொடர்ந்த பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 
 
இன்றும் வட கேரளத்தில் “புள்ளுவன் பாட்டு” எனப்படும் பழந்தமிழ் மரபு இசை வடிவம் இசைக்கப்படிகிறது. குழ முழவில் நாணேற்றி நாணில் அடித்து இசைக்கும் வழக்கம் கொண்டது அது. (புள்ளுவன் பாடல்களில் பெரும்பகுதி தமிழ்ச்சொற்களே)
 
பறையைப் போலவே ஆதியில் பறவைகள், விலங்குகள் இவற்றை விரட்ட இந்த குழமுழவு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். பின்னர் அது குழுப்பாடல்களில் பின்னிசையாக இடம்பிடித்திருக்கலாம். 
 
பின்னாள்களில் இதுவே சோழ நாட்டில் ஐந்து வாய்களுடனும், ஏழு வாய்களுடனும் செய்யப்பட்டு அதில் தோல்கட்டி இசைக்கப்பட்டது.
ஐம்முக முழவு இன்னும் கோயில்களில் இசைக்கப்படுகிறது.
 
ஒருபுற முழவில் “குடமுழவு” வில்லுப்பாடில் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால் ஏழுமுக முழவம் இசைக்கப்படுவது இல்லை. அது போலவே ஐம்முக முழவமும் இசைக்கும் புலவரின்றிப் போகும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
 
மீளுமா முழவம்?
 
==============================
"முழவிசைப் புணரி எழுதரும்" (நற்.67:11);, 
 
"மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென" (புறநா.50:12);.
 
முழவின் முழக்கீண்டிய" (சீவக.2399);. "முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி" (அகநா.61:15);,
 
"குடமுழாத் திழிலை மொந்தை" (சேதுபு.இராமநா. 65);.
 
"குடமுழவென்பது பயிற்றினேன்" (பெருங்.மகத.14:184);.
 
கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.5 (திருமுறை)
 
தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்
காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்
குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக்
கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. 6.83.3 (திருமுறை)

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்