Saturday, 1 November 2025

உன்னை நினைக்கையில்...

 




எனது முதல் நூல் அச்சாகி வீட்டின் அரங்கிற்குள் வைத்தபோது, நீ படமாகிப்போய் ஐம்பது நாட்கள் ஆகியிருந்தது. என் நூல் வெளியாகும் என்ற எந்த அறிகுறியும் நீ அறிந்திருக்கவில்லை, வெளிப்படுத்தாமல் போன பிழை என்னுடையதுதான். அதனால் அதில் உனக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது. ஆனால், எனக்கு...

எனது ஆறாவது நூலும் வெளிவரப்போகின்றது. ஆகச் சிறந்த ஒரு நேர்மையாளரின் நூலுக்கு உரை எழுதியிருக்கிறேன். நீ இருக்கும் போதே இவையெல்லாம் நடந்திருந்தால் மகிழ்ந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உன் மனப்பாங்கை அப்படித்தான் நான் உணர்ந்திருக்கிறேன். உன் நண்பர்களும், சுற்றமும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னிடமிருந்து வெளிப்படும் கேள்விகள் அத்தனைக் கூர்மையானவை. எடுத்த சில முடிவுகள் கடினமானவை.

கல்லூரியிலும், விடுதியிலும்; நீ அறியாது உன் பெயரெழுதி உன் கையெழுத்தை இட்டபோதெல்லாம் உள்ளத்தின் ஓரத்தில் அச்சமும், மெல்லிய பதற்றத்தையும் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதோ நூலட்டையில் தந்தை என உனது பெயரைப் பார்க்கையில் பெருமிதம் கொள்கிறேன், உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிற மெல்லிய வருத்தத்தோடு...

01-11-2025


Wednesday, 29 October 2025

மெய்யற விளக்கவுரை

 


இன்று மனநிறைவான நாள். இந்த நிறைவை அளித்த பெரியவர் வ.உ.சிதம்பரனாருக்குத் தலை தாழ்ந்த வணக்கம். 

பெரியவர் வ.உ.சிதம்பரனார் இயற்றிய மெய்யறம் எனும் நூலின், மாணவரியல் முழுமைக்கும் விளக்கவுரையை எழுதி முடித்து,  உரியவர்களிடம் சேர்த்துவிட்டேன். அச்சேறி நூலாக வரும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறேன்.

வாழ்க்கைப் பேராறு தன் போக்கிலேயே ஓடிக்கொண்டிருந்தாலும், பல துடுப்புகளின் உதவியோடு என் படகிலேயே பயணம் செய்கிறேன் என்பது பெரும் பேறுதான். இந்தப் பேற்றை எனக்களித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

முகன்மையாக,

எனது எழுத்துகளை முதன்முதலில் நூலாகத் தவழச் செய்த நாகர்கோவில், தெ.தி.இந்துக்கல்லூரியின் மேனாள் தலைவர், அமரர் பெ.ஆறுமுகம்பிள்ளை,

உரையாசிரியனாய் என்னை மாற்றி, நூற்களை வெளியிட்ட நண்பர், திருவானைக்கா திரு ச.முத்துக்குமாரசாமி,

தன்னலம் கருதாத இவ்விருவரின் செயலே இன்று பெரியவரின் 'மெய்யறம்' நூலுக்கு விளக்கவுரை எழுதி முடிக்க முழுமுதற் காரணம்.

இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

தளிகையாக, ஒரே வெண்பா இருவருக்குமாகின்றது.

நான்தேடா நல்லமுது நல்லோர் மகிழ்ந்திருக்க/
வான்வாடா வண்ணமழை வண்டமிழ்க் காதலால்/
தாமாக என்னெழுத்தை நூலாய்ப் பதிப்பித்தக்/
கானுலாப் பாதைக் கதிர்/

என் வலைப்பக்கத்திலும், முகநூல் பக்கத்திலும் எழுதியதியதைப் படித்துக் கருத்திட்ட, அழைத்துப் பேசிய அனைவருக்கும் நன்றி. உங்களது கருத்துகள் என்னைச் செம்மைப் படுத்தியதாலும், மேலும் படிக்கத் தூண்டியதாலும் நிலை உயர்ந்திருக்கிறேன் என்பதில் ஐயமில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெரியவரின் 'பாடல்திரட்டு' நூலின் சில பாடல்களுக்கு உரை எழுதத் தொடங்கியபோது திரு ரெங்கையா முருகன் முகநூலில் அறிமுகமானார். நேரில் சந்திப்பு. உரையாடல்கள்.

ஒருநாள், "பெரியவரின் மெய்யற ஆண்டு இது. மெய்யறம் குறித்து இணையவழியில் பேச இயலுமா?" என்றார். "பேசுவதற்குச் சூழலும், காலமும் இடந்தருமா எனத் தெரியவில்லை ஐயா. உரையாக எழுத முயல்கிறேன்" என்றேன்.

சனவரி மாதம் ஏழாம் தேதி 2025ல் முதல் அதிகாரத்தின் விளக்கத்தை எழுதி அனுப்பினேன். முப்பது அதிகாரங்களுக்கும் விளக்கமெழுதி முடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், நூலளவை விட நெடுங்காலம் எடுத்துவிட்டதுபோல் தோன்றுகின்றது. ஆனாலும் முடித்துவிட்டேன் என்ற மகிழ்வில் குறைவில்லை. தமிழில் துறைபோகிய பெரியவர் வ.உ.சிதம்பரனாரின் மனதோடு மிக நெருக்கமாக இருந்த இந்த நாட்களுக்காக அவருக்கு உளமார்ந்த நன்றி.

பெரியவரால் 1914ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மெய்யறத்திற்கு, நூறு ஆண்டுகள் தாண்டிய பின், முதன்முதலில் விளக்க உரையெழுதும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு திரு ரெங்கையா முருகனுக்கு மனமார்ந்த நன்றி. அவரின் தூண்டுதல் இல்லை என்றால் இது நிறைவுற்றிருக்குமா? என்று தெரியவில்லை. இந்த வேலையின் பின்புலத்தில் இருக்கும் வ.உ.சி ஆய்வுவட்டத்திற்கும், திரு குருசாமி மயில்வாகனன், திரு அறிவழகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

எந்தச் சூழலிலும் என்னோடு உறுதுணையாய் நிற்கும் என் துணைக்கும், அன்பு மகனுக்கும், மருமகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. அவனது திருமணம் நடந்தேறியதும் இவ்வாண்டின் மகிழ்ச்சிகளில் ஒன்று.

எனைப் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் தலைதாழ்ந்த வணக்கம்.

ஐந்து வியாழவட்டம் நிறைவுற்றிருக்கிறது.

"முதலிரண்டு படிப்பில் போக,
மூன்றும் நான்கும் பொருளில் கரைய
ஐந்தில் பிறந்தேன் எழுத்தாய்
அழகிய தமிழ்த்தாய் வளர்த்தனை.

அறிந்தேன் பலவும்
அறிந்தேன் பலரை
அருள் பல பெற்றேன்.

கற்றவை எடுத்து விளம்பிட
உற்றவர் போல் உதவுவோர்
நற்றமிழ் போல் நலமுறுவாரே"


என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்.
29-10-2025

Sunday, 19 October 2025

அடுநறாக் காமம்



பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என் மகனோடு காமத்துப் பால் குறித்து விளக்கமாகப் பேசும் அளவுக்கு என்னைத் தூண்டிய நாமக்கல்லாரின் திருக்குறள் உரை மிகச்சிறப்பானது. அறிஞர் பலர் தொட்டும் தொடாமலும் பொருளுரைத்தக் காமத்துப் பாலுக்கும் சேர்த்து விளக்கம் சொன்ன சீருரை அது.

“மக்கள்‌ சமுதாயம்‌ வாழையடி வாழையாக மகிழ்ச்சியுள்ளதாக நடந்துவர இல்லறத்தை எண்ணியே எழுதப்பட்ட திருக்குறளில்‌ காமத்துப்பால்‌ இல்லாதிருக்க இயலாது. திருவள்ளுவர்‌ சொல்லியிருக்கிற காம இன்பம்‌, விபசாரக்‌ குற்றங்களோடு சேர்த்துப்‌ பேசப்படுகிற காமத்‌ தீமையல்ல. தூயதான காம உணர்ச்சியையும்‌ துப்புரவான காதல்‌ உறவையும்‌ மிக நல்ல கற்பனைக் காட்சிகள்‌ அடங்கிய: நாடகமாக நடத்திக்‌ காட்டப்பட்டிருக்கிற திருக்குறளிலுள்ள காமத்துப்பால்‌ அவமதிப்பான எண்ணத்தினால்‌ அலட்சியம்‌ செய்யப்‌ பட்டிருக்கிறது.

துறவிகள்‌ காமத்தை விலக்க வேண்டுமென்பதற்காக அவர்கள்‌ காமத்தைக்‌ குறைத்துப்‌ பேசுகிறார்கள்‌ என்பதைப்‌ பொறுத்துக்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌ அவர்களுங்கூடப்‌ பெண்பாலை இகழ்த்து பேசுவது குற்றமாகும்‌. காமத்துக்குக்‌ காரணமும்‌ பொறுப்பாளிகளும்‌ பெண்கள்‌ மட்டுந்தானா?

முற்றுந்துறந்த முனிவர்கள்‌ கூட அடக்க முடியாமல்‌ அவதிப்படுகின்ற காமத்தை துறவிகள்‌ அல்லாதவர்கள்‌ மிக சுலபமாக, அலட்சியமாகத்‌ திருக்குறளில்‌ காமத்துப்பால்‌ இல்லாமல்‌ இருப்பது சிறந்தது என்று சொல்லத்‌ துணிகின்றார்கள்‌. திருக்குறளில்‌ துறவறம்‌ கூறப்பட்டிருக்கின்றது. அதே சமயம்‌ இல்லறத்தைக்‌ கருதித்தான்‌ வள்ளுவர்‌ திருக்குறளை எழுதியிருக்கிறார்‌ என்பதில்‌ அணுவளவும்‌ ஐயமில்லை.

இவ்வகையான இல்லநலத்திற்குக்‌ காமம்‌ அடிப்படையான ஓன்று. அறம்‌, பொருள்‌, இன்பம்‌ மூன்றும்‌ சேர்ந்ததுதான்‌ வாழ்க்கை. மூன்றில்‌ ஒன்றை விலக்கினாலும்‌ வாழ்க்கை செம்மையாக இராது. காமத்தை. விட்டொழித்த துறவிக்கு அறம்‌ ஒன்றைத்தவிர மற்ற இன்பம்‌, பொருள்‌ என்ற இரண்டும்‌ இல்லை. அந்த அறமும்கூடத்‌ தன்‌ உடலையும்‌, மனத்தையும்‌ பற்றிய துறவு ஓழுக்கமேயன்றிப்‌ பிறருக்குச்‌ செய்ய வேண்டிய அறம்‌ ஒன்றும்‌ துறவிக்கு இல்லை. இப்படியான நாமக்கல்லார் தரும் ‌ காமம்‌ பற்றிய விளக்கமே, பண்பாடு மாறினாலும்‌ அடிப்படை உணர்வுகள்‌ என்றும்‌ மாறா என்பதை உணர்த்துவதாக என் உள்ளத்தில் நிலைபெற்று; அவரை எண்ணும்போது அவரது அறிவுத்திறத்தை போற்றிச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. அதன் விளைவே,

அடுநறாக் காமம் அசைத்தெனக்கு
படுகிழவன் குறட் பொருளின்
கடுமை வழி சீர்செய்தாய் இல்லையெனில்,
வாலெயிறு ஊறியநீர் வீணே
வடியக் கண்டிருப்பேன் அன்றி
உமை
வாழி என்பேனோ! " என்ற நேற்றைய வரிகள்.

(சொற்பொருள்
அடுநறா - காய்ச்சிவடித்த சாராயம்
படுகிழவன் - வள்ளுவர்
கடுமை - கடினமான
வாலெயிறு - வெண்மையான பற்கள்)

அறிஞர் பலரால் அடுநறா போன்று காமத்துப் பால் சொல்லப்பட்டிருந்தது. அதாவது, தேவை கருதி, வலிந்து எடுத்துக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதான பொருளில் கூறப்பட்டிருந்த்தது. அவர்தம் பார்வையில் காமத்துப்பால் இன்றி வள்ளுவம் இருந்தால் சிறப்பு. வள்ளுவரை துறவியாக, வெறும் அறிவுரை சொல்லும் ஆசிரியனாகக் காட்டப்பட்டத் தலைமுறையில் பிறந்தோரில் நானும் ஒருவன். நாமக்கல்லாரின் குறளுரை (எளியவுரை அல்ல) படித்த பின்பு, இசைபட வாழ்ந்த வள்ளுவரை, பொருட்செறிவு மிக்க அவரது குறளை அறியத் தடையாய் இருந்த வழி சீரானது.

இல்லையென்றால் வாலெயிறு ஊறிய நீர் எனும் சொற்றொடரை பொருளற்றுக் கடந்திருப்பேன். அல்லது அட்ட சுவை நுகர்ந்து வாயில் ஊறும் நீர் போல என்று கடந்திருப்பேன். நாமக்கல்லார் கொடுத்த தெளிவு மாந்தவியல் நோக்கி நகரும் சிந்தனையை விதைத்து, குறளின் ஆழம் நோக்கி பயணிக்கத் தூண்டியது. அந்த பயணத்தில் நான் எதிர்கொண்ட, என் வாழ்வில் தவிர்க்கவியலாத குறட்பேராளுமைகள் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம், ஐயா திரு.வி.க, ஐயா வ.சுப.மாணிக்கம் பெரியவர் வ.உ.சி, பேரறிஞர் தேவனேயப் பாவாணர், தமிழறிஞர் க.ப.அறவாணன் போன்றோர்.

இத்தனை அள்ளிக்கொடுத்த நாமக்கல்லாரை வாழி! வாழி! என வாழ்த்தாமல் போனால் நானறிந்த தமிழ் நகுமே.

இன்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
19-10-2023
===========================

Wednesday, 1 October 2025

இனியவை 25 - சிறுகதை தொகுப்பு



கொற்றவை முன்செல்ல;

நாடாளும்
கோனுக்கு வில்லும் வாளும்,
கோன் புகழும்
பாணர்க்குப் பறையும் யாழும்,
களமாடுங்
கூத்தர்க்கு மெய்ப்பாடு எட்டும்,
காக்கும்
மருத்துவர்க்கு இலையும் வேரும்,
எமக்கோ,
கோலும் எழுத்துமே
ஆய்தம்.
===============================
இனியவை 25.
இனிய இருபத்தைந்து கதைகளின் தொகுப்பு, புத்தகமாக...
இரண்டாம் பரிசு பெற்ற எனது கதையும் இடம்பெற்றிருக்கிறது.

நேற்று கையில் கிடைத்தது.
நன்றி - Kyn Hood Productions.
01 - 10 - 2025 - ஆய்த பூசை.

தோழர் தி.மா.ச. நினைவேந்தல்


காலை நேர மேற்குவானில் வெள்ளை யானை ஒன்று தும்பிக்கையைத் தூக்கி நீர் பீய்ச்சுவது போன்ற மிகச் சரியான தோற்றம் கண்டு, குழந்தைக்குக் காட்டிவிடவேண்டுமென்று வீட்டுக்குள் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கி வந்து காட்ட முனைகையில் காற்றில் கலைந்து போன மேகத்தைப்போல காற்றோடு போய்விட்டது தி.மா.சரவணன் அவர்களின் பெருவாழ்வு. எதற்கு என்னைத் தூக்கிக்கொண்டு இவ்வளவு வேகமாக ஓடிவந்தாய் என்ற கேள்வி நிறைந்த குழந்தையின் பார்வைக்கு விடைசொல்லத் தெரியாமல் விழிபிதுங்கும் தந்தையின் நிலையில் என் போன்றோர் உள்ளம்.

சிற்றிதழ் சேகரிப்பு. பரவலாக அறியப்பட்ட செயலா என்றால்; சிலர் ஆம் என்று சொல்லலாம். பலர் இல்லையென்றும் சொல்லலாம். எதற்காக இந்த சேகரிப்பு அல்லது இந்த சேகரிப்பால் சமூகத்திற்கு என்ன நன்மை விளையும் என்று கேட்டால் பெரும் பான்மையோர் உதட்டைப் பிதுக்குகிறார்கள். அல்லது “யோசிக்க வேண்டும்’” என்று விடையிறுக்கிறார்கள். அவரோ இருபைத்தைந்து ஆண்டு காலம் இதழ் சேகரிப்பையே தன் வாழ்நாளின் முகாமையான பணியாகக் கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறாயிரம் இதழ்கள், சில அரிய நூல்கள், நாளேடுகள் என அவரது “கலைநிலா நூலகம்” இதழ்களால் நிறைந்து கிடக்கிறது. என்னதான் செய்து கொண்டிருந்தார் அவர்.

Friday, 26 September 2025

வீரவணக்கம்


கண்ணறியாக் கருக்குழியின் 
காரிருளில்,
முகமறியாக் காலத்தின்
முலைப்பாலில்,
விடுதலையைத் தேடி;
விழி திறந்து,

பேராறுகளெல்லாம்
வாய்பிளந்து பார்த்திருக்க,
விழி மூடாது மரணித்த,
மாந்தரினத்தின் 
மாபெரும் ஆயுதமே
வீரவணக்கம்.

ஊரெழுவில் உயிர்த்து
நல்லூரில் உயிரடக்கி
தமிழினத்தை உயிர்ப்பித்த
தலைமகனே!

தீர்ந்துவிடவில்லை
இன்னும் 
விடுதலையின் வேட்கை.

====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
26-09-2020
====================

Thursday, 21 August 2025

இல்லாதது



எப்பொழுதும்

இல்லாதவற்றின் மீதே

பேராவல் எழுகிறது.


பெருநகர அடுக்ககத்தின்

பேதை மனத்தில்

தற்சார்பும்,


சிற்றூர்க் குறுந்தெருவின்

சீரிய மனத்திலெழும்

அடுக்ககக் கனவும்.


Wednesday, 13 August 2025

தண்டமிழ்ப் பாடல்

முன்பே எழுதிய ஒரு பாடல் செய்தெள்ளிகை (Artificial Intelligence) உதவியால் இசையமைக்கப்பட்டது. பாடல் வரிகளுக்கு நிகரான காட்சி அமைப்புகளை எழுதிய பின் செய்தெள்ளிகை உதவியால் காட்சிகளாக உருமாற்றப்பட்டு அனைத்தையும் இணைத்த விழியம் இது.






Sunday, 20 July 2025

செம்மலின் நேர்மை

 


(இணைக்குறள் ஆசிரியப்பா)

வான்வளி தன்தொழில் மறந்து  வானின்று

தான்பொழி நன்முகில் பொய்த்து நெடும்புனல்

அழுவத் துநீர்மை குறைந் திடினும் 

விழுமியர் வஉசி உளங் கொண்ட 

நேர்மை குன்றா தென்பது 

சீர்மை மிக்க உயர் வாழ்வால் 

அறிந்த திவ்வுல கவர் தீரா 

உறுதியொ டுவாழ்ந்து மறைந்த பின்னே.


நெடுங்கடல் வ.உ.சி


மேலே சீறும் பேரலைகள், 

அடிவயிற்றில் 

அறிவின் பேரமைதி.


உதவும் மனத்தொடு 

உப்பு தொடங்கி

ஓருநூறு பொருட்கள்.

முத்து பவளமென

ஆழிப் பெருஞ்செல்வம்.


உவர்நீர் நடுவே

நன்னீர் போலே

சொத்திழந்த போதும் 

விருந்தளித்த மேன்மை.


கண்ணூர்ச் சிறையின்

கம்பிகளுக்கு நடுவே

வரும்

தலைமுறைக்குக் கையளித்தத்

தமிழ்ச்செல்வம்.


உணவும் இடமும்

உடுத்தும் உடையும்

நிலையில்லாதபோதும்

உரிமை இழந்தவர்

குரலாய் ஒலித்த வீரம்.


பெரியவர் வ.உ.சி

அரிய நெடுங்கடல்.

மூழ்கி எழுவோருக்குப் 

படுபொருட்கள் ஏராளம்.

நாம்தான் இன்னும் 

முழுவதையும் கண்டடைந்தோமில்லை.

Monday, 14 July 2025

நானே... பெய்தேன்





மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் புதுச் சிந்தனைகளைத் தந்தும் இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கின்ற  திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம். பலவாறான கருத்துகளைத் தாங்கிய உரைகள் ஏராளம் கண்டது திருக்குறளே. அண்மையில் வள்ளுவத்துக்கு உரையெழுதி வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிறப்புதான். அவரது கருத்துகளும் வளம் சேர்க்கலாம். உருவகங்கள் ஒருவேளை இளையோரைச் சென்றடையலாம். நல்லதுதான். 

ஆனால், தன் உரை குறித்து விளம்பரப்படுத்தும் முகமாக,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் - 55) எனும் குறளுக்கு;

"கடவுளைத் தொழாது கணவனையே தொழுது எழும் இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று காலங்கலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத்தான் ஆளாகும். அந்த சர்ச்சையை என் உரையில் நான் சரி செய்திருக்கிறேன். எழுதியிருக்கிறேன் 'கட்டமைக்கப்பட்டத் தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவனையே தொழுது எழுகின்ற ஒரு பெண், பெய் என்று சொன்னவுடன் பெய்கின்ற மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என்று எழுதியிருக்கிறேன். சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழையில்லை." என ஒழு விழியத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். 

Friday, 11 July 2025

கண்ணகிக் கோட்டம் - எது மெய்?




 முனைவர் துளசி. இராமசாமி எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1987ல் வெளியிட்ட மங்கல தேவி கண்ணகி கோட்டம் (நாட்டுப்புறவியலார் அணுகுமுறை) எனும் நூலில்,

கூடலூர் மக்களுக்குப் பாத்தியப்பட்ட கோவில் போன்று இருப்பது தான் மங்கலதேவி கோட்டம். இம்மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம் என்று முதன்முதலில் உலகுக்குச் சொல்லி வந்தவர்கள் கூடலூர் மக்களாவார்கள்; ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்று இருந்தது; தமிழகத்திலுள்ளவர்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய சங்க மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார்தான் முதன் முதலில் மங்கலதேவி கோட்டம் கண்ணகி கோட்டமாகும் என்று முறையாக அறிக்கைவிட்டு, அதை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கு.காமராசு அவர்களிடம் 1957-இல் முறையிட்டு இக்கண்ணகி கோட்டத்தைச் சீர்படுத்த வேண்டும்; சுற்றுலா மையமாக்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். ஆனால் ஏனோ அவரின் முறையீட்டை யாரும் கண்டு கொள்ள வில்லை.

Thursday, 19 June 2025

இன்னொருமுறை


 


வலிகளுக்கெல்லாம்

அழவேண்டுமெனில்,

சிரிப்பதற்கென்று

இன்னொருமுறை 

பிறக்கவேண்டியிருக்கும்.


 19-06-2020

திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்

 



எல்லோர் வீட்டு வாயிலிலும்
நின்றுகொண்டிருக்கிறது
மரணம்,
ஐயமில்லை.

நாம் எதற்கு
வாயிலைத் திறக்கவேண்டும்?
திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்.
அச்சமின்றி இருங்கள்.
அதுவாக வரட்டும்.
காத்திருங்கள்.

======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
19-06-2021
======================

Saturday, 14 June 2025

தேயா மலை



செம்மறியாடுகள் முட்டிச்
சாய்ந்திட
செம்மண் சுவரல்லடா
தலைவன்;
திரைகடல் பல்லாண்டு
தீண்டியும் தேயாத
திருகோணமலையடா!!

=====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
14-06-2021
=====================

Monday, 9 June 2025

மாம்பாலும் வைகாசி விசாக நாளும்


சென்னையில், ஒரு மணி நேரமாகப் பெருங்காற்றுடன் பெய்து கொண்டிருந்த  சிறு மழையும் ஓய்ந்து மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. மாலை நேரத்து மென் குளிர். படித்துக் கொண்டிருந்த புத்தகப் பக்கங்களுக்கிடையே, உருகிய சருக்கரையில் குழையும் சுக்கின் நறுமணம். கூடவே குமுளிமெட்டின் ஏலக்காய் உடைந்து, கொதிக்கும் அரிசிமாவில் சுருண்டு சுருண்டு எழுந்து காற்றில் தெளிக்கும் நறு நாற்றம். அடுக்களை நோக்கி நடக்கிறேன். உருளியில் மாம்பால் கொதித்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய நார் கொண்ட மாம்பழத் துண்டுகள் கூழில் மேலெழுந்து மேலெழுந்து அடங்குகின்றன.

Friday, 6 June 2025

இத்தனைக் கண்களா? 👀


திரு "சாம்பசிவம் பிள்ளை" தொகுப்பித்த மருத்துவம் மற்றும் அறிவியல்; ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, சித்தமருத்துவத்தில் கண் தொடர்பான சொற்களை வகைப்படுத்தும் போது ஐம்பத்தியோரு வகையான கண்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது.


அவை அமைப்பு மற்றும் நோய் தொடர்பானவை. அறிவியல் அணுகுமுறையிலான இந்த 'வகைப்படுத்தல்' நம் தனிச் சொத்து. இத்தகைய அணுகுமுறையே தொல்கபிலர் போன்றோரின் சாங்கிய / எண்ணியச் சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக இருத்தல் கூடும். தொல்காப்பிய மரபியலும் அதை வழிமொழிவதாகவே காணக்கிடைக்கிறது.

. கண்களின் பெயர்கள்
. ==================

கருடக்கண்,
காக்கைக்கண்,
முண்டைக்கண்,
ஆந்தைக்கண்,
யானைக்கண்,
பூனைக்கண்,
மீன்கண்,
ஓரக்கண்,

Tuesday, 20 May 2025

மரண வாயிலில் இருந்து...



மற்றவருக்கு நிகழ்ந்தபோதெல்லாம்
மரணம் இயற்கையானதென்றே
அறிவு சொன்னது.
அன்று,
சட்டென்று வண்டிமோதிய
ஓசை அடங்குமுன்,
உடைந்த எலும்பின்
உள்ளே தெறித்த வலியின் உணர்வில்
இதயம் ஒருமுறை நின்று துடிக்க,
உச்சந்தலையில் கொட்டிய குருதி
உள்ளங்கையில் ஒழுகி விழ,
கண்கள் கிறங்கி கருமை சூழ்ந்து
தெய்வமே!!!
என்று கேவியழ முனைகையில்
மனிதர்கள் வந்தார்கள்.
இன்று,
உடல் கொஞ்சம் தேறி
உள்ளத்தில் சிந்தனை விரிகிறது.
"மரணத்தின் வாயிலில்
மனிதர்களே தெய்வங்கள்"
வீடு திரும்பியவரின் வாக்குமூலம்.

========================

20-05-2019
(பெரும் விபத்தொன்றில் சிக்கி, அருகில் நின்றுகொண்டிருந்த அறியா மனிதர்களால் மீட்கப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, மீண்டு... இன்று வீடுதிரும்பிய, பக்கத்து வீட்டுப் பெண்மணியின் சொற்கள் இவை)

======================

Monday, 19 May 2025

புத்தகத்திற்கு இப்படியொரு உவமை!


பொதுவாகவே புத்தகம் எனப்படுவது கருத்தாழம் மிக்கதாக இருக்க வேண்டும். அதன் செறிவு படித்து முடித்த பின் உள்ளத்துள் பொருள் சுரந்து அறிவை விரிவு செய்ய வேண்டும்.

அதற்காக; சிக்கலான சொற்களால் எளிதில் படிக்க இயலாமல் இருக்கக் கூடாது. பல புத்தகங்களின் பொதுப்பொருள் படிக்க எளிதாகவும், அதன் உட்பொருள் உணர்ந்து உள்வாங்க அரிதாகவும் இருக்கும்.

இந்தக் கருத்துக்கு ஓர் உவமை சொல்லி எழுதப் பெற்ற நாலடியார் பாடல்  ஒன்று வியக்க வைத்தது. உலகியல் அறிந்து எழுதிய பாடல் இது.

 பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.” (நாலடியார் பாடல் : 317)

 பொருளுரை:  பெறத்தக்கப் பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேம்போக்கான நெறிப்படி படிப்பவர் எல்லோருக்கும் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.

 பொது மகளிர் விரும்பி அதைச் செய்யவில்லை என்பதையும், அவர் நெஞ்சுக்குள்ளே பல கனவுகள், மனக்காயங்கள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே இந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. நூலின் உட்கருத்தை அறிய நூலாசிரியரின் போக்கிலேயே, அவரின் காலத்திற்கே  சென்று  படிக்க வேண்டும். அதுவே சரியான நெறியாகும்.

 செவ்விலக்கியப் பரப்பில் பாக்கள் மிகுதி. பல குறட்பாக்களின் வழியாக இந்த  துய்த்தலின்பத்தை வள்ளுவர் அடிக்கடி வழங்குவார்.

 பொதுமகளிர், பரத்தை போன்ற சொற்பயன்பாடுகளில் சிலருக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், “மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி: (அகநானூறு 146). என்ற வரியிலிருந்து பரத்தன் என்ற சொல்லும் வழக்கிலிருந்தமை அறிய முடிகின்றது.

Wednesday, 7 May 2025

இயலுமா?



மலர்கிறோம் என்பதை

மலர்கள் அறியுமா?


பாய்கிறோம் என்பதை

அருவிகள் உணருமா?


ஓடும் ஆறுகள்

ஓய்வினைத் துய்க்குமா?


தேங்கிய ஏரிகள்

ஓடிட எண்ணுமா?


நூறு கூறாய் நொடியைத் துணித்த,

இம்மியளவு இடைவெளியில்;

உள்ளில் கிளர்ந்த 

மகிழ்வின் நிகழ்வை,


மறுபடியொருமுறை

மனம் பெற இயலுமா?


=========
07-05-2024
=========

Saturday, 3 May 2025

கூட்டுப்புழு

 



இலைகளின் மீது

கவிதைகளாய்ப் படரும்

தூவானக் கண்ணாடிகளில்

முகம் பார்க்கக்

காத்துக் கிடக்கின்றன,

 

இலைகளின் முதுகில்

கூட்டுப் புழுக்களாய்…

பட்டாம் பூச்சிகள்.

 

03-05-2025

Tuesday, 29 April 2025

பாவேந்தர் பிறந்தநாள் 2025



பேனாவுக்குள் பெருங்கடலை நிரப்பி
எழுதிய சொற்களின் ஈரம் காய
புயலை வேலைக்கு அமர்த்தியவன்.
கேட்கும் நொடியில் பாக்களின்
கேடுகள் களையும் மருத்துவன்,
ஆர்த்தெழும் தமிழால் குருதியில்
ஆற்றலைச் சேர்த்திடும் பாவலன்.
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வானம்பாடி வயலுள் மறைந்தன்ன
கழிகடைப் பெண்களின் வீரம்மீள
தீயாய்ச் சொற்கள் கொளுத்தியவன்.
கைம்மை நோற்கும் பெண்களின்
கவலைகள் தீர்க்க முனைந்தவன்
மறுபடி ஒருமணம் புரிந்திட
மனத்தைச் செம்மை செய்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வேனிற்கால வேம்பின் கிளைபோல
உழவிடை மாந்தர்கள் சீரம்சாய
பெயலாய்ப் பாடல்கள் பாடியவன்.
இயற்கை தன்னைக் காதலால்
இயல்பாய் அணைக்கத் துடித்தவன்
நாட்டுப்புறத்தொடு காட்டுக்குறத்தியை
நல்மணம் செய்ய நினைத்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
=======================
சிராப்பள்ளி ப.மாதேவன்,
29 / 04 / 2023
=======================

Sunday, 20 April 2025

வட்டப்பாலை

சிதம்பரத்திற்குச் சென்று விட்டுத் திரும்பிய வெள்ளிக் கிழமை (18-04 - 2025) இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கியது தமிழிசை குறித்தான பேச்சு. நண்பர் முத்துக்குமாரசாமியின் வீட்டின் மேசைமேல் கிடந்த வீணை எசு. இராமநாதன் எழுதிய "சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்" என்ற நூலே அதற்குக் காரணம்.

இசையறிவும், இசைக்கருவிகளை வாசிக்கும் திறனும் இசை குறித்தத் தேடலும் கொண்ட நண்பரோடு தமிழிசை குறித்தப் பேசசு என்பது மகிழ்வூட்டுவது. 

ஆப்பிரகாம் பண்டிதர் - அவர் வழி வந்த இசையாசிரியர் தனராசு - அவர் மாணாக்கர் இளையராசா - அவரை உள்வாங்கிக் கொண்ட முத்துக் குமாரசாமி, நினைப்பதை வாசித்துப் பார்த்து விட எதிரே ஒரு கின்னரப்பெட்டி . தாளக் கருவிகள். ஆம் அது ஒரு அழகிய சூழல்.

உறக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு நூலைப் படித்துப் பேசுவது, குறிப்பெடுத்து இசைப்பது என மூன்றேமுக்கால் மணி நேரம் கடந்து போனது. ஆனாலும் வட்டப் பாலையின் நுணுக்கம் சிக்காமல் இருந்தது. சரி, காலையில் பார்ப்போம் என உறங்கச் சென்றோம்.

காலையில் ஆறு மணிக்கெல்லாம் நூலைக் கையில் எடுத்துக் கொண்டேன். இசைக்கும் எனக்கும் தொலைவு மிகுதி. தமிழோடு கொண்ட காதலே நூலைப் படிப்பதற்கான உந்துதல். இளங்கோவும், அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும் அள்ளித் தெளித்தத் தமிழ்க் குறிப்புகளில் இசைமலர்கள் சிதறக் கண்டேன். பொறுக்கியெடுத்துக் கோத்துக் கோத்து வட்டப் பாலையைக் கண்டடைந்த போது நண்பரும் விழித்தெழுந்து வந்தார். கண்ட வட்டப் பாலையைக் காதுகளில் சேர்த்தார்.
செம்பாலை அறிந்தோம்.

அடியார்க்குநல்லார் அறிவுறுத்த, குரல் துத்தமாய் நரம்பு மாற கின்னரப்பெட்டியில் வல முறைத் திரிபில் படுமலைப் பாலை பிறந்த போது அடடா... உள்ளம் மகிழ்ந்தது.

குரல் கைக்கிளையாகச் செம்பாலை மெல்ல மெல்லச் செவ்வழிப் பாலையாய் ஒலித்த போது கின்னரப்பெட்டியின் கட்டைகளின்மீது முடத்தாமக்கண்ணியும், ஒளவையும் நாட்டியமாடக் கண்டேன். பாணர்களின் தலையில பொற்றாமரை அணிவித்தக் கரிகாலனும் பேருருவாய் நிற்கக் கண்டேன்.

தமிழிசை குறித்து அறிந்தது மட்டுமின்றி செவிப்புலன் சேர்த்து இன்புற்ற நொடிகள் மகிழ்வானவை. காலம் கூடும் போது எல்லாப் பண்களையும் இசைத்துக் கேட்க வேண்டும். கேட்கும் எல்லாவற்றையும் எழுதும் தமிழையும் யாம் பெற வேண்டும்.

இசைத்தமிழே வாழி.

======================
சிராப்பள்ளி ப.மாதேவன் 
20-04 - 2025
======================

Monday, 31 March 2025

காலத்தின் மடியில்... மூன்றாம் ஆண்டு

 



உன்னைக் கரைத்த
நீரில் மிதக்கின்றன
அன்பின் திசுக்கள்.

உறவுகளின் கண்ணின்
ஓரமெங்கும்
கண்ணீர் தேங்கிய பாசம்.

காற்றில் இன்னமும்
கலையாது தெரிகிறது
கண்டவுடன் புன்னகைக்கும்
உன் முகம்.

Friday, 21 March 2025

உலக கவிதை நாள் 2025



உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.


என்ற,

பாட்டன் எண்ணங்கள் சில

கடன் வாங்கிப்

Thursday, 20 March 2025

தலை நரைத்த குழந்தை.

ஙா... ங்ஙா... என்று

ஒற்றை எழுத்தை

மட்டுமே

உதட்டில் நிறைத்து

கை கால் உதறியபோது;

இரவும் பகலும் 

அன்பொழுக

அத்தனையும் பேசி வளர்த்த

அம்மாவிடம் பேச, 


சொற்கள் தேடி அலைகிறது,

அந்தத்

தலை நரைத்த குழந்தை.

Tuesday, 18 March 2025

🙏 தொழுந்தகை 🙏

 



பழுமரம் நாடா

விழுத்தகைப் பறவை!

முழுமுதற் புலவன்

தொழுந்தகை வள்ளுவன்.

Saturday, 15 March 2025

சந்தித்'தேன்'...




முதலாம் நரசிம்மவர்மன் “சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை மீண்டும் மீண்டும் போரில் முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்று ஓடச் செய்தவன். புலிகேசி புறமுதுகிட்டு ஓடிய பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்” என்று கூரம் செப்பேடு இயம்புகிறது.
இதில் காணப்படும் மணிமங்கலப் போர் என்பது பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே, தற்காலக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் என்ற ஊரில் கிபி 640 இல் நடைபெற்றது. இப்போர் சாளுக்கியர்களுக்கு எதிராக பல்லவர்களுக்கான முதல் வெற்றி கிடைத்த போராகும். மேலும் இரண்டாம் புலிகேசியிடம் பெற்ற நான்கு தோல்விகளுக்குப் பின் பல்லவர்களின் முதலாவது வெற்றியுமாகும். இப்போரில் இரண்டாம் புலிகேசி தோல்வி அடைந்து, பின் வாங்கித் திரும்பினான்.

Tuesday, 11 March 2025

இளையராசா பல்லியப் பெருமழை


இசைச்சிறகு அசைத்தசைத்து
இமயச்சிமை கடந்த
இசைச் செருக்கால்,

அன்னக்கிளி தொடங்கி
ஐரோப்பிய இசைமன்றம் வரை,
நுழையும் இடங்களில் எல்லாம்
விதிகளை மாற்றுகிறாய்.

அந்தப்
பல்லியப் பெருமழை நடுவே
உன் குரலில்
மெல்லென நுழைந்த
“இதயம் போகுதே”
எமைச் சில்லிடச் செய்துவிட,

அல்லவை ஒதுக்கி உனை
அள்ளி முகர்ந்திட்டோம்.

நீ,
எம் மண்ணின் குழந்தை!
எம் மக்களின் இறுமாப்பு!

ஆண்டவன் முன்னே
நெடுஞ்சாண் கிடக்கை
இசைகேட்டு மகிழ்ந்தவர் முன்
கூப்பித் தொழுதகை.

கண்களில் தெரிந்தன
கனிவும் நன்றியும்.
முகத்தில் தெரிந்தது;
எங்கள்
மொத்தப் பெருமிதம்.

வாழி நீ! வாழி! வாழி!! 



Sunday, 9 March 2025

முல்லைக்குத் தேர்கொடுத்து…

 


பல நூறு செடிகொடிகள் இருக்க பாரி ஏன் முல்லைக்குத் தேர் கொடுத்தான்?

மரஞ் செடி கொடிகள் தாமாக வளரும். வெயிலின் போக்கில் தலை உயர்த்தும் மரங்கள். கதிரவனுக்கு முகம் காட்டி வளைந்து நெளிந்து வளர்ந்து நிற்கும் தென்னைமரங்கள் பல்லாயிரம். தலை உயர உயர தண்டு பருத்து வலு சேர்க்கும் செடிகள்.

கொடி என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய பயிரி ஆகும். பொதுவாகப் பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இக்கொடிகள் வளரும். பெரும்பாலன பற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும். கொடிகள், முறுக்கும் தண்டு, வான்வழி வேர்கள் அல்லது ஒட்டும் வட்டுகளைப் பயன்படுத்தி தங்களைத் தாங்கிக் கொண்டு ஏறுகின்றன இப்படி இறுக்கும் பயிரிகளுக்கு அவை சுற்றிச் செல்லக்கூடிய குறுகிய கொம்புகள் கொண்ட உறுதியான ஆதரவு தேவை. சில கொடிகள், ஒட்டிக்கொள்ள சிறிய வான்வழி வேர்களைப் பயன்படுத்துகின்றன, எனவே அவற்றுக்கு அதிக உதவி தேவையில்லை. பிசின் வட்டுகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் கொடி வகைகளும் உண்டு.