Wednesday 17 January 2018

அழகான பெருந்தவறு... அருவி.


           ல்லோரும் கொண்டாடி முடித்த பின் இதை எழுதுகிறேன். காரணம் கேட்டால் சொல்லலாம், சொல்ல முடியாமலும் போகலாம் அருவியைப் போல.
           தமிழின் ஆகச்சிறந்தத் திரைப்படம் என்று அருவியைக் கொண்டாடுபவர்களைப் பார்க்கையில் ஒருவிதமான அலுப்பே மிஞ்சுகிறது.  சிறந்த படம் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதே. ஆகச்சிறந்ததா என்கிறபோது நிறையக் கேள்விகள் வருகின்றன.

           ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பின் மீதான வானளாவியத் தன்னுரிமை இருக்கிறது. அதில் எவரும் தலையிட முடியாது. அவர் எந்தக் கருத்தியலை, எந்தக் கதைக்களத்தை, எந்தச் சமூகச்சிக்கலை வேண்டுமானாலும் கையாளலாம். பாத்திரங்களை எப்படி வேண்டுமானாலும் படைத்து உலவ விடலாம்.   ஆனால் பாத்திரங்களின் மீதான தனது உருவகத்தைச் சிதைக்காமல் கதையை நகர்த்துவதும், பாத்திரம் சிதைவதே கதையெனில் அதற்கான சூழலைச் செம்மையாகக் காட்டுவதும் ஒரு சிறந்த படைப்பாளியின் திறன். இந்த நோக்கில் தான் அருவி எனும் அந்தப் படைப்பு மிகப்பெருஞ் சறுக்கலைச் சந்திக்கிறது.
.     
           நிறைய நேர்காணல்களில் அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் இந்தப் படத்தில் ஏராளமான தவறுகள் இருப்பதாகத் தானே கூறிக்கொள்கிறார். இது பாராட்டுக்குரியது என்றாலும் பாத்திரங்களின் தன்மையின் பிறழ்ச்சி ஒரு படைப்பாளிக்கு உகந்தது அல்ல. அதைக் கவனத்தில் கொள்ளாமல் ஆகச்சிறந்த திரைப்படம் என்றுரைக்கும் உரைகள் சிறந்த திறனாய்வுகளும் அல்ல.
 
 

          அருவியின் தொடக்கம் நன்றாகவே இருக்கிறது. இனிமையாய் இதமாய் இருக்கிறது. ஒரு விபத்தாய் நிகழ்ந்து விடுகிற சோகம் அவளை வீட்டிலிருந்து பிரித்து தனிமைப்படுத்துகிறது. (அந்த விபத்து தருக்கரீதியானது தானா என்ற கேள்விக்குள் போகவில்லை நான்.) அதன் பிறகு தான் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறத்தொடங்கும் போதிலிருந்து இயக்குனர் அருவி பாத்திரத்தை கருக்கொலை (character assassination) செய்துவிட்டதாகக் கருதுகிறேன். காட்சியமைப்புகள் அதை உறுதி செய்கின்றன. காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 
 
        முதலில் அருவியின் தோழி வீட்டில் நடக்கும் நிகழ்வு. மதுவருந்தி மயங்கிய நிலையில் சோபா ஒன்றில் சாய்ந்து கிடக்கும் அருவியை தோள்தொட்டுத் தூக்கிச்செல்லும் தோழியின் அப்பா.
      
         இரண்டாவது அந்தப் போலிச் சாமியார். மனோவசியம் செய்யப்பட்டு மயங்கிய நிலையில் இருக்கும் அருவி. எனக் காட்சி.
 
        மூன்றாவது அப்பாவின் மருத்துவத்திற்கு பணம் தர நினைக்கும் அருவி. கடன் தர முனையும் முதலாளி.
 
        இந்த மூன்றாம் நிலையைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அது சமூகத்தின் பேரவலம். சிக்கலான வேளையில், தேவையில் இருக்கும் பெண்ணிடம் உடலைக் கேட்கும் மோசமான மறிவு. மற்றவை இரண்டும் படத்தின் முகாமையான கதைநகர்வில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது.

        மூன்று பேருக்கும் நோயின் தாக்கம் இல்லையென்று சொல்லத் தொடங்கி அது தனக்கும் தெரியும், ஏனெனில் அப்பொழுது  நான் பாதுகாப்பாக இருந்தேன் என்று அருவி கூறுவதாகவே காட்சி அமைப்பு.
 
        இதுபோன்றதொரு நிலையில் பெண் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று பார்த்தால், ஆண்களின் பயன்பாட்டுக்கான ஆணுறை போன்று பெண்களுக்கான பெண்ணுறைகளும் கிடைக்கின்றன. அதை ஒரு தெளிவான மனநிலையிலேயே ஒரு பெண்ணால் அணிந்துகொள்ளமுடியும். அதுவன்றி மாத்திரைகள் போன்ற வேறு பொருட்கள் அருவி படத்தின் கதைக்கருவுக்கு ஒத்துவராது. 

       இப்பொழுது முதல் மற்றும் இரண்டாம் நிகழ்வுகளில் அருவி அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கமுடியும் என்றக் கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியாது. மயங்கிய நிலையில் அதை அவள் அணிய முடியாதெனில், அதற்கு முன்பே அணிந்துகொண்டிருந்தாளா?  போதையின்றி இருந்த வேளைகளில் தோழியின் அப்பா தவறாக நடந்து கொண்டாரா?  தோழியின் அப்பா தன்னைக் கற்பழித்து விடக்கூடும் என்று அவள் அறிந்திருந்தாளா? அப்படியெனில் அதைத் தவிர்த்துவிட்டுப் போயிருக்கலாமே.  இதே கேள்விகள் தான் சாமியாரிடமும் வருகிறது. கேவலமான சாமியார் என்று தெரிந்தேதான் அவரிடம் வகுப்புக்குச் சென்றாளோ அருவி. அங்கேயும் தன்னை அந்தச் சாமியார் கற்பழித்துவிடுவார் என்ற எண்ணம் அருவிக்கு இருந்ததா? படத்தின் முகாமையானக் கூறான இந்த இடத்தில் தெளிவற்று,  படத்தில் பின்னால் வரும் காட்சிகளில் இதுபற்றிய எந்த உணர்வுகளுமின்றிக் கடக்கிறார் இயக்குனர். இதுதான் அருவி விரும்பிய அன்பா? இல்லை அது மனநோயா? தெளிவற்று இருக்கிறது கதையோட்டம். நிறையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தரமற்றவைகளாக, ஏமாற்றுபவைகளாக இருக்கின்றன என்று சொல்ல வருவதற்காக ஒரு பாத்திரப் படைப்பை இப்படிக் கொலை செய்திருக்கவேண்டாம் என்று எண்ணுகிறேன். மூன்றாம் உலகநாடுகளின் அவலம் மிகச்சிறப்பாக அருவியின் வாயிலாக வெளிப்படுகிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. நடுத்தர உலகத்தின் எச்சங்களால் நிரம்பிய சிறந்த இடங்களை ஏராளமாக அள்ளி இறைக்கிறது படம். பார்வையாளர்களிடம் இரக்கத்தை வரவழைக்க முயல்கையில் பாத்திரம் சிதையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை. பாத்திரங்களே கதையின் உயிர் என்பதை எந்த நிலையிலும் படைப்பாளி மறக்கலாகாது.

          கதை அருண் பிரபு புருசோத்தமனுடையது. அதில் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அது அவர் விருப்பம்.அவை பெரிதாகச் சமூகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. "வேலைக்காரன்" திரைப்படத்தின் இடைவேளைப் பொழுதில் திரையரங்குகளில் விற்பனையாகும் பொருட்கள் இன்றையச் சான்று. ஆனால் திரைக்கதை என்பது பார்வையாளர்களுக்கானது.  அதில் சிதைவுகளற்ற நல்ல பாத்திரங்களைப் படைத்திட வேண்டுமென அருண் பிரபு புருசோத்தமன் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் படம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் படைப்பு???
 
   அவரின்  நட்புவட்டங்கள் இதைப் பார்க்க நேர்ந்தால் அவருக்குப் பகிர்ந்துவிடுங்கள். நன்றி.