Friday 21 September 2018

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 2



இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 1 ன் தொடர்ச்சி:

பிட்டங்கொற்றனின் குதிரைமலையில் புன்கம் உண்டுவிட்டு காலாற நடந்து தென்குமரியின் அருகே தாடகைமலை அடிவாரத்தை அடைவதற்குள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. பண்பாட்டின் பெரும்பயணம் அது. வேர்கள் எவை என முழுவதுமாக அறிந்துவிட முடியவில்லை எனினும், விழுதுகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. வேர்கள் ஏதேனும் மலைமுகட்டில் இருக்கலாமென்றே தோன்றுகிறது.

"கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" யல்லவா. 

மருதம் தோன்றா காலத்தே குறிஞ்சியிலும், முல்லையிலும் வாளொடு, இரும்பொடு அல்லது பிட்டங்கொற்றனின் "வடிநவில்" அம்பொடு வாழ்ந்த பழங்குடி அல்லவா. வானமலையின் முகடுகளில் எங்கேனும் புன்கத்தின் வேர்கள் இருக்கலாம். அல்லது தேவனேயப் பாவாணரும், கா.அப்பாத்துரையாரும் சொன்னது போல தென்கடலுக்குள் மூழ்கியிருக்கிற "குமரிக் கோடு" மலையின் முகடொன்றில் இருக்கலாம். ஆதிச்சநல்லூர் அரிசியே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். எனவே வேர்களைத் தேடுவது பெரிய வேலையே. ஆனால் விழுதுகளைக் கண்டறிவது நம்மால் இயலுகிற ஒன்றே. விழுதுகளைப் பிடித்து மேலேறினால் அவை கிளைகளை அடையும். கிளைகளில் தொடர்ந்தால், எல்லாக் கிளையும் ஒரு மரத்தினது என்பதறிவோம். எனவே விழுதுகளைத் தேடினேன்.

Thursday 20 September 2018

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை - 1


 
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

இன்று எங்கள் வீட்டில் "நாள் கருது" ஆதலால் இன்று காலை மட்டும் என் பேரனுக்கு விடுப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம், 

இன்று எங்கள் வீட்டில் "புத்தரிசி" ஆதலால் இன்று மதியம் மட்டும் என் பேரனுக்கு விடுப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம் 

என கிறுக்கலான கையெழுத்தில் (தெக்குப் பள்ளத் தெரு சந்தியில பரப்பிய மணலில் சுட்டுவிரல்கொண்டு எழுதிக் கற்றுக் கொண்டதாம்)  எழுதிக் கையொப்பமிட்டு என் தாத்தா கொடுத்த விடுப்புக் கடிதங்கள்  1980 வரை எங்கள் பள்ளியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று என் மகனிடம் சொல்லும் போது "இதுக்கெல்லாமா விடுப்பு தருவாங்க அட போங்கப்பா" என்று சிரிக்கிறான்.  ஆனால் கொடுத்தார்களே, அது உண்மைதானே.

Saturday 1 September 2018

மணற்கேணி - வள்ளுவர் சொல்லாடல்

ங்கப் பாடல்களில் ஏராளமான உவமைகளைக் காணலாம்.  வாழ்வியல், வரலாறு, உயிரியல், வானியல் என ஏராளமான செய்திகளை ஆயிரமாயிரம் ஆண்டுககளாக நமக்குச் சுமந்து வருகின்றன அந்த உவமைகள்.  காப்பியங்களில் வருகிற உவமைகள் சிறப்புடையதாய் இருக்கக் காணலாம்.   ஆனால் வள்ளுவர் எடுத்தாளும் உவமைகள் நம்மை பெருவியப்படையச் செய்யும். தான் வாழும் காலத்தின் வாழ்வியல் நெறிகளை இன்னொரு தலைமுறைக்கு பிழையின்றி எடுத்துச் செல்வது என்பது அத்தனை எளிதான செயலன்று. வள்ளுவருக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது ஏழு சொற்கள் மட்டுமே. அதற்குள்ளாகச் சொல்லப்படும் உவமை என்பது மிக நுட்பமானதாக இருக்க வேண்டும். அதைக் கசடற அறிந்திருத்தல் வள்ளுவருக்கு தேவையாகிறது. இரண்டு அல்லது மூன்று சொற்கள் உவமை, பொருள், பண்பு,  உவமைஉருபு போன்றவற்றிற்காகச் செலவானால் மீதமிருக்கிற நான்கு சொற்களில் ஒரு கருத்து அல்லது நெறியைச் சொல்லவேண்டும். ஆண்டுகள் தாண்டியும் சொல்லப்பட்ட உவமைப்பண்பு பழுதுபடாமல் இருத்தல் வேண்டும். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் குறட்பாக்களில் உவமை சொல்வது மிகக் கடினமான ஒன்றே. ஔவைக்குறள் கூடச் சிற்சில இடங்களில் அமைதி வேண்டி நிற்கிறது. ஆனால் வாள்ளுவர் சொல்லாட்சியோ காலங்கள் தாண்டியும் நின்றுகொண்டிருக்கிறது. அப்படி மிக நுட்பமான சொல்லாட்சியைத் தாங்கி நிற்கும் குறளொன்றைப் பார்ப்போம்.

"தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு

மணக்குடவர் உரை: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக'