Thursday 31 May 2018

ம.இலெ.தங்கப்பா மறைவு


மரங்கள் சாயுமென்ற
மாறா விதியினை
என்செய்ய.
விதைகிழித்து வெளிவரும்
வேர்களின் மடியில்
உரமாகட்டும் என்றோர்
வேண்டுதல் சேர்த்த
ஆறுதலன்றி.




Wednesday 16 May 2018

ஒற்றை விலங்கு

கூடிக் களித்தக் கலவியின் இறுதியில்
ஓடி அண்டம் உடைத்து நுழைந்து
பாடிப் பிறந்த படிமமல்ல நீ.
தாயின் குருதி உணவென வாக
அவள் தன் நெஞ்சு உனக்கெனத் துடிக்கத்
தொப்புள் கொடியில் தொங்கிய உயிர் நீ.
அன்று நீ அவளென இருந்தாய்.
உயிரொடு ஒட்டல் ஒருமுறை நிகழும்
தாயின் வயிற்றில் .
இறையே வரினும் மறுமுறை இல்லை.
எல்லா விலங்கும் குட்டிகள் பேணும்.
தாயைக் காக்கும் தகைமைக் கொண்டு
தரணியில் தனித்த ஒற்றை விலங்கு
மாந்தன் என்பதை மறந்திடல் வேண்டா.



Wednesday 2 May 2018

காமத்துப்பால்...

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற குறளின் முப்பால் பகுப்புக் காரணியத்தோடுதான் இருக்கிறது. வள்ளுவரும் காமம் என்றுதான் சொல்கிறார். காமம் இழிசொல் அன்று. அது உலகின் மூலமாக இருக்கிறது.

நாம் காடுகளிலும் மற்றைய இடங்களிலும் பார்க்கிற, கூட்டமாக வாழும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே ஒரு தலைமையின் கீழ்தான் இயங்குகின்றன. தேன்கூட்டுக்குள் ஒரு ராணித்தேனீ இருக்கிறது. அதற்கு வேலை செய்யவும், உணவு சேகரிக்கவும், பொரித்து வெளிவந்தக் குஞ்சுகளைப் பராமரிக்கவும் என நிறையத் தேனீக்கூட்டம் அங்கு இருக்கிறது. கண்டம்விட்டுக் கண்டம் பறந்து செல்கிற பறவைகள் ஒரு தலைமைப் பறவையின் வழியேதான் பறந்து செல்கின்றன. குரங்குகள், புலிகள், யானைகள் இப்படிப் பல உயிர்களும் தலைமை என்ற ஒன்றைத் தொடர்ந்தே வாழ்கின்றன. ஒரு புது ராணித்தேனீ கிடைத்துவிட்டால் புதிதாய் ஒரு தேன்கூடு பிறக்கும். புலிக்கூட்டம் புதிதாய் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளும்.

இப்படி எல்லாவிலங்குகளையும் போல மாந்தனும் தலைமையின் வழிகாட்டுதலில் வாழும் ஒரு விலங்காகவே இருந்தான். கூட்டமாக வாழ ஆரம்பித்தபோது வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், பகிர்ந்துண்ணுதல், இடம்பெயர்தல், பாதுகாத்தல் போன்ற வேலைகளுக்கு , ஒரு தலைமை தேவையென்றோ அல்லது ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டோ வாழ ஆரம்பிக்கிறான். இந்தத் தலைமையேற்கும் அல்லது ஒரு தலைமையை ஏற்றுக்கொள்ளும் பண்புதான் பல்வேறு இனக்குழுக்களாக மாந்தன் பிரிந்து வாழக் காரணியமாயிற்று.

ஆனால் "மனனே" என்று தொல்காப்பியர் அழைத்த "ஆறாம் அறிவு " அவனை மற்றை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தியது. மழை வரப்போகிறது என்று கோழிக்கும், எறும்புக்கும் தெரிந்துவிடும். நிலநடுக்கத்தின் அதிர்வை யானைகளும் பறவைகளும் முன்கூட்டியே அறிந்துகொள்ளும். இன்னொரு புலியின் எல்லைக்குள் நுழைகிறோம் என்று மற்றொரு புலி தெரிந்து கொள்ளும். ஆனால், நெருப்பைக் கண்டால் புலி அஞ்சும் என்பதையும், யானையால் பெரும் பள்ளத்தை நோக்கி வேகமாக ஓடிவரமுடியாது என்பதையும் இந்த ஆறாம் அறிவு அறிந்து கொண்டது. விலங்குகளும் பறவைகளும் நுகரும் திறனாலும், ஓசைகளின் மூலமும் உணவு இருப்பதை அறிந்துகொண்டிருக்கையில், ஆறாம் அறிவோ எந்த இடத்தில், என்ன வகையான உணவு, எவ்வளவு உணவு என்பதை எண்ணிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்த "எண்ணம்" தான் மாந்தரினம் இந்த நொடிவரை நடந்துவந்திருக்கிறப் பெருவழிப்பாதையில் இடப்பட்ட முதல் கல்.

இயற்கையின் விதிவழியில் எல்லா உயிர்களுக்கும் இனப்பெருக்கத்திற்கென உடலில் இருப்பு வைக்கப்பட்டிருந்தக் "காமம்" இந்த எண்ணத்தால் மனதிற்கு மாற்றப் பட்டது. விலங்குகளாய் இருந்தபோது "உணர்வு' நிலையிலிருந்தக் காமம், உருவகப்படுத்தும் திறனும் நினைவு வலைப்பின்னலும் பொருந்திய ஆறாம் அறிவால் "உணர்ச்சி" நிலைக்கு மாற்றப்பட்டது. இப்படியொரு நிலையில்... வண்ணத்துப்பூச்சி, மயில் போன்ற உயிர்கள் வண்ணம் வடிவம் போன்ற அழகுணர்வில் இணைதேடுவதைக் கண்ட மாந்தனின் ஆறாம் அறிவு அதைப்பற்றி எண்ணத் தலைப்பட்டிருக்கக் கூடும்.

இப்படி இன்பம் துய்ப்பதில் தோன்றிய எண்ணங்களும், தலைமைப் பண்பை நிலைநிறுத்திக் கொள்ள விழைந்ததில் தோன்றிய அறிவும் பின்னிப் பிணந்ததில் "பொருள்" என்ற பெருஞ்சொல் பிறந்தது. ஒரு நிலையில் இன்பம் துய்ப்பதற்கான நுழைவாயில் "பொருள்" என்று ஆனது.

பொருள் தேடிப் புறப்பட்ட மாந்தரினத்தின் பயணம் நாகரிகத்தின் எல்லைகளை விரித்தது. இடப்பெயர்தல் நிகழ்ந்தது. மொழிகள் பிறந்தன. புதிய தலைவர்கள் தோன்றினார்கள். எல்லைகள் வேறுவேறாயின. இனகுழுக்களுக்கு இடையே நடந்த சிறு சிறு சண்டைகள் எல்லைகளுக்கு இடையே நிகழும் பெரும் போர்களாயின.
தலைமையும் அறிவும் முன்னிலை பெற்றன. கதைசொல்லிகள் தோன்றினார்கள். வீரத்திலும் அறிவிலும் தலைவர்கள் பட்டியலிடப்பட்டார்கள். 

தமக்கிடையே பொருள்குறித்து நடக்கும் போர்களில் தம்மினமே அழியக்கண்டு, பொருளீட்டுதற்கும், உயிர்க்கொலைக்கும் சில அறங்களை வகுத்துக் கொண்டார்கள். அவற்றையும் விலங்குகளிடமிருந்தே கற்றுக் கொண்டார்கள். புலி பசியில்லாதபோது மானைக் கொல்வதில்லை. தன்னோடு உண்ணவரும் சக உயிர்களை உண்ண அனுமதிக்கும். வெறும் உயிர்க்கொலை செய்வதில்லை. தலைமையை ஏற்று வழிநடக்கும்.  ஆண் புலிகள் பெண்புலிகளைப் பாதுகாக்கும். இந்தப் பண்புகளெல்லாம் புலியிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. சோழர்களின் புலிச்சின்னமும் இதன்காரணமானதாக இருக்கலாம். 

இணைசேரவோ, உணவு பகிர்ந்துண்ணும் போதோ சண்டையிடும் விலங்குகள் ஒன்றையொன்று கொலைசெய்யும் நோக்கில் இருப்பதில்லை. துரத்துவதில்தான் நோக்கம் வைத்திருக்கும். வல்லமையில்லாத விலங்கு தன் தோல்வியை உணர்ந்து நகர்ந்து சென்றுவிடும். இந்த விலங்குப் பண்பையெல்லாம் அறமென மதித்துத் தன் அறிவில் இணைத்து, எல்லா விலங்குகளின் ஒற்றை வடிவமாய் பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிகத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துவிட்டது மாந்தரினத்தின் ஒரு பெருங்கூட்டம்.

இடம்பெயர்ந்துபோன சில இனக்குழுக்கள் விலங்குகளோடும், நாடோடித் தன்மையோடும் இந்தக் கூட்டத்தோடு இணைந்துவிட வந்தன. இரண்டு வெவ்வேறு நிலையில் இருந்தவர்களால் உடனடியாக இணைய முடியவில்லை.

ஏற்கனவே நாம் பார்த்தோமே "தலைமை"க் குணம் என்பது விலங்குப் பண்பு என்று (சொல்லப் போனால் இன்றுவரை நாம் கடைப்பிடித்து வரும் பண்பு) அது எல்லா மாந்தருக்கும் பொருந்தும். அதனால் அவர்களும் தலைமையேற்கத் தலைப்பட்டார்கள்.

ஆனால்.... நீண்ட நெடிய இந்த நாகரிகப் பயணத்தில் அவர்கள் குறுக்கு வழியில்தான் நுழையவேண்டி இருந்தது. இந்தச் செய்கை இங்கே செம்மையாக நின்றுகொண்டிருந்த வீரத்தின் மீதும், அறிவின் மீதும் அது சார்ந்த அறத்தின் மீதும் நசிவை ஏற்படுத்தியது. பொருளுக்கும் இன்பத்திற்கும் குறுக்குவழிகள் பிறந்து, பல்லாயிரம் ஆண்டுகள் வளர்ந்த அறம், நாகரிகம் சிதைவுற்றது.

இப்படி சிதைந்து நின்ற சில நூறாண்டுகளில், தம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையும் நடந்துவந்த பாதையும் மறந்துபோன ஒரு கூட்டத்தின் நடுவே பல்லாயிரமாண்டு வாழ்க்கையின் சாற்றை வடித்தெடுத்து, வாழும் வழி சொல்லி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ப்போகிற மாந்தர்களுக்காக வைத்துவிட்டுப் போகிறார் வள்ளுவர்.

அறத்தை மட்டும், இல்லைப் பொருளையும் சேர்த்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே என்று நமக்குத் தோன்றும். யார் என்ன சொன்னாலும் இன்பம் துய்ப்பது முடிவு என்று ஆனபோது ஆண் பெண் இருவரும் பொருள் தேடுவது வேலையாகி விடுகிறது. இது எல்லா காலத்திற்கும் பொருந்தும். 

எல்லா உயிர்களுக்கும் வாழ வகை செய்யப்பட்ட உலகில், இன்பத்திற்கும் பொருளுக்குமாய் நடக்கிற போராட்டங்களில் அறம் அழிந்துபோனால்... பல்லுயிர் வாழ்க்கைச் சிதைவுற்று இந்தப் பூவுலகே தன் நிலைமாறித் தடுமாறி வீழும் ஆபத்து இருக்கிறது. இதை நாம் இப்பொழுது கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லா விலங்கினங்களுக்கும் காமமும், உயிர்வாழ்தலில் ஒரு அறமும் இருக்கிறது. ஆனால் காமத்தில் தொடங்கி நாகரிகத்தின் உச்சியைத் தொட்டுவிட்ட மாந்தனுக்கோ ஆறாம் அறிவு கொடுத்தப் "பொருள்" இருக்கிறது. 

அப்படியெனில் "காமம்" பற்றிப் பேசவில்லையெனில் "பொருளுக்கான"த் தேவை இருக்காது. "பொருளே" இல்லையெனில் "அறம்" பற்றிப் பேச வேண்டிய அவசியம் இருக்காது. நாம் வெறும் விலங்குகளாகவே வாழ்ந்திருப்போம். 

எனவே காமத்துப் பால் இல்லையெனில் திருக்குறள் முற்றுப்பெறாது.  ஆனால் "காமம்" என்ற ஒற்றைச் சொல், நம்மை அதுபற்றிப் பேசவோ, படிக்கவோ விடாமல் தடுத்துவிட்டதோ என்று எண்ணுகிறேன்.

"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்றச் சொற்றொடர் எல்லோரும் அறிந்தது தான். இதைச் சொல்லிப் பாருங்கள் "காமம்" என்றச் சொல் எத்தனை வலிது என்று உணர்வீர்கள். அது ஓர் ஒத்திசைவு. உறவுகளுக்குள்ளும், நட்புக்குள்ளும், காதலுக்குள்ளும். இந்த ஒத்திசைவில் வருகிற குளறுபடிகள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சில வேளைகளில் உலக வரலாற்றின் போக்குகூட இதன் பிறழ்ச்சியால் மாறியிருக்கிறது. 

காமத்தில் தொடங்கி, பொருள் கண்டு, அறம் சார்ந்து, நாகரிகத்தின் உச்சியில் இருந்து வீழ்ந்தபோது தான் வள்ளுவர் இதைச் சொல்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக அறத்தோடு பொருள் சேர்த்து இன்பம் துய்த்து வாழ்ந்த முன்னோர் வாழ்க்கையை மீண்டும் நினைவு படுத்துகிறார். வெறும் எம் இன வரலாற்றை வள்ளுவன் எழுதப் புகுந்திருந்தால் காமம், பொருள், அறம் என்று மாந்தரினம் வளர்ந்து வந்தப் பாதையின் வரிசையில் கூடச் சொல்லியிருக்கக் கூடும். 

எது எப்படியெனினும் உயிர்களிடத்தில் காமம் தவிர்க்க முடியாதது. திருக்குறளில் காமத்துப் பால் தவிர்க்கவே முடியாதது.
----------------------------------------------------------


இதன் காணொளியைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்...

காமத்துப்பால் காணொளி.  

29/6/2016

Tuesday 1 May 2018

பெற்றோர்


வாடிவிடும் முன்னே

மலர்களைக் கொண்டாடுங்கள்.

இன்னொருமுறை என்பது

இங்கில்லை.