Saturday 28 May 2022

சந்திச் சிந்தனைகள்

 

சிறுவயதில் ஆடிக்களித்திருந்த, பருவத்தின் ஏக்கங்களை விளம்பி உளமாறிய, நயினார் நோன்பு நாட்களில் இசையரங்காய் மாறி மகிழ்வித்திருந்த, தாழக்குடியில் பலரும் மறந்திடவியலாச் “சந்தி”யை அண்மையில் சந்தித்தேன்.

கீழத்தெரு சந்தி. நான்கு தெருக்களின் கூடுகைப் புள்ளியில் அமைந்த இடம். கிழக்கே தெரியும் புத்தனாற்றுப் பாலம். மேற்கே விண்ணவன் பெருமான் கோயில். தெற்கே “ஊரம்மன் கோயில்” என அறியப்படும் முப்பிடாரி அம்மன் கோயில். வடக்கே வரலாற்றைச் சுமந்து நிற்கும் “தேர்நிலை”.

கரும்பனைக் கைகளால் பணி தீர்க்கப் பெற்று “வில்லுக்கீறி” ஓடுகளால் வேயப்பெற்ற உயர்ந்த கூரை. கல் பாவப்பட்ட தரை. கோசுப்பாட்டா போல் சொல்வதென்றால் சச்சவுக்கமான கட்டிடம். உள்ளே சிலைகளோ குறியீடுகளோ எதுவுமற்ற, கதவுடன் கூடிய சிறு மாடம். இதன் கல் தூண்கள் அறிந்திராத கதையென்று தாழக்குடியில் எதுவுமில்லை.