Wednesday 30 November 2022

அனல் மேலே...



அண்மையில் இணையத் திரைத் தளம் (OTT) ஒன்றில் "அனல் மேலே பனித்துளி" திரைப்படம் பார்த்தேன். சிறப்பான படம்தான். துளியும் ஐயமில்லை. பெரும்பாலும் திரையில் பேசப்படாத செய்தியொன்றை, பெண்களின் மீது இயல்பாக நடத்தப்பெறும் பேரவலமொன்றைக் களமாகக் கொண்டு, இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக பெருமுனைப்புடன் எடுக்கப்பட்டப் படம் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது. இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.

படம் பார்ப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன், இயக்குநர் கெய்சர் ஆனந்து, நடிகை ஆண்டிரியா போன்றோர் கலந்துகொண்ட இந்தத் திரைப்படம் குறித்தான ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு கலந்துரையாடலாக இருந்தது அது. படம் குறித்த, காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், படப்பிடிப்பின் போது நடிகர்களின் மனநிலை, ஆண்டிரியாவுக்கு வந்த மன உளைச்சல் என ஏராளமான செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதுதான் பிரச்சனையே.

Tuesday 29 November 2022

வழிப்போக்கன்

நான் வழிப்போக்கன்.

தடம்பதித்துக்கொண்டே
கடற்கரையில் நடக்கிறேன்.
என் காலடித் தடங்கள்
உங்கள் பார்வையில் படுமென
எண்ணிக்கொள்கிறேன்.
அது;
அலைகளுக்குத் தெரியாது.

பாடிக்கொண்டே
பாதைகளில் நடக்கிறேன்.
என் குரலின் அதிர்வுகள்
உங்கள் காதுகளில் கேட்குமென
எண்ணிக்கொள்கிறேன்.
அது;
காற்றுக்குத் தெரியாது.

நீங்கள்
பார்த்தீர்களா? கேட்டீர்களா?
எனக்குத் தெரியாது.

நான் 
நடந்துகொண்டேயிருக்கிறேன்.

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
29-11-2021
===========================

Thursday 17 November 2022

கப்பலோட்டிய கதை - மறைந்து கிடந்த வரலாறு


பேருந்தின் குலுக்கலில் மெல்லக் கண் விழிக்கிறேன். மங்கலான ஒளியில் வீரநாராயணமங்கலத்துக் கல்பாலம் கடந்து போவதைக் கண்டேன். இன்னும் ஐந்து நிமிடங்கள்தான். பிறந்து, வளர்ந்து, பேசிச் சிரித்து, அழுது புரண்டு, ஆளாகி எழுந்த தாழாக்குடி வரப்போகிறது.

ஊருக்கு வந்து பல வருடங்கள் ஆயிற்று. நரை விழுந்து, பின் மண்டையில் மயிரெல்லாம் உதிர்ந்து, மீசையை மழித்துக்கொண்டு, மூக்கு நுனியில் தொங்கும் கண்ணாடியின் இடுக்குகளில் தெரியும் கண்களால் உருட்டி விழித்துக்கொண்டு இறங்கும் என்னை யாராவது அடையாளம் கண்டுகொள்வார்களா?

யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியவில்லை. பேருந்து பொதுக்குளத்தைத் தாண்டிச் செல்கிறது. எழுந்து பையைத் தோளில் மாட்டிக்கொண்டு  முன் வாயில் நோக்கி நடக்க எத்தனிக்கையில்,

Wednesday 16 November 2022

அமைதி

 


மாலையில் இரத்த அழுத்தம் 162/101 இருந்தது. மனம்தான் காரணம் என்பது வெள்ளிடைமலை. நாளை பொழுது விடிவதற்குள், உறக்கம் உடலில் செயலாற்றி காலையில் விழிக்கும்போது இயல்பாகவே அழுத்தம் குறைந்துவிடும். அதற்குள் இப்படிச் செய்துபார்க்கலாமே என்று தோன்றியது.


என் வானிலே ஒரே வெண்ணிலா, பூங்காற்று புதிரானது, பொத்திவச்ச மல்லிக மொட்டு, ஆனந்தராகம் கேட்கும் காலம், கண்ணே கலைமானே, ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே, ஆலப்போல் வேலப்போல், ஆகாய வெண்ணிலாவே, சின்னச்சின்ன வண்ணக்குயில், எந்தன் நெஞ்சில் நீங்காத, என்ன சத்தம் இந்த நேரம்....

ஏறத்தாழ பத்துப் பாடல்கள் (நாற்பது நிமிடங்கள்) கடந்தபோது 148/91 ஆக மாறியிருந்தது அழுத்தம். இப்பொழுது அது இயல்புக்கு வந்திருக்கும்.

இது உங்களுக்கு :
உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேளுங்கள். பாடலைக் கேட்கும்போது உள்ளத்தால் அல்லது உடன் பாடுவது மூலமாக அதன் ஒவ்வொரு நொடியையும் தொடருங்கள். இசை நுணுக்கம் பற்றி அறியாவிட்டாலும் கூட பாடலின் இசைக் கூறுகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். (எனக்கு சுரங்கள் ஏழு உண்டு என்பதைத் தாண்டி இசையில் வேறெதுவும் தெரியாது). பாடலின் இடையே உள்ள இசைத் துணுக்குகளின் ஏற்ற இறக்கங்களை பரவி அனுபவியுங்கள். பாடல்களில் உள்ள சொற்களை ஆழ உணருங்கள். உள்ளுக்குள் பாடகர்களின் குரல் வித்தையைக் கொண்டாடுங்கள். கண்டிப்பாக அமைதி கிடைக்கும்.

இது இளையராசாவுக்கு :
என்னதான் உங்களோடு கருத்துகளில் ஒப்ப முடியவில்லை என்றாலும், சுண்டியிழுக்கிற, கட்டிப்போடுகிற, சிறகு விரித்துப் பறக்கச் செய்கிற, உள்ளத்தை ஆற்றுகிற உயர்ந்த இசைக்குச் சொந்தக்காரன் நீர் என்பதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும், இசைக்கு மொழி உண்டு. மொழி உண்டு. மொழி உண்டு என உரக்கச் சொல்லிக்கொள்கிறேன் ஐயா, எங்கள் ராசையா.

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
16-11-2022
===========================

Tuesday 15 November 2022

நூல் மதிப்புரை - வே.சுப்ரமணியசிவா



சென்னை புத்தகக் கண்காட்சியில் பாவாணந்தம் வெளியீட்டகத்தை கடக்கும் போது ஐயா திருச்சி மாதேவன் அவர்களையும் தோழர் முத்துக்குமாரசாமி அவர்களையும் பார்த்த உடனே அவ்வரங்கில் நுழைந்தோம். நலம் விசாரிப்போடு திருச்சிராப்பள்ளி ப. மாதேவன் ஐயா எழுதிய நூல்களை பற்றிய அறிமுகத்தையும் விளக்கத்தையும் அளித்தார் தோழர் முத்துக்குமாரசாமி அவர்கள். சிறப்பு விலையில் தொகுப்பு நூல்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

நூல்களை பார்த்து விட்டு பிறகு ”வந்து வாங்கி கொள்கிறேன் தோழர்” என்றேன். உடன் வந்திருந்த தோழர் வேல்முருகன் அவர்கள் ”என்னிடம் இருக்கும் பணத்தில் வாங்கி கொள்ளுங்கள்” என்றார். இருந்தாலும் மனம் கொள்ளவில்லை. முத்துக்குமாரசாமி தோழரிடம் "வந்து வாங்கி கொள்கிறேன்" என்று மன சங்கடத்துடனே அரங்கிலிருந்து வெளியே வந்தோம்.
முகம் தெரியாதவர்களின் புத்தக அரங்கில் புத்தகம் வாங்க வில்லை என்றால்

நூல் அறிமுகவுரை - பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன்



நூல் அறிமுகம்

பொருநராற்றுப்படை - கதையுரை
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

கடந்தசில ஆண்டுகளில் கவிதை, கதை, கட்டுரை என்று நூல்களை அறிமுகம்செய்யும் பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். என்றாலும், சங்க இலக்கிய உரைநூலொன்றை அறிமுகம்செய்து கட்டுரை எழுதுவது இதுவே முதன்முறையாகும்.

உரைநூலுக்கெல்லாம்கூட அறிமுகக்கட்டுரையா என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். அதற்கானப் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது.

சங்க இலக்கியங்களுக்கு விரிவான, சுருக்கமான பல உரைகளை நான் வாசித்ததுண்டு. ஏறத்தாழ, அவற்றின் உள்ளடக்கம் ஒருபோலவேதான் இருக்கும். அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு எழுத்து வகைமையை, நூலாசிரியர் மாதேவன் இந்த உரைநூலில் கையாண்டிருக்கிறார். ஆம், அதுதான்

முனைவர் கா.ஆபத்துக் காத்த பிள்ளை - கடிதம்


செவ்விலக்கியங்களின் மீதான தீராத காதல் என் கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தாக்கத்தோடு எழுதப்பெற்ற எனது கவிதைத் தொகுப்பொன்றை, நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியின் மேனாள் தலைவர், மறைந்த திரு பெ.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் அச்சிட்டு வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில், ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியின் மேனாள் தமிழ்த் துறைத் தலைவரும், கல்லூரி முதல்வருமான முனைவர் திரு கா.ஆபத்துக் காத்தபிள்ளை அவர்கள் சிறப்புரையாற்றினார். பேச்சின் நடுவே கவிதை நாடகங்களை இயற்றுங்கள் என்று அறிவுறுத்தினார். அந்த எண்ணம் மனதில் பதிந்துவிட்டது.

செவ்விலக்கியங்களில் தோய்ந்து பின் நாடகம் எழுதலாம் என்ற திட்டம், கொரோனா வீட்டக்கிய காலத்தில் நண்பர்களோடு இணையவழியில் செவ்விலக்கியம் பேசுவதாகத் தொடங்கியது. மெல்ல மெல்ல நண்பர் திரு ச. முத்துக்குமாரசாமியின் தூண்டுதலால்

நூல் மதிப்புரை - புலவர் ச.ந.இளங்குமரன்



மதிப்புரை வழங்கியவர் அன்புக்கினிய புலவர்  ச.ந.இளங்குமரன், தேனி.


நூல் : பல்லாயிரங் காலத்துப் பயிர்.

நூலாசிரியர் : சிராப்பள்ளி மாதேவன்

வெளியீடு : பாவாணந்தம் வெளியீட்டகம், திருச்சி.

தொடர்பு எண்: 94428 01889

விலை : 40 உரூ

திருச்சி மதிப்புமிகு ஐயா ச.முத்துக்குமாரசாமி - கவிதா இணையரின் மகள் மு.ஜானகி அவர்களுக்கும், புதுச்சேரி மதிப்புமிகு ஐயா க.இராமலிங்கம் - தேமொழி இணையரின் மகன் இரா.தமிழமுதன் அவர்களுக்கும் நடந்த திருமண விழா தொடர்பாக அச்சிடப்பட்ட நூல் "பல்லாயிரம் காலத்துப்பயிர்" என்னும் நூல். இந்நூல்  32 பக்கங்களைக் கொண்டது.

காலத்தின் எல்லைக்கல், மாற்றம், வேட்டை, குறிஞ்சிக் காதல், பொய்யும் வழுவும், முல்லையில் நாள்செய்தல், மருத மணம், இழையணிந்த மருதம், வெளியே வாருங்கள் உள்ளிட்ட பத்துத் தலைப்புகளை உள்ளடக்கியது.

நூல் முழுமைக்கும் பிற சொல் கலவாத அழகுத்தமிழில் நெய்யப்பட்டிருக்கிறது. மனிதன் தோன்றி

Saturday 12 November 2022

சீரிதழ்களில் மொழி ?


வாய்மொழியாக இருந்து வரிவடிவம் கொண்டு ஓலைச்  சுவடிகளில் பாக்களாய், இலக்கியமாய், நாடகமாய் வளர்ந்து வந்த தமிழ் அச்சேறியது 1554 ல். ஆனால் பல்லாயிரமாண்டுப் பழமை கொண்ட வரிவடிவம் இல்லாமல் ரோமானிய எழுத்துருவில் அச்சேறியது. இப்பொழுது பலர் AMMA என்று தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதுவதுபோல ரோமானிய எழுத்துருக்களில் எழுதப்பட்ட "தமிழ்ச்சமய வினாவிடை" என்ற இதழ்தான் அது.

தமிழ் வரிவடிவத்தில் "தம்பிரான் வணக்கம்" அச்சேறியது 1557ல். இவையெல்லாம் சமயம் சார்ந்ததாக இருக்க சென்னையிலிருந்து 1785 ல் வெளிவந்த "மெட்ராசு கூரியர்" என்ற ஆங்கில இதழிலும் தமிழ்ப் பக்கங்கள் அச்சாயிருந்தன என்பர். ஆனால் இதற்குச் சான்றில்லை. 



சான்றாகப் திருக்குறள் அச்சுப்படி கிடைத்ததைக் கொண்டு பார்த்தால் சென்னையிலிருந்து 1812 ல் வெளிவந்த "மாசத் தினச் சரிதை" என்ற இதழே தமிழ்நாட்டிற்குள் வெளிவந்த

Friday 11 November 2022

ரெங்கையா முருகன் பிறந்தநாள் வாழ்த்து

 


உறிப்பானை உன்னித்தொட்ட மறுநாள் தொடங்கி

    முலைப்பால் மறந்தோடும் மதலை போல

அறவாளன் பெருந்தலைவன் அடலேறு சிதம்பரனார்

     நிலைச்செரு வறிந்த பின்னே நில்லாது

அறிந்தோர் அறியாதோர் தெரிந்தோர் தெரியாதோர்

      மலைக்கும்  வினாக்களொடு ஊர் திரிந்து

பறித்தெடுத்தப் பூக்களெலாம் பலரும் கொள்ள

    அலைந்து திரியும் அலந்தலை மறந்து

செறிவுறு சொற்களால் நிறைவுறப் பேசி

   உலைப்பாடு கொண்டு ஆங்கிலேயர் அஞ்சித்

தெறித்திட வாழ்ந்தத் திருமகன் வஉசி

    மலைக்காது செய்த மாப்போர் உரைக்கும்

அறிவுறு ரெங்கையா முருகன் வாழி!

   மலையுரசும் கதிரவனும் ஒளிரு மாறே.

குருசாமி மயில்வாகனன் பிறந்தநாள் வாழ்த்து



இலைக்கள்ளிச் செடிபோல் எல்லா இடத்தும்/ வலைவிரித்துச் சூழ்ச்சியால் நாடு கொண்டு/ தலையழித்து வளமனைத்தும் களவு செய்த/ துலைமாந்தர் கனவுடைக்கத் துணிவு கொண்டு/, அலையுரசும் தூத்துக்குடிக் கரையில் நின்று/ தலையுயர்த்திக் கப்பல் விட்டத் தாளாளன்/ மலைபோல் இங்கு வாழ்ந்த மாமனிதன்/ உலகநாதன் பரமாயி தலைமக னாம்/ நிலைகுலையாப் பெருமகனாம் சிதம்ப ரத்தின்/, பலரறியா வாழ்க்கைதனைப் பிறருணர நூலாக்கி/ விலைபோகா உளங்கொண்டு தனை வருத்தி/ வலியறிந்து தரவுபல தேடிச் சேர்த்து/ வலவன்பாடா செய்திசேர பெரியவர் வாழ்வை,/ முலைதழுவும் குழவிபோல் நாங்கள் துய்க்க/ வலைத்தளத்தும் நூல்புறத்தும் எழுதிச் சேர்க்கும்/ கலம்பகமாம் குருசாமி மயில் வாகனன்/ காலமெலாம் வாழி! வாழி! வாழியவே!!

Wednesday 9 November 2022

தரையில் நிழல் விரிக்கும் தஞ்சைக் கோபுரம்

 


உலகக் கட்டிடக்கலை வல்லுநர்கள் பலர் வியக்கும் வண்ணம், வெகுசிறப்பான தொழில் நுட்பத்தின் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரம்.

தஞ்சைக் கோவிலுக்குத் தலபுராணங்கள் எதுவும் புனையப்படவில்லை என்றாலும்,

 'கோயிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது!' 

'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!'

'இரவு நேரத்தில் பெரிய கோயில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்லும்!'

'கோபுர நிழல் கீழே விழுவதில்லை!'

போன்ற  வதந்திகளுக்கு மட்டும் குறைவில்லை.

'ஒரே இரவில் பெரிய கோயிலைப் பூதம் கட்டியது!' என்பதை சிந்துவெளி காலத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாடோடிச் சமூகங்கள் நாகரிகச் சமூகங்களைச் சந்திக்கிற இடங்களில் "ஒரே இரவில் கடலில் மிதக்கும் பெரிய மாளிகைகளைக் கட்டிவிடுவார்கள்,  ஒரே இரவில் அவற்றை அழித்தும் விடுவார்கள்" என்பன போன்ற; இயல்பைப் புரிந்துகொள்ள இயலாத, வளர்ச்சியில் பெரும் கால இடைவெளி அளவிற்குப் பின் தங்கியிருக்கிற மாந்தர்களின் சொல்லாடல்களை உலகம் கேட்டுக்கொண்டே வளர்ந்திருக்கிறது.

இவற்றின் ஊடே சில உண்மைகள் புதைந்து, மறைந்து கிடக்கின்றன.

Friday 4 November 2022

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவு

 


"என்ன கவிஞரே... நலமா?"
அன்பைக் குழைத்தெடுத்த அந்தக் கணீரென்றக் குரலைக் கேட்டு நாளாயிற்று. இனி அதற்கான வாய்ப்பும் அற்றுப் போயிற்று.
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஐயா மறைந்துவிட்டார்.
முந்தாநாளிரவு நண்பர் இராசாரகுநாதன்.நா பதிவில் அவர் உடல் நலமற்றிருப்பதை அறிந்துகொண்டேன். நேற்று மாலை சென்று பார்க்கவேண்டும் என நினைத்திருந்தேன். கடுமையான மழை. (மீறிச் சென்றிருக்க வேண்டும் நான்).
நேற்றிரவு நண்பர் Muthukumarasamy Shanmuguasundaram தொலைபேசியில் "ஐயாவைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நாளை போகிறேன் என்று சொன்னேன். முழுமையாக வாய்ப்பற்றுப் போனது. இயலாமையாக உணர்கிறேன்.
இன்று வைகறையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியே காணக்கிடைத்தது.
மொழிக்கும், பண்பாட்டிற்கும் பேருழைப்பை நல்கிய பேராசிரியர். நுணுக்கமான பார்வைகொண்டு திருத்தம் சொல்கிற பெரும் பண்பாளர்.
சில கருத்துக்களோடு உடன்பாடில்லை என்றாலும் தமிழுக்கு நல்கிய உங்கள் பேருழைப்பிற்கு தலைதாழ்ந்த வணக்கம் ஐயா.
உமது பாட்டே உமக்குப் படையல்.
========================
"கயல் எழுதி வில் எழுதிக்
கடுஞ்சினத்துப் புலி எழுதி !
புயல் எழுதும் இமயத்துப்
பொற்கோட்டில் தமிழ் ஏற
செயல் எழுதி !
வையத்து திசையெல்லாம்
மானமெனும் உயில் எழுதி
சென்றவர்கள் உன் முன்னோர்! - என்று
அறிவாயா? அறிவாயா?"
=========================

அறியச்செய்தமைக்கு, காலத்துக்கும் கடப்பாடுகொள்ளும் தமிழினம். சென்று வாருங்கள் ஐயா
🙏