Sunday 26 January 2020

கருவறை மொழி


கருவறையில் பிண்டமாய்
காதுகளின்றிக் கிடந்தபோது,
உணர்வுகளின் முடிச்சின்வழி
தாயின் குருதி - என்
தலையில் சேர்த்தமொழி.

கையிரண்டும் பின்னி
காலிடையே சேர்த்துவைத்து
தலைகீழாய் இருந்தபோது,
தாயின் காதருகே - தந்தை
தலைகோதி சொன்னமொழி.

முன்னே வயிறுதள்ளி
முந்நூறு நாள் தாங்கி
என்னைச் சுமந்தவள்,
முதுகு வலியெடுக்க - அம்மா
என்றழைத்த அருமைமொழி.

மண்ணைத் தொடும்முன்னே
மருத்துவச்சி கைவீழ்ந்து
முதல் மூச்சு இழுக்கையிலே,
"ஆணம்மா" என்றென் - காதில்
அன்பாக அறைந்தமொழி.

முட்டூன்றி நடக்கையிலே
முகம்பார்த்துச் சிரிக்கையிலே
முன்னுச்சி மயிர்கோதி
முதுகிழவி ஆசையினால் - ராசா
என்றழைத்த அன்புமொழி.

பள்ளி வகுப்பறையில்
எழுத்தறியா சிறுவயதில்
சின்னக் கைபிடித்து
சீராய் முகம்பார்த்து - ஆசான்
சொல்லிக் கொடுத்தமொழி.

பள்ளித் தோழருடன்
பழகிக் களித்துச்
செல்லச் சண்டையிட்டு
சிரித்து மகிழ்ந்திருந்த - என்நாவில்
எந்நாளும் நின்றமொழி.

கல்லூரிக் காலத்தில்
காதல் கடிதத்தில்
காமம் செப்பாது
கவிதைச் சொல்லாகி - இன்னும்
மறவாத இன்பமொழி.

தாத்தாவின் சிதைமுன்னே
ஊரும் உற்றாரும்
ஒருசேரக் கூடிநிற்க
அரிசிபோட வாருங்கோ - என்று
அறிவிப்பைச் செய்தமொழி.

அப்பாவை எரித்தசாம்பல்
ஆற்றில் ஒழுகவிட்டு
நோன்பிருந்து சிலநாளில்
கல்லெடுப்புச் செய்கையிலே - காதருகே
தொழுதிடுங்கோ என்றமொழி.

என்வாழ்வாய் இருந்தமொழி,
கருவறைக்கும் கல்லறைக்கும்
நடுவிலாடும் வாழ்வதனில்
இறைவணங்க ஆகாதென்றால் - பிழை
மொழியிலில்லை இறையிலில்லை;
இடைநிற்போர்
உள்ளத்தே உள்ளதையா. 

Friday 24 January 2020

தொல்காப்பியம் சொல்லும் மந்திரம்




பெருநூல் தொல்காப்பியத்திற்கு பழம் உரையாசிரியர் அறுவர். இதில் இளம்பூரணர், பேராசிரியர் மற்றும் நச்சினார்க்கினியர் மட்டுமே பொருளதிகாரச் செய்யுளியலுக்கு உரை கண்டிருக்கிறார்கள். 

காலம்
இளம்பூரணர் – 11 ஆம் நூற்றாண்டு
பேராசிரியர் – 12- ஆம்  நூற்றாண்டு இறுதி
நச்சினார்க்கினியர் – 14 ஆம் நூற்றாண்டு.

பொருளதிகாரச் செய்யுளியலுக்கு எழுதப்பெற்ற பழைய உரைகள் இந்த மூன்று மட்டுமே. வேறில்லை. இவற்றில்; இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தும் உரை எனவும், பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நிரம்பிய உரையாக உள்ளது எனவும், நச்சினார்க்கினியர் உரை இலக்கியச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது எனவும் போற்றுகின்றார் சான்றோர்.

இனி செய்திக்கு வருவோம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப. “ தொல்-பொருள்-செய்யுளியல் 1436

முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி, பண்ணத்தி என்ற செய்யுள் வகைகளைக் குறிப்பிடும் நூற்பாக்களில் மந்திரச் செய்யுள் குறித்த இரண்டாவது நூற்பா இது.

இனி, இந்த நூற்பாவிற்கான முதுபெரும் உரைகளைப் பார்ப்போம்.

1. இளம்பூரணர் உரை
என் - னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.
அது வல்லார்வாய்க் கேட்டுணர்க.

2.பேராசிரியர் உரை
இது,  மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று.
நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையராவார். ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப்  புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும்  என்றவாறு.
அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. “தானே'” யென்று பிரித்தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும்; பாட்டாகி அங்கதமெனப் படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க.
 அவை,

"ஆரிய நன்று தமிழ்த்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா"

எனவும்,

"முரணில் பொதியின் முதற்புத்தேழ் வாழி
பரண கபிலரும் வாழி – யரணிய
லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட
னானத்தஞ் சேர்க்க சுவா"

எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரன் ஒருவனைச் சாவவும் வாழவும் பாடிய மந்திரம் அங்கதப்பாட்டாயின. மேற் பாட்டுஉரை நூல் என்புழி அங்கத மென்றோதினான் இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்ன வாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டா கலின் அப்பெயர்த்தாயிற்று. இக்கருத்தே பற்றிப் பிறரும்?

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்' (குறள் உஅ) என்றாரென்க. 

அங்கதப்பாட்டாயவழி அவற்றுக்கு அளவை,
'அங்கதப் பாட்டவற் றளவோடு ஒக்கும்”
என மேற்கூறினானென்பது.

3. நச்சினார்க்கினியர் உரை
இது மந்திரச் செய்யுள் கூறுகின்றது.
 (இ-ள்.) சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்று பயக்கச் சொல்லு மாற்றலுடையார் அவ்வாணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும் என்றவாறு.
அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க.  தானேயென்று பிரித்தார், இவை தமிழ்மந்திரமென்றற்கும்,  மந்திரந்தான் பாட்டாகி யங்கத மெனப்படுவன வுள, அவை நீக்குதற்கு மென்றுணர்க.
அவை

“ஆரிய நன்று தமிழ்த்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா”

“முரணில் பொதியின் முதற்புத்தேழ் வாழி
பரண கபிலரும் வாழி – யரணிய
லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட
னானத்தஞ் சேர்க்க சுவா”

இவை தெற்கில் வாயில்திறவாத பட்டிமண்டபத்தேல் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவுஞ் சாவவும்பாடி யின்னவாறாக வெனச் சவித்தற் பொருட்டாய்வந்த மந்திரம் பாட்டாய்வருதலின் அங்கதமாயிற்று.
இதனான்

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’ (திருக். உஅ) என்றார்.

இவற்றிலிருந்து நாம் அறிந்து கொண்டவை.
1.   நிறைமொழி மாந்தர் - சொல்லிய சொல்லின் பொருண்மை என்றும் குறைவின்றிப் பயக்கச்  சொல்லும் ஆற்றலுடையவர்.
2.   மறைமொழி - புறத்தார்க்குப்  புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடர்.
3.    தானே'” யென்று பிரித்தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும் தானே என்ற சொல்லால் பிரித்ததால் இவை தமிழ் மந்திரம் என்பதற்கும்,

பழம்பெரும் உரையாசிரியர் யாரும் தொல்காப்பியத்தின் ‘நிறைமொழி மாந்தர்’ என்பதற்கு “முற்றுந்துறந்தவர்” என உரையெழுதவில்லை. ‘மந்திரம்’ தமிழ் மந்திரம் என்றும் குறிப்பிடுகின்றனர். அப்படியிருக்க, இணையப் பக்கங்கள் சிலவற்றில் வேறு பொருள் குறித்தான உரைப்பொருள்கள் காணப்படுகின்றன. பேராசிரியரைக் காட்டிலும் சிறந்த பண்டைய உரைகாரர் யாரெனத் தெரியவில்லை. நச்சினார்க்கினியரும் சொல்லாத அந்தப் பொருள் எங்கிருந்து வந்தது என்றும் அறியக் கிடைக்கவில்லை. சரி, எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே எனும் சூத்திரப்படி நோக்கினாலும், “நிறைமொழி மாந்தர்” என்பதற்கு முற்றும் துறந்தவர் என பொருள்கொள்ள இயலவில்லை.

வள்ளுவன், பேராசான், பேரறிஞன் "நிலத்து" என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறான். தொல்காப்பியன் "தானே" என்றது போல. வெண்பாவின் இலக்கணம் வெளிப்படையாய்ச் செய்து வைத்த தொல்காப்பியம் இருப்பதனால் நக்கீரன் பிழைத்தான். இல்லையென்றால் அவனும் "சுவாகா" தான்.

ஆனாலும், வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். பாவாணர் இதுபோன்று சொன்ன போது "என்ன அறிஞர்களை இப்படிக் கூறுகிறாரே என்று எண்ணியதுண்டு. ஆனால் பட்டறிவும் காலமும் அதை மெய்யென்று அறிவித்தன. எப்படியானாலும் எச்சரிக்கையாயிரு தமிழினமே. ஒவ்வொரு முறையும் நீ உள்ளிருந்தே வீழ்த்தப் படுகிறாய். உன் மண்ணில் கிணறு தோண்டி நீரெடுத்துக் காய்ச்சி, உன் மண்ணின் மரங்களின் வேர்களில் பாய்ச்சுகிறார்கள்.

விழுதுகள் வீழ்த்த முனைகின்றன, மூதாலமே கவனமாயிரு. 

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்,
24-01-2020

Saturday 18 January 2020

கடலிலிருந்து கவிதைகள்



இமைகள்
தொட்டுக்கொண்டு விட்டுவிடும்
காலக்கெடுவுக்குள்
எத்தனையோ பிறப்பெடுக்கிறேன்.
எறும்பாய் யானையாய் எருதாய் புலியாய்
பன்றியாய் குரங்காய் அன்றிலாய் குருவியாய்
தும்பியாய் வண்டாய் தேளாய் பாம்பாய்
புல்லாய் மரமாய் கல்லாய் கடலாய்
நிலமாய் நீராய் அவராய் இவராய்
நீங்களாய் நானாய் எல்லாமுமாய்.
உங்கள் உணர்வுகளில்
மூச்செடுத்துக் கொள்கிறேன்.
உங்கள் கனவுகளில்
உடை தைத்துக் கொள்கிறேன்.
உங்கள் மகிழ்ச்சியில்
முகம் துடைத்துக் கொள்கிறேன்.
சில நேரம்,
உங்கள் கண்ணீரால்
என் பேனா நிரப்புகிறேன்.
உங்கள் எழுத்துகளின்
காற்புள்ளிகளில் கருக்கொள்கிறேன்.
அரைப்புள்ளிகளில் வாழ்ந்து முடிக்கிறேன்.
முற்றுப்புள்ளிகளில் சட்டென முகிழ்க்கிறேன்.
இன்னும் பிறக்காத சூல்கள்
தேடியலைகிறேன்.
உங்கள் தொண்டைக் குழிக்குள்
சிக்கிக்கொண்ட சொற்களில்
பாடல் புனைகிறேன்.
நீங்கள் மறந்துபோன
நினைவுகளால் இசைகோர்க்கிறேன்.
உயரப் பறந்து வானம்பாடியாய்
பாடித் திரிகிறேன்.
உள்ளம் களிக்க என்னை மறந்து
உயிர்ப் பந்தாய் விழுகிறேன்;
கடலில் முகந்த நீர்
மழைத்துளியாக
மண் சேர்வது போல்.

அம்மாக்கள்

ஒற்றைச் சொல்லில்
எழுதப்பட்ட
பெருங்காவியம்.
எல்லோர் வாழ்க்கையும்
சித்தன்னவாசல் ஓவியம்தான்
அவரவர் பார்வையில்.
அதில்,
தூரிகையின்றி
அம்மாக்கள் வரைந்தது அதிகம்.
ஒற்றை விரலால்
மேகங்களை விலக்கி
நிலவைக் காட்டினாலும்,
தங்கள் ஆசைகளை
தங்களோடேயே
உடன்கட்டை ஏற்றிப் போனார்கள்.


Friday 17 January 2020

திசைகளில்லை



சுற்றிலும் இருள்
பேரமைதி
மேலலகும் கீழலகும்
உரசுவதை உணர்கிறேன்
கூர் பார்க்கவேண்டி
இருளில் குத்துகிறேன்.
விரிசலின் ஓசை
வெளிச்சக் கீற்று
இறகசைக்கும் காற்று.
ஓசை எழுப்புகிறேன்
எறும்புகள் கூட
திரும்பிப் பார்க்கவில்லை.
தொலைவில் கதிரவன்
வெம்மை தாங்காது
நிழல் தேடி
மெல்ல நடக்கிறேன்.
என் காலடித்தடம் கடக்கவே
ஏழெட்டு முறை
தாவிக் குதிக்கிறேன்.
நான் சென்று தொடும்முன்
நகர்ந்தது மரநிழல்,
எனக்கு முன்னே நடந்தது
என் நிழல்,
பின்புறம் கதிரவன்.
மெல்ல இருண்டது.
மறுநாள் விடியலில்
சிறகசைத்து மரக்கிளை
அடைந்தேன்.
உச்சிக் கதிரவனை
எட்டிப்பிடிக்க
உயரே பறந்தேன்.
உயரே உயரே.
இப்பொழுது
எனது பாதையில்
திசைகளில்லை.
ஆனாலும் நான்
எங்கும் பார்க்கிறேன்
யாதும் காண்கிறேன்.
புற்களின் மீது என்
சிறகின் நிழலால்
ஓவியம் வரைகிறேன்.
ஓசையேதும் எழுப்பவில்லை
ஆனாலும்,
அண்ணாந்து பார்த்து
பெரு மூச்செறிகிறான் ஒரு மனிதன்.


Thursday 16 January 2020

தலைமுறைகள்


நிகழ்காலத்தின்
கண்ணீரை,
இறந்த காலத்தின்
மகிழ்ச்சியைக் கொண்டு
துடைத்துக் கொள்கிறான்
அவன்.


Wednesday 15 January 2020

சுறவம் - புத்தாண்டு - 2020

 
கல்லணை நிறைக்கும்
காவிரிதன்
கரைகள் ஏதென்றால்,
காட்டுதல் எளிதே.
நடுநீர் எதுவென வினவின்;
அத்தனை எளிதா
செப்பம் பகர்ந்திட?

அலைகள் தாலாட்டும்
ஆழியின்
இக்கரை அக்கரை
இயம்புதல் எளிதே.
நடுக்கடல் எதுவென வினவின்;
அத்தனை எளிதா
செப்பம் பகர்ந்திட?

வானில் கதிரவனைக்
காணும் வழியின்
தென்கரை வடகரை;
தன்நிழல் கொண்டே
எண்ணுதல் எளிதே.
நடுவழி எதுவென வினவின்;
அத்தனை எளிதா
செப்பம் பகர்ந்திட?

தென்முதல் தொடங்குதல்
தண்டமிழ் மரபே.
தென்னவன் மீன்குறி
தன்பெயர்ச் சூடிய
சுறவத் திங்களே
மன்னர்க்குத் தொடக்கம்.
முழவு கறங்க
முகிழ்த்தது புத்தாண்டு.

பொங்கல் பொங்கிட
பொலி சிறந்திட
ஏறுகள் களித்திட
யானைகள் மகிழ்ந்திட
கன்னல் தமிழெடுத்து
வையம் வாழி! வாழி!! என
வாழ்த்துவமே.

Saturday 11 January 2020

பிரப்பு... இன்னும் காயாத ஈரம்.

 

 
இன்னும் புலரத் தொடங்காத இளவெளிச்சத்தில், அது ஒரு கனவு போல இருந்தது. தொலைவில் கேட்கிறது எம் மக்களின் ஆதி இசை. இசைக் கருவிகள் கண்டுபிடிக்கும் முன்பாக உடலே கருவியாய்க் கண்ட ஏதோ ஒரு பெயரில்லாத மூத்தோள், தன் நாவசைத்து ஒலியெழுப்பி தன் கூட்டத்திற்குக் கொடுத்த குரவை(குலவை) இசை. மாடியிலிருந்து தூக்கக் கலக்கத்தில் எட்டிப்பார்க்கிறேன். பின்புறம் செல்லியாச்சி வீட்டிலிருந்து மெல்லிய புகைச் சுருள் மேலெழும்புவது தெரிகிறது. அவள் பெருநா எழுப்பிய குரவையின் பேரொலி இனிமையாய்க் கேட்கிறது. "பால் பொங்கிவிட்டது" போலும்.

குமரிமண்ணில், பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லா நிகழ்வுகளிலும் குலவையிடுதல் முகாமையான ஒன்று. அதுவும் பொங்கலன்று பால்பொங்கும் போது குலவையிடுவது மகிழ்ச்சியின் பெருநிலை. எங்கள் பகுதியில் "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி நான் கேட்டதில்லை. குரவையொலி மட்டுந்தான். பண்டு மலைகளில் கண்டடைந்த குரவை இசையும், காடுகளில் சமைத்த "புன்கம்" என்ற பொங்கலும், குறிஞ்சியில் சேர்த்து வைத்த "பிரப்பும்", வழிபடு "களம்" வரைதலும்  இன்றுவரை எம்முடைய பொங்கலில் விரவிக்கிடக்கிற; பல்லாயிரம் ஆண்டுகளாக மாறாத வண்ணங்கள்.

வேளாண்மையன்றி வேறேதும் பெரிதாக அறிந்திராத ஊரில், வீட்டில் பிறந்ததால்; வாழ்வியலின் ஏராளமான கூறுகளில் நாங்கள் வாழ்ந்த பகுதிக்கு ஏனைய பகுதிகளோடு உள்ள ஒத்திசைவும், வேறுபாடுகளும் சமூக இணக்கம் மற்றும் இறுக்கத்தின் காரணிகள் எவையாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தன. குறிஞ்சியிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாகச் சுமந்து நடக்கும் ஏராளமான பண்பாட்டு எச்சங்கள் இப்பொழுது கூட கண்ணில் படுவதற்கு அதுவே காரணம்.

மாடியிலிருந்து இறங்கி வருகிறேன். பாட்டியின் கண்ணில் பட்டுவிடக் கூடாது. "இன்னைக்காது காலம்பற எந்திக்காண்டாமா?. பால் பொங்குகதுக்குள்ள குளிக்காண்டாமா?" என்று கண்டிப்பாகச் சொல்லுவாள். ஆனாலும் ஆவணிப் பொங்கல் போல் தைப்பொங்கலுக்கு விடியும் முன்னே பால் பொங்க வேண்டியதில்லை என்றும் அவளே சொல்லியிருக்கிறாள். தைப்பொங்கல் எப்பொழுது வேண்டுமானலும் வைக்கலாம். "நல்லநேரம்" பார்ப்பதெல்லாம் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளுக்குள் வந்த அண்மைக்காலப் புரட்டுகள். அதற்குமுன் வேளாண்மை செய்து வாழ்வாங்கு வாழ்ந்த யாரும், பொங்கலிட நல்லநேரம் பார்த்ததில்லை. எங்கள் வீட்டிலும் கூட. அதனால் முற்றத்தில் அத்தனை பரபரப்பு இருக்காது. 

 திண்ணைச் சாரளத்தின் வழியாக முற்றத்தை எட்டிப் பார்க்கிறேன். பொங்கலுக்கு எழுதிய "களம்" பளிச்செனத் தெரிகிறது. அதற்குள் சிறு பலகையொன்றின் மேலே பச்சை மண்குழைத்து மூன்று நான்கு நாட்களுக்கு முன் செய்யப்பட்ட "சாமி" இருக்கிறது. அருகில் விளக்கு. கொஞ்சம் பூக்கள். கிழங்கு வகைகள். காய்கள். எங்கள் பகுதில் பயிரிடப் படாத கரும்பும், மஞ்சளும் கூட  இருக்கிறது. முக்கியமான பொங்கலும், பருப்பரிசியும் இன்னும் வைக்கப்படவில்லை. வேலை நடந்து கொண்டிருக்கிறது. சாமி செய்யும் போது அதனோடு சிறிய பித்தளை குத்துப்போணியில் குழைத்த மண் நிறைத்துக் கவிழ்த்தி செய்யப்பெற்ற "அடுப்பாங்கட்டிகளின்" மீது பொங்கலுக்கு தேங்காய் நீர் கலந்த உலை சூடேறிக் கொண்டிருக்கிறது. புதுப்பானை வழக்கமெல்லாம் இல்லை. இரண்டாயிரமாண்டுக்கு முந்தைய  பிட்டங்கொற்றனின் "குழிசி' போல பழக்கத்தில் இருக்கும் வெண்கலப் பானையே பொங்கல் பானையாக இருக்கும்.

களம்
இரவு நெடுநேரம் சித்தி, தங்கை எல்லோரும் பச்சரிசி மாவில் கோலமிட்டார்கள். நானும் அண்ணனும் வெளிப்புறம் "ஒட்டுப் படிப்புரை", "கல்நடை" எங்கும், வடசேரிக்காரர் கடையிலிருந்து வாங்கிய காவிக்கட்டியும், நல்ல வெண்ணைபோல சிப்பியை நீத்தியெடுத்தச் சுண்ணாம்பும் கொண்டு வெள்ளையும் காவியும் தீட்டினோம். இந்த இரண்டு வண்ணங்களும் பாறை ஓவியங்கள் வரையத் தொடங்கிய காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட இரும்புச்சத்து அடர்ந்த செந்நிற மண்ணும், சுண்ணாம்புமே. அதன் பிறகு பொங்கல் வைத்து வழிபடுவதற்கான களம் வரைந்தோம். வீடு போன்ற ஒரு எல்லைத் தோற்றம் தரும் வகையில் சுண்ணமும், காவியும் கொண்டு வரையப்படும் வழிபடும் இடமே "களம்'. படம் : 1 ல் காண்க. (புகைப்படம் இல்லாததால், கணிணியில் வரைந்த படம்). இந்த வழிபாட்டுக் களம் வரைதல் இன்று நேற்றல்ல...

"முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி," -  (அகம் - 22)

"கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,

ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,              

வெண் போழ் கடம்பொடு சூடி," - (அகம் - 98) 

"அறியா வேலற் தரீஇ, அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி," - (அகம் - 242)

"பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி" - (ஐங் - 248)

என பல்லாயிரமாண்டுகளாக இப்படியொரு களம் இழைத்து அதனுள்ளே படையலிட்டு வழிபடும் முறை தொடர்ந்து வருகிறதென்பதை செவ்விலக்கியங்கள் எடுத்தோதுகின்றன. 

படையல்

ஒரு பானையில் பாலும், தேங்காய் நீரும் கலந்து அதில் பச்சரிசியை இட்டு வைத்த வெண்பொங்கல். மற்றொன்றில் சருக்கரைப் பொங்கல் அல்லது அரிசிக் கன்னல்(பாயசம்). பால் பொங்கி, குலவையிட்டு பொங்கி இறக்கி, களத்துக்குள் வைத்துவிட்டு "பருப்பரிசி" பிசைய ஆரம்பிப்பார்கள்.

பருப்பரிசி. பொங்கலின் முகாமையான படையல் இது.  பச்சரிசியுடன் சிறிது பாசிப்பருப்பு சேர்த்து தேங்காய் நீர் தெளித்து துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து கொஞ்சம் பிசைந்து கொள்வார்கள். அதனுடன் நான்கைந்து வாழைப்பழங்களை உரித்துப் போட்டு நன்றாகப் பிசைவார்கள். வெல்லமும் தேங்காய்ச் சாறும் பழமும் சேர்ந்து கூழாகிவிடும். அதில் பச்சரிசி ஊறிக்கொண்டிருக்கும். இன்று அதை நினைத்தால் திருமுருகாற்றுப்படையின் இந்த வரிகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரை இய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்துப்       
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி - (திருமு - 232-237).


 மருதத்தில் நுழைந்து நெடுங்காலமாகிவிட்டது. ஆட்டுக் குருதியில் பிசைந்த வெண்ணெல்லரிசி; இன்று பழமும் வெல்லமும் தேங்காயும் கலந்து பிசைந்த கூழில் கிடக்கிறது. ஆனால் அதைகொண்டு "சில்பலி" இன்னும் பொங்கல் களத்தினுள் நிகழ்த்தப்படுகிறது. "பல்பிரப்பு" இன்னும் படைக்கப் படுகிறது. அருகிலே காயவைக்கப் படாத 'பசு மஞ்சள்' குலை இருக்கிறது. இன்று மருத நிலத்தின் மகனாய் என்னை நான் உணர்ந்திருந்தாலும், மேற்கே தெரியும் வானமலையின் ஏதோ ஒரு முகட்டில் "பிரப்பு அரிசி இரீய" யாரோ ஒருவரே என் முன்னோராய் இருத்தற் கூடுமென்பது செந்தமிழும், பண்பாடும், வரலாறும், பொங்கலன்று என் வீட்டு வாயிலில் நான் எழுதிய களமும், படையலும் எமக்குச் சொல்லும் செய்தி. ஒருவேளை நாங்கள் பச்சை மண் குழைத்து  செய்து வைத்த  முகமற்ற அந்த "சாமி" அவராகவே இருத்தற் கூடும். பிரப்பரிசியே பருப்பரிசியாகவும் மாறியிருத்தற் கூடும். 

தினைப்பிரப் பிரீஇச் - (குறுந் - 263)

பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,   - (அகம் - 98)

முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ,
  - (அகம் - 242) 


செவ்விலக்கியங்களுக்குள் நடந்து போனோமானால், இப்படி நிறைய இடங்களில் "பிரப்பு" சிதறிக் கிடப்பதைக் காண முடியும். கையில் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் இன்னும் காய்ந்துவிடாத அதன் ஈரத்தை உணர முடியும். அந்த ஈரம் தேடி கேள்வி எழுப்பிய போது நண்பர்கள் பகிர்ந்துகொண்ட செய்திகள் கீழே.

1.நா.இராசாரகுநாதன், உறையூர். - எங்கள் பகுதியில் பொங்கலுக்கு இல்லை. ஆனால், ஆடிப்பெருக்கிற்கு "வாளா அரிசி" படையலிடுவோம். வாளா அரிசி,எள், தேங்காய், வெல்லம் கலந்த கலவை. 
 
2.கோகிலன் சச்சிதானந்தன், ஈழம். - பொங்கலில் பச்சரிசி பயத்தம்பருப்பு தேங்காய்ப்பால் , சர்க்கரைப் பொங்லென்றால் பசும்பால் சர்க்கரை, ஏலக்காய், திராட்சை வற்றல் கலந்து பொங்கல். வெண்பொங்கலுடன் சாம்பார். உழுந்து வடை, வாழைப்பழம், விழாம்பழம், கரும்பு மற்றும் மாம்பழம் பலாப்பழம் எப்போதாவது கிடைக்கும். பால், தயிர், இவற்றுடன் முடிந்தால் மோதகம் கொழுக்கட்டை, பால்ரொட்டி. தேங்காய் இளநீர் பழம் பாக்கு வெற்றிலை உள்ளபடி. படையல் அரிசி வைத்ததாய் நினைவில்லை. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வழக்கங்கள் இவை. சிலர் பானையில் முழுக்க முழுக்க எருமைப்பால் அல்லது பசுப்பால் பயன்படுத்துவர்.
 
3.மூ.த.கவித்துவன், நல்லூர், புதுக்கோட்டை. - எங்கள் ஊர்ப் பகுதியில் பருப்பரிசி இல்லை.
 
4.த.தமிழினியன், காஞ்சிவரம். - பருப்பும் பழமும் சேர்க்கும் வழமை இல்லை. மற்றபடி பச்சரிசி வெல்லம் தேங்காய் சேர்த்த கலவை படையல் உண்டு.
 
5.வெங்கட், இராதாபுரம், திருநெல்வேலி மாவட்டம். - எங்களுடைய குல தெய்வ வழிபாட்டில் வைப்போம்....பச்சரிசி, தேங்காய் தண்ணீரில் ஊற வைத்து...வாழைப்பழம் ,வெல்லம் ,தேய்காய் துருவல் எல்லாவற்றையும் பிசைந்து வைப்போம்.
 
6.தியாகு, வேங்கூர், கல்லணை. - பருப்பரிசி இல்லை.
 
7.வளவன் கோவிந்தராசன், குடந்தை - பழக்கம் இல்லை.
 
8.அரங்க பொன்முடி, தஞ்சை - வழக்கம் இல்லை.
 
9.வேல்சாமி, திருமுதுகுன்றம். (விருத்தாசலம்) - வழக்கம் இல்லை.
 
10.மோகன் சிதம்பரதாணுபிள்ளை, புதுக்கோட்டை. - பொங்கலில் இல்லை, காதுகுத்தும் போது "காதரிசி" உண்டு.
 
11.சந்திரசேகர், (கோவை -ஈரோடு ) - வழக்கம் இல்லை.
 
12.அருளொளி, ஈரோடு. - வழக்கம் இல்லை.
 
13.குமரகுருபரன், முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி.- வழக்கம் இல்லை.
 
14.புனிதா ஆறுமுகம், கோவை. - வழக்கம் இல்லை.
 
15.மீரா ரெங்கராஜ், குணசீலம். - குணசீலம் அதை சுற்றி யுள்ள ஊர்களில் ஆடிப்பெருக்கு அன்று பச்சை பயறு, பச்சை அரிசி, வெல்லம் கலந்து வைத்து படையலில் வைப்பார்கள் மற்றும் சித்திரை, கார்த்திகை மாதங்களில் மாரியம்மனுக்கு படையல் போடும் போதும் இதை வைப்பார்கள் காது குத்துதல் விழாவில் "காப்பரிசி" என்று மிக முக்கியமாக இதை கொடுப்பது வழக்கம்.
 
16.ஏ.கே.ராஜேஷ்குமார், இலண்டன். - சொந்த ஊர் மதுரை. அங்கே இந்த வழக்கம் இல்லை.
 
17.ரமேஷ்கிருட்டினன், முசிறி. - ஆடிப்பெருக்கில் உண்டு. பொங்கலில் இல்லை.
 
18.சிவகாமி தேவி, கூவம், காஞ்சிவரம் மாவட்டம். - பொங்கலில் இல்லை. புதுவிட்டு நிலைக்கால் ஊன்றும்போது, மொட்டையடித்து காதுகுத்தும் போதும் இதைப் படைப்பது உண்டு.
 
19.ஜீவா ராஜசேகர், வாணியம்பாடி. - அரிசி பயன்பாடு இல்லை. காதுகுத்தும் போது பொரிகடலை வெல்லம் சேர்த்த ஒன்றை படையலாகப் பயன்படுத்துவார்கள். 
 
20. திருமதி அணுராதா நாராயணசாமி, மலேசியா - துள்ளு‌மாவு என, பச்சரிசி ஊறவைத்துப் பொடித்து வெல்லம் கலந்து முன்னோர் படையல் மற்றும்‌ புதுமனை புகுவிழாவிற்கு படைக்கப்படுகிறது - திருச்செங்கோடு - நாமக்கல் மாவட்டம்.

21.திரு சி.அறிவுறுவோன், அம்மையகரம், வரகூர், தஞ்சை மாவட்டம்
- தஞ்சையிலும் களம் வரைதல் உண்டு. என்றாலும் அதற்குக் களம் என்னும் பெயர் இல்லை. அதனுள் பொங்கிமுடித்த பொங்கலை எடுத்துவைத்துப் படைக்கும் படைக்கும் இடமாகவே அந்தக் களம் அமைந்துள்ளது. இது சூரியப்பொங்கல் ஆகவே இதற்குச் சாமிகள் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் சாமிகளுக்கான "சடங்காச்சாரங்கள்" உண்டு.பொங்கல் அல்லாத பிறவற்றில் பாசிப்பயிறு கலந்த பச்சரிசி, வெல்லம் சுவை கூட்டும். பிறப்பரிசி வழக்கம் இங்கு வீழ்ந்துவிட்டது. 
 
 22.சசிகுமார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம். - ஆடியில் சக்தி பூசையின் போதும், கார்திகையில் கன்னி பூசையின் போதும் ,மற்றும் குடும்பத்தில் இறந்த முன்னோர் யாருக்கேனும் சாமி கும்பிடும் போதும் கண்டிப்பாக அரிசியும், வெல்லமும் வாழை பழமும் தேங்காயும் தேங்காய் தண்ணீரும் கலந்து பிசைந்த கலவை கண்டிப்பாக இடம் பெரும். ஆனால் பொங்கல் அன்று பொங்கலிடும் பச்சரிசியை ஒரு பிலாபெட்டியில் (பணையோலையில் செய்த கை அடக்க கூடை) வைத்து பொங்கல் பாணையில் கொட்டுவோம் அப்பொழுது சிறிது அரிசியை பெட்டியிலே மீதம் வைக்க வேண்டும். பின் பொங்கலுக்கு திருவும் தேங்காயில் சிறிதளவு அப்படியே சிரட்டையோடு விட்டுவிட வேண்டும். அதே போல் வெல்லமும். இம்மூன்றும் கலந்த கலவை கொண்ட சிரட்டையயையும் படையலில் வைத்து பூசை செய்வது இன்றும் உண்டு.மேலும் எங்கள் ஊரில் வெயில் தாழ (சாயுங்காலம்) தான் பொங்கல் வைப்போம்

எல்லோருடைய செய்தியும் பொதுவாகச் சொல்வது; அரிசியை சமைக்காமல் வெல்லம், பயறு போன்றவற்றுடன் சேர்த்து வழிபாட்டில் படையலாக இடுவது ஒரு பரவலான நடைமுறையாகவே இருக்கிறது. காதுகுத்தின் போது இடும் பிரப்புப் படையல் "காப்பரிசி" என்ற சொல்லால் குறிக்கப்படுவது அதன் சிறப்பை உணர்த்துகிறது. மதங்கள் உருவாகும் முன்னே, முன்னோர் வழிபாடாக, முருகு(ஆற்றல்) வணக்கமாக இருந்த எளிய வழிபாட்டு முறையின் முக்கிய படையலான "பிரப்பு" வேறு வேறு பெயர்களில் இன்னும் அதே காப்புப் படையலாக படைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 

சிறப்பானவை
ஈழத்தில் பொங்கலன்று உழுந்துவடை, மோதகம், கொழுக்கட்டை போன்றவை படையலாக, விருந்துணவாக இருக்கிறது. தைந்நீராடல் குறிக்கும் இலக்கியங்களில் மதுரையின் விழவு உணவாக அப்பம், அடை, கொழுக்கட்டை, மோதகம் போன்றவை கடைத்தெருவில் விற்கப்பட்டதை பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவை குறித்து வைத்திருக்கின்றன. பாண்டிய நாட்டோடு ஈழம் கொண்டிருந்த பண்டை உறவு அதன் பண்பாட்டுக் கூறுகளுக்குள்ளும் காணக்கிடைக்கிறது.

நெல்லையில் குலதெய்வ வழிபாட்டில் 'பருப்பரிசி" படையலாக இருக்கிறது.

குணசீலம் பகுதியில் மாரியம்மன் படையலில் 'பருப்பரிசி" முக்கிய இடம் பெறுகிறது.

காஞ்சிவரம் மாவட்டம் கூவத்திலிருந்து கிடைத்த செய்தி, வாசல்கால் (நிலைக்கால்) வைக்கும் போது "பருப்பரிசி" படைப்பது. அது வழிபாட்டு படையல் என்பதற்கு வலுசேர்க்கிறது.

நீட்சி 

நெடுங்காலமாக குறிஞ்சியில் தோன்றிய ஒரு வழிபாட்டு முறையின் (சரியா? தவறா? என்ற தருக்கம் வேறு) தொடர்ச்சியை தமிழ் நிலமெங்கும் காண்கிறோம். இன்று அண்டை மாநிலங்களாகப் போய்விட்ட கேரள, தென் கருநாடகப் பகுதிகளிலும் இதன் எச்சங்கள் மிகுதியாகக் காணக் கிடைக்கின்றன. முன்னோர் வழிபாட்டின் "பிரப்பு", "பருப்பரிசி", "காப்பரிசி", "வாளா அரிசி", "காதரிசி" இன்னும் படையலாய் இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் "களம்(வீடு)" வரைவது இன்னும் இருக்கிறது. குதிரை மலைப் பிட்டங்கொற்றனின் புன்கமும், வானமலையின் பிரப்பும் குமரியின் முற்றங்களிலே இணைந்து காணக்கிடைக்கிறது. களத்தினுள்ளே காணும் உருவம் போன்றே பெரும்பாலும் ஊர்க்கோயில்களில் காணப்படுகிறது. மாடன், கருப்பன், பூதத்தான் போன்ற தெய்வங்கள் இதுபோன்ற எளிய உருவிலேயே இருக்கின்றன. சமைக்காமல் படையல் ஏற்றுக்குள்ளும் இந்த தெய்வங்கள், காடுகளுக்குள்ளே உணவை சேகரிக்கும் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்தில் தோன்றிய தெய்வங்களாக இருக்கலாம். முல்லைக்கு நகர்ந்து மருதம் வளர்த்து நெடுங்காலம் ஓடியபின்னும் இன்னும் விட்டுவிடாமல் தொடர்ந்து வருகிற இந்தப் பண்பாட்டுக்கூறு வியப்பளிக்கிறது.

இதை எண்ணிக்கொண்டிருக்கும் போதே பாட்டியின் குலவை ஒலி பேரோசையாய்க் கேட்கிறது. எங்கள் வீட்டிலும் பால் பொங்கிவிட்டது போலும். முற்றத்தை நோக்கி நடக்கிறேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். நீங்களும் பால் பொங்கும் வேளையில் "குலவை" இடுங்கள். பல்லாயிரமாண்டுகள் தாண்டியும் ஒலிக்கட்டும் நம் மூத்தோளின் ஆதி இசை.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்,
11-01-2020