Friday, 29 April 2022

நூறில் ஒன்று

 


மலர்கிறோம் என்பதை

மலர்கள் அறியுமா?

பாய்கிறோம் என்பதை

அருவிகள் உணருமா?

ஓடும் ஆறுகள்

ஓய்வினைத் துய்க்குமா?

தேங்கிய ஏரி

ஓடிட எண்ணுமா?

நூறு கூறாய் நொடியைத் துணித்த

இம்மியளவு இடைவெளியில்

உள்ளில் கிளர்ந்த மகிழ்வின் நிகழ்வை

மறுபடியொருமுறை

மனம் பெற இயலுமா?

Friday, 15 April 2022

எங்கள் முகம்

 

பார்க்கும் நொடிகளின் உணர்வுகளை எழுத்துகளில் உயிர்ப்போடு பதிவு செய்து விடவேண்டுமென்ற வேட்கையோடு, மனதுக்குள் எப்பொழுதும் எழுத்துகளைக் கோத்துக் கொண்டிருக்கும் என் முன்னே; காலத்தின் பதிவாய்த் தொடங்கிய  இந்தத் திரைப்படம். நான் மறந்துபோயிருந்த நொடிகளையும் நினைவுபடுத்திக் கொண்டே மெல்ல நகரத் தொடங்கியது.

ஊசி போட்டால்தான் அரங்கிற்கு வரவேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து; படம் பார்க்க ஊசியா? நோயச்சம் கூட புறந்தள்ளி வைத்த ஊசியை படம் பார்க்கவென்று போடுவோமா? படம் பார்ப்பதையே தள்ளிப்போட்டிருந்தேன். வணிகம் வாசலுக்கு வரத்தானே செய்யும். வந்தது. இணையத்தில் நேற்று பார்த்தேன். இதைக் குறித்து பலரும் நிறைய பேசிவிட்டார்கள். என் பங்கிற்கு...

பெருங்குடும்பமொன்றின் "கடைசி விவசாயிக்கு" மகனாகப் பிறந்து எண்பதைத் தாண்டிய அவரது வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் கேட்டும் கண்டும் வளர்ந்த எனக்கு, பொத்தான் அறுந்துபோய் முடிச்சிட்டு இறுக்கிய நிக்கரும், சட்டையணியாத வெற்றுடம்புமாய், சாளரத்தின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு எங்கள் ஊரையே பார்ப்பது போலிருந்தது இந்தத் திரைப்படம்.

சிற்றூர்களின் நுண்ணிய வாழ்வியலை எழுத்தாக வடிக்கும் போதே மிகவும் கூர்மையாக, படிப்பவர் அறிந்திருக்கிற சொற்களால் எழுதவேண்டிய கட்டாயம் இருக்கும். அதையே திரைப்படமாக ஆக்கும்போது இன்னும் கடினம். காட்சிகளின் பெரும் பரப்பை எல்லோரும் கவனிப்பார்களா? தொலைவில் தெரியும் சின்ன அசைவுகளால் காட்சி செறிவடைவதை உணர்வார்களா? என்பதையெல்லாம் நூறு விழுக்காடு உறுதி செய்ய முடியாத நிலையில் "கடைசி விவசாயி" போன்ற திரைப்படங்களை நாம் பாராட்ட வேண்டியிருக்கிறது.

சிற்றூர் ஒன்றின் வாழ்வியலை சிறப்பாகப் பதிவு செய்த இயக்குநர் மணிகண்டனுக்கு நல்வாழ்த்து. ஆனால் அதை, அந்த உணர்வை நாம் எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதுதான் வினா.

மாலை வேளையில் கடைத்தெருவில் பிச்சையெடுக்க வைக்கப் படுகிற யானையை, திருவிழாக்களில் தேரை உந்தித் தள்ளுகிற, காட்டுக்குள் மரத்தடிகளைச் சுமந்துசென்று அடுக்கி வைக்கிற யானைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அப்பொழுதெல்லாம் அதன் முன்னங்கால் உயரம் கூட இல்லாத ஒரு மனிதன் அந்தப் பேருயிரை அடக்கி ஆள்வதை எண்ணி வியந்திருக்கிறீர்களா?

ஏதோ ஒரு காட்டுக்குள் என்றோ ஒரு காலத்தில் யாரோ ஒரு மனிதன் கருவிகள் ஏதுமின்றி முதன்முறையாக ஒரு யானை மீது ஏறி அமர்ந்து தன் குரலால் அதை அடிபணிய வைத்தான் என்பதை பெரு வியப்போடு நாம் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்படித்தான் "நீ மட்டும் அவர காப்பாத்தல யேய் கருப்பா அப்புறம் நீ எதுக்கு இருக்க" என்ற குரலின் உறுதியையும் வியப்போடு நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. சமூக ஊடகத்தில் எது நடந்தாலும் அதைக் குறித்த அறிவைத்தேடி வாதங்களில் நேரம் செலவிடுகிற நமக்கு அய்யனாரோடு கோவித்துக் கொண்டு சண்டையிடுகிற மூதாட்டியை எளிதாக உணர்ந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அது பற்றிய கவலை ஏதுமின்றி அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 கேட்கும் திறன் இல்லாத அந்த எண்பது வயதுப் பெரியவரின் உலகம் மரபுகளாலும், அன்பாலும், இயற்கை மீதான நம்பிக்கைகளாலும், மரபறிவாலும் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது. அது அவருக்கு முன்னமே இருந்து வருகிறது என்ற அசையா நம்பிக்கையில் அதைக் கடந்து செல்லும் வாழ்க்கையையே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செலுத்தும் அன்புகூட தனது என்ற எண்ணம் அவரிடம் இல்லை. சிறகுகளின்றி மண்ணில் நடக்கிற பட்டாம்பூச்சி அவர். எங்கள் ஊரிலும் இப்படி ஏராளமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.

காட்சிகளில் இயல்பின் வெளிப்பாடு. சிற்றூர்களுக்கே உரிய சமநிலைத் தன்மை. ஒப்பனையில்லா அன்பின் வெளிப்பாடுகள். ஒற்றைச் சொல்லில் பொறுப்பை ஏற்றுக்கொள்கிற உறுதி. எளிமை.

"பழனிக்கு போனேன்..முருகன பாக்க"

"பாத்தியா?"

"ஆமா..."

"என்ன சொன்னான்?"

இப்படியான உரையாடலை பின்புல ஒப்பனைகள் ஏதுமின்றி கையில் அள்ளி எடுத்தக் கவளம் சோற்றோடு உங்கள் வீட்டுத் திண்ணையில் கேட்க நேர்ந்தால் எப்படியிருக்கும்?

மர்டுக்சும், அல்காதிரும், மெக்சிகோவும், கதிர்காமமும் நினைவுக்கு வந்து பழந்தமிழர் வரலாற்றை நினைவுபடுத்தினார்கள் என்றால் நீங்கள் உங்கள் திண்ணையில்தான் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை உணரலாம். இல்லையென்றாலும் கவலைப்பட ஏதுமில்லை, நீங்கள் விதை நெல்லை விட்டுவிட்டு வெகு தொலைவு பயணித்துவிட்டீர்கள் அவ்வளவே.

சித்தம் பேதலித்த மகனிடம் "சாப்பிடு, ஒரு சேதி சொல்லணும்" என்று கூறி உணவு உண்ணும் வரைக் காத்திருந்து பிறகு "தோட்டத்துல மூணு மயிலு செத்துக்கெடந்துச்சு" என்று சொல்கிற பட்டறிவில் அன்பின் வெளிப்பாடு மிகுதி. 

இந்தப் படமும் அப்படித்தான். உங்கள் பட்டறிவும் உணர்வும் உங்கள் இரு கண்களாய் இருந்தால் பார்க்கும் போது அந்தச் சிற்றூரின் தெருக்களில் நடந்துபோக இயலும். இல்லையென்றால் "காடு இல்லைன்னா நான் காலைல எந்திரிச்சு என்ன செய்வேன்? பணத்த கைக்கடியில வச்சுகிட்டு படுக்க சொல்றியா? காட்ட தரமாட்டேன்" என்கிற சொற்களின் ஆழம் அறியாது வெறுமையில் தடுமாறுவது போலிருக்கும்.

எம் மண்ணின் வாழ்வியலை உலகத்திற்குக் காட்டுவதற்கான அத்தனைத் தகுதியையும் பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம். கொண்டாட வேண்டிய திரைப்படம். புரிந்து கொண்ட உணர்வு தோன்றுகிற வரை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டிய படம். 

தற்சார்பு குறித்து ஏராளம் பேசுகிறோம். குழந்தைகளை அதை நோக்கி நகர்த்த முனைகிறோம். ஆனால் வணிக உலகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிற நம் மனம் தற்சார்பை பொருளோடு வைத்தே எண்ணுகிறது. பணம் இல்லாமல் தற்சாற்பு இயலாது என்று எண்ண வைக்கிறது. இது வணிகத்தின் வெற்றி. 

இதை உடைத்தெறிய உணர்வு மேலோங்க வேண்டும். தற்சார்பு உணர்வில் துளிர்த்தெழும் ஒரு ஆலமரம். "கடைசி விவசாயி" போன்ற திரைப்படங்கள் நம் மனதுக்குள் மெல்ல மெல்ல அந்த உணர்வைத் தட்டியெழுப்பும். நாம்தான் சாளரங்களைத் திறந்து வைக்க வேண்டும். 

வாய்ப்பிருப்பின் உணர்வு பெறுங்கள். உங்கள் சாளரத்தின் வழியே எங்கள் முகம் பாருங்கள். நன்றி.

Wednesday, 13 April 2022

புல்லாங்குழல்


 

உள்ளீடற்றப் புல்லாங்குழலில்

உறைந்துகிடக்கும்

பல்லாயிரம் பாடல்களைப் போல,

உள்ளத்தில் உறங்குகின்றன;

யாரும் அறியாத

எண்ணிலடங்காப் பாடல்கள்.

 

ஒருமுறை நீ

உதடு குவித்து ஊதினாய்!

காற்றேதும் தீண்டி

அந்தத் தடம் அழியாது

காவல் செய்தே

கழிந்தது காலம்.

 

இளமை

தீர்ந்து போனபின்;

இலையுதிர் காலத்து

மரக்கிளைபோல

நினைவின் கோடுகளால்

நிறைந்து கிடக்கிறது மனம்.

 

உள்ளத்தின் வெம்மை தாளாது

உடல் வியர்க்க,

குருதி அடைப்பென

குறி சொல்கிறார் மருத்துவர்.

 

கொழுப்பு!

ஒற்றைச் சொல்லில்

உடல் அளந்தன உறவுகள்.

மதுவோ? புகையோ?

மயக்கத்தில் சில

மனங்கள்.

 

உப்போ? சக்கரையோ?

உழன்ற போதெல்லாம்

உதறிவிட்டுப் போன

சில சொந்தங்கள்.

 

நெஞ்சாங்குலையில் நிறையும்

உன் நினைவுகளால்

திடப்பட்டு ஓடுகிறது குருதி

என்பதை மட்டும்

யாரும் அறிந்திருக்கவில்லை.

 

நீயேனும் அறிவாயா?

Sunday, 10 April 2022

ஆரணங்கு

 


என்னருமைத் தமிழினமே, பண்பாட்டுக் கூறுகளில், மரபுக் கூறுகளில் ஒவ்வொரு முறையும் இரு முனைத் தாக்குதலுக்கு ஆளாகிறாய். கூர்ந்து நோக்கினால் நாம் மூன்றாவதாகவே நின்று கொண்டிருக்கிறோம். இந்த முறையும் அப்படியே.

தமிழணங்கு தமிழ்த்தாய் யாரைத் தேடுவதானாலும் அதைத் தமிழில் இருந்துதான் தேடியாகவேண்டும். தமிழ் மரபுகளின் தலை மேட்டில் தான் அவள் இருப்பாள். நீண்டு கிடந்த நெய்தலிலும் நெடிதுயர்ந்த மலைகளிலும் நடந்து திரிந்து களித்திருப்பாள்.

இயற்கையின் பேராற்றலை உடலால் உணர்ந்த மனிதன் அதை ஒலியாலும் உணரக் கற்றுக்கொண்டான். பேரரருவிகளின் ஓசையைக் கொண்டே அதன் ஆற்றலைக் கணிக்க முற்பட்டான். காற்றின் ஓசையில் அதன் கனமறிந்தான். தோலின் மீது வெயிலின் தாக்கத்தால் உதட்டில் எழும்பிய ஒலியில் உணர்வு கண்டான். “சு” வென்றான் பின்னே சுள் சுர் சூர் என்றான்.

தொலைவில் கேட்ட ஒலியை ஒல் என்றான். ஒல் அல் அலம்பு. அலம்புதல் = ஒலித்தல். அல் அலு அலுங்கு அணுங்கு. அணுங்குதல் = முணுமுணுத்தல், ஒலித்தல். அலுங்கு அணுங்கு அணங்கு.

சூரும் அணங்கும் இயற்கையின் ஆற்றலைக் குறிக்க ஆதியில் தமிழன் வடித்த சொற்கள். சூர் நிறைந்த பெண் சூர்மகள் ஆனாள். தாய்த்தெய்வ வழிபாட்டில் சூரர மகளிர் ஆனார். ஆண் அன் விகுதி பெற்று சூரன் ஆனான்.

அணங்குடைச் சிலம்பு,  அணங்குடை நெடுங்கோடு,   சூர் உறை வெற்பு, அணங்குடை முந்நீர், சூருடைச் சிலம்பு, சூருடை நனந்தலைச் சுனை போன்ற செவ்விலக்கிய சொல்லாட்சிகள் மலை, மலைச்சாரல், நீர்ச்சுனை முதலான இயற்கைப் பகுதிகளில் சூரும், அணங்கும் குடிகொண்டிருந்தன என்ற அக்கால மக்களின் நம்பிக்கைகளை பதிவு செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள சூர், அணங்கு என்ற ஆற்றல குறித்தான உருவகங்கள் பின்பு உருவான முல்லை மற்றும் மருதச் சமூகநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டு பலவகை நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன. உருவ/உருவக அமைப்புகளைக் கைக்கொண்டன. யாவரிலும் மூத்த சூர்மகள் இனத்துக்கும் மொழிக்கும் தாயானாள். பழையோள், மூத்தோள் எனப் பெயர் கொண்டாள். அவ்வை எனும் அம்மையானாள்.

ஒரு கட்டத்தில் தெளிவான வளர்ச்சியுற்ற தாய் வழிச் சமூகமாக கொற்றம் சூடிய போது கொற்றம் சூடிய அவ்வை கொற்றவையானாள். தமிழ் நிலத்தின் பண்பாடு, மொழி மற்றும் மரபுக் கூறுகளின் ஊற்றுக்கண்ணாக / தெய்வமாக மாறிப்போனாள்.

நம் இனத்தின் மொழியின் ஊற்றுக்கண்ணான தாயைத் தேடுவதானால் இறுதிக்கிறுதியாய் கொற்றவையிடமே சென்று சேர்ந்திருக்க வேண்டும்.

ஆண் தலைமையேற்ற சொத்துடமைச் சமூகத்தில் கூட போருக்குச் செல்கிற வேந்தன் வெற்றி பெறுதல் வேண்டி கொற்றவையின் பெருமைகளை எடுத்தியம்பி அத் தாய்த்தெய்வத்தை வழிபட்டுச் செல்லுகிற நிலை கொற்றவை நிலை என்பதை தொல்காப்பியம் மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்தகொற்றவை நிலையும் அத்திணைப் புறனே” எனும் நூற்பாவினால் எடுத்துரைக்கிறது.

மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!

இழையணி சிறப்பின் பழையோள் குழவி! – எனும் திருமுருகாற்றுப்படை வரிகள் மருதத்தின் மலைமகளையும், முல்லையின் கொற்றவையையும், குறிஞ்சியின் பழையோளாகிய தாய்த் தெய்வத்தையும் வரிசைப் படுத்தி அப்படியானவளே முருகனின் தாய் என்கிறது.

செவ்விலக்கிய பாடல்களில் குறிஞ்சியில் இயற்றப்பட்ட பாடல்கள் பெரும்பகுதி இருக்கிறது. இன்றைய தொல்லியல் ஆய்வுகளும் இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்கள் தொடங்கி, நடுகல் வரை ஆய்வு செய்து வெளிப்படுத்தியிருக்கிறது.

தொல்லியல் ஆய்வின் வழிமுறைகளில் முகாமையானது மரபுக் கூறுகள். அதன் வழியேயான பயணமே சிறப்பான முடிவுகளைத் தரும் / தந்திருக்கிறது. அவற்றை உறுதி செய்ய செவ்விலக்கியங்களைப் பயன்படுத்தினால் ஏராளமான புதிர்கள் விடுபடுகின்றன.

இத்தனைச் சிறப்பான மரபை மேலும் எடுத்துச் செல்வதே நமது செயலாக, பணியாக இருத்தல் சிறப்பு.

ஆனால் இந்த இரண்டு படங்களுமே மரபை மறுதலித்தது போன்றே தோற்றம் தருகின்றன. இரண்டு படங்களும் கேள்விக்குரியவையே.

தமிழ்த்தாய் எனும் படத்தில் உடல் வண்ணம், தமிழ் மண்ணின் மாந்த வண்ணமின்றி, மண்ணோடு ஒட்டுதலின்றி இருக்கிறது. ஆனால் அணங்கின் படம் தமிழர் வண்ணத்திலேயே இருக்கிறது.

தமிழ்த்தாய் அணிந்திருக்கும் சிவப்பு வண்ணச் சீலை திருமுருகாற்றுப்படை தொடங்கிய செவ்விலக்கியப் பாடல்களில், தமிழர் மெய்யியல் மற்றும் வழிபாடுகளில் அணியப்பட்ட ஆடை மற்றும் வழிபாட்டு முறைகளின் மரபில் சொல்லப்பட்ட வண்ணமாக இருக்கிறது. இரண்டாவது படத்தின் வெள்ளாடை அப்படியான மரபுப் பொருளில் எங்கும் பயன்படுத்தப் படவில்லை. (வைதீகத்தின் நுழைவுக்கு முன்பாக). மேலும் அச்சந்தரும் அணங்கு எனும் நிலைக்கு வெள்ளாடை முற்றிலும் பொருத்தமாயில்லை.

இயல்பில் பழையோள் அணங்கு நிலையையும் அடைந்திருப்பாள். அன்றி அவள் கொற்றவையாக இருத்தல் இயலாது. எனில் ஆயுதம் தேவையாகிறது. முதல் படத்தில் அது இல்லை. இரண்டாவதில் “ழ்”கர முனை(?) கொண்ட குச்சி. கலித்தொகையில் “பெருங்காட்டுக் கொற்றி” என அழைக்கப் பட்ட ஆரணங்கு இப்படி மழுங்கிய ஆயுதம் கொண்டா நடப்பாள். மரபின் “சூர்” அறுத்தெறியப் பார்க்கிறார்கள் போலும்.

 “ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,

கோடும், குழலும், பீடு கெழு மணியும்,

கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ

விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை,

கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி” (சிலம்பு)

அப்படி நாம் கைதொழுத அணங்கே தமிழணங்கு. ஆதிச்ச நல்லூர் பானையோட்டில் கூட அருகே ஒரு கலைமானோடு தாய்த்தெய்வம் குறிக்கப்பட்டிருந்தாள்.

இன்னொன்று. மனோன்மணீயம் நூலின் பாயிரத்தின் கடவுள் வணக்கம் இப்படித் தொடங்குகிறது.

வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்

போதமும் போய்த்தீண்டாப் பூரணமே

வேத மறுப்பில் தான் தொடங்குகின்றன ஐயா பெ.சுந்தரம்பிள்ளையின் வரிகள். பன்னிரெண்டு வரிகளில் தமிழ்நாட்டரசு விட்டுவிட்ட ஐந்து வரிகள் போக, ஐயா எழுதிய ஆறடித் தரவு ஏழடியாய்ப் போனது. இன்னும் தொடரும் பன்னிரெண்டு வரிகளை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. பாயிரத்தின் இறுதி அடிகள் கீழே.

"பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்கற்பனையே.       

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி.

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ."

இதையேனும் படித்துவிட்டுப் படம் வரைய அமர்ந்தால் பத்துப்பட்டைப் படிக்கத் தோன்றும். அணங்கு யாரென அறிதலும் இயலும்.

இந்த இரண்டு படங்களுமே தமிழணங்கைக் குறிப்பதில் மரபுப்பிழை செய்திருக்கின்றன என்பதை கற்றார் மறுக்கமாட்டார் என எண்ணுகிறேன்.

வேத சிகையும் விரிகலையும்” தீண்டிவரைந்த

மூத்தோள்தன் முகப்பட மிரண்டும் பிழையே”

 


Thursday, 7 April 2022

அன்றி??ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சொந்த மண்ணில் வாழ்ந்தாயிற்று. தென்கோடியில் தாடகை மலை அடிவாரத்தில் விரிந்து கிடக்கும் தாழக்குடியும் அதைச் சுற்றி இருக்கிற ஊர்களும் எப்பொழுதும் உள்ளத்தில் உரிமையோடு கதை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. மிகக் கூர்மையாக எதையாவது சிந்திக்க நேர்ந்தால், குறிப்புகளுக்காகவும் செய்திகளுக்காகவும் சொந்த மண்ணின் பண்பாட்டுக் கூறுகளும், நடந்த நிகழ்வுகளுமே முதல் தரவுகளாய் உள்ளத்தில் தோன்றும். காரணம் அவை முப்பது ஆண்டுகளாக நேரில் கண்டு துய்த்தவை. அதன் பிறகே வேறு இடங்களில் கண்டவையும், கேட்டவையும், படித்தவையும் வரும். அதையும் தாண்டி தேவை ஏற்படுகிற போது களத்தில் தேடல் நிகழும். 

நாகர்கோயிலின் அருகில் இருக்கும் எங்கள் ஊருக்கு வருவதற்கு வயல்காட்டில் நின்றுகொண்டிருக்கும் யாரிடமேனும் வழி கேட்டீர்கள் என்றால், "இப்டியே நேரா வடக்க போயிற்றே இருங்க. கொஞ்ச தூரம் போனதுக்குப் பொறவு, எறச்சகொளத்துல ஒரு பெரிய சாத்தான் செல நிக்க கோயில் ஒண்ணு வரும். அங்ஙன இருந்து ஒரு அம்பதடி போனேயோன்னா கெழக்க ஒரு ரோடு போகும். அதுல போங்க. பொய்யிற்றே இருந்தியோன்னா வீராணமங்கலம் வந்துரும். அங்ஙன ஒரு சொள்ளமாடங் கோயில் அதிலேயிருந்து பழயோடியும் கெழக்க போனா ஒரு பூதத்தாங் கோயில் வரும். அதுல ரெண்டு ரோடு இருக்கும். நீங்க திரும்பாம நேராப் போங்கோ. அடுத்தால ஒரு வேதக்கோயில் வரும். அதான் தாழாடி. அங்ஙனயும் ரெண்டு ரோடு. நீங்க எடதுவசம் உள்ள ரோட்டுல போங்க. கடைத்தெரு வந்துரும்."  இப்படித்தான் வழி சொல்லி உங்களை அனுப்பி வைப்பார்கள்.

செவங்கோயில், பெருமா கோயில், பிள்ளையார் கோயில், ஊரம்மங்கோயில், பாறப்பள்ளி, சவேரியார் கோயில் இப்படித்தான் பேச்சு வழக்கு. கிருத்தவத் தேவாலயம் கூட எங்களுக்கு வேதக்கோயில் தான். இந்துக் கோயில் என்பது பேச்சு வழக்கிலோ, எழுத்து வழக்கிலோ இல்லை. (கூகுள் வரைபடத்தில்தான் அப்படிப் போட்டுத் தொலைக்கிறான்.)

சுடலைமாடன் கோயிலுக்கு நேர்ச்சையாக வளர்க்கப்படும் ஆடுகள் கோழிகள் உண்டு.  "மக்கா அந்தக் கிடா சொள்ளமாடனுக்கு நேந்ததுடே. அடிக்காத" என்று ஆட்டைப் பற்றிப் பேசும்போது வெறும் "சொள்ளமாடன்"தான். "சொள்ளமாட சாமி" கிடையாது. சாமிக்கும் எங்களுக்கும் அவ்வளவு நெருக்கம்.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் மதுக்கூரை அடுத்த காசாங்காட்டில் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் பொங்கலுக்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம் தைப்பொங்கலுக்கு மூன்றாம் நாள் "முன்னோர் வழிபாடு". புதுச் சீலை, வேட்டி, துண்டு, வளையல்கள்,  கறி, கோழி, மீன் என பெரும் படையலிட்டு வழிபட்டார்கள். நமக்கும் பெருஞ்சோறு அளித்தார்கள்.

காவிரிக்கரையும் இதுபோன்ற உணர்வுகளைத்தான் கொடுத்தது. இருபது ஆண்டுகளுக்கு முன் "ஆயி கும்புடுறோம் வாங்க என்றழைத்த நண்பரிடம் "அப்படீன்னா என்னங்க?" என்று கேட்டேன். "வருடத்துக்கு ஒருமுறை சமயபுரத்தாள நெனச்சு வீட்டுல கும்புடுறதுங்க" என்றார். ஆடு (தலைக்கறி, இரத்தப்பொரியல், குடல்கறி, இறைச்சிக்கறி என வகைவகையாய் சமைத்தது), கோழி, மீன், இளநீர் என எல்லாமும் சேர்ந்த பெரும்படையலிட்டு வழிபட்டு விருந்து படைத்தார்கள். செம விருந்து.

இப்பொழுது சென்னையில் வதிகிறேன். இங்கே, ஆடியில் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் போது, மீன் முகாமையாக வழங்கப் படுகிறது. கையில் ஒரு குவளையில் கூழும் மீன் துண்டு ஒன்றும் யார் போனாலும் கிடைக்கும். ஆயிரக்கணக்கான் மீன்களும், முட்டையும் அம்மனுக்கு கொடையாக வழங்கப்பெறும்.

இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வழக்கம் இருக்கிறது. இந்த வழிபாடுகளைச் செய்வோர் சமூகத்தின் பெரும்பகுதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தை ஆக்கிய முகாமையான கூறுகளில் மொழி முதலிடம் பெறுகிறது. குறியீடுகளாக இருந்த பண்பாட்டுக் கூறுகளைச் செம்மைப் படுத்தி; குழு, இனம் என்று இயங்கியல் செழுமையைக் கொடுத்து மனிதனை மனிதனாக்கியது மொழி. அதற்குள் அந்தச் சமூகத்தின் பேச்சு, எழுத்து, வழிபாடு, கலை, வட்டார வழக்கு என அனைத்தும் அடக்கம். மொழிக்குள் அயல் குறுக்கீடுகள் வரும்போதுதான் சிக்கல் எழுகிறது.

அப்படியொரு சிக்கலை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ் சந்தித்த இடந்தான் தமிழில் எழுதப்பெற்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு திருக்குருகைப் பிரான் பிள்ளான் மணிபிரளவ நடையில் எழுதிய "ஆறாயிரப்படி" எனும் உரைநூல். பின்பு "நாலாயிரத் திவ்ய பிரபந்தம் (?)" முழுமைக்கும் இதுபோன்றே மணிப்பவள உரைகள் எழுதப்பெற்றன. பாடல்கள் நல்ல தமிழில் இருக்கையில் உரைகள் மணிப்பவள நடையில் எழுதப்பெற்றதன் காரணம் எல்லோருக்கும் புரியும் என எண்ணுகிறேன்.

அண்டைய கேரளத்தைப் போல தமிழ் மண்ணில் பேச்சுவழக்கில் அயன்மொழி கலந்து முழுவதுமாகச் சிதைத்துவிடவில்லை. ஆனால், இலக்கியங்களில் பன்னிரெண்டாம் நூற்றாண்டு தொடக்கம் மணிப்பவளம் திணிக்கப்பெற்றது. வைணவத்தைத் தொடர்ந்தது சமணம். பெருமளவு இல்லையென்றாலும் சைவத்திலும் இந்த பாதிப்பு இருந்தது. பாடல்களில் வடசொற் கலப்பும், உரைகளில் மணிப்பவள நடையும் பேராதிக்கம் செலுத்தின.

இப்படியான கலப்பில்தான் சேர நாட்டின் மணிப்பவளம் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் மெல்ல மெல்ல பேச்சுவழக்கைத் தொடங்கியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக வடசொல் கலந்திருந்த மலைநாட்டுத் தமிழில், நம்பூதிரிகள் மணிப்பிரவாளாமே உயர்ந்தது என்று மக்களை நம்பவைத்து  எவ்வளவு இயலுமோ அவ்வளவு வடமொழிச் சொற்களைக் கலந்து பேசினார்கள். மெல்ல மெல்ல அதுவே வெகுமக்கள் வழக்காகியது. நான்கைந்து நூற்றாண்டுகளாக சோழ பாண்டிய ஆதிக்கம் குறைந்திருந்த மலைநாட்டில் மலையாளம் பிறப்பெடுத்தது. 

மணிப்பிரவாள நடைபயின்ற மலைநாட்டின் ஒரு பகுதி மக்கள் பெருவாரியாக ஈழத்தில் குடியேற்றப்பட்டார்கள். ஈழத்தமிழும் மெல்ல மெல்ல வடசொல் கலந்து பரவத் தொடங்கியது. இன்றும் ஈழத் தமிழைக் கூர்ந்து நோக்கினால் இதை உணரலாம்.

பெருந் தமிழறிஞர்கள் என அறியப்பட்ட  மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவருடைய மாணாக்கர் வெ.சாமிநாத ஐயர் போன்றோரும் இதை எதிர்த்தாரில்லை. "போஷித்தே" வந்தார்கள். ஐயா மறைமலையடிகள் போன்றோரே எதிர்வினை ஆற்றினார்கள். தனித்தமிழ் இயக்கம் துளிர்த்தது. 

இன்று நாம் படிக்கிற பெரும்பாலான புதினங்கள், கட்டுரைகள், ஆய்வறிக்கை மற்றும் நூற்கள் மணிப்பவளத்தை ஒதுக்கித் தள்ளியவையே. திரைப் பாடல்களில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றோர் மணிப்பவள நடையைப் பயன்படுத்திய போதும் பின் வந்த சில பாடலாசிரியர்கள் நல்ல தமிழில் எழுதினார்கள். எழுதுகிறார்கள்.

அண்மையில் ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டேன். அந்தப் பாடலாசிரியர் என் மகனின் நெருங்கிய நண்பர். பாடலைக் கேட்டுவிட்டு "வரிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. 99/100 மதிப்பெண். நதி மட்டும் வந்திராவிட்டால் 100/100" என்று எழுதினேன். அந்த அளவுக்கு அருமையான தமிழில் எழுதியிருந்தார், 'நதி' என்ற சொல்லைத் தவிர.

"கண்ணதாசன், வைரமுத்து போன்றோர் தொடர்ந்து பயன்படுத்தியதால் 'நதி' தமிழென்று நினைத்துவிட்டேன்" என்று சொன்னார். இதுதான் மொழி ஆளுமைகள் மொழிக்கு இழைக்கிற கேடு. 

இந்தக் கேடு அத்தனை வாழ்வியல் கூறுகளிலும் நிகழ்த்தப் பெறும். மொழி, பண்பாடு, மெய்யியல், உணவு, உடுக்கை என எல்லாவற்றிலும் அயலவரின் தாக்கம் கொண்ட சொந்த மக்களாலேயே நிகழ்த்தப் பெறும். அதற்கான காரணிகள் ஏராளம்.

கேடுகளைக் களைய வேண்டும், தடுக்க வேண்டும் மறைமலையடிகள் செய்ததைப் போல. 

அன்றி...??

=============

அக்டோபர் 2021 ல் தொடங்கிய கட்டுரை, இன்று 07-04-2020 ல் நிறைவுறுகிறது. Tuesday, 5 April 2022

நினைவுகளில் மிதந்தேன்இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பி Jaya Prasad ன் பதிவொன்றைப் படிக்க நேர்ந்தது. அதன் பின்னூட்டமாக "வியர்வையோடு நீர்/மோர் அருந்தினால் சளி பிடிப்பதன் சூட்சுமம் அறிய, எனக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது. இன்று தான் அறிந்துகொண்டேன்." என்று எழுதியிருந்தேன்.

அதைப் படித்துவிட்டு ஊரிலிருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் "நீ ராசாண்ணனுக்குக் கூட  பழகியிருந்தும் இது தெரியாதாடே. அவன் சொல்லித்தரலியா?" என்று கேட்டார். 

அவரது நினைப்பு சரிதான். வர்ம ஆசான் இராசா அண்ணனோடு பெரிய பழக்கம் இல்லை என்றாலும், சில முக்கியமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட நெருக்கம் இருந்தது. அது ஒருவேளை என் தந்தைக்கும் அவருக்குமான பழக்கத்தின் விளைவாகக் கூட இருக்கலாம்.

உடலியக்கத்தின் முகாமையான சில நுணுக்கங்களை எளிமையாகப் புரிய வைத்தது மட்டும் இல்லாமல் அதைச் செய்து காட்டிக் கற்றுக் கொடுக்கவும் செய்தார். எடுத்துக் காட்டாகச் சொல்வதானால் நீரில் மிதப்பது.

தாழக்குடிக் குளத்தில் ஆளூர் பாட்டா அசைவின்றி மிதப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கும் மிதக்கவேன்டும் என்ற ஆசை வந்தது. பதினாறு வயதிற்கே உரிய சிறு கூச்சம். (கற்றுக் கொள்வதை யாரும் பார்க்கக் கூடாது என்பது.) அதப் பெரிய குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று மிதக்க முயற்சித்தேன். ஒன்று இரண்டல்ல, பல நாட்கள்.

ஒருநாள் உச்சி வேளை... உருண்டு புரண்டு மிதக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். 

"ஏலேய்..." யாரோ அழைக்கும் குரல். திரும்பி கரையைப் பார்த்தேன். பெரிய படித்துறையில் இராசா அண்ணன் கோவணத்தோடு நின்று கொண்டு கையசைத்து என்னை அழைத்தார்.

"என்ன செய்துகிட்டு இருக்கே?"

"ஆளூர் பாட்டா மாதிரி தண்ணில மொதக்கலாம்னு.. "

"நடுத் தண்ணியிலயா... அதுவும் கால் மடக்கி.. ம்.. உள்ள இழுத்துற்றா போய்ச் சேந்துருவ "

நான் எதுவும் பேசவில்லை. 1980 களில் அப்பாவின் வயதொத்த, அவரோடு பழக்கம் உடைய பெரியவர்களிடம் பேசுவதென்பது  சிற்றூர்களில் குறைவுதான்.

"ஏன் நடுத்தண்ணிக்கு போன? இங்கன படிக்கதுக்கு கொறச்சலா இருக்கா? எவன பத்தியும் கவலப் படக்கூடாது. நமக்கு வேணும்னா நாமளே செஞ்சுக்கிட்டாதான் உண்டு. (அவரது அடிப்படைக் குணமே அதுதான்). "ஒனக்கு தண்ணில மொதக்கணுமா?... வா. மல்லாக்கப் படு. இந்த நீளப் படியில கால வை. கைய தலைக்கு மேல நீட்டு... மூச்ச புடிச்சே வச்சிருக்கணும்னு கட்டாயம் இல்ல.... கால விட்டுரப் போறேன்."

மெல்ல கால்கள் மூழ்க, தண்ணீரில் மூழ்கினேன். மீண்டும் ஒருமுறை.  இன்னொருமுறை.

"இங்க பாரு. மூச்சடக்கி தலவாணி மாதிரி கிடப்பான்னு நெனச்சியா? இல்ல. மூச்சுக்கும் இதுக்கும் தொடர்பு உண்டும்னும் சொல்ல முடியாது, இல்லைன்னும் சொல்ல முடியாது. மனசுக்குள்ள மொதக்கணுங்கிற நெனப்பு மாறவே கூடாது. சரியா. இப்ப நீ மொதக்கப் போற"

சட்டென்று சில விநாடிகள் மிதக்கிறேன். உடலில் எந்த அசைவும் இல்லை. உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம் ஒரு மரத்துண்டு போல நான் நீரில் மிதந்து கொண்டிருக்கிறேன்.

"இங்க பாரு. படித்துறைக்குப் பக்கத்துல கொஞ்ச நாள் செஞ்சு பழகிட்டு பொறவு நடுக் கொளத்துக்கு போ என்னா?"

"சரிண்ணே"

"இத வச்சு ஒடம்ப குளிர வைக்கலாம், வெசர்க்க வைக்கலாம், பசியெடுக்கச் செய்யலாம், எவ்வளவு சாப்டாலும் செமிக்க வைக்கலாம்"

"சரிண்ணே"

பிற்பாடு நாள்தோறும் மிதக்கத் தொடங்கினேன். ஆசானின் காலமும் முடிந்துபோனது. நானும் சொந்த மண்னை விட்டு (குளங்களை விட்டு) நகரங்களில் வாழத் தொடங்கினேன்.

எப்பொழுதாவது ஊருக்குச் செல்கையில் குளத்தில் மிதப்பதுண்டு. மாலை வானத்தைப் பார்த்துக் கொண்டே உடல் அசைவற்று வாயில் நீரேந்தி வானம் பார்த்துக் கொப்பளிக்கையில் ஆசானின் நினைவு வரும். "ஒரே செய்கையில் உடம்பை எப்படி குளிர்விக்கவும், சூடாக்கவும் முடியும்?" என்று ஆசானிடம் கேட்காமல் விட்டுவிட்டேனே என்று தோன்றும்.  இனி வாய்ப்புமில்லை.

ஆனால், வெப்பமான பேருந்துகளில் பயணம் செய்யும் போதும், சாலைகளில் நடக்க நேர்கையிலும் சட்டென வெப்பத்தின் கடுமையிலிருந்து உள்ளத்தை மாற்றிவிட இந்தப் பயிற்சி உதவியிருக்கிறது. உள்ளம் குளிரும் போது உடலும் மெல்லக் குளிரும்.

நம் தொண்டைக் குழிக்கும் நெஞ்சுக் குழிக்கும் இடையேதான் எத்தனை எத்தனை விந்தைகள்.

ஒரு பின்னூட்டம் நாற்பதாண்டுகளைத் தாண்டி என் நினைவைக் கிளறிவிட்டுவிட்டது. தம்பிக்கும், நண்பருக்கும் நன்றி.

Monday, 4 April 2022

தாலாட்டு

 


(பிரிந்திசை, துள்ளல் ஓசை,  வெண்கலிப்பா, கலித்தாழிசை)

படம்: மறைமலை வேலனார்

 

 

மண்தோன்றா காலம் தென்னாடு போலே

என்னாளும் வாழும் உன்பேரும் நாளும்

வடமலையின் தண்பனியே தாலேலோ தாலேலோ

வான்பொழியும் மாமழையே ஆராரோ ஆராரோ    ( மண்தோன்றா )

 

குமரிமக்கள் வாழ்வியலே

கொடுந்தமிழின் பேரறமே

குறள்பிறந்த பேரறிவே

புறம்இசைத்தப் போரறமே 

அகமுரைக்கும் நானூறே

ஐம்பெருங் காப்பியமே

பதினெட்டுக் கீழ்க்கணக்கே

பைந்தமிழ்பத் துப்பாட்டே

 

வெண்பட்டால் நானும் பொன்னூஞ்சல் கட்டி

தன்பாட்டும் பாடி தாலாட்டு வேனே

தென்மொழியின் நன்மகனே தாலேலோ தாலேலோ

தென்திசையின் மன்னவனே ஆராரோ ஆராரோ    ( மண்தோன்றா )

 

உறையூரின் மென்துகிலே

மறைமலையார் தனிமொழியே

பாண்டியனார் நன்முத்தே

பாவாணர் தமிழ்ச்சொல்லே

 சேரமண்ணின் குறுமிளகே

சித்திரனார் பாவீச்சே

கீழடியின் நன்மணியே

கிஆபெ குறள்விரிவே

 

தென்பெண்ணைக் காற்றின் பண்ணத்திப் பாட்டே

வண்ணங்கள் காட்டும் சென்னிமகன் தேரே

தென்கடலின் பொன்மகளே தாலேலோ தாலேலோ

தொன்மதுரைக் கயல்விழியே ஆராரோ ஆராரோ  ( மண்தோன்றா )

 

தென்மொழித் திரவியமே

சிந்துவெளித் தமிழறிவே

சுமேரியச் சொற்கூட்டே

சொல்பிறந்த நல்லுலகே

 மயக்கும்நல்ல பறையொலியே

மாண்புறு தமிழிசையே

பண்ணேஎன் பழந்தமிழே

பார்போற்றும் தாய்மொழியே

 

மூன்றுதமிழ் போலே வாழ்வாங்கு வாழ

வேல்காரன் தானும் மேற்காவல் தானே

பொன்வரையின் கார்முகிலே தாலேலோ தாலேலோ

பொதியமலைத் தேனூற்றே ஆராரோ ஆராரோ    ( மண்தோன்றா )

Sunday, 3 April 2022

போக்கில்

 


கடந்த பங்குனி உத்திரத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தேன். தமிழ்ப் பேராசிரியர் ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. முன்பு ஊருக்குச் சென்றிருந்தபோது எனது நூல்களை அவரிடம் கொடுத்திருந்தேன். ஊர் குறித்து சிறிது பேசிவிட்டு எனது நூற்களின் பக்கம் பேச்சு திரும்பியது. மாலைக் காற்றும் ஏரிக்கரையும் சூழலை இனிமையாக்கின. பேச்சின் ஆழம் கூடியது.

"நீ எப்படி பொறியியலிலிருந்து இலக்கியத்திற்குள் நுழைந்தாய்? ஏன்?"

"பள்ளிப் பருவத்திலிருந்தே நூலகத்திற்குச் செல்லும் வழக்கம் உண்டு"

"தெரியும் தெரியும்... இதையே எத்தனை நாள் சொல்லிக்கிட்டிருப்ப. ஆழமாப் பேசு"

"ம்.. முதலில் கண்ணதாசனைப் படிக்கின்றபோது நானும் எழுத வேண்டும் என்ற பேராசை பிறந்தது. காதலையும் கம்மூனிசத்தையும் தாண்டி எழுத சில ஆண்டுகள் ஆனது."

"ம்"

"இடையில் மறைமலை எனும் பெருமலையில் தத்தித் தத்தி ஏற பெருமரங்களும் வான் வெளியும் பாயும் அருவிகளும் அருகிருப்பதை அறிந்தேன். பேரருவிகளில் நீராட, செங்குத்துப் பாறைகளில் ஏறியிறங்க, திரைப் பாடல்கள் தொடங்கி பல பாடல்களைப் பிரித்தறிந்து மூளைக்கு வலு சேர்த்தேன்."

"அப்பெல்லாம் நீ இப்படி ஒண்ணும் எழுதின மாதிரி தெரியல்லயே"

"ஆமா.. ரெண்டு மூணு கதை எழுதினேன். விகடனுக்கு அனுப்பினேன். திரும்பி வந்திருச்சு"

"அப்புறம்..."

"அப்புறம் பெருசா ஒண்ணும் செய்யல. பொறியியல் படிச்சு அதுலயே கவனம் கொண்டு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். காலம் போயிருச்சு. ஆனா அந்தத் துறையில் எனக்குக் கிடைத்த அனுபவம் தான் பின்னாடி என்ன இப்படி எழுத வைக்கும் என்று நான் நினைத்ததில்லை."

"அப்படி என்ன அனுபவங்கள்?"

"நிறைய.. களப்பணிகளிலிருந்து விலகி கம்பியூட்டருக்கு மாறி வேலை செய்த பதின்மூன்று ஆண்டுகள், செவ்விலக்கியம் நோக்கி என்னை வீறுகொண்டு நகர்த்தின. கூடவே அருகே இருந்த திருச்சிராப்பள்ளி மைய நூலகமும்."

"கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்"

"பொறியல் கற்றுக் கொடுக்கையில் நம்மை அறியாது நம்மிலிருந்து வெளிப்படும் மரபறிவு, பகுத்து வேலை செய்து ஒருங்கிணைந்து முடிவு அறிவிக்கும் நுட்பம், வேலைத்திறன் குறித்தான உரையாடல்கள், கலைச் சொற்கள், உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு, வடிவமைப்பு, இரும்பு செம்பு பயன்பாடு, வணிகம், சந்தைப் படுத்தல் உத்தி என என்னை செவ்விலக்கியத்துக்குள் இழுத்து வந்தக் காரணிகள் எண்ணிலடங்கா."

"ஓ...  உன்னுடைய 'பொருநராற்றுப்படை கதையுரை' படிக்கும் போது உன் அனுபவம் புரிகிறது."

"மிக்க நன்றி"

"நன்றி இருக்கட்டும். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. சிலவற்றிற்காவது பதில் சொல். அது எப்படி 'போக்கில்' குறித்து முடிவுக்கு வந்தாய்."

"அதுவா..  

 'போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

ஆர உண்டு பேர்அஞர் போக்கிச்

செருக்கொடு நின்ற காலை' 

என்ற வரிகளைப் படிக்கும் போது போக்கில் என்பது ஒரு மதுவகை என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அறிஞர் பொ.வே.சோமசுந்தரனார் உரையில், 'போக்கு என்பது வருத்தத்தைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. போக்கில் என்பது வருத்தம் போக்கிக் களைப்புத் தீர்க்கும் ஒருவகை உணவு. இக்காலத்தில் விருந்துணவுக்கு முன்னர் தரப்படும் பழச்சாறு போன்றது எனலாம். இந்தப் போக்கில் என்னும் சுவையுணவைப் பொற் கிண்ணங்களில் மகளிர் தந்தனர்.' என்றும், அறிஞர் கி.வ.சகநாதன் அவர்கள் போக்கில் என்பதை குற்றமில்லாத எனும் பொருளில் 'குற்றமில்லாத பொற்கலம் நிறைய கள்ளை வார்த்துத் தந்தார்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

"சரி.."

"அவை எனக்கு நிறைவைத் தரவில்லை. பத்துப்பாட்டு ஆராய்ச்சி எழுதிய மா.இராசமாணிக்கனார் அது ஒரு வகை மது என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஆனால், அகராதிகளில் எங்கும் 'போக்கில்' என்ற சொல் இல்லை. நெடுநாட்களாக அது குறித்த எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. கடந்த கொரோனா தடைக் காலத்தில் இணைய வழி உரையாடலில் பொருநராற்றுப்படை குறித்துப் பேசினேன். நிறைய நண்பர்கள் பல பகுதிகளிலிருந்தும் இணைந்திருந்தார்கள். விளக்கத்தினிடையே 'போக்கில்' என்பது கண்டிப்பாக ஒரு மது வகைதான் என்று உணர்கிறேன். ஆனால் அது குறித்து வேறு செய்தி எதுவும் இல்லாத காரணத்தால் முடிவுக்கு வர இயலவில்லை என்று கூறினேன். இடையே ஒரு குரல் ' ஐயா போக்கில் என்றால் சாராயம் போல காய்ச்சி வடிக்கப்படும் ஒரு மது' என்றது. 

கல்லணையின் அருகில் வேங்கூரிலிருக்கும் நண்பர் தியாகுதான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். சோணாட்டிலிருந்து போக்கில் குறித்த குரல் நம்பிக்கை அளித்தது. 'சொல்லுங்கள் தோழர்' என்றேன். ஐயா எங்கள் பகுதிகளில் போக்கில் என்ற சொல் இன்னும் வழக்கிலிருக்கிறது என்றார். 

என் உள மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஐயா தேவநேயப் பாவாணர் சொன்னது போல இலக்கியம் எழுதப் பெற்ற இடம் சார்ந்த வழக்குச் சொற்களை அறிந்தாலன்றி பொருள் தேடுதல் கடினமே. 'போக்கில்' என்ற இந்தச் சொல் அகராதியில் ஏற்றப்பட வேண்டும் என்பதே எனது அவா. 

ஆனால் இதற்கான பகுப்பாய்வுச் சிந்தனையை எனக்குள் விதைத்தது பொறியியலே. அதன் பின் தான் பொருநராற்றுப்படை கதையுரையில் இப்படி எழுதினேன்.

"இரு பெண்கள் என்னை நோக்கி வந்தார்கள். ஒரு பெண்ணின் கையில் பழங்களும் இனிப்பும் நிறைந்த தட்டு இருந்தது. இன்னொருத்தி ஒரு வடிவான குடுவையை ஒரு கையிலும், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களை மறு கையிலும் பிடித்துக் கொண்டு வந்தாள். எனக்கும் பசியெடுக்கத் தொடங்கியிருந்தது. கொண்டுவந்த பழத்தட்டை ஒரு முக்காலியில் வைத்துவிட்டு...

பொன் கிண்ணத்தை இடது கையில் பிடித்துக் கொண்டு அதில் குடுவையைச் சரித்தாள். மணம் கமழ, அதிலிருந்த போக்கில் கிண்ணத்தில் நிரம்பியது. 

அன்புடன் என் வாயருகே நீட்டினாள். ஆசையோடு வாங்கி அருந்தினேன். கிண்ணத்தைக் கீழே வைக்கும் முன்பாகவே மீண்டும் போக்கிலை வார்த்தாள். இரண்டு கிண்ணம் அருந்தி முடிக்க,  நெடுந் தொலைவு நடந்த காலின் வருத்தம் சிறிது குறைவது போன்று இருந்தது. இன்னும் கொஞ்சம் அருந்தலாமா என்று நான் எண்ணும் போதே, கிண்ணம் மறுபடியும் நிறைந்து வழியும்படி வார்த்தாள் அவள். மதமதப்பும் பசியும் கொண்டு பழங்களையும், போக்கிலையும் மற்ற உண்ணும் பொருள்களையும் ஆசைதீர உண்டேன். 

இப்படியே அன்றைய நாள் முழுவதும் போயிற்று. அவன் வரவில்லை. இரவும் வந்தது. போக்கில் அருந்திய மயக்கமும், உண்ட களைப்பும் சேர்ந்து உறக்கம் என்னைத் தழுவத் தொடங்கியிருந்தது. பணிப்பெண்களும் அதைக் கவனித்து விட்டார்கள் போலும். மெல்ல என்னை அழைத்ததுச் சென்றார்கள்.

போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

ஆர உண்டு பேர்அஞர் போக்கிச்

செருக்கொடு நின்ற காலை ..."

இதற்கு தம்பி மறைமலை வேலனார் சிறப்பனதொரு படமும் வரைந்து கொடுத்தார். பார்த்தாயா" 

"ஆம். அப்புறம் கரிகாலன் அரண்மனையின் குளிரூட்டும் வசதி (AC) குறித்து... கல்லணை குறித்து நீ சொல்லியதெல்லாம் புதிய செய்தியே. அதெப்படி? எங்கேயடா பெற்றாய் இந்த அறிவை?"

"அடேய் பேராசிரிய நண்பா... நீயுமாடா. நான் ஒரு வழிப்போக்கன். சிற்றூரில் பிறந்து, வேளாண் குடிகளோடு உழன்று, பழ மரபுகளோடு மகிழ்ந்து வாழ்ந்த வாழ்க்கையும், ஊரூராய் அலைந்து பெற்ற பட்டறிவும், கற்றதனால் கிடைத்த சிற்றறிவும், பேரறிஞர்கள் தொகுத்துவைத்த நூற்களும், என் மாணவர்கள் எனக்குள் விதைத்துச் சென்ற வினாக்களும் என்னை நகர்த்தியதில் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். செல்ல வேண்டிய தொலைவு மிகுதி."

"நானும் உன்னோடு பயணத்தில் இணையலாமா?"

"கண்டிப்பாக..."

முழுநிலவின் வெள்ளொளி எங்களைச் சூழ்கிறது. எட்டுகிற தொலைவில் கறுப்பு ஓவியமாய் தாடகை மலை. எங்கோ, உரசிக்கொள்ளும் வௌவால்களின் கீச்சொலி. மெல்ல விழிக்கிறது இரவு. நாங்கள் ஏரியிடம் விடைபெற்று நடக்கத் தொடங்குகிறோம்.