Monday 29 April 2019

பாரதிதாசன் பிறந்தநாள் 2019


பேனாவுக்குள் பெருங்கடலை நிரப்பி
எழுதிய சொற்களின் ஈரம் காய
புயலை வேலைக்கு அமர்த்தியவன்,
கேட்கும் நொடியில் பாக்களின்
கேடுகள் களையும் மருத்துவன்,
ஆர்த்தெழும் தமிழால் குருதியில்
ஆற்றலைச் சேர்த்திடும் பாவலன்,
அவர்
வடித்துவைத்த பாக்களின்
துடிப்பெடுத்து வரும்நாளில்
தொண்டு செய்வோம் தமிழுக்குத்
துறைதோறும்.
ஏனென்றால் தமிழ் அவர்தம்
உயிருக்கு நேர்.Sunday 28 April 2019

கோமதீ...


யாரைக் கேட்டும்
ஓடத் தொடங்கியதில்லை
பேராறுகள்.
பூசை செய்வீர்கள் என்று
படித்துறைகள் தோறும்
ஏங்கி நிற்பதும் இல்லை.
குப்பை வீசுகிறீர்கள் என்பதால்
தேங்கி நிற்பதும் இல்லை.
பிறந்ததிலிருந்தே அவை
பேராறுகள்.


 

Saturday 27 April 2019

தடம்


கடற்கரையில் சிறுபிள்ளை
நடந்த தடமொன்றை
தொடும் முன்னே அழித்த
அலைபோல,
யாரும் அறியாமல்
நீ வந்துபோன தடயத்தை
வலிந்து அழித்தாய்.
அந்தியும் இரவும்
சந்திக்கும் அந்தச்
சரியான நொடி கூட
அறிவேன் நான்.
பாறையில் பதிந்த தடம்
மழையடித்துக் கரைவதில்லை.
கோடுகளாய் நீளும்
கோளிருக்கும் காலம் வரை.


Wednesday 24 April 2019

இருவர்


நீண்ட நாட்களுக்குப் பிறகு, 1997 ல் வெளியான "இருவர்" படத்தை Prime Video வில் பார்த்தேன். (நம்புங்கள் இப்போதுதான் பார்க்கிறேன்).  ஊருக்குள் கேள்விப்படும் கருப்பசாமி கதைகள் போல இந்தப் படத்தைப் பற்றி நிறையக் கதைகள் கேட்டிருக்கிறேன். அதையெல்லாம் மறந்து விட்டு படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். "இது உண்மைக் கதையல்ல" என்கிற அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. படம் முடியும் போது இந்த அறிமுகமே சரியானதென்பதும் நான் கேள்விப்பட்ட கதைகள் வெறும் முகப்பூச்சுகள் என்பதும் தெரிந்தது.

திரைத்துறையில் கதாநாயகனாக ஆகிவிடவேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும்  இளைஞன்ஆனந்தன். துறையில் கொஞ்சம் பழக்கம் இருக்கிற பெரியவரோடு இணைந்து வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்கிறான். ஏற்கனவே வசனம் எழுதிக்கொண்டு இருக்கிற தமிழ்ச்செல்வத்தோடு நட்புக்கொள்கிறான். இந்த நட்பின் நீட்சியும், அதனூடே வளரும் இருவரின்

Tuesday 23 April 2019

உலக புத்தக நாள்


உலகமெலாம் மக்கள்
மொழியைச் சூல் கொண்டிருக்க,
பேறு பார்த்த
ஆதித் தாயின்
மகனொருவன் எழுதிய
செங்கோன் தரைச்செலவின்
காலத்திலிருந்து நீள்கிறது
பொத்தகம் எனும்
ஆதிச்சொல்.
அதங்கோட்டாசானின் அருகிருந்து
கேட்கிறது
உலக புத்தக நாளொன்றின்
வாழ்த்தொலி, வாழிஇ என.

 

சிராப்பள்ளி ப.மாதேவன்
23-04-2019Sunday 21 April 2019

இலங்கை குண்டுவெடிப்பு

உயிர்த்தெழுதல்
===============

குண்டுகள் வெடிக்கும்
ஒசை முழக்கத்தில்
குருதிவழிய உயிர்த்தெழுகின்றன,
இயேசுவின் கைதுளைத்து
சிலுவையில் அறையப்பட்டிருந்த
ஆணிகள்.


Friday 19 April 2019

டூலெட் - TOLET


நகரமயமாக்கலின் முகாமையான பிரச்சனை வீடு. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களின் நிலை மிகக் கடினம். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் அது சார்ந்த தொழில்களும்; நடுத்தர மற்றும் குறைந்த வருவாயுள்ள ஏராளமான குடும்பங்கள் மீது கஜா புயலாக வீசிவிட்டுச் சென்றுவிட்டது. அப்படியொரு சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட ஒரு குடும்பத்தின் கதையாக ஆனால் ஒட்டு மொத்த அவலத்தின் ஒன்றரை மணி நேரக் காட்சியாக விரிகிறது "டூலெட்" திரைப்படம்.

நீங்கள் எதோ ஒரு கிராமத்தில் குறைவான பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? இல்லை சென்னையில், சிறியதானாலும் சொந்த வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறீர்களா?  இந்த இரண்டில் எதுவானாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உங்கள் எல்லைகளுக்கு வெளியே; திமிற நினைத்துக் கொண்டு திமிற முடியாமல், ஓடி ஒளிய நினைத்து அதுவும் முடியாமல், ஓவென்று அழ நினைத்தும் கேட்பார் யாரும் இல்லாமல், எல்லா நாளும் அவலத்தின் காற்றை மூச்சாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எண்ணற்றோர். அவர்களை நம் மனதில் முழுதாகப் படிய வைத்துவிட முயல்கிறது படம். அதற்கு நாம் அனுமதிக்கா விட்டாலும் நம் மனதுக்குள் ஒன்றைரை மணி நேரம் வாடகைக்காவது வாழ்ந்து விட்டுப் போய்விடுகிறார்கள் இளங்கோவும், அமுதாவும் அவர்களின் மகன் சித்தார்த்தும்.

Thursday 18 April 2019

ஒருநாள் கூத்து - கற்பனைக்கும் இயல்புக்கும் நடுவே.பொதுப்புத்தியில் ஊறிப்போன சில செய்திகள், நாமாகவே கற்பித்துக் கொண்ட சில புலனங்கள், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி, பொதுப்புத்தியால் அதிகமாகப் பார்க்கப் படாமல் போன ஒரு திரைப்படத்தை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தேன். "ஒரு நாள் கூத்து". (2016)

வேறு வேறு வாழ்க்கைத் தளங்களில் இருக்கும் மூன்று பெண்களின் திருமணம் குறித்த நிகழ்வுகளைப் படம் பிடித்திருக்கிறார் புதிய இயக்குநர் நெல்சன். இயல்பில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வையாகவே நகருகிறது படம். நீண்ட கால சினிமா; பொது இரசனையில் ஏற்றி வைத்திருக்கிற காட்சி அமைப்புகளின் கற்பனையோடு படம் பார்ப்பவர்களுக்கு, இந்தப் படம் ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும்.

நீண்ட காலமாகவே, சென்னைக்கு வெளியே தொலைவில் இருக்கும் ஒருவருக்குச் சென்னை குறித்தான அறிமுகம் என்பது திரைப்படங்களே. அந்த நோக்கில் அடிப்படை மனம் சில கூறுகளை எழுதி வைத்திருக்கிறது. 

1. மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் பெரிதாக எதற்கும் கவலைப்படுவதில்லை. ஊர் பக்கத்துப் பெண்கள் அளவுக்கு காதலுக்கோ, கல்யாணத்திற்கோ பெரிதாய் மெனக்கெடுவதில்லை. குடும்பம் உறவுகள் குறித்து பெரிதாக

Saturday 6 April 2019

காதல் கண்ணி - 1


 

 

............................. வாழ்த்து.....................

======================================

உண்டென உரைத்தவர் கண்டது மொழிந்திலர்

இல்லென உரைத்தவர் சொன்னது நிறுவிலர்

பண்டு பல்கிய அண்டமென் றொருபொருள்

பிண்டங் களாக்கிப் பின்னிப் பகுத்து

மலையும் மண்ணும் மழையும் வெயிலும்

காற்றும் புயலும் சூறா வளியும்

தூசு நிறைந்த துடிப் பாலைகளும்

ஆறும் கடலும் வானும் நிலவும்

ஊனும் உயிரும் ஒருங்கிக் கலந்து,

காணும் பல்லுயிர் நாளும் பெருக்கிய

மாசறு இயற்கை மாவடி தொழுவோமே

 

 ......................நாஞ்சிநாட்டெல்லை........................

 

வண்டமிழ் நாட்டின் தென்கரை தழுவும்

கொற்றவை பொன்னடிக் குமரிக் கடல்முதல்;

வடக்கி லோங்கிய வளமிகு தாடகை

மலையிடை விரியும் மயங்கா மருதமும்,

 

குணகடல் தழுவும் கோட்டையின் மதிலொடு

குடகடல் கரையிருங் கொல்லங் கோட்டின்

நீரோடிக் கரைவரை வேரோடும் நெய்தலும்,

 

அதங்கோடு அடியிறங்கும்

பெருங்கோடு வானமலை

அருள்செயக் கிடைத்த

பன்றிக்கோடும் பழையாறும்,

பேச்சிப்பாறைப் பெருநீரும்,

வட்டப்பாறை கீரிப்பாறை

வழிநடந்து கீழிறங்கி

நெட்டெனப் பாயும்

உலக்கை அருவியென

பெருவழி முழுவதும்

பரவிய குறிஞ்சியும்,

 

கடுக்கரை மலைதொட்டு

பூதையின் வடக்குயர்ந்து

பணகுடிப் பாதைவரை

படர்ந்திட்ட முல்லையும்,

 

ஔவையின் அடிதொட்டு

மூப்பன்தரம் முன்நிற்க

கைக்கெட்டும் தூரத்தில்

கரந்துறையும் பாலையும்,

 

நிலம்தின்றக் கடலுக்குள்

நின்றிருக்கும் வள்ளுவர்தன்

உயர்பார்வை கொண்டு

ஊர்ந்து பார்த்திட்டால்;

 

மலைக்குச் சூடிய மாலையென நெய்தலும்;

மலைநின்று இறங்கிய மருதப் பரவலும்;

வானமலை தலையில் வளங்கெழு குறிஞ்சியும்;

இடையில் ஆரமென இழையும் முல்லையும்;

ஆரைவாய் அடுத்தப் பாலையின் தொடக்கமும்;

 

பாட்டன் தொல்காப்பியன் பகர்ந்தத் திணையனைத்தும்

ஏட்டில் இருப்பதுபோல் கூட்டாய் இருக்குமொரு

நாட்டில் நன்னாடாம் நாஞ்சில் நாடதுவே.

 =================================

இணைக்குறள் ஆசிரியப்பா