Thursday 18 May 2023

மண்மூட...

 

கொற்றவன் செய்த

பிழைகண்டுச் சினந்த

ஒற்றைக் கண்ணகிக்கே

பற்றி எரிந்ததாம் மதுரை.

 

பற்றியெரிந்தப் பல்லாயிரம்

கண்ணகிகள்

இட்ட பெருஞ்சாவம்

சுற்றம் சூழ உம்மை

மண்மூடிச் செரிக்குமுன்னே

கண்மூடிச் சாய்வேனோ நான்?

 

 

ஓவியம்: ஐயா மருது.

Saturday 13 May 2023

சட்டென்று...



இமைப்பொழுதில்

உன் தலைக்கனத்தை,

இசைக் கனத்தால்

சாய்த்துவிடுகிறாய்.

 

மூப்படைந்த உன்

விரல் நுனிகளில்

பூத்துச் செழிக்கக்

காத்துக் கிடக்கிறது

காதல்.

 

இரவுகளைக் கொல்லும்

இசைக் கூற்றம் நீ..


========================

பாடல்கள் கேட்க
https://open.spotify.com/album/3YdrTcu1YnQAcjJwnNeYgI?si=XDT73c_6SFOCcFGLWiJnew

Sunday 7 May 2023

எல்லாமுமாக இருக்கிறான்



ஏப்பிரல் 19, 2020 ல் முக நூலில், "எதிரே" என்ற தலைப்பிட்டு நான் எழுதிய சிறு பதிவொன்று பலராலும் பகிரப்பட்டு இப்பொழுது "கோகுலம் கதிர்" மே 2023 இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. படித்த, பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. கோகுலம் கதிர் இதழுக்கும் நன்றி. இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்ட வள்ளுவரின் படம் தம்பி மறைமலை வேலனார் வரைந்தது.


. ==========
. எதிரே...
. ==========

எங்கேயோ கண்காணாத் தொலைவில் இல்லை, இதோ எதிரிலேயே இருக்கிறான். எல்லோரையும் போல! பாட்டனைப் போல, சந்தியில் இருந்து உரையாடும் மூத்தோரைப் போல, வயல்வெளியில் உழைத்துக் களைக்கும் உழவனைப் போல,

Monday 1 May 2023

மே நாள் 2023

செங்கொடி அசையும் காற்றில்,
சேர்த்தே பறக்கவிடப்படுகின்றன
தொழிலாளர் நலன்கள்.

குருதி கொண்டெழுதிய
வரலாற்றின் பக்கங்களுக்கு இடையே
முதலாளித்துவக் கரையான்கள்.

விடுமுறை தருமொரு
வெற்றுச் சடங்காய்
நினைவில் சுருங்குமா
விடுதலை வேட்கை.

கூட்டணித் திருவிழாவில்
காணாது போகும்
குழந்தை போல் ஆகுமா
மே நாள்.

==========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் 
01-05 - 2023
==========================