Thursday 14 December 2023

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு - நூல் மதிப்புரை

 

கீழடி அகழாய்வு குறித்தப் பேச்சுக்கள் எழத்தொடங்கிய 2015ல் அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். ஏறத்தாழ பத்தடி ஆழம் தோண்டப்பட்டிருந்த சில குழிகளின் அருகிருந்து மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பானைப்பொறிப்பைக் கையில் வைத்துக்கொண்டு 'இதில் திசன் என்று தமிழ்ப்பிராமியில் எழுதியிருக்கிறது' எனச் சொன்னார் ஒருவர். 

"ஐயா, ஒன்று தமிழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அல்லது பிராமியில் இருக்கிறது என்று சொல்லுங்கள். அதென்ன இப்பொழுதும் கூட தமிழ்ப்பிராமி?" என்று கேட்டபோது சினங்கொண்டார் அவர். எமக்குள் தருக்கம் தொடங்கியது. "எங்கள் குழுத்தலைவரிடம் வந்து கேளுங்கள்" என நெகிழிப்பாய் வேய்ந்த குடிலுக்கு அழைத்துச் சென்றார். தலைவர் (திரு அமர்நாத்) அங்கில்லை. கோவையானத் தரவுகள் இல்லாமல் மாணவர்களிடம் தெளிவுபடுத்த இயலாத நிலையில் நண்பரும் நானும் திரும்பிவிட்டோம். இந்த நூல் அன்றே கிடைத்திருந்தால் வேலை எளிதாக முடிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அத்தனை பெறுதியானது இந்நூல்.

எனக்கு நூல் கிடைத்த கதையும் நூலைப் போன்றே பெறுமதியும் சுவையும் கொண்டதுதான். மகராசன் அவர்களின் 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' மற்றும் 'திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்' எனும் இரு நூற்களும் வேண்டுமென்றும் விலை விவரம் அனுப்புங்கள் எனவும் ஆதி பதிப்பகத்திற்குச் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

"ஐயா பணம் எதுவும் அனுப்ப வேண்டாம் முகவரி மட்டும் அனுப்புங்கள். நூற்களை அனுப்பிவைக்கிறேன். செந்தில் வரதவேல்." என்றொரு மாற்றச் செய்தி வந்தது. பிற்பாடு நூற்களும் வந்தன. அருமையான நூற்களை அனுப்பிவைத்த செந்திலுக்கு மிக்க நன்றி. (காலந்தாழ்ந்து எழுதுகிறேன் பொறுத்தருள்க).

தமிழும் தமிழரும் பலகாலும் பவாறான வினாக்களை, தெளிவுபடுத்த இயலாத கருத்தாக்கங்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் தரவுகளைத் தேட பல நூற்களை, கட்டுரைகளைத் தேடிப் படிக்கவேண்டியது கட்டாயமாகிறது. பேரறிஞர் பலரால் ஆய்வு செய்து எழுதப்பெற்றக் கட்டுரைகள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களால் எழுதப் பெற்ற ஆய்வு முடிவுகள், அகழாய்வுச் செய்திகள், செவ்விலக்கியச் செய்திகள் என பலவற்றையும் படித்தால் மட்டுமே பல வினாக்களுக்கும், வலிந்து செய்யப்பெறும் திரிபுகளுக்கும் விளக்கமளித்து ஏற்கவோ மறுக்கவோ இயலும்.

இப்படி பல்துறைத் தரவுகள் இன்றைய காலகட்டத்தில் பெருந்தேவையாக இருக்கின்றன. அவற்றை நோக்கி நகர்வதற்கான நுழைவாயில்கள், அறிமுகங்கள் கட்டாயமாகின்றன. எளிமையாகவும் அதே வேளையில் செறிவாகவும் தொகுக்கப் பெறும் ஆய்வு நூற்கள் இந்தத் தேவையை முழுமையடையச் செய்யும்.

அப்படியொரு ஆய்வு நூல்தான் முனைவர் திரு மகராசன் எழுதிய "தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு". பரந்துபட்ட பெருவேலையின் சிறுவிளைச்சலாக அருமையாகப் படைக்கப்பட்டிருக்கிறது நூல்.

"தமிழி"க்கு சாதி சமய அடையாளங்கள் இல்லையென்பதை அடிக்கூறாகக் கொண்டு, பெருநகரொன்றின் கையடக்க வரைபடம்போல, பெருங்கோட்டையொன்றின் நுழைவாயில் அறிவிப்புப் பலகைபோல விரிகின்றன பக்கங்கள்.

"சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. மொழிக்கும் நீண்ட நெடிய வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கின்றன. ஆயினும், மனிதகுலத்தைத் தவிர்த்த தனியான வளர்ச்சியல்ல. மனிதகுல வரலாற்றோடு மொழியின் வரலாறும் பிணைந்து கிடக்கின்றது." எனத் தொடங்கி மொழியின் பிறப்பியல் குறித்து விவரிக்கையில் ஒலி, சைகை, ஓசை, பேச்சு என எல்லாவற்றையும் ஆசிரியர் தொட்டுக்காட்டுகின்றபோது தமிழ் போன்ற இயன்மொழியின்; உழைப்புக்காலத்திற்கு முந்தைய காரணிகள், மொழிக்கூறுகள் மொழியியல் அறிஞர்களால் முகாமையானதாகப் பார்க்கப்படவேண்டுமென்ற உரையாடலொன்று உள்ளுறையாகத் தொடங்குகின்றது, சிறப்பு.
 
நூலின் அளவும் படிப்போரின் எண்ணவோட்டங்கள் குறித்தானச் சிந்தனையும் மாந்த வரலாற்றின் பல பக்கங்களை விரைந்து கடக்கவேண்டிய கட்டாயத்தை ஆசிரியருக்கு ஏற்படுத்தியிருக்குமோ என்ற எண்ணம் எமக்குள் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. காட்டு வாழ்வியலின் பெரும்பகுதியிலிருந்து சட்டென்று கூட்டுழைப்பின் காலத்திற்குள் அடியெடுத்து நடக்கிறது நூல். 
 
தமிழி, பிராமி குறித்தான சிறப்பான விவரிப்பு, சீராய்வு நூலை மிக்கச் செழுமையுடைதாகச் செய்கின்றது. அசோகப் பிராமியின் காலம் குறித்தச் செய்திகள் மற்றும் ஒப்பாய்வு தமிழியின் காலத்தை முன்னிறுத்துவதோடு தமிழுக்கு உற்றார் மற்றும் உறார் யாரென்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. (இத்தனைக்குப் பின்னும் 'தமிழ்ப்பிராமி' என்பாரும் உளர் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் பெருங்கேடு).

"தமிழி எழுத்து வடிவம் அசோகரின் காலத்திற்கு முன்பான காலகட்டத்தைச் சார்ந்தது. அசோகர் காலத்திற்கு முன்பு பிராமி என்பதான எழுத்து வடிவமே கிடையாது. அசோகர் காலத்தியப் பிராமி எழுத்து வடிவம் வேறு; தமிழி எழுத்து வடிவம் வேறு. தமிழி எழுத்து வடிவம் தனித்து வளர்ச்சி அடைந்தும் பரவலாக்கம் பெற்றும் வந்துள்ளது. சிந்துவெளி எழுத்துக் குறிகளோடு தொடர்புடைய எழுத்துக் குறியீடுகள் தமிழி எழுத்து வடிவத்தோடும் பொருந்திப் போகின்றன எனலாம்.தமிழி எழுத்து வடிவமானது அரசதிகார மரபின் உருவாக்கம் அல்ல; அக்காலத்தியத் தமிழ் மக்களின் பாடுகளையும் அறிவையும் புலப்படுத்துவதற்கான பண்பாட்டு மரபின் உருவாக்கம் ஆகும். தமிழி எழுத்து வடிவங்களின் தொல்லியல் புழங்கு வெளிகளை வைத்து நோக்கும்போது, மக்கள் மொழியாகத் தமிழி எழுத்து வடிவம் உயிர்ப்பாக இருந்திருக்கிறது என உறுதியாகக் கருத முடிகிறது." என்ற வரிகளில் காணக்கிடைக்கும் ஆசிரியரின் ஆய்வுநோக்கும், உறுதியும் நூலெங்கும் விரவிக்கிடக்கிறது.
 
எழுத்தின் வடிவங்கள், வகைகள் குறித்தான விவரிப்பு மற்றும் வரலாற்றுத் தொகுப்பு செறிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஓவிய எழுத்து, கருத்தெழுத்து, ஒலியெழுத்து போன்ற எழுத்துநிலைகளை விளக்க, ஏராளமான காட்டுகளை தொல் இலக்கியங்களிலிருந்தும் தொல்லியல் ஆய்வு முடிவுகளிலிருந்தும் எடுத்தாண்டிருப்பது தமிழ் குறித்தான உரையாடல்களில் பங்கேற்போருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

"பாண்டிய நாட்டை வென்ற பிற்காலச் சோழ மன்னர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச் சோழன், முதலாம் இராசராசன் காலம்வரை ஆண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக, பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட பிராமியின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும்தான் வழக்காறு பெற்றன. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டியர் பகுதிகளில் வட்டெழுத்துப் பயன்பாடு குறைந்து விட்டது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து முறை மங்கி, கிரந்தத் தமிழ் எழுத்துமுறை மேலோங்கியது. இது, சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டதால், வட்டெழுத்துகள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது." என்பன போன்ற பலவிடங்களில்; வரலாற்றுச் செய்திகள் காய்தல் உவத்தலின்றி படிப்போரை வந்தடைகின்றன.
 
அதனாலேயே, "தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம், பிராமி) தமிழகம் புக்கனர் எனப் பர்நெல் கூறுவதிலிருந்து, தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பாலும் வடமொழித் தொடர்பாலும் நாளடைவில் கிரந்தத் தமிழாகத் திரிபடைந்தது எனலாம். தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி / சமய / பாலின / வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்." என்ற ஆசிரியரின் முடிபு இயல்பாக இருக்கிறது.
 
'உ'வில் தொடங்கும் உலகுதழுவிய தமிழின் எழுத்துப்பண்பாட்டியல் குறித்தான  நூலின் பகுதி முகாமையானது. தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் பற்றியச் செய்திகள் சீராகத் தொகுக்கபெற்றுள்ளன.

தமிழும் அதன் எழுத்துகளும் அதிகார, சமய, சாதி, பாலின மற்றும் வட்டாரச் சார்புகளின்றி மக்கள் மொழியாகவும் பொது எழுத்துக்களோடும் பன்னெடுங்காலமாகவே நிலவிவருகின்றது என்பதை அறுதியாக உறுதி செய்கிறார் முனைவர் மகராசன் என்பதே நூலின் பெருஞ்சிறப்பு. 
 
இளையோர் பலர் பங்கெடுக்கத் தொடங்கியிருக்கும் அறிவுக்களத்தில் இஃதோர் ஆய்தமாகும் என்பது உறுதி. இன்னும் விரித்துப் பேசியிருந்தால் பேராய்தமாயிருக்கும் என்பது எமது கருத்து. அப்படிப் பல நூற்களைப் படைக்கவேண்டுமென்று திரு மகராசனை வாழ்த்துகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
14-12-2023
 
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
+91 99948 80005.
 
அஞ்சலில் நூலைப்பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

Monday 27 November 2023

வீரவணக்கம்


.          =============
.               🙏 🙏 🙏
.          =============

கரை தழுவும் தென் கடலின்
திரை முழுதும் உங்கள் முகம்.

மரணத்தின் எதிரிருந்து விருந்துண்ட மாவீரர்கள் நீங்கள்.

புறநானூறு சுமந்த ஓலைகள்
புறமீன்றப் புலிக்குட்டிகள் நீங்கள்

பகைவருக்கும் சோறளித்தப்
பண்பாட்டின் பெரு விளைச்சல் நீங்கள்.

பெண்ணும் முதியோரும்
பேணிச்சிறந்தப்

போர்நெறியின் பிள்ளைகள்

நீங்கள்.

மனிதத்தை நேசிக்கும் காலம்
மறுபடி
உங்களை உயிர்ப்பிக்கும்.

அன்று;

எல்லா மொழிகளிலும்
பெயர்த்து எழுதப்படும்
'தமிழன் என்றொரு
இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு'
என்றத் தமிழ் வரிகள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

==========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
27-11-2023
===========================

Saturday 25 November 2023

கோபுரம்

பெரும்புயல் வதிந்த முகவரி
எரிமலை பிறந்த கருக்குழி
பெருவிறல் நடந்த வளமனை
உரகடல் வணங்கும் கோபுரம்.

Saturday 18 November 2023

வ.உ.சி நினைவேந்தல் 2023 - 2

 

பஞ்சாலைத் தொழிலாளர்
நெஞ்சகத்து உரம் சேர்த்து
கெஞ்சும் நிலைக்கு வஞ்சகரை
அஞ்சவைத்து உழைப்பின் பெறுமானம்
உறுதி செய்த கதை!

கடலே எண்ணெயாாய்
காற்றே நூல் திரியாய்க்
கனன்றெழுந்தப் பெருநெருப்பு
கப்பலாய் மிதந்து கம்பெனியார்
வணிகம் சிதைத்த கதை!

தளைப்பட்டோர் நலம் வேண்டிச்
சிறைக் கொடுமைக் கஞ்சாது
முறைமை தவறிய முரடன்செய்த
கறைகள் மீது வழக்குரைத்து
அறையோலை வாங்கி அணிசேர்த்த கதை!

ஐயா சிதம்பரனார் அறவாழ்வில்
ஆயிரமுண்டு கதைகள், அவர்
நினைவோடு இந்நாளில் மனக்கொள்வோம்;
பாயிரம்போல் அக்கதைகள்
பிள்ளைகட்குச் சொல்லிடவே.

Friday 17 November 2023

பெரியவர் வ.உ.சி . நினைவேந்தல் 2023 - 1


 

உறைந்து போன காலத்தின்
ஓடுடைத்து
உயர்ந் தெழும் கதிரவனாய்
மோடடைந்து
காரிருள் மூடிய எங்கள்
உள்ளம்
சீர்பெற்று மண்ணுயரும்
சிந்தைகொள்ள
போர்ப்பறை ஒலியெனச்
சொந்தவாழ்வை
நேர்கடன் போல்வாழ்ந்த
தாளாளன்
சேர்ப்பன் சிதம்பரனார்
நினைவேந்தி
ஆர்த்தெழட்டும் தமிழ் மண்ணே!

Friday 6 October 2023

ஐயா ஒரிசாபாலு மறைவு

 


கடல்கொண்ட எம் நிலத்தின்

தடம் தேடி அலைந்த உள்ளம்,

 

படகேறிப் பரவிய தமிழர்

கரைசேர்ந்த ஊர்கள் தேடி

சலியாது நடந்த கால்கள்,

 

தெற்கே கடலடியில் திரண்டெழுந்து

வளர்ந்த மாந்தன்

ஊர்ந்து நடந்து உலகு தழுவி

வாழ்ந்த கதையெல்லாம்,

ஆமைகள் வழிகாட்ட

அலைபேசும் மொழியுணர்ந்து

வரலாறு நடந்த வழி

உலகோர் அறிந்திடவே

உரக்கப்பேசிய வாய்,

 

தமிழாய் வாழ்ந்த மனம்

தமிழுக்காய் நடந்த உடல்

பாழும் புற்றால்

வலிகொண்டு வருந்தியபோதும்

தானறிந்தது அனைத்தும்

தமிழ் இளையோர் அறிந்திட

விரும்பிய தமிழன் ஒரிசாபாலு

தென்புலம் சேர்ந்தார்

என்றறிந்தபோது,

கண்ணீர் வீழும் முன்

கலங்கியது உள்ளம்.

 

அரிது இவர்போல் மகவு பிறத்தல்

பெரிது இவரது நிறையாப் பணிகள்.

பேரிழப்பு என்பதன் பொருளை

இவரிழப்பு இயம்புது இன்று.

 

எழுக இளையோரே!

வருக! வருக!

வந்து அவர் பணிகள் தொடர்க.

அதுவே,

தென்கடல் திரைகளின்

ஒசைகளில் நிறைந்திருக்கும்

பாலுவின் குரலுக்குத்

தமிழினம் பகரும் நன்றி.

Monday 28 August 2023

ஓண நன்னாள் 2023

 


இன்றும் கூட, பண்டு ஆய்நாட்டுப் பகுதிகளாயிருந்த குமரி மற்றும் பொதியில் மலையைச் சுற்றிய பகுதிகளில் ஓணம் நினைவு கொள்ளப்படுகிறது. புனைவுகளும், கதைகளும் தின்று தீர்த்த தமிழ் மரபுகள் இன்னும் எத்தனையோ ? ஆனாலும், அதன் எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.
அரசர்கள் மக்களுக்காகவும், மக்கள் அரசனுக்கு உறுதுணையாகவும் போற்றியும் வாழ்ந்த பெருமரபின் காட்சிகள், புனைவுகளுக்கு நடுவிலும் காணக் கிடைக்கின்றன.
அப்படிச் சிறந்திருந்த ஆய் நாட்டின் அரசன் அண்டிரனே "மாவேள் " ஆக இருத்தல் கூடும். தமிழ் வள்ளல்களில் பெருங்கொடை வள்ளல் இவனே. இவனைத் தேடும் நாளே "ஓணநாளாக” இருக்கலாம்.
அவனோடு இருந்த புலவர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் குறித்து பல பாடல்களை இயற்றியிருக்கிறார்.
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
ஈகை அரிய இழை அணி மகளிரொடு 5
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே' (புறம் 127)
'கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் 5
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே' (புறம் : 128)
'வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் 5
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே' (புறம் : 129)
'விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு,
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின்' (புறம் : 130)
'மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடின கொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?' (புறம் : 131)
'நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல 5
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்.
தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.' (புறம் : 132)
'மாரி அன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே!' (புறம் 133)
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே.' (புறம் : 134)
'மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறை அடி யானை இரியல் போக்கும்
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்!
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! '(புறம் 135)
முடமோசியாரின் பாடல்கள் போல காலங்கடந்தும் அவனது செய்கைகளை கேரள மக்கள் போற்றிப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் போலும். கேரளத்தில் காணக்கிடைக்கும் ஓணக்காட்சிகள் அதை நினைவு படுத்துகின்றன.
தமிழ் மரபுப்படி மூன்றாம் பிறை தொட்டு பன்னிரண்டு நாட்கள் நோன்பிருந்து கொண்டாடப்படும் நன்னாள் இது. கதைகளும், கற்பனைகளும் இதில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கின்றன. ஆனாலும் ஆய்நாட்டு மக்கள் அவனை மறக்கவில்லை.
"கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்”
(மதுரைக்காஞ்சி: 590-591)
“சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப” (மதுரைக்காஞ்சி 596-598)
இவ்விரண்டு வரிகளும் பாண்டியநாட்டில் ஆவணி மாத ஓணம் கொண்டாடப்பட்டதைக் குறிக்கின்றன.
ஓண நாளில், உயர்ந்த சுவர்கள் போன்ற தடுப்புகளின் மேல் நின்று மக்கள் கண்டுகளிக்க, கீழே யானைகளை ஓடவிட்டு போர் விளையாட்டு நடைபெற்றதும் குறிக்கப்பெறுகிறது. தைப்பொங்கலின் போது நடைபெறும் ஏறு தழுவுதலையும், மஞ்சு விரட்டையும் இதனோடு ஒப்பிட; இரண்டு நிகழ்வுகளுக்குமான பொதுத்தன்மை பிடிபடுகிறது.




இந்த மதுரைக்காஞ்சியின் வரிகள் இன்றைய கேரளத்தின் வழி பாண்டியரது ஓணக்காட்சிகளை மீட்டுத் தருகிறதோ?
ஓணம் என்ற சொல்லுக்கு சொற்பிறப்பியல் பேரகரமுதலி,
ஓண் 1ōṇ, பெ. (n.) உயர்வு, மேன்மை, பெருமை; elegance, excellence.
ஓணம் 2 ōṇam, பெ. (n.) முக்கோல் (திருவோணம்); (திவா.);;ம. ஓணம்.
[உல் → ஒல் → ஓ = நீளுதல், நீண்டுயர்தல். ஓ → ஓண் → ஓணம் = நீண்டுயர்ந்த கொடிபோன்ற விண்மீன் கூட்டம்.]
ஓணம் 3 ōṇam, பெ. (n.) நீராட்டு விழா; bathing festival in a river.
[ஓணம் = நீரோடை, நீராடல். இது ஒளம் - ஓலி என வடபுல மொழிகளில் திரிந்தது.]
ஓணன் ōṇaṉ, பெ. (n.) வாணன், வாணனின் படைத் தலைவன் (அபி.சிந்.);; commander of {} prince. [ஓ = உயர்வு, மேன்மை, பெருமை. ஓ → ஓண் → ஓணன்.]
ஓணப்பிரான் ōṇappirāṉ, பெ. (n.) திருமால்; visnu, 22nd {} being sacred to Him.
"ஓணப்பிரானு மொளிர்மாமல ருத்தமனும்" (தேவா.643,10);.
[ஓணம் + பிரான்.] என்றெல்லாம் பொருள் தருகிறது.
பழமையின் சிறப்புகளை மறவாது நாளை 929-05-20230 "மாவேலி நாடுகாணும் நாள்" கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் ஓண நல்வாழ்த்து.
"உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே!"

ஓண நாள் வாழ்த்து!



Friday 25 August 2023

தோட்டியின் மகன் ஒரு பார்வை

 


இந்த முறை ஊருக்குச் செல்கையில் ஏதேனும் கதை படிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, தகழியின் 'தோட்டியின் மகன்' முத்துநாகுவின் 'சுழுந்தீ' இரண்டில் எதை எடுத்துச் செல்வது என்ற சிந்தனை வந்தது. கதை படிப்பது குறைந்து வெகு நாள்களாயிற்று. அதன் பொருட்டு நூலின் அளவு முகாமையானது. இருக்கும் குறைந்த நேரத்தில் தகழியே வசப்படுவார் என்பதால் அவர் தேர்வானார். நூலின் அளவும் பயணக் காலமும் சுழுந்தீயை அடுத்த பயணத்திற்காகத் தள்ளிவைத்தன. மட்டுமின்றி சுழுந்தீயின் சொல்லாடல்கள், களம், மாந்தர்கள் குறித்தான எனது தேடல்கள் முடிந்தபாடில்லை. 'நாஞ்சிநாட்டுக்காரனுக்கு'க் கதை படிப்பதில் உள்ள சிக்கல் இது.

சென்னைப் புத்தகக் காட்சியில் 2018 ல் வாங்கிய 'தோட்டியின் மகனை' ஐந்து வருடங்களுக்குப் பின் ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் வாசிக்கிறேன். மலையாளத்தில் எழுதப்பெற்ற இந்தப் புதினம் சுந்தரராமசாமியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

Thursday 20 July 2023

மனச்சான்று மரித்துக்கிடக்கும் மணிப்பூர்

 




எல்லா மொழிகளிலும் கேட்கிறது

பெண்ணின் அலறல்.

 

எல்லா நிலங்களிலும் சிந்துகிறது

அவள் குருதி.

 

எல்லா தெய்வங்களும்

காட்சிமறைத்தன,

அவள் கண் இருண்டபோது.

 

எல்லா மதங்களும்

கட்டுண்டு கிடக்கின்றன,

பிடுங்கி எறியப்பட்ட

அவள் மயிர்ச் சுருளில்.

 

எல்லா சாதிகளும்

ஒளிந்துகொண்டன,

வீசி எறியப்பட்ட

அவள் ஆடைகளுக்குள்.

 

மனிதம் மறைந்துகொண்டது

உடல் கிழித்தவன்

விரல் நகக்கண்ணில்.

 

மனச்சான்று மரித்துக்கிடக்கிறது

வாக்குச் சாவடிகளின்

வாயில்களில்.

 

இடுகாடும் சுடுகாடும்

எல்லைகளாக இருப்பதா

நாடு?

 

வெட்கம்.

Monday 17 July 2023

பாரதிராசா பிறந்தநாள் 2023

 

 

தமிழ்த் திரைமொழியை
நீ
ஆழ அகல உழுதபின்தான்
செம்மண் காடுகளில்கூட
சந்தன மரங்கள் வளர்ந்தன.

பாம்படக் கிழவிகளின்
பல்லில்லா வாய்மொழியில்
பகடிகள் கேட்டன.

கஞ்சிக் கலயங்களில்
கசிந்த காதலை
பெருநகரங்கள்
அண்ணாந்து பார்த்தன.

கையறுநிலையில் வாழும்
தந்தையின்
குருதி வெப்பத்தைத்
தமிழ்நிலம் உணர்ந்தது.

முன்னேர் ஓட்டுவதற்குப்
பெருமுனைப்பு வேண்டும்.

ஊட்டி மலைகளில்
ஓடியாடிய
மேட்டுக் காதலை
ஆண்டிப்பட்டிச் சாலைகளில் அழைத்துவர
பேராற்றல் வேண்டும்.

வண்ணக் கனவாய்
வளையவந்தத் திரைப்படத்தை
மண்ணின் அழுக்கோடு
மடியில் இருத்திவைக்க
மனம் நிறைந்த துணிவு வேண்டும்.

அத்தனையும் பெற்றவன் நீ.

நிலவின் அருகிருந்தப்
பெருங்கனவைத்
தலையணைக்கு அருகில்வைத்து
தட்டி எழுப்பியவன் நீ.

இன்று காணும்
திரைப் பூக்கள் பலவும்
வேலிகளற்ற உன் தோட்டத்தின்
விளைச்சல்களே.

மண்ணின் மணம் கமழ
வாழி நீ!

Tuesday 11 July 2023

அருகே கடவுள்


ஒற்றைக் கொட்டொன்று

ஓசையெழுப்பும்

நட்ட நடு இரவில்,


வெட்ட வெளியில்

வரம்பின்றி

விரிந்துகிடக்கும் மையிருளில்,


சுடலைமாடன் காடேக

மார்பில் அணைத்தத்

தீப்பந்த வெளிச்சத்தில்


மாடனின் கச்சையை

இறுக்கிப் பிடித்து

“சொள்ளமாடா மழ எப்பவரும்?”

என்று கேட்ட

வேலப்பண்ணனின்

மனதுக்கும் மாடனுக்கும்

மயிரிழை தூரந்தான்.


===========================

'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

11-07-2023

===========================