இணை மறைந்து
ஏற்பட்ட வெற்றிடத்தை
நினைவுகளைக் குழைத்து
நிறைக்கும் முயற்சியில்
இரவுகளைத் தொலைக்கிறது
முதுமை.
இணை மறைந்து
ஏற்பட்ட வெற்றிடத்தை
நினைவுகளைக் குழைத்து
நிறைக்கும் முயற்சியில்
இரவுகளைத் தொலைக்கிறது
முதுமை.
பூவின் இதழ்களில்
பட்டாம்பூச்சியின்
காலடித் தடங்கள்.
நொடிப்பொழுதுக் களவு.
மலையெங்கும்
அலர் தூற்றிப்
பறக்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்
நேற்றைய வண்டிகளின் பேரிரைச்சல் அடங்கிய, சக்கரங்கள் நெரித்துப் புழுதி கிளம்பி மரங்களின் இலைகளில் படிந்து அதிகாலைப் பனிமூட்டமாய் மிரட்டும் வடபழனி கோடம்பாக்கம் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். மெட்ரோ பணிகளுக்காகக் புலியூர் அரசுப் பள்ளியின் அருகே முறித்து வீழ்த்தப்பட்ட பெரிய அரசமரத்தின் காய்ந்துபோன தடி ஒன்றின் மேலே எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்திருக்கிறார். அருகே சோற்றுவாளி ஒன்றைத் திறந்தபடி நாற்பதைத் தாண்டிய ஒருவர்; மகனாக இருக்கலாம். சாப்பிடுமாறு சைகை செய்துவிட்டு நகர்ந்து போகிறார்.
இருவருமே ஒப்பந்தப் பணியாளர்களுக்கான ஆரஞ்சு மற்றும் நீல வண்ணங்களில் சீருடை அணிந்திருக்கிறார்கள். இந்த பெரியவருக்கு இங்கு என்ன வேலை? பளு தூக்கும் இயந்திரங்கள் நகர்ந்து வருகிற போது எதிரே வருகிற வாகனங்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கலாம், எச்சரிக்கை செய்யலாம் இப்படியான பணிகள் இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில் சிக்கலில்லை.
ஆவணி மாதத்து
வைகறை வானத்தின்
கருப்பு வெள்ளைத்
திட்டுகளாய் நினைவுகள்.
வரையப்படாத
கோடுகளுக்கு இடையே
நீலப் பெருவெளி.
காகிதத்தில் கவியக்
காத்திருக்கின்றன
சில கவிதைகள்.
23-08-2024