Friday 25 September 2020

காற்றாக...

 
முதல் பாடலிலேயே
முழுமையடைந்தவன் நீ.

 
க ச ட த ப எனும்
வல்லோசை கொண்டு
இசைக்கு மொழியில்லை
என்பது பொய்யென;
இசைத்துச் சொன்னவன் நீ.

 
மேனி நோகாமல்,
மெல்லிசையால்
உள்ளம் கொன்றவன் நீ.
உணர்வற்றுக் கிடக்கையில்
ஒற்றைச் சிரிப்பால்
உயிர்ப்பித்தவன் நீ.

 
என்
காதலின் ஓசையாய்,
காமத்தின் தவிப்பாய்,
மகிழ்ச்சியின் தூறலாய்,
வருத்தத்தின் இறுக்கமாய்,
தனிமையின் தோழமையாய்,
என்னோடு வாழ்ந்தவன் நீ.

 
எதுவுமற்று இருக்கையில்
எல்லாமுமாய் இருந்தவன் நீ.

 
இன்னும் இருப்பாய்.
எல்லோர் காதுகளும்
கேட்காது போகும்வரை,
எல்லோர் வாயும்
பாடாது போகும்வரை
எம் அருகே காற்றாக.

 

சிராப்பள்ளி ப.மாதேவன்

25-09 2020